அண்மைய செய்திகள்

recent
-

கர்நாடக 'இசைமணி', 'இசைத் தமிழ் மகள்' அந்தோனிப்பிள்ளை பேபி சரோஜா அவர்களின் அகத்திலிருந்து.....

கணனியில் முகம்  கலைஞனின் அகம்

கலைஞனின் அகம் கணனியில் முகம் இப் பகுதியில் இவ்வாரத்திற்கான  கதாநாயகி கர்நாடக  'இசைமணி', 'இசைத் தமிழ் மகள்' அந்தோனிப்பிள்ளை பேபி சரோஜா அவர்களின் அகத்திலிருந்து 


தங்களைப் பற்றி?

எனது சொந்த இடம் யாழிசை  பொங்கும் சங்கம். யாழ்ப்பாணம்தனிலே மாவட்ட புரத்தின் அண்மித்த வித்தக புரத்தில் சாஸ்திரிய கர்நாடக சங்கீதத்தை வளர்த்து வந்த இசைக் குடும்பத்தைச் சேர்ந்தவள். தற்போது இயற்கை அழகு மிக்க ஆத்திக்குழி  கிராமத்தில் எனது கணவர் P.P.அந்தோனிப்பிள்ளை. எனது மகள்மார் இருவர். ஜீவந்தினி, சுகந்தினி. இசையில் பட்டம் பெற்றவர்கள். எனது குடும்படும் கலைக் குடும்பமே..

பாடசாலைக் காலங்களில் உங்கள் கச்சேரி?

எனது பாடசாலைக் காலங்களில் 1955 இல் சமயப் போட்டிகள் பண்ணிசைப் போட்டிகள் போன்றவற்றிலும் எனக்கு ஊக்கமளித்து என்னை வளப்படுத்திய ஆசிரியை மாவைபாப்பாணர் இராசமணி அவர்கள் போட்டிகளுக்கு அழைத்துச் செல்வார். யாழ் கந்தர் மடம், மங்கையக்கரசி வித்தியாலயம் போன்ற இடங்களில் போட்டிகளில் முதலிடம் பெற்றுக் கொண்டேன். பாடசாலை மற்றும் வாணி விழாக்களிலும் எனது கச்சேரி இடம் பெறும்.

தங்கள் குரு பற்றி?

குரு இல்லாமலா எனது குருநாதர்  என்றால் மாவிட்டபுரம் நாதஸ்வர வித்துவான் சோ.உருத்திரபதி அவர்கள் தான் அவர்களிடம் இருந்து தான் உருப்படிகள், வர்ணம் மற்றும் தாளம், ராகம், சுருதி போன்ற இசை நுணுக்கங்கள் கற்றுக் கொண்டேன். இன்னும் என் குரு வணக்கத்தோடு தான் என் கச்சேரிகளை ஆரம்பிப்பேன்.

உங்களின் முதல் இசைக் கச்சேரி பற்றி?

எனது இசைக்கச்சேரி அரகேற்றம் செய்ய விரும்பிய எனது பெற்றோர்களான விநாயகர் லக்ஸ்மிபிள்ளை அவர்களின் முயற்சியின் பலனாக மாவை முத்தமிழ்க் கலாமன்றத்தினால் 1966ம் ஆண்டு எஸ்.சண்முக நாதக் குருக்கள் தலைமையில் முதன்மை விருந்தினாக 'கலையரசு' சொர்ணலிங்கம் ஐயா அவர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்ததோடு பொற்கிளியும் தந்து என்னை வாழ்த்தினார். 


உங்கள் இசைக் கச்சேரியின் வளர்ச்சி பற்றி?
  
1975ல் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத் தாபனம் நடாத்திய இசைத் தேரிவில் தேர்ச்சி பெற்று 8 வருட காலமாக இசைக் கச்சேரியை ½ அரை மணிநேரமாக பாடி வந்துள்ளேன். வானொலியில் எனது திறமையை பாராட்டி 1980ம் ஆண்டு வானொலி மஞ்சரியில் என் போட்டோவை பதிவு செய்தது. முகப்புப் படம் தலாதா மாளிகையுடன் இருந்தது. எனது பல ஆவணங்கள் நாட்டுப் பிரச்சினை காரணமாக அழிந்து போயுள்ளன. 

மறக்க முடியாத சம்பவம் ஏதும்?

