அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் இணையத்தின் விம்பம் பகுதியில் சிவஸ்ரீ மஹா.தர்மகுமாரக்குருக்கள்.

மன்னார் இணையத்தின் விம்பம் பகுதியில் 
சிவசிறி மஹா.தர்மகுமாரக்குருக்கள்.
எம்மோடு பேசவருகிறார் தலைமைக்கு அல்ல தலைமுறைக்காக பணியாற்றுவோம் என்கிறார். சாமஸ்ரீ தேசசக்தி முத்தமிழ்குருமணி சமாதானநீதவானுமாகிய இரண்டு ஆலயங்களின் பிரதமகுருவுமான  சிவஸ்ரீ மஹா.தர்மகுமாரக்குருக்கள் அவர்களின் அகத்திலிருந்து…..

தங்களைப்பற்றி----
எனது சொந்த இடம் இலங்கையின் புகழ்பூத்த கந்தன் வீற்றிருக்கும் நல்லூர் பதிதான் யாழ்ப்பாணம். மஹாதேவஐயர் ஸ்ரீராஐhம்பாள் மதிப்பிற்குரிய பெற்றோர்கள். எனது ஆரம்பகல்வியினை யாழ் ஆனைப்பந்தி மெதடிஷன் தமிழ்க்கலவன் பாடசாலையிலும் உயர் கல்வியினை யாழ் இந்துக்கல்லூரியில் கற்றேன்.

மன்னாருக்கான வருகை பற்றி-
இடம்பெயர்வுதான் பெரிதாக விருப்பம் இல்லாமல் தான் மன்னாருக்கு வந்தேன் ஏனெனில் மன்னார் மாவட்டத்தினைப்பொறுத்த மட்டில் நிறைய ஆலயப்பணி செய்ய வேண்டிய தேவையிருந்தது தண்ணீர் இல்லாக்காட்டிற்கு போவது போல உணர்வு இப்போது மன்னார் வந்து 17 வருடங்களாக இங்கு பணிபுரிகின்றேன். இப்போது யாழ்ப்பாணம் போக விருப்பமில்லை மன்னார் மாவட்டத்தினைப்பொறுத்த மட்டில் யாரும் யாரிடமும் கையேந்த வேண்டிய அவசியம் இல்லை எதாவது ஒரு தொழில் செய்து வாழலாம் வந்தாரை வாழவைக்கும் வளமான பூமி மகத்துவமான மண் என்றுதான் நான் கருதுகின்றேன்.

தாங்கள் மன்னார் வந்து 17 வருடங்களில் தங்களின் பணியில் ஏதாவது இடைஞ்சல்கள் ஏற்பட்டதுன்டா..
இதுவரை பெரிதாக எதுவும் இடைஞ்சல்கள் ஏற்படவில்லை ஆனால் கருத்து முரண்பாடுகள் சில பழிவாங்கல்கள் ஏற்பட்டதுண்டு அதைக்கண்டு நான் பயப்படவில்லை ஏன் எனில் நான் சுவாமி விவேகானந்தரின் வீரவாசகத்தினைத்தான் அதாவது பிறரின் பாராட்டுக்கும் புகழுரைக்கும் பழிச்சொல்லுக்கும் செவிசாய்த்தால் உலகில் மகத்தான காரியம் எதனையும் செய்து விடமுடியாது. எனக்கு சவால்கள் முரண்பாடுகள் ஏற்படுகின்றபோது அவரைத்தான் நினைவில் கொள்வேன்.

ஆன்மீகப்பணியும் தமிழ்ப்பணியும் செய்துவருகின்றீர்கள் மன்னார் மாவட்டத்தினைப்பொறுத்தமட்டில் பல விழாக்களை நடத்துகின்றீர்கள் தங்களின் பணி பற்றி----
என்னால் இயன்றதைத்தான் செய்கின்றேன் அதைப்பணி எனச்சொல்லுகின்றீர்கள் சிலர் சொல்கின்றார்கள் இவர்களுக்கு விழாக்கள் செய்வது தான் வேலை ஆனால் அப்படி சொல்பவர்கள் முன்வந்து விழாக்களை நடத்த முன்வந்தால் நான் அவர்களிடமும் கைகோர்த்து கொள்கின்றேன் எனது நிகழ்வுகளையும் குறைத்துக்கொள்கின்றேன்.

தங்களின் அறிமுகமானது பற்றி---
மன்னார் மாவட்டத்தின் அறநெறிப்பாடசாலைகளின் இணையம் ஒன்றை நிறுவி அதன் மூலம் சமய சமூகப்பணிகளை செய்து வந்தேன் படிப்படியாக எனது பணிகள் விரிந்தது என்னுடன் சேர்ந்து பணியாற்ற முன்வந்தவர்களுடன் இணைந்து பணியாற்றிக்கொண்டிருக்கின்றேன். நான் ஒன்றை நினைத்துவிட்டால் அதை எப்படியாவது செய்து விடவேண்டும் என்று முனைப்புடன் செயலாற்றுவேன் இடைவிடாத முயற்சி செய்தால் எதையும் செய்யலாம் அந்த விடையம் பொதுநலத்துடன் பிறருக்கு பயன்தரக்கூடியதாக இருக்கவேண்டும்.

