அண்மைய செய்திகள்

recent
-

கலைஞர் ஏ.டி.தேவதாசன் அல்மேடா அவர்களின் அகத்திலிருந்து

கலைஞனின் அகம் கணினியில் முகம்

 கணனியில் முகம் கலைஞனின் அகம் எனும் பகுதியின் இவ் வாரத்திற்கான படைப்பாளி கவிஞர், நாடக நடிகர், திரைப்பட நடிகர், நாடகஆசிரியர் மற்றும் நெறியாளர், சமாதான நீதவான், ஓய்வுபெற்ற தபாற் சேவகர்; என தன்னை சமூகத்திற்குரியவராக வளப்படுத்திக் கொண்டு இருக்கும் கலைஞர் ஏ.டி.தேவதாசன் அல்மேடா அவர்களின் இல்லத்தில்....

தங்களைப் பற்றி?

மாண்புமிகு மன்னார் மாந்தை தெற்கு பரப்பான்கண்டல் கிராமம் தான் எனது சொந்த இடம். ஆரம்பக் கல்வியை பரப்பான்கண்டல் பாடசாலையிலும் உயர்கல்வியை புனித சவேரியார் ஆண்கள் பாடசாலையிலும் .கற்றேன். எனது தந்தை அந்தோனி அல்மேடா, தாய் லூர்த்தம்மாள். தற்போது முருங்கன் பிட்டியில் பிள்ளைகளுடன் கலைக்குடும்பமாகவே வாழந்து வருகின்றோம்.

உங்களது நாடக அறிமுகம் பற்றி?

1967ம் ஆண்டு தொடக்கம் இன்று வரை பல நாடகங்களை எழுதி இயக்கி மேடையேற்றியுள்ளேன். எனது முதல் நாடகம் மரிய கொறற்றி. புனிதையின் சரித்திர நாடகத்தின் கதாநாயகன் அலெக்ஸ்சாண்டர் வேடமேற்று நடித்தேன். அப்போது என் மனநிலை நான்தான் பிரதான கதாநாயகன். நான் நடிக்கப் போகின்றேன். எல்லோருடைய பார்வையும் ஆவலும் என் மேல் தான். என்னைத் தான் எல்லோரும் பார்த்த வண்ணம் இருக்கின்றார்கள். எந்தக் குறையுமில்லாமல் நடிக்கணும் பாராட்டு வேண்டனும் என்ற எண்ணத்தோடு தான் நடித்தேன். பாராட்டும் பெற்றேன். அன்றில் இருந்து இன்றுவரை என் நாடக வாழ்க்கை தொடர்கின்றது.

உங்களை நாடகத்தில் அறிமுகப்படுத்திய குரு பற்றி?

நான் இன்னிலைக்கு காரணம் எனது குருதான் எ.பி.சேகர். உயிர்த்தராசன் குளத்தில் வசிக்கின்றார். அன்றைய காலத்தில் என்னை தெரிவு செய்து அதுவும் கதா நாயகனாக என்னை அறிமுகம் செய்து மேடையேற்றியவர். சிறந்த நாடக எழுத்து இயக்க நெறியாளர். திறமையானவர். டிக்கற் நாடகமாக இருந்தும் ;மக்கள் மத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் தொடர்ச்சியே இன்றும் என்னுடைய வளர்ச்சி பாதையினை தொடங்கி வைத்தவர்...

நீங்கள் கதையெழுதி இயக்கி நடித்த முதல் நாடகம் பற்றி?

பண்டார வன்னியன், சங்கிலியன் என்னும் தமிழ்ப் பாரம்பரிய நாடகங்கள் தான் உண்மையான சரித்திரங்கள். அதில் நான் பண்டாரவன்னியனாகவும் சங்கிலியனாகவும் நடித்தேன். அதிலும் பெரும் பாராட்டு கிடைத்தது. பெரிய கட்டு என்னும் இடத்தில் கோயில் பெருவழாவில் தமிழ்ப் பொலிசாரால் பாராட்டப்பட்டு அவர்கள்; ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது திடீரென ஒலிபெருக்கி பிரச்சினையாகி விட்டது. அந்த நேரத்தில் எல்லோரும் ஆரவாரப்பட்டார்கள். மேடைக்கு வந்த தமிழ்ப் பொலிசார் எல்லோரும் அமைதியாக இருங்கள் இன்னும் பத்து நிமிடங்கள் செட்டி குளத்தில் இருந்து ஒலிபெருக்கி கொண்டு வந்து நாடகத்தை போடுவோம் என்றார்கள். அது போலவே செய்தார்கள். நாடகத்தை வெகு சிறப்பாக நிறைவேற்றினோம். அந்த நாடகத்தின் மீது இருந்த அக்கறை தமிழ்ப்பற்று தமிழ் உணர்வு அவர்கள் முகத்திலும் அகத்திலும் தென்பட்டது. சந்தோஷம் அடைந்தேன். நல்லவரவேற்பும் கிடைத்தது.