யாழ்ப்பாணம் தெல்லிப் பழையில் மகஜனக் கல்லூரியில் இசைக்கச்சேரியில் வாணிவிழாவில் எனது அண்ணன் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ' சங்கீத பூஷணம்' இசைமாணிப்பட்டமும் பெற்றவர் 'கலாபூஷணம்' இராமநாதன் நுண்கலைப் பீடத்தில் விரிவுரையாளராக இருந்தவர். அண்ணன் செல்லத்துரை பல கச்சேரிகள் நடத்தியுள்ளார். அவருக்கு நான் தான் (தம்புரா) வாசிப்பேன். ஒருமுறை அன்று தான் இசைக்கச்சேரியில் தம்புரா வாசித்துக் கொண்டு இருக்கும் போது நித்திரை வர தூங்கி விட்டேன். சிறிது நேரம் தம்புரா ஒலி சத்தம் வராமல் இருக்க திரும்பி பார்த்தவர் நான் தூங்கிக் கொண்டிருக்க கண்டு பெரியகுட்டு ஒன்று தலையில் போட்டார் கலைந்தது தூக்கம்.... இன்னும் பல.

மகிழ்ச்சியான இசைக்கச்சேரி பற்றி?

1960ல் பொன்னாலை வரதராஜப் பெருமாள் உற்சவம் நடைபெற்றது. அதில் தெலுங்கு உருப்படிகளும் மூன்று  (கல்யாணி ராகத்தில் - எதாபுணரா), இரண்டாவது (பண்டுரிதி கொலு - ஹம்சரிதம்) மூன்றாவது (நிகுமோமூ - ஆபோரிராகம்) இரண்டு நிமிடத்திற்கு மேல் இருந்தவர்கள் கை தட்டி ஆரவாரம் செய்தார்கள். இன்னும் நினைக்கையில் மகிழ்ச்சியாகவே உள்ளது.

மன்னாரில் உங்கள் இசைக் கச்சேரி பற்றி?

இடப் பெயர்வின் மூலம் மன்னார் மண்ணை வந்து சேர்ந்த நான் எனது இசைக் கச்சேரியை நடத்த வேண்டும். கர்நாடக சங்கீதத்தை மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். கோயில்களில் பண்ணிசை நடத்தும் போது கேட்டுவிட்ட மருத்துவக் கலாநிதி கதிர்காமன் அவர்களின் வேண்டுகோளிற்கு இணங்கி லண்டன் கனக துர்க்கை அம்மன் இல்லத்தில் இடம்பெயர்ந்த பிள்ளைகளுக்கான 2 வருட பண்ணிசையினை கற்பித்தேன்.

2002 இல் மன்/சித்தி விநாயகர் தேசியப் பாடசாலையில் அதிபர் தயாநந்தா அவர்களின் வேண்டுகோளிற்கு இணங்க வாணி விழாவில் எனது இசைக் கச்சேரியை நடத்தினேன்.
எழுத்தூர் அகிலாண்டேஸ்வரி அம்பாளின் விசாகப் பொங்கலில் எனது இசைக் கச்சேரி நடைபெற்றது.

மன்னார் மண்ணில் உள்ள இந்து ஆலயங்களின் மகிமை பாமாலைகள் பாடியதாக சொன்னீர்களே. அந்த எண்ணம் எவ்வாறு தோன்றியது?

எழுத்தூர் அகிலாண்டேஸ்வரி அம்பாளின் விசாகப் பொங்கலில் எந்தவித பக்க வாத்தியமும் இல்லாமல் தனியாக வயலினோடு கச்சேரியினை நடத்திக் கொண்டு இருந்ததைப் பார்த்துக் கொண்டிருந்த கதிரேசன் சிவம் ஐயா அவர்கள் என்னிடம் சொன்னார்.
மன்னாரில் உள்ள இந்து ஆலயங்களின் மகிமை பற்றி பாடல் இயற்றப்போகிறேன். அதற்கு இசையமைத்து பாடுவீர்களா என்றார். நான் சம்மதித்தேன். அம்பாள் கிருபையால் இதுவரை பத்து கோவில்களின் மகிமை பாடல்களாக வெளிவந்துள்ளது. இதுவரை 100 பாடல்களுக்கு மேல் ராகம் தாளம் சுரதியமைத்து கொடுத்துள்ளேன். இசைக்கச்சேரியும் செய்துள்ளேன். உப்புக்குளம் பிள்ளையார் பாடல்கள் கும்பாபிஷேக மலரில் உள்ளது. இப் பணி தொடரும்.


இசைக்கான தங்கள் பங்களிப்பு?