நினைத்தவுடன் விழாக்களை நடத்துகின்றீர்களே அது எப்படி---
விழாக்கள் என்பது இலகுவான விடையம் இல்லை ஆனால் என்னைப் பொறுத்தமட்டில் விழாக்கள் செய்வது எளிதான விடையம் ஏன் என்றால் சரியான திட்டமிடல் முயற்சி செயல்திறன் மிக்க சிலர் என்பன முதல் தேவை அதன் பின்பு தான் பணம் நாங்கள் சரியாக திட்டமிடுகின்றோம் பக்கபலமாக செயல்திறன் மிக்கவர்களும் கைகோர்க்க நல்ல உள்ளம் கொண்ட வர்த்தகப்பெருமக்கள் சமயப்பெரியார்கள் ஆர்வலர்கள் ஒன்றினைந்தால் பிறகென்ன எந்தப்பெரிய விழாவாக இருந்தாலும் மிகவும் இலகுவாக செய்து முடித்துவிடலாம். வெறுமனே விழாக்கள் செய்வது மட்டுமல்ல எமது நோக்கம் இவ்வாறான விழாக்களின் மூலமாக எமது கலை கலாசார விழுமியங்களை ஒழுக்கநெறிகளை கடைப்பிடிக்கவேண்டிய காக்கவேண்டிய கட்டாயத்தில் நாம் தற்போது உள்ளோம்.
 கம்பனுக்கும் இளங்கோவுக்கும் வள்ளுவனுக்கும் பாரதிக்கும் நாவலருக்கும் விழா எடுப்பதால் தமிழ் தானாக வளரும் அதற்கான முயற்சிகள் தான் இவ்வாறான விழாக்கள் குறைந்தளவாவது முன்னேறி வருகின்றோம்.

மன்னார் மாவட்டம் பின்தங்கிய மாவட்டம் என்று சொல்கின்றார்களே...அதற்கான காரணம் பற்றி —
என்னைப்பொறுத்தமட்டில் மன்னார் மாவட்த்தினை பின்தங்கிய மாவட்டம் என்று சொல்ல முடியாது அந்தளவிற்கு பின்தங்கிய மாவட்டமாக்கி வைத்துள்ளார்களே தவிர ஏனைய மாவட்டங்களில் பலவகையான அபிவிரித்திப்பணிகள் நடைபெறுவது போல மன்னார் மாவட்டத்தில் நடைபெறுவதில்லை அவ்வாறான அபிவிருத்திப்பணிகள்  நடைபெற்றால்… எமது மன்னார் மாவட்டத்தில் என்ன வளங்கள் இல்லை அத்தனை வளங்களையும் சரியானமுறையில் உபயோகப்படுத்தினால் தற்போதைய சூழலில் பல அரசியல்வாதிகள் அரசஅதிகாரிகள் அபிவருத்திப்பணிகளை செய்து கொண்டுதான் இருக்கின்றார்கள் இது நீண்டகாலத்தவறு என்றுதான் சொல்ல வேண்டும் இன்னும் பின்தங்கிய என்று சொல்லிக்கொண்டு இராமல் அதற்கான வழிவகைகளை காண்டு உடனடியாக செயற்படவேண்டும் என்பது எனது கருத்தும் உண்மையும் அதுதான்.

மன்னார் மாவட்டத்தினைப்பொறுத்தமட்டில் தற்போது பூதாகரமாக உள்ளவிடையம் மதங்களுக்குகிடையிலான கருத்து வேறுபாடு முரண்பாடு(விக்கிரகங்கள்-உடைப்பு-ஊண்டியல்-காணி)பற்றி----
மதம் என்பது அவரவர் தனிவிருப்பம் அவற்றினை நேசிப்பது கடைப்பிடிப்பது அவரவர்களின் விருப்பம்  ஆனால் தங்களின் மதத்தின் மீது வெறித்தனமாக இருந்து கொண்டு எங்களுடையது மட்டும் தான் மதம் மற்றது மதமல்ல என்ற கருத்தினை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

