அண்மைய செய்திகள்

recent
-

மகா சிவராத்திரி.......சிவபெருமானுக்கு ஒரே ஒரு நாள்.....


இந்துக்களின் மிக உன்னதமான விரதமாக மகா சிவராத்திரி விரதம் அமைகின்றது. விரத அனுஷ்டானங்கள் என்பது இந்துக்களின் வாழ்விலே நிரந்தரமாக பின்னிபிணைந்திருப்பது ஆகும்.

நாம் பல்வேறு வகையான விரதங்களை அனுஷ்டிக்கின்றோம். அந்த வகையில் மகா சிவராத்திரி விரதம் சிறப்பிடம் பெறுகின்றது.

ஒவ்வொரு மனிதனும் புனிதனாக மாறுவதற்கும் எம் வாழ்விலே ஆன்மீக சிந்தனையுடன் தன்னை ஒரு நிலைப்படுத்தி இறைவழிப்பாட்டில் ஈடுப்படுத்திக்கொள்வதற்கும் மகா சிவராத்திரி விரதம் பெரும் பங்காற்றுகின்றது.

மகா சிவராத்திரி என்பது மாசி மாதம் அமாவாசை முதல் நாள் துர்முகியாண்டு  மாசித்திங்கள் 12ம் நாள் 24-02-2017 சம்பவிக்கிறது.

சிவபுராணத்திலும், பவிஷ்ய புராணத்திலும் மகா சிவராத்திரியின் மகிமைகள் வெகு விமரிசையாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன. சிவ பூஜை செய்தால் உலகத்திற்கு நலமளிக்கும் என்பது நம்பிக்கை.

சிவபெருமானுக்கு ஒரே ஒரு நாள் மகா சிவராத்திரியென்று அழைக்கப்படுகிறது. நமஹம், சமஹம் என்ற மந்திரத்தினால் அன்றைய தினம் மஹண்யாசம், லருண்யாசம்,ருத்ரம் ஆகிய வேத கோஷங்களினால் சிவபெருமானுக்கு மகா அபிஷேகம் செய்ய வேண்டும். அபிஷேகப்ரியோ சிவஹ, அலங்கார ப்ரியோ விஷ்ணுஹோ என்று புராணங்கள் கூறுகின்றன. மகா சிவராத்திரியன்று உப்பில்லாத ஆகாரம் சாப்பிட்டு, சிவ பூஜை செய்ய வேண்டும்.

மகா சிவராத்திரியன்று தூங்காமல் ஐந்தெழுத்து மந்திரத்தை (ஓம் நமச்சிவாய) உச்சரிக்க வேண்டும். ஆபத்தைப் போக்குவது ஐந்தெழுத்து மந்திரம். பாவத்தைப் போக்குவது பஞ்சாட்சர மந்திரம் என்று சொல்லப்படுகிறது.

சிவராத்திரி மகிமை

ஒரு வில்வ மரத்தடியில் சிவராத்திரியன்று சிவனும், பார்வதியும், அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்பொழுது மரத்தின் மேலிருந்து குரங்கு ஒன்று வில்வ மரத்தின் இலைகளை பறித்து மேலேயிருந்து கீழே ஒவ்வொன்றாகப் போட்டுக்கொண்டிருந்தது. இரவு முழுவதும் தூங்காமல் வில்வ இலையைப் போட்டதால், சிவபெருமான் அருள் செய்தார். தெரியாமல் செய்த குரங்கிற்கே ஈசன் அருள் புரிந்தார். என்றால் பக்தர்கள் சிவராத்திரியன்று பூஜை செய்தால் எல்லா செல்வ வளங்களையும் சிவபெருமான் வழங்குவார்.

த்ரிதளம் த்ரிகுணாகாரம் த்ரிநேத்ரம் சத்ரியாயுதம்

த்ரிஜன்ம பாபஸம்ஹாரம் ஏக வில்வம் சிவார்ப்பணம்.

மூன்று தளம் (இலைகள்) உடைய வில்வத்தால் அர்ச்சனை செய்தால் ரஜோ, தமோ, சாத்விக குணங்களையும் மூன்றாவது கண்ணாகிய ஞானக்கண்ணும் மூன்று ஜென்மங்களின் ஆயுளும் கிடைக்கும். மூன்று ஜன்மங்களின் பாவங்களையும் போக்கும். வில்வத்தால் பூஜை செய்தால் சகல பாவங்களும் நிவர்த்தியாகும் என்று நம்பப்படுகிறது.

தர்சனம் பில்வவ்ருஷாய ஸ்பர்சனம் பாதஸேவனம்

அகோர பாபஸம்ஹாரம் ஏகபில்வம் சிவார்ப்பணம்.