06.10.1973இல் தெல்லிப் பழை மகஜனக் கல்லூரியில் நவராத்திரிக் கலை விழாவில் கச்சேரி.
பண்ணிசைப் போட்டி, வாணிவிழா, தமிழ்தினப் போட்டி 1999, 2000, 2001, 2002 போன்ற ஆண்டுகளில் நடுவராக கடமையாற்றியுள்ளேன்.
05.10.2000 புனித சவேரியாரில் ஆண்டுகள் பாடசாலையில் பக்திப் பாடல் பாடியுள்ளேன்.
கர்நாடக இசையை 2 வருடத்திற்கு மேலாக மாணவர்களுக்கு கற்பித்துள்ளேன்.
கொழும்பு இந்து மாமன்றம் சார்பில் தமிழ்நாடு தருமபுரம் ஆதினம் நடத்திய அனைத்துலக சைவசித்தாந்த விழாவில் பங்கு கொண்டு ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்து தேவார புராணம் பாடியுள்ளேன்.
யாழ் மேற்கில் சீரணி அம்மன் ஆலயத்தில் அபிராமிப் பட்டடைய விழாவில் 100 பாடல்கள் யாழ் வித்துவான்களோடு நானும் 6 பாடல்கள் இராக மாலிகையாகப் பாடியுள்ளேன்.

உங்களை கவர்ந்த கலைஞர்கள் பற்றி?

எனது குருநாதருடன் யாழ்ப்பாணத்தை சேர்ந்த வயலின் வித்துவான் இணுவில் கே.இராதாக் கிருஷ;ணன் அவர்கள் எந்தவொரு சங்கதியைப் போட்டாலும் அப்படியே வாசிப்பார்.  இன்னும் பலர் உள்ளார்கள்.

உங்களை கவர்ந்த பெண் பாடகர்கள் யார்?

என்னைக் கவர்ந்தவர்கள் பல இருந்தாலும் அதிலும் எம்.எல்.வசந்தகுமாரி மகாராஜபுரம் சந்தானம் போன்றவர்களின் கச்சேரியை விரும்பிக் கேட்டேன். எனக்கு பிடித்த பாடலாக கே.பி.சுந்தராம்பாள் பாடியுள்ள 'ஞானப் பழத்தைப் பிழிந்து' என்ற பாடலும் எம்.எஸ். சுப்புலட்சுமி மீரா படத்தில் 'காற்றினிலே வரும் கீதம்' என்ற பாடல்கள் மிகவும் கவர்ந்தவை. இந்தப் பாடல்களை எனது இசைக்கச்சேரியிலும் பாடியுள்ளேன். அப்பவும் இப்பவும் நல்ல வரவேற்பை பெற்றவை. எந்தப் பாடலையும் கேட்டவுடன் கிரகித்து விடுவேன். அவ்வளவிற்கு இசையில என்னை ஈடுபடுத்திக் கொண்டேன்.

உங்கள் இசைக் கச்சேரியில் எவ்வகையான பாடலை பாடுவீர்கள்? மிகவும் புகழடைந்த பாடல்கள் பற்றி?

 என்னுடைய இசைக் கச்சேரியில் பக்திப் பாடல்கள், தோத்திரப் பாடல்கள், துதிப் பாடல்கள், பாமாலைகள் பாடுவேன். 'அருள்மிகு சிறி இராஜராஜேஸ்வரி துதிப் பாமாலையும் 'அருள் மிகு சிறி பாலமுருகன் பக்திப் பாமாலை' இவ்விரண்டும் சிறந்த கர்நாட்டிக் மற்றும் இசையமைப்புக்கான பாராட்டினை 2008ம் ஆண்டு மன்னார் பிரதேச செயலகத்தில் கௌரவித்தார்கள்...

நீங்கள் கவலையடையும் விடயம்?

எமது மாவட்டத்திலும் ஏனைய நிகழ்ச்சிகளிலும் நான் காண்பது மக்கள் வரவேற்பது மிகவும் குறைவு. அது போல துணைப் பக்க வாத்தியக் கருவிகளும் வாத்தியக் கலைஞர்கள் இல்லை. நல்ல திறமையுள்ள கலைஞர்கள் முன்வர வேண்டும். முயற்சி செய்ய வேண்டும்..

நீங்கள் இதுவரை பாடிய இசையமைத்த மன்னார் மண்ணின் இந்து ஆலயங்கள் பற்றிய நூல்கள் உள்ளதா?