மதம் கடந்து மனிதம் வெளிப்படவேண்டும் அப்போதுதான் உண்மையான சமய சமூக உடன்பாட்டுடன் ஒற்றுமை என்பன உருவாகி சகோதரத்தவத்துடன் வாழலாம் மன்னார் மாவட்டத்தில் அதிகமாக கிறிஸ்த்தவ மக்கள் செறிந்து வாழுகின்றார்கள் என்பதற்காக இந்துக்கள் தமது சமயச்செயற்பாடுகளை செய்யக்கூடாது குறைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்கில்லை என்னுடைய கருத்து என்னவென்றால் ஒருசமூகம் இவ்வாறான செயற்பாடுகளினால் பாதிக்கப்படக்கூடாது அடக்குமுறைக்கு உட்படக்கூடாது. பெரும்பான்மை சிறுபான்மை தொழிலாளி முதலாளி என்ற அடக்குமுறை உடைத்தெறியப்படவேண்டும். எல்லோருக்கும் எல்லாம் சமன் என்ற எண்ணம் வரவேண்டும். உடைப்புக்கள் கொள்ளையென்பது தற்போது சர்வசாதாரணமாக இடம்பெறுகின்றது இது ஒரு சிலரால் வேண்டுமென்றே திட்டமிட்டு மன்னார் மக்களில் மதங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தினை சீர்குலைக்க எடுக்கும் முயற்சி இதை உரிய முறையில் எல்லோரும் இணைந்து தடுக்க முன்வரவேண்டும்.

நந்தி எனும் இதழ் ஒன்றினை வெளியிடுகின்றீர்கள்அதன் செயற்பாடு பற்றி---
ஆரம்பத்தில் நாங்கள் அன்னை எனும் சஞ்சிகையினைத்தான் வெளியீட்டு வந்தோம் இந்து முன்னணிக்கழகத்தின் வெளியீடாக வந்தது தொடர்ச்சியாக வெளிவருவதற்கு போதுமான நிதியில்லாமையினால் இடைநிறுத்தியிருந்தோம். பின்பு மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையில் புதிய வரவாக நந்தி சஞ்சிகை இரண்டு வருடங்களாக வெளிவருகின்றது. பலரின் ஆலோசனைகளின் படி காத்திரமான படைப்பாக காலாண்டு இதழாக புதிய வருடத்தில் இருந்து வெளிவரவுள்ளது.

 சமயப்பணியோடு தமிழ்ப்பணியாற்றுகின்றீர்கள் இலக்கிய ஆர்வம் பற்றி---
நான் குருத்துவப்பணியினை ஆரம்பிக்கும் முன்னே 16 வயசில் இருந்தே இலக்கிய ஆர்வம் உள்ளவன் நாடகம் நாட்டுக்கூத்து பட்டிமன்றம் பேச்சு வில்லுப்பாட்டு கலையோடு ஆர்வமாய் உள்ளவன்  சிறியவனாக இருந்த போது நாடகம் ஒன்றில் பறையறைபவன் பாத்திரம் அதில் நான் நடிக்கப்போகும் போது எனது வீட்டில் பெரும் குழப்பம் வந்தது காரணம் இந்து பிராமணக்குடும்பத்தில் பிறந்தவன் இவனை பறையறையும் பாத்திரத்தில் நடிக்கவைப்பதா…! முடியாது என்றார்கள் நான் முடிவெடுத்தேன் நாடகம் என்றால் பாத்திரமாக நடிக்கத்தான்வேண்டு;ம் அப்போது எடுத்த முடிவு தான் அன்றிலிருந்து ஆரம்பமானது தான் எனது கலைப்பணி…

உங்களது கலைப்பயணத்தின் ஆரம்ப கர்த்தா ---
எனது கலைப்பயணத்தின் ஆரம்ப வழிகாட்டி என்றால் நல்லை திருஞானசம்பந்த ஆதீனம் கலைப்பண்பாட்டுக்கழகத்தின் தலைவராக இருந்து கொண்டு 16வயதினிலே ஒவ்வொரு வருடமும் பொங்கல் விழாவினை பெரும் விமரிசையாக குருசாமி சன்னிதானத்தின் வழிகாட்டலில் நடத்தினோம் நிறைவான ஆலோசனைகள் வழிகாட்டலின் மூலம் 18வயதின்  வில்லுப்பாட்டு செய்தோம் பத்மஜோதி சத்தியவான்சாவித்திரி-கோவலன் கண்ணகி நடத்தினோம் மன்னார் வந்தபின்பும் தலைமன்னார் ஆலயத்திலும் நடத்தினோம்.அந்த நேரத்தில் பேச்சு போட்டியும் பட்டிமன்றமும் நடாத்த வேண்டும் என்று எமது குருவிடம் கேட்ட போது அந்த நேரத்தில் யாழ்ப்பாணத்தில் பிரபல்யமாக இயங்கிக்கொண்டு இருந்த கம்பன் கழகத்தின் சிறந்த பட்டிமன்றப்பேச்சாளர் தமிழருவி த.சிவகுமாரன் பிரபல்யமான நேரத்தில் எமக்கு பட்டிமன்றம் என்றால் என்ன எவ்வாறு பேசவேண்டும் எப்படி எதிர்த்து கருத்தாக பேசவேண்டும் என்ற நுணுக்கங்களை இலகுவான முறையில் சொல்லித்தந்தார் மிகவும் புகழின் உச்சியில் இருந்தபோது எமக்கு சொல்லித்தந்தாதால் தமிழினால் நான் இந்நிலையில் இருக்க காரணம் இதைநான் பலமேடைகளில் சொல்லியிருக்கின்றேன் எனக்கு தமிழ் தந்த தமிழருவி த.சிவகுமாரன் என்று. யாழ் இந்துக்கல்லூரில் பயிலும் காலத்தில் அவரின் மாணவன் நான்.