உங்கள் நாடகத்தில் உங்களை மிகவும் கவர்ந்த நாடகம் பற்றி?

ஆங்கில கவிராஜன் ஷேக்ஸ்பியர் உணர்வு  பூர்வமாக எழுதிய 'ஒத்தெல்லோ' நாடகம் 2009, 2010 ஆண்டுகளில் உயர்தர பாடத்தில் நாடகரங்கியல் பல விடையங்களை உள்ளடக்கியது. 'ஒத்தெல்லோ' கைக்குட்டை சந்தேகம்' அதில் எனக்கு அதிக ஆர்வம் ஏற்பட்டமையால் அதை நாடகமாக எழுதி உயர்தர மாணவர்களை இயங்கி அதில் நான் ஒத்தெல்லோவாக நடித்தேன். மன்னார் மண்ணில் 4 தடவைகள் மேடையேற்றப்பட்டது. எனது மனம் கவர்ந்த நாடகம் அது தான் அதிலும் மறக்க முடியாத விடையம் என்னவென்றால் என்னுடன் வில்லனாக நடித்த மாணவன் அதே ஆவணி மாதத்தில் பரீட்சையில் நாடகரங்கியல் பாடத்தில் கேட்கப்பட்ட கேள்விகளில் ஒன்று 'ஒத்தெல்லோ' நாடகப் பாத்திரத்தை விளக்கு அக் கேள்விக்கு சிறப்பாக பதில் எழுதியதாகவும் நான் சித்தியடைவேன் என்றான் அதே போல் சித்தியும் அடைந்து இப்போது நாடகரங்கியல் ஆசிரியராகவுள்ளார்.

உங்கள் பெயரை நிலை நிறுத்தி நாடகம் என்று சொன்னால்?

அண்மையில் முதியோர்களை கௌரவப்படுத்தும் வகையில் 'ஆணிவேர்கள்' என்னும் நாடகம் பெற்றோர்களை பிள்ளைகள் அநாதை இல்லம், முதியோர் இல்லம், கவனிப்பார் அற்ற நிலையை அவல சூழ்நிலையை சுட்டிக் காட்டுவதாக அமைந்தது. 'ஆணி வேர்கள்' எழுதி நெறியாள்கை செய்தேன். நான் நடிக்கவில்லை. மக்கள் மனதில் என்னை நிலை நிறுத்தியது எனலாம்.

உங்களை கவர்ந்த நாடகம்? பேரை நிலை நிறுத்திய நாடகம்?மற்றும் உங்களது நாடகத்திற்கான மக்கள் அங்கீரகாரம் எவ்வாறுள்ளது?

நான் முதலில் நகைச்சுவை நாடகங்களைத் தான் எழுதினேன். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தேவதாசன் அல்மேடா என்றால் நாடகம் நன்றாய் இருக்கும் வயிறு குலுங்கி சிரிக்கலாம் என்ற எதிர்பார்ப்புடன் வருவார்கள் என்ற சூழல் அமைந்தது. நகைச்சுவையோடு சேர்த்து சமுதாய சீர் திருத்தங்களையும் சேர்த்துக் கொள்ள விரும்பினேன். அது போல பல நாடகங்களை மேடையேற்றினேன். பல நிறுவனங்களும் என்னுடன் இணைந்து கொண்டன. சுனுகுஇ ஊவுகுஇ மிதிவெடி பிரிவுஇ ஊயுசுநுஇ வாழ்வுதயம், மன்னார் பிரஜைகள் குழு தங்கள் நிறுவனக் கொள்கைகளையும் மக்களின் விழிப்புணர்வையும் பரப்புவதற்காக முயற்சிகளில் இறங்கியுள்ளேன். பல நாடகங்களை இயக்கி நெறியாள்கை செய்து மக்களிள் அங்கீகாரமும் கிடைக்கின்றது.

