அண்மைய செய்திகள்

recent
-

வடக்கு மாகாணத்தில் 2011 இல் மட்டும் 38 ஆயிரம் மாணவர்கள் இடைவிலகினர்


இலங்கையின் வடக்கு மாகாணத்தில் போர் முடிவடைந்த பின்னர் பாடசாலைகளில் இருந்து இடைவிலகுகின்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.


கடந்த 2011 ஆம் ஆண்டில் மாத்திரம் நாடளாவிய ரீதியில் ஒரு லட்சத்து 26 ஆயிரம் மாணவர்கள் பாடசாலைகளில் இருந்து இடைவிலகியுள்ளனர். இவர்களில் வடமாகணத்தைச் சேர்ந்த மாணவர்களே அதிகம். 2011 ஆம் ஆண்டில் 38 ஆயிரத்து 321 மாணவர்கள் வடமாகாணப் பாடசாலைகளில் இருந்து இடைவிலகியுள்ளனர்.

இடைவிலகலில் வடக்கு அடுத்தபடியாக கிழக்கு மாகாணம் விளங்குகின்றது. இந்த மாகாணத்தைச் சேர்ந்த 24 ஆயிரத்து 614 மாணவர்கள் 2011 ஆம் ஆண்டு இடை விலகியுள்ளனர் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டில் இலவசக் கல்வி நடைமுறையில் இருக்கின்ற போதிலும், பாடசாலைகளில் இடை நிலை வகுப்புகளில் இருந்து மாணவர்கள் இடைவிலகிச் செல்வது கவலைக்குரியது என்று சிறுவர் பாதுகாப்பு நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

போரினால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வறுமை காரணமாகவே மாணவர்கள் இவ்வாறு பாடசாலைகளில் இருந்து இடைவிலகிச் செல்வதாக ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டிருக்கின்றது.

வறுமையில் வாடும் குடும்பங்களில் சிறுவர்களே வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாய நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. இதைவிட பாடசாலைகளில் போதிய ஆசிரியர்கள் இல்லாதிருத்தல், ஏனைய அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படாமலிருத்தல் போன்ற காரணங்களினாலும் மாணவர்கள் இடையில் தமது கல்வியைக் கைவிட்டுச் செல்கின்றனர் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.

இதனிடையே பாடசாலைகளில் இருந்து மாணவர்கள் இடைவிலகுவதைத் தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும், இதனையடுத்து 2012 ஆம் ஆண்டில் மாணவர்களின் இடைவிலகல் வீதம் குறையத் தொடங்கியிருப்பதாகவும் கல்வி அமைச்சு கூறியிருக்கின்றது.


வடக்கு மாகாணத்தில் 2011 இல் மட்டும் 38 ஆயிரம் மாணவர்கள் இடைவிலகினர் Reviewed by NEWMANNAR on January 07, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.