மன்னார் மாவட்டத்தின் தமிழ்ச்சங்கத்தின் செயல்திறன் எவ்வாறு உள்ளது----
நான் மன்னார் தமிழ்சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்று ஒன்றரை வருடங்களாகின்றது. இரண்டு வருடங்கள் பதவி வகிக்கலாம் என்றுதான் உள்ளது நான் புதிய வருடத்தில் புதிய ஒருவரை தெரிவு செய்யவுள்ளோம், தமிழ்சங்கம் சார்ந்த எந்தப்பணியாக இருந்தாலும் பொதுச்செயலாளர் மன்னார் அமுதன் அவர்களின் பங்கு அளப்பரியது. திறம்படச்செயலாற்றக்கூடிய ஒருவர்  முப்பரிமான நூலகம்-வள்ளுவர் விழா- புத்தக வெளியீடுகள் குறிப்பிட்ட காலப்பகுதியில் சில விடையங்கள் செய்ய முடியாமல் போனாலும் சாந்திபுரத்தில் தமிழ்சங்கத்திற்கான காணியினை 40பேர்ச் பெற்றுக்கொண்டுள்ளோம். மன்னார் மாவட்ட பிரதேசசெயலாளர் கே.எஸ்.வசந்த குமார் அவர்களினால் எமது சங்கத்தின் இடைவிடாத முயற்சியினால் கிடைக்கப்பெற்றுள்ளது. பலரை நினைவில் கொள்கின்றேன் இனிவருகின்ற புதிய நிர்வாகமானது அந்தக்காணியில் தமிழ்சங்கத்திற்குரிய கட்டிடத்தினை கட்டியெழுப்பும் அதற்கு முழுமையான ஒத்துழைப்பை எப்போதும் வழங்கி நிற்பேன்.

மன்னார் மாவட்டத்தினைப்பொறுத்தமட்டில் கலைஞர்கள் கௌரவிக்கப்படவதில்லை என்ற குற்றச்சாட்டுள்ளது அதே வேளை குறிக்கப்பட்ட கலைஞர்கள் தான் கௌரவிக்கப்படுவதாகவும் உள்ள கருத்திற்கு தங்களின்----
மன்னார் மாவட்டத்தினைப்பொறுத்தமட்டில் இளங்கலைஞர்கள் கௌரவிக்கப்படுவதில்லைத்தான் நானும் பல பிரதேச இலக்கிய விழாக்களில் சொல்லி இருக்கின்றேன.; இளங்கலைஞர்கள் கௌரவிக்கப்பட வேண்டும் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று கலாபூஷணம் விருது பெற்றவர்களைத்தான் கெரவிக்க வேண்டும் என்று அவசியமில்லை அவர்களையும் இளைஞர்களையும் கொரவிக்கவேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது ஏனென்றால் அவர்கள் தற்போதைய சூழலில் பல வழிகளில் திக்குத்திசைமாறி செல்கின்றார்கள் அவர்களை இவ்வாறான விடையங்களில் உள்ளீர்த்தால் தான் நல்ல ஆரோக்கியமான இளம் தலைமுறையினரை உருவாக்க முடியும். நாம் இதுவரை சைவக்கலை இலக்கியமன்றத்தால் 80 கலைஞர்களை கௌரவித்துள்ளோம் அதில் 25இளம் கலைஞர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர் இனிவருங்காலத்திலும் நிறைய இளங்கலைஞர்களை உள்வாங்குவோம்.

தங்கள் சமூகத்தொண்டின் போது மக்களின் பார்வை எவ்வாறு உள்ளது---
சமூகம் எனும் போது பலர் பலவிதமாய் எம்மைப்பற்றிய சிந்தனை இருக்கும் பேச்சிருக்கும் பலர் எனக்கு என்னுடைய வேலை செய்யவே நேரமில்லை என்பார்கள் இவர் எப்படித்தான் ஊர் வேலையெல்லாம் செய்கின்றாரோ என்பார்கள் முதலில் நேரமில்லை என்று சொல்லாதீர்கள் நேரம் என்பது ஒருநாள் 24 மணித்தியாளம் தான் அந்த இருபத்திநான்கு மணித்தியாளத்தினை கூட்டவோ குறைக்கவோ முடியாது அதற்குள் நாம் தான் எம்மால் முடிந்ததளவு நேரத்தினை ஒதுக்கி செய்ய வேண்டிய நல்ல காரியங்களை திட்டமிட்டு செய்து முடிக்க வேண்டும் பிறரின் கதைகேட்டுக்கொண்டிருந்தால் எந்தக்காரியத்தினையும் வெற்றிகரமாக செய்து விடமுடியாது.