பல நூறு  நாடகங்களை எழுதி இயக்கி நெறியாள்கை செய்துள்ள நீங்கள் உங்கள் நாடகங்களை நூல் வடிவம் ஆக்கியுள்ளீர்களா?

புனித சவேரியாரின் சிறப்பை வெளிப்படுத்தும் விதமாக நாட்டுக் கூத்து இன்னும் நம் மதிதியில் அதற்கான மவுசு உள்ளது. சின்னப்பண்டிவிரிச்சான் கோயில் மக்களின் வேண்டுகோளிற்கு இணங்க புனித சவேரியார் எனும் புனிதரின் வாழ்க்கை வரலாற்றை மூன்றரை மணித்தியால நாடகமாக அரங்கேற்றினேன். அதனை சில பங்குத் தந்தையர்களின் உதவியோடு நூலாக்கும் விருப்பம் தெரிவித்தேன். மிக விரைவில் நூலாக வெளிவரும் என்னுடைய ஏனைய நாடகங்களை நூலாக வெளியிட விருப்பம்தான் பொருளாதார பிரச்சினையால் அப்படியே உள்ளது.

நாடகத் துறையில் வளர்ச்சி பெற்று வரும் நீங்கள் மேலதிகமாக மேற்கொள்ளும் விடையங்கள் பற்றி?

மன்னார் மாவடடத்தில் நடைபெறுகின்ற ஒவ்வொரு நாடக விழாக்கள் போட்டிகளுக்கு நடுவராக கடமையாற்றியுள்ளேன். அத்தோடு தமிழ்த்தினப் போட்டி மாவட்டம், மாகாணம், கோட்டம் என பல போட்டிகளில் முதலா.ம் இடங்களை பெற்றுள்ளன. எனது நாடகங்களும் பலவுண்டு. அத்தோடு நான் 1966ம் ஆண்டில் இலங்கை சினிமாத்திரைப் படமான 'மீனவப்பெண்' எனும் திரைப்படத்திலும் சிறு கதா  பாத்திரம் ஒன்று நடித்துள்ளேன். வி.எஸ்.கிருஷ்ணக்குமார் இயக்கத்தில் வெளியானது

கவிதை துறை பற்றி?

இதுவரை நூலக வெளிவரவில்லை. ஆனால் பல கவிதைகளை எழுதிவைத்துள்ளேன். அத்தோடு எமது கிராமத்தில் மங்களகரமான அனைத்து விடையங்களுக்கும் பிரியாவிடை நிகழ்வுகள் வாழ்த்துப்பாக்கள், கவிமாலைகள், எழுதிக் கொடுத்துள்ளேன். எழுதி வருகின்றேன். பலரின் பாராட்டினையும் பெற்று வருகின்றேன். கவிதை நூல் வெளியிடும் எண்ணமும் உள்ளது.

நீங்கள் நாடகங்களை எழுதி, இயக்கி, மேடையேற்றி நெறியாள்கை செய்வதோடு மட்டுமல்லாமல் நடுவராகப் பணியாற்றும் போது எவற்றையெல்லாம் நாடகத்தில் அவதானிப்பீர்கள்?

கதைக்கரு, அரங்கப்பயன்பாடு, அமைப்பு முறைகள், ஆடையலங்காரம் நடிப்பு, திறமைக்குத்தான் முதலிடம். இது வரை முப்பதிற்கும் மேற்பட்ட நிகழ்வுகளில் நடுவராக கடமையாற்றியுள்ளேன். என்னுடன நடுவராக பணிபுரியும் திறமையான நடுவர்கள் இடும் புள்ளியும் எனது புள்ளியும் சம அளவாகவே இருக்கும் பொறுப்போடு செயற்படுவோம்.

இவரை விடவும் நான் நன்றாக செயற்பட வேண்டும் என்று யாரையாவது நினைத்ததுண்டா?

அப்படி நான் நினைத்ததில்லை. எனக்கென்று நான் தனிப்பாணி வைத்துள்ளேன். எதுகை, மோனையோடு எழுதினால் மரபுக் கவிதையாக இருக்கும். நாடகம் எழதினால் 'தம்பி எங்க போற உன்ன நம்பியல்லா நான் வாறன்' நகைச்சுவை விரும்பி ஏற்றுக் கொள்வார்கள்.  நான் இதுவரை எதையும் சாதித்து விடவில்லை. 'கல்விக்கு கரையில்லை என்பது போல' கலைக்கும் கரையில்லை என்பேன். முன்பு நடிப்பு என்றால் சிவாஜிதான் என்று இருந்த எமக்கு சின்னப் பெடியன் தனுஷ், சிம்புவும் ஏன் இன்னும் பல புதுமுகங்கள் அட அருமையாகத் தான் நடிக்கின்றார்கள் என்று சொல்லும் அளவுக்கு நடிப்பு வளர்ந்து வருகின்றது. இதுதான் எல்லை என்று இல்லை. ஒவ்வொருவருடைய பாணிகள் அவர்களின் திறமையின் வெளிப்பாடுகள்தான்.