ஆம் உள்ளது. 10 ஆலயங்களுக்கு மேல் கதிரேசன் சிவம் ஐயா பாடல்கள் எழுத கர்நாடக இசையமைத்து இராக தாளம் மெட்டமைத்து பாடியுள்ளேன். இப்பவும் பாடி வருகின்றேன். பாடியவைகளில் சில..
09.06.2006 அன்று எழத்தூர் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி அம்பாளின் துதிப் பாடல்கள் 10 பாடல்களை கொண்ட நூல்கள் 200 பிரதிகளாக வெளியிடப்பட்டது.
20.09.2006 அன்று பெரியகடை அருள்மிகு ஞானவைரவர் திருமுருகன் பக்தி கீதங்கள் 10 பாடல்கள் கொண்ட நூல்கள் 200 பிரதிகளாக வெளியீடு..
28.01.2007 அன்று மன்னார் உப்புக்குளம் சித்தி விநாயகர் ஆலய மகா கும்பாவிஷேக சிறப்பு மலரில் 12 பாடல்கள் 500 பிரதிகளாக  வெளியீடு..
16.04.2007 கீரி அருள்மிகு ஸ்ரீபால முருகன் பக்திப் பாடல்கள் 10 பாடல்களைக் கெர்ட நூல்கள் 150 பிரதிகளாக வெளியீடு..
12.08.2007 உப்புக்குளம் அருள்மிகு இராச இராஜேஸ்வரி அம்பாள் துதிப் பாமாலை 12 பாடல்களைக் கொண்டது. நுல்கள் 150 பிரதிகளாக வெளியீடு.
06.07.2008 அன்று மன்னார் அருள்மிகு ஆலடி விநாயகர் மகிமைப் பாமாலை 10 பாடல்கள் கொண்ட 200 பிரதிகளாக வெளியீடு..
08.05.2009 அன்று மன்னார் செல்வநகர் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் பாமாலை 10 பாடல்கள் கொண்ட நூல்கள் 200 பிரதிகளாக வெளியீடு
11.11.2009 அன்று தோ.ட்டக்காடு மன்னார் அருள்மிகு ஸ்ரீ செந்தூர் முருகன் பக்தி பாடல்கள் 10 பாடல்கள் கொண்ட நூல்களாக 200 பிரதிகள் வெளியீடு
23.08.2010 அன்று நானாட்டான் அருள்மிகு ஸ்ரீ செல்வ முத்துமாரி அம்மன் பக்திப் பாடல்கள் 10 பாடல்கள் கொண்ட நூல்கள் 200 பிரதிகள் வெளியீடு



இசைத் துறையில் பெற்ற விருதுகளும் கௌரவங்களும் பற்றி?

மன்னார் மாவட்ட கலை இலக்கிய மன்ற முத்தமிழ் விழாவில் எனது கலைப் பணிகளைப் பாராட்டி 29.09.2013 அன்று 'இசைத் தமிழ் மகள்' பட்டம் தந்து கௌரவித்தார்கள். 
நானாட்டான் பிரதேச செயலக கலாச்சார பேரவை நடாத்திய விழாவில் எனது சேவையைப் பாராட்டி 'செழுங்கலை வித்தகர்' விருது தந்து கௌரவித்தார்கள்.
மன்னார் ஆலடி விநாயகர் பாமாலை நூல் வெளியீட்டு விழாவில் கர்நாடக 'இசைமணி' என்று வீதி அபிவிருத்தி அதிகாரசபை பொறியியலாளரும் சபைத் தலைவருமான வி.ஜி.ஆர் ஜெவ்றி அவர்களும் கதிரேசன் சிவம் ஐயா அவர்களும் பாராட்டி கௌரவித்தார்கள்.
யாழ்ப்பாண நல்லை ஆதினம் என்னை பாராட்டி ஆசிர்வதித்துள்ளார். இன்னும் பல அமைப்புகளால் கோயில் நிர்வாகத்தினரால் பொற்கிழியும் பொன்னாடையும் போர்த்தி கௌரவித்தார்கள்.
2014 ஆண்டிற்கான கலாபூஷண விருது பெற இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மன்னார் கலைஞர்களுக்கு மகுடம் சூட்டும் மன்னார் இணையம் பற்றி தங்களின் கருத்து?

எங்களைப்  போன்ற கலைஞர்களை வீடு தேடி வந்து உரையாடி ஊக்கமளிக்கும் உங்களின் பணி மிகவும் போற்றத்தக்கது. இப்படியான கடினமான செயலை செய்யும் உங்களுக்கும் உங்கள் இணைய நிர்வாகத்தினருக்கும் எத்தனை முறை நன்றி கூறினாலும் தகாது. எல்லாம் வல்ல இறைவன் தான் உங்களுக்கு எல்லா வல்லமையும் தந்து தொடர்ந்தும் சேவையாற்ற வேண்டுகிறேன். மென்மேலும் வெற்றி பெற இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

சந்திப்பு : வை. கஜேந்திரன்.

















கர்நாடக 'இசைமணி', 'இசைத் தமிழ் மகள்' அந்தோனிப்பிள்ளை பேபி சரோஜா அவர்களின் அகத்திலிருந்து..... Reviewed by NEWMANNAR on August 17, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.