தற்போது இளைஞர் யுவதிகள் தமது மதத்தினை விட்டு விலகியிருப்பதும் மதமாற்றப்படவதுமான விடையம் பற்றி தங்களின் கருத்து---
மதம் மாறிப்போவதற்கு முதல் காரணமாக பசி பட்டினி பொருளாரத்தினை சொல்லலாம். இரண்டாவதாக அவரவர் தனது மதத்தின் மீது சரியான தெளிவின்மையினால் விலகிப்போகின்றனர் இதை எதற்கு ஒப்பிடலாம் என்றால் நெல்லில் அரிசி இருக்கும் உமியானது விலகிப்போகும் உமி ஒரு போதும் அரிசியாக முடியாது. உமியானது அங்கும் உமிதான் இருக்கும் அதை எண்ணி பெரிதாக கவலைப்பட தேவையில்லை தற்கால இளைஞர்யுவதிகள் தடம்புரள்கின்றார்கள் என்றால் அது நடைபெறவேண்டிய விடையம் தான் அதை எண்ணி கவலைப்படத்தேவையில்லை ஏன் என்றால் தோன்றுவதும் அழிவதும் இவ்வுலகின் நியதி முன்பே பிரளயம் எனும் பெயரில் இருந்தது தான் தற்போது சுனாமியாக உள்ளது. இருப்பதும் இல்லாமல் போவதும் வழமையானதுதான் இந்து சமயம் சமண சமயத்தால் அழியும் நிலையில் இருந்தது பின்பு தனது வளர்ச்சியினால் புதியதாய் உருவெடுத்தது நாம் தற்போதைய இளைஞர் யுவதிகளுக்கு தெளிவுபடுத்த வேண்டியது எமது சயமத்தினை அறிவாராட்சிக்கு உட்படுத்த வேண்டியுள்ளது. உலின் அறிவியல் ஆய்வியல் பலகேடிகளை செலவு செய்து கண்டுபிடித்துள்ள விடையம் தாண்டவம் ஆடும் நடராஐப்பெருமானின் பெருவிரல் அடையாளம் தான் பூமியின் சமணிலையை சரியாக குறிக்கின்றது என்று அவர்கள் அதை ஏற்றுக்கொண்டு தங்களது அறிவாராட்சி நிலையங்கயில் நடராஐப்பெருமானின் சிலையை நிறுவியுள்ளார்கள்.அதுபோல எமது சமயத்தில் சில எதிர்மறையான போதனைகள் கருத்துக்கள் இருப்பதாக தெரிந்தாலும் அதை முழுமையாக தெளிவு படுத்த வேண்டிய பொறுப்பு எமக்குள்ளது.இவ்யுகம் கலியுகம் என்பதால் கலி என்றால் துன்பம் தற்போது இளைஞர்கள் மட்டுமல்ல பெற்றோர்களும் இந்த இலத்திரனியல் உலகிற்குள் மூழ்கிப்போய்த்தான் உள்ளார்கள் காலம் மாறத்தான் செய்யும் நாம் தான் எமது பாரம்பரியத்தினை மாறாமல் காத்துக்கொள்ள வேண்டும்.

மன்னார் மாவட்டத்தினைப்பொறுத்தமட்டில் இந்துக்களின் அடையாளமாக இருக்கும் திருக்கேதீஸ்வரத்தில் சமீபத்தில் சுந்தரர் ஆதீனம் உருவாகியிருப்பது பற்றி தங்களின்----
ஆன்மீகவளர்ச்சிக்கும் இந்துசமயவளர்ச்சிக்கும் சுந்தரர் ஆதினம் அமைக்கப்பட்டிருப்பது பெரும் நன்மையே ஆதினங்கள் துறவிகளை நல்ல குருக்களை உருவாக்குவதன் மூலம் ஆன்மீகத்தின் ஊடே சமயத்தினை வளர்க்க வேண்டும் இனவாதத்திற்கும் மதவாதத்திற்கும் துணைபோகக்கூடாது இலங்கையிலே நல்லை ஆதீனம் தான் மிகவும் சிறப்புக்குரியது அது போல் மன்னாரில் சுந்தரர் ஆதீனம் உருவாக்கம் பெற்றிருப்பது பொருத்தமானதும் தேவையானதுமான ஒன்றாகும்.

நீங்கள் சிறுபராயத்தில் சந்தோஷமடைந்த விடையம் பற்றி---
சர்வசித்தன் நாடகத்தில் புலவனாக நடித்தேன் அப்போது கிளிநொச்சியில் தொழிலதிபராக இருந்த கனகராசா விருந்தினராக கலந்து நாடகத்தினைப்பார்த்துக்கொண்டு இருந்தார். சிவபெருமான் தருமியுருவத்தில் புலவனாக வந்து பொற்கிழி பெறும் காட்சியில் நான் நடித்திருந்தேன் நான் சிறப்பாக நடித்தமைக்காக பொற்கிழியும் தங்கப்பதக்கமும் தந்து பாராட்டினார்கள் இன்னும் அந்த நினைவுகள் பசுமையாக அதன் பிற்பாடு ஒவ்வொரு முறையும் தரப்படுகின்ற பட்டங்கள் விருதுகள் பெறுகின்றபோது எனக்கு தயக்கமாகத்தான் இருக்கும் அந்த விருதுகளுக்கும் பட்டங்களுக்கும் பொருத்தமானவனா என எண்ணிக்கொள்வேன் பொறுப்புகளும் பணிகளும் அதிகரிக்கின்றன.