உங்களை மிகவும் கவர்ந்த கலைஞர் யார்?

அதிகமான கலைஞர்கள் இருக்கின்றார்கள். அதிலும் என்னை கவர்ந்த அபிமானி என்றால் அவர் சூரியகட்டைக்காட்டைச் சேர்ந்த செபமாலைப் புலவர் தான். மிகவும் திறமையானவர். கடந்த வருடம் கலா பூஷண விருது பெற்றவர். அவருடன் சேர்ந்து பல நாடகங்களை மேடையேற்றியுள்ளேன்.

இத்துறையினை தெரிவு செய்ததை விட சும்மா இருந்திருக்கலாம் என்று வெறுப்படைந்ததுண்டா?


ஆம் நிச்சயமாக சில சமயங்களில் அமைந்ததுண்டு. நாடகங்களை மேடையேற்றி மக்கள் வரவேற்பு கிடைத்தாலும் போதிய பணம் இல்லாமையினால் கடன் வாங்கி கொடுக்கும் போதும் வெளியிலும் சரி வீட்டிலும் சில வேளைகளில் மனைவி கூட இதைவிட வேற வேலையில்லையா? உங்களுக்கு அந்தக் காலத்தில் விடிய விடிய விளக்கை வைத்து எழுதிக் கொண்டு இருக்கிறீங்களே என்று பேசிய பல சந்தர்ப்பங்களில் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து முட்டி மோதியதால் தான் இந்த நிலையை அடைந்தேன் என்னை நீங்களும் செவ்வி காண வந்துள்ளீர்கள்.

நாடகக் கலைஞர்கள் பயிற்சியுடன் நெறியாள்கை அன்றும் இன்றும்?

தொடக்ககாலத்தில் 1966 ஆண்டுப் பகுதியில் பெரியவர்கள் தான் தாங்களாகவே முன்வருவார்கள். அவர்களுக்கு அதன் மீது விருப்பம் இருந்தது. என்ன சொன்னாலும் எத்தனை தடவை சொன்னாலும் எதிர்ப்புக்கள் ஏதும் இன்றி சொல்லியதை அப்படியே செய்வார்கள். அப்போது எனக்கு மகிழ்ச்சியாய் 'இருக்கும். நாடகமும் நல்ல முறையில் வெளிவந்து பாராட்டுப்பெறும். இன்று பெரும்பாலும் இளைஞர்கள் தான் நாடகத்தில் ஈடுபட்டாலும் அவர்களிற்கு பெரிதாக நாட்டம் இல்லை. ஒரு முறைக்கு இரண்டுமுறை சொன்னால் அடுத்த நாள் பயிற்சிக்கு வரமாட்டார்கள். எவ்வளவு எதிர்பார்ப்புடன் நா.டகத்தினை எழுதி மனதில் ஒப்பனை போட்டு வைத்திருக்கும் போது அதற்கு சக நடிகர்கள் ஒத்துழைப்பு வழங்காவிடில் எவ்வாறு அவ் நாடகம் வெற்றி பெறும் அவ்வாறான சந்தர்ப்பத்தில் மனம் நொந்து வேதனைப்படுவேன்.


அன்று கலைதான் வாழ்வு இன்று வாழ்வின் ஓர் அங்கம் கலையானது பற்றி?

ஆம் உண்மைதான் இன்று கலை பல்கலைக்கழகம், பாடசாலையிலும் பாடமாக இருந்தும் நாடக அரங்கியலை ஓர் பாடமாக கற்றும் பயிற்றப்பட்டும் இருக்கும் ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றிருந்தும் அதில் முதிர்ச்சியில்லை. மாணவர்களுக்கு தகுந்த முறையில் வழிகாட்டல் சிறந்த முறையில் பயிற்சிவிக்கவும் தவறி விடுகின்றார்கள். இதனால் வெறுப்புற்று விருப்பமின்றி எமது கலைப் பாரம்பரியம் தனது தன்மையை இழந்து வருகின்றது.