எழுத்துத்துறையில் தங்களின் செயற்பாடுகள் பற்றி---
நான் சிறிய வயதில் கவிதை கதைகள் எழுதியிருக்கின்றேன்  ஒரு முறைபடிப்பேன் அதை அப்படியே பைலில் போட்டு வைத்துவிடுவேன் இல்லாவிடில் கிழித்து விடுவேன் ஒரு முறை நன்றாக இருக்கும் மறுமுறை படிக்கும் போது நன்றாக இருக்காது. அப்படியாகத்தான் எனது எழுத்து துறை அமைந்தது ஆனாலும் தற்போது எழுதி வெளியிட வேண்டும் என்ற அவசியமும் இல்லை தேவையும் இல்லை என்று கருதுகின்றேன். ஆனாலும் தற்போதுள்ள இளம் கலைஞர்கள் எழுதியதை மூடிவைப்பதாலும் மறைமுகமாகவே இருக்கின்றார்கள் சரியோ... பிழையோ... வெளிக்கொணர்ந்தால் தான் தெரியும் அவர்களது திறமை வெளியில் வரும் பத்திரிகைகளுக்கோ வானொலியிலோ எழுத வேண்டும் பத்திரிகைகளில் வரும் கவிதைகள் எல்லாம் தரமானவை என்று சொல்லிவிடமுடியாது. குறுகிய மனப்பாங்கோடு இருக்காமல் தற்கால இளைஞர்கள் கவிஞர்கள் தங்களின் திறமையினை வெளிக்கொணர்ந்து சாதிக்க வேண்டும்.

தங்களுடைய இலக்கு----
நான் எனது காலம் பூராகவும் மன்னாரில் தான் இருக்க விரும்புகின்றேன். ஆனால் அதை காலம் தான் நிர்னயிக்கும் அதற்கு முதல் மன்னார் மாவட்டம் கலை இலக்கியத்தில் ஏனைய மாவட்டங்களோடு ஒப்பிடுகையில் உச்சத்தில் இருக்க வேண்டும். மாபெரும் கலைப்பூமியாக மாற்ற வேண்டும் நிறைய கலைஞர்களை கவிஞர்களை உருவாக்க வேண்டும். நான் சைவக்கலை இலக்கிய மன்றத்தினை உருவாக்கியதே நிறைய கலைஞர்களை உருவாக்கி வெளிக்கொணர வேண்டும் பேச்சு-பட்டிமன்றம் நாடகம்-கூத்து-கவிதை-கட்டுரை-கதை-சித்திரம் போன்றவற்றின் மூலம் திறமைகளை வெளியில் கொண்டு வருவதற்கும் விழாக்களை நடத்தி மறைமுகமாக இருக்கின்ற கலைஞர்களை ஊக்கமளித்து வெளியில் கொண்டு வரவேண்டும் யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பது போல கல்விப்புலம் கலை விளையாட்டு கலாசார விழுமியம் என செயற்பட வேண்டும் தலைமைக்கான செயற்பாடாக இல்லாமல் தலைமுறைக்கான செயற்பாடாக இருக்க வேண்டும்.

நீங்கள் நடத்திய பல விழாக்களில் பெரிய விழாவாக எதைக்கருதுகின்றீர்கள்…
எல்லா விழாக்களும் நன்றாகத்தான் நடந்து கொண்டு இருக்கின்றது. இருப்பினும் கம்பன் விழாவானது மாபெரும் விழாவாக இருந்தது எனலாம் கொழும்பில் இருந்து கம்பவாரதி இ.ஜெயராஜ்அவர்களை வரவழைத்து நடத்தினோம் ஏன் என்றால் அவர் மீது எனக்கு அவ்வளவு விருப்பம் நான் சிறுவயதில் இருந்து கம்பவாரதியின் பேச்சைக்கேட்டிருக்கின்றேன் அவரின் தலைமையில் நான் பட்டிமன்றத்தில் பேசவேண்டும் என்ற நீண்ட நாள் ஆசை அந்த விழாவில் பேசியது எனது ஆசை நிறைவேறியது. கம்பனை என்னும் போதும் கம்பவாரதியை பார்க்கும் போதும் ஏன் இன்னும் நான் கம்பனை முழுமையாக படிக்கவில்லை.. கம்பன் விழா கம்பவாரதி என்றால் உடனே என்னை அறியாமல் எனக்குள் ஒரு பூரிப்பு ஏற்படும் வீரபாண்டியனை எனக்கு தெரியாது ஆனால் சிவாஜி மூலம் வீரபாண்டியனை பார்த்திருக்கின்றேன் அது போலத்தான் கம்பவாரதியும்.