உங்கள் வாழ்வில் இருந்து தற்கால இளைஞர் யுவதிகளுக்கு சமுதாய விழிப்புணர்வு நாடகம் மூலம் வழிகாட்டியாக தங்களின் அனுபவ பகிர்வில் இருந்து?

மக்களின் இரசனை மாறிவிட்டது. பெற்றோர்களே தொலைக்காட்சி தொடர் நாடகத்திலும் பிள்ளைகள் இணையத்தில் இன்னும் எத்தனையோ விதமான நவீன முறைச் சாதனங்களினால் சீரழிவான வாழ்வை நோக்கியே அதாவது 'மின்னுவதெல்லாம் பொன்' என்று நினைத்து வாழ்வை தொலைக்கின்றார்கள். எவரையும் வலுக்கட்டாயப்படுத்தி நல்வழிக்கு கொண்டு வர முடியாது. அவர்களாகவே திருந்த வேண்டும். எமது கலை கலாசாரத்தை நாம் இழந்து விடக் கூடாது எனும் எண்ணம் உள்ளத்தில் வர வேண்டும். இல்லத்தில் அதற்கான வழிகாட்டல்கள் இருக்க வேண்டும். அப்போது தான் எமது அடுத்த தலைமுறைக்கு எடுத்துக் கூறி மறுமலர்ச்சியை காணலாம். கடமையும் அதுவே.


கலைஞர்கள் கௌரவிக்கப்படுவதில்லை தேவையின் பின் ஒதுக்கப்படுகிறான் என்ற கருத்து உள்ளதே அது பற்றி?

உண்மையிலும் உண்மை கலைஞன் தன் வாழ்வினையே கலைக்காக அர்ப்பணிக்கும் போது அக்கலைஞனை அச்சமுதாயம் அரசாங்கம் அவனால் நன்மையைப் பெற்றுக் கொண்டு அவனை கண்டு கொள்ளாமல் விடுவது மிகவும் கேவலமானதொரு விடையம்தான் கலைஞனை வளப்படுத்துங்கள். கலை வளரும். எமது கலை கலாசாரப் பண்பாடு எழுச்சி பெறும் என்பது திண்ணம்.




தங்களின் வாழ்வினில் மனிதர்களில் பிடித்தது பிடிக்காதது?
திறமைகள் இருந்தாலும்கூட வளர்ந்து வருகின்ற இளம் கலைஞர்களை வளர்த்து விடுவார்கள் இல்லை மூத்த கலைஞர்கள் உணர்ந்து வழியமைக்க வேண்டும்.

மக்கள் - வாழ்க்கைக்கு கலை எவ்வளவு முக்கியமானதொரு விடையம் என்பதை தெளிவாகப் புரிந்து கொண்டு கலையையும் கலைஞர்களையும் வாழ்த்த வேண்டும். கலையை வாழ்வாக்க வேண்டும்.

தங்களால் இதுவரை 1966-2014 இன்று வரை எழுதி இயக்கிய நாடகம், வில்லுப் பாட்டு, தெருக்கூத்து, வீதி நாடகம் பற்றிய  தொகுப்பு
1966 – 1990 எழுதிய நாடகங்கள் யுத்த இடம்பெயர்வுகளால் அழிவுற்றது. அதன் பின் உள்ளது

01. ஒதெல்லோ 2000
02. செபமே ஜெயம் 1999
03. சமாதானச் சக்கரவர்த்தி 2002
04. வசந்த காலம் 2005
05. சுயநலம் 2006
06. சமத்துவம் 2010
07. அடிச்சுவடுகள் 2000
08. பயன்தரும் பயணம் 2000
09. நாமும் நமது வாழ்வும் 2000
10. தொட்ட பிள்ளைகள் 2009
11. விருட்சத்தின் வேர்கள் 2012
12. வாங்கமச்சான் வாங்க 2002
13. மகுடமா மங்கையா 2004
14. மறை .அறிவும் மனித வாழ்வும் 2001
15. அதிசய காரியம் 2008
16. அருள் சின்னப்பர் 2013
17. சாந்திபுரம் 2012
18. இரத்த சாட்சிகள் 2009
19. நம்பிக்கை நட்சத்திரம் 2012