உங்களை மிகவும் கவர்ந்தவர்களில் இவரைப்போல் வரவேண்டும் என்று நினைத்தது யாரை----
எனது சிறுவயது முதல் இன்று வரை எனக்கு மிகவும் பிடித்த இலக்கிய வாதிகளில் முதன்மையானவர் தமிழருவி த.சிவகுமாரன் தான் இவர் இப்போது பேசுவதைவிட அன்றைய காலங்களில் பட்டிமன்றங்களினை நடத்தும் போது பேசும் போது கணீர் என்ற குரல் தமிழ்ப்புலமையினை கேட்கும் அப்படியே மெய்மறந்து போய்விடுவேன். அவர் ஒரு தமிழ்க்கடல் என்றால் நான் ஒரு சிறிய தண்ணீர் ஜக்கு என்பேன் இப்பையல்ல எப்பவும்.
இவரைப்போல கம்பவாரதி இ.ஜெயராஜ் வசந்தா விக்கிநாதன் மோழிக்குமரன் ஆறு.திருமுருகன் தமிழ்மணி அகளங்கன் இன்னும் சிலரின் புலமைச்சமூகத்திற்கு பிறகு என்ன நடக்கப்போகின்றது என்பது அடுத்த தமிழ்மரபிற்கு இப்போதே இளைஞர் யுவதிகளை உள்வாங்க வேண்டும். கம்பவாரதி ஒரு விடையம் சொல்வார் கோயில் வாசலில் நின்று ஒருவன் கும்பிடுகின்றான் என்றால் அவன் கோயிலுக்கு வரத்தயாராகி விட்டான் என்று அதுபோல ஒவ்வொருவரையும் தமிழின் பால் இலக்கியத்தின் பால் கொண்டு வரவேண்டும். தமிழ் எப்போதும் அழிந்து போகாது அழியவும் தமிழன்னை விடவும் மாட்டாள் அத்தனை மொழிகளையும் உள்வாங்கி கொண்டு தனியாக நின்று இயங்குகின்றது என்றால் அது எப்போதும் அழிந்தும் போகாது மறைந்தும் போகாது காலம் கடந்தும் கம்பனுக்கும் வள்ளுவனுக்கும்  இளங்கோவுக்கும் விழா எடுக்கின்றோம் என்றால் இன்னும் அவர்களில் வாழுகின்ற தமிழ் மொழியின் செழுமையும் செம்மையும் தான் நிலைத்து நிற்கும்.


சைவக்கலை இலக்கிய மன்றத்தின் பங்களிப்பு ----
எமது மன்றத்தின் மூலம் பல்வேறு சமயப்பணி அறப்பணியினையும் தமிழ்கலைப்பணியினையும் செய்து வருகின்றோம். எமது மன்றத்தின் வளர்ச்சிக்கும் எழுச்சிக்கும் மிகவும் ஒத்துழைப்பு வழங்கியதாக பெரிய வளம் என்று சொன்னால் அது எமது மன்.சித்திவிநாயகர் இந்துக்கல்லூரி தான் இந்த கல்லூரியின் முன்னாள் அதிபர் தயானந்தராஜா அவர்களையும் தற்போதைய அதிபர் தனேஸ்வரன் அவர்களையும் முழுமையான பங்களிப்பும் ஒத்துழைப்பும் சமயப்பெரியார்கள் மக்கள் தொழிலதிபர்கள் வர்த்தகப்பெருமக்கள் அதிபர்கள் ஆசிரியர்கள் பங்களிப்போடு திறம்பட செயலாற்றி வருகின்றோம். சேவைகள் தொடரும்.

தங்களின் அமைப்புக்களின்  சேவையாற்றுகின்ற சேவைகள் பற்றி பொறுப்புக்கள் பற்றி---
மன்னார் மாவட்டத்தில் உள்ள இயங்கு நிலை அமைப்புகள் உறங்கு நிலை அமைப்புகள் என பல அமைப்புக்களின் பல நிலைகளில் இருந்து எனது பணியினை செய்து வருகின்றேன்.