வீதி நாடகங்கள்

01. நற்குணசேகரம் 2007
02. சுகாதாரம் பேணுவோம் 2011
03. பெண்ணின் பெருமை 2010
04. சத்திய ஒளி 2013
05. அவலங்கள் ஓய்வதில்லை 2011
06. நிஜத்தின் நிழல்கள் 2005
07. மனிதம் 2003
08. பிறரோடு பிறப்பு விழா 2009
09. மண்ணும் மனிதமும் 2005
10. உழைப்பின் உயர்வு 2005
11. யோசப்வாஸ் 2010
12. ஈசலின் இறகுகள் 2009
13. எச்சரிக்கை மணி 2010
14. வாழ்வின் உதயம் 2010
15. விரக்தியின் விளிம்பில் 2009
16. நாட்டு நடப்புக்கள் 2010


வில்லுப்பாட்டுக்கள்

01. மனிதனாக்கும் மறைக்கல்வி 2012
02. நம்பிக்கை நாயகன் 2010
03. ஏற்றிவிட்ட ஏணிகள் 2007
04. மனமாற்றம் 2009
05. நீதியின் குரல் 2012
06. பூவனம் 2001


நாட்டக்கூத்துக்கள்

01. தியாக தீபங்கள் 2009
02. மனிதம் மலரட்டும் 2008
03. இரத்த பாசம் 1997
04. புதுமைகள் புரிந்த புனிதன் 2013
05. உயிர் கொடுத்த உத்தமர்கள் 2010
06. அழியாத தேகம் 1996
07. மனித நேயம் 2006



உரைச்சித்திரம்

01. அன்பின் ஆழம் 2010


தாளலயம்

01. அடுத்த வீட்டில் ஆண்டவர் 2013
(கிடைக்கப் பெற்றவை)

1966 தொடக்கம் 2014 இன்று கலையோடு வாழும் நீங்கள் எதிர் கால இலக்கை எதுவரைக்கும்?

எனது இலக்கானது  எனது கண்பார்வை இருக்கும் வரைக்கும் எனது கைகள் நடுங்காத வரைக்கும் நான் சோர்வடையாத வரைக்கும் இக் காலையினை விட மாட்டேன் தொடர்ந்து கொண்டேயிருப்பேன்.


கலைத்துறைக்காக தாங்கள் பெற்ற விருதுகள் பற்றி?

மன்னார் வவுனியா சமூகத் தொடர் நிலையத்தால் 2010ம் ஆண்டு ஆருட்பணி கருணாரட்ணம் கிளி விருதும்
2010 நானாட்டான் பிரதேச மட்டத்தில் செழுங்கலை வித்தகர் விருதும்
2014ம் ஆண்டும் சமாதான நீதவான் நியமனம் பெற்றதோடு,
கிராம அபிவிருத்தி சங்கங்களினாலும் சமாசத்தினாலும், பாடசாலைச் சமூகங்கள் ஏனைய அபிவிருத்தி நிறுவனங்களாலும் இவரது சேவையைப் பாராட்டி பாராட்டுப் பத்திரங்களும் பொற் கிளியும் பொன்னாடையும் போர்த்திக் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
2014ம் ஆண்டிற்கான கலாபூஷண விருதினை பெற இருப்பதும் குறிப்பிடத்தக்கது.


மன்னார் இணையம் பற்றித் தங்களின் கருத்து?

1966-2014 இன்று வரை கலையை வளர்த்து வருகின்றேன். இணையத்தில் கலைஞர்களே இம் முயற்சியினை பார்க்கும் போது எமது கலையை வளர்க்க இன்னொரு தலைமுறை தயாராகிக் கொண்டு வருகின்றது. இளைய தலைமுறையினரின் கைகளில் கலை வளரு.ம் நல்லதொரு முயற்சி அதுவும் இணையத்தில் வெளியிடுவது பாராட்டக்கு.ரியது. முதிய கலைஞர்களையும் இளைய கலைஞர்களையும் அவர்களது கலை வாழ்வை வெளிக் கொண்டு வருதல் மிகவும் வரவேற்கத் தக்கதும் வாழ்த்தியுரைக்கிறேன். 

தொடரட்டும் உங்கள் சிறப்பான  பணி. மன்னார் இணையத்தின் சேவையே தனி.


சந்திப்பும் சிந்திப்பும்
வை.கஜேந்திரன்.








கலைஞர் ஏ.டி.தேவதாசன் அல்மேடா அவர்களின் அகத்திலிருந்து Reviewed by NEWMANNAR on July 23, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.