  • தலைவர்-அறநெறிப்பாடசாலைகளின் இணையம் மன்னார் மாவட்டம்
  • தலைவர்-தமிழ்ச்சங்கம் மன்னார்
  • தலைவர்-சர்வமதப்பேரவை மன்னார் மாவட்டம்
  • தலைவர்-சைவக்கலை இலக்கிய மன்றம் மன்னார்
  • உபதலைவர்-இந்துக்குருமார்பேரவை மன்னார் மாவட்டம்.
  • செயலாளர்-மனோகரக்குருக்கள் நற்பணிமன்றம்
  • இயக்குனர் சபை- இந்து மகாசபை மன்னார் மாவட்டம்
  • நிர்வாக உறுப்பினர் ஆர்-பி-ஆர்-RPR மன்னார் மாவட்டம்
  • நிர்வாக உறுப்பினர் பிரஜைகள் குழு மன்னார் மாவட்டம்
  • ஆசிரியர்-17வருடங்கள் இந்துமுன்னணி அறநெறிப்பாடசாலை
  • நந்தி இதழாசிரியர் சமய இலக்கிய இதழ்
  • தேசோதய உறுப்பினர்-சர்வோதயம்
  • ஆலோசகர்-பல அமைப்புக்களின்
  • பிரதமகுருவாக-ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் காட்டாஸ்பத்திரி பேசாலை ஸ்ரீ துர்க்கையம்மன் ஆலயம் உதயபுரம்
  • ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயம் பிரதமகுருவாக 17 வருடங்கள் தொடர்ச்சியான சேவை
  • பல கும்பாபிஷேகம் உற்சவங்கள் திருமணங்கள் நடாத்தியமை தான்
  • சமாதான நீதவான் 


இதுவரை தங்களின் சமூகப்பணியினை சேவையினை பாராட்டி கௌரவப்படுத்திய விருதுகள் பட்டங்கள் பற்றி----
பல அமைப்புக்களின் மூலம் பொன்னாடைகளும் பட்டங்களும் விருதுகளும் தந்து பாராட்டியுள்ளார்கள் அவற்றில் பிரதானமானவையினை
  • சிறப்பு சேவைக்கான பாராட்டு விருது-2008 சர்வோதயம் அமைப்பு
  • வித்தியா சிரேண்மணி-2009
  • சமூகஜோதி-2009 மன்னார் மாவட்ட இந்து ஆலயங்களின் ஒன்றியம்
  • சிவாகமதுரந்திரர்-2010 காட்டாஸ்பத்திரி ஆலயப்பொதுமக்கள்
  • முத்தமிழ் குருமணி 2014 பேசாலை முருகன் ஆலயம்
  • தமிழச்சுடர் விருது 2015 தமிழ்ச்சங்கம் வவுனியா
  • சாமஸ்ரீ-தேசசக்தி விருது-2016 தேசிய ஒருமைப்பாட்டுக்கழகம்.


மன்னார் மாவட்டத்தின் கலைஞர்கள் மக்கள் சமூகம் என்று தனது பார்வையினை செலுத்தும் நியூமன்னார் இணையம் பற்றி---

மன்னாரைப்பொறுத்த மட்டில் பல இணையத்தளங்கள் அப்பப்போது தோன்றி இயங்கி மறைந்து போயுள்ளது கண்கூடு நீண்ட காலமாகவும் நிரந்தரமாகவும் இயங்குகின்ற நியூ மன்னார் இணையம் தான் இன்றைக்கு மன்னார் மாவட்டத்தின் அனைத்து நிகழ்வுகளும் மன்னார் இணையத்தில் வரும் என்ற அளவிற்கு இருக்கின்றது. சூரியனைக்கேள் சக்தியைக்கேள் வீரகேசரியைப்பார் என்பது போல மன்னார் சார்ந்த விடையங்களை அறிய நியூமன்னார் இணையத்தினைப்பார் என்று சொல்லும் அளவிற்கு வளர்ந்துள்ளது.
மன்னாரில் நடைபெறுகின்ற எந்த நிகழ்வுகழாக இருந்தாலும் சரி உடனே முந்திக்கொண்டு தருகின்ற ஒரு தளமாக நியூமன்னார் இணையம் உள்ளது. இதைவிடமேலாக கலை இலக்கிய விழா நிகழ்வுகளை முழுமையான புகைப்படத்தோடு விளக்கமாகவும் எழுத்துப்பிழையின்றியும் தெளிவாகவும் பார்க்கமுடிகின்றது விழாவிற்கு வராவிட்டாலும் நியூமன்னார் இணையத்தினைப்பார்த்தால் விழாவில் கலந்து கொண்டது போல இருக்கும் அந்தளவிற்கு தன்னை ஈடுபடுத்தி சேவையாற்றும் மன்னார் மாவட்ட நியூமன்னார் இணையத்தின் இணைப்பாளராக இருக்கின்ற உங்களுக்கும்  இணையநிர்வாகிக்கும் குழுமத்திற்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் செய்தியின் உண்மைத்தன்மையினை தரமானவையாக தரும் நியூமன்னார் மன்னார் மாவட்டத்திற்கு கிடைத்திருப்பது மாபெரும் வரப்பிரசாதமே தங்களின் சேவை தொடர வேண்டும் வாழ்த்துக்கள்.

சந்திப்பு
-வை-கஜேந்திரன்-

























மன்னார் இணையத்தின் விம்பம் பகுதியில் சிவஸ்ரீ மஹா.தர்மகுமாரக்குருக்கள். Reviewed by Author on January 07, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.