ஒரு வில்வ மரத்தைப் பார்த்தாலோ, தொட்டாலோ, பாவம் அழிந்துவிடும். செய்யத்தகாத பாவங்கள் செய்திருந்தாலும் உடனடியாக நிவர்த்தியாகும். இதனால் அவர் ஒருவருக்கே வேதங்கள் நமஸ்காரம் செய்கின்றன. ருத்ர மந்திரம் முழுவதும் நமஸ்கார ரூபமாகவே உள்ளன. ஆதலால் இவ்வளவு மகிமையுள்ள பார்வதி, பரமேஸ்வரரை மகா சிவராத்திரியன்று கண்விழித்துப் பூஜித்தால், சிவனின் அருள் பெறலாம்.

கயிலையே மயிலை, மயிலையே கயிலை என்று போற்றப்படும். மயிலாப்பூரில் ஏழு சிவாலயங்கள் உள்ளன. ஏழு கிழமைக்கும் ஏழு சிவாலயங்கள் என்று கொண்டால் அருள்மிகு கபாலீஸ்வரர், வள்ளீஸ்வரர், காரணீஸ்வரர், வாலீஸ்வரர், மல்லீஸ்வரர், விருபாதீஸ்வரர், தீர்த்தபாலீஸ்வரர் என்று மகா புண்ணிய தலங்கள் உள்ளன. இந்த ஏழு சிவாலயங்களுக்கும் மகா சிவராத்திரி அன்று ஒரே இரவில் சென்று வழிபாடு செய்தால் பாவங்கள் தீரும் என்பது ஐதீகம்.

மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் சிவராத்திரி வைபவம் மிகச் சிறப்பாக நான்கு காலமும் ருத்ரம், சமகம் என வேத பாராயணத்துடன் நடைபெறும். முதல் ஜாமம் இரவு சுமார் 11.30 மணிக்குத் தொடங்கும். இக்கால பூஜை சிவப்பு சாத்துதல் என அழைக்கப்படுகிறது. மூலவர் அபிஷேகத்திற்குப் பிறகு, சிவனுக்கு சிகப்பு வஸ்திரம் அணிவிக்கப்பட்டு, சிவப்பு மலர்களால் அலங்கரிக்கப்படும். சுமார் ஒரு மணி நேர இடைவெளியில் நான்கு கால பூஜைகளில், தொடர்ந்து நடைபெறும் இரண்டாவது கால பூஜை மஞ்சள் சாத்துதல் எனப்படும். இதில் அபிஷேகத்திற்குப் பிறகு லிங்க ரூபமான கபாலீஸ்வரர் மஞ்சள் வஸ்திரத்தாலும், மஞ்சள் நிற மலர்களாலும் அலங்கரிக்கப்படுவார். மூன்றாம் ஜாமம் பச்சை சாத்துதல். பச்சை நிற வஸ்திரம், வில்வம், தாழம்பூ ஆகியவை சாற்றப்படும். நான்காம் காலம் மீண்டும் சிவப்பு சாத்துதல். சிவப்பு வஸ்திரம் சாற்றி, சிவப்பு மலர்களால் அலங்கரிப்பர். நான்காம் கால பூஜை, மறுநாள் விடியற்காலை நான்கரை மணியளவில் நிறைவுறும். அனைத்துக் கால பூஜைகளிலும் வில்வம் சாற்றுவது விசேஷம்.
சிவ ராத்திரி விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கிப் போகும் என்று ஐதீகம்.

மகாசிவராத்திரி நாளில் இரவெல்லாம் கண் விழித்து சிவபெருமானை வழிபட வேண்டும். இதனால் இறைவன் அருள் கிடைப்பதோடு நினைத்த காரியம் நடக்கும் என்பது முன்னோர்கள் வாக்கு.

ஒரு வருடம் சிவராத்திரி விரதம் இருப்பது என்பது நூறு அசுவமேத யாகம் செய்த பலனும், பல தடவை கங்கா ஸ்நானம் செய்த பலனும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இந்த நாளில் சிவன் கோயில்களுக்குச் சென்று ஈஸ்வரனை வழிபட்டால் மன அமைதி, வாழ்க்கையில் முன்னேற்றம், தீய சக்திகள் நீங்கி நன்மைகள் நமக்கு உண்டாகும்.

மாசி மாதத்தில் தேய்பிறை சதுர்த்தசி நாள் மகா சிவ ராத்திரியாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளின் சிறப்புகள் குறித்து கருட புராணம், கந்த புராணம், பத்ம புராணம், அக்னி புராணம் உள்ளிட்ட பல்வேறு நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. மகா சிவ ராத்திரி நாளில் விரதம் இருப்போருக்கு கிடைக்கும் மகத்துவங்கள் என்ன என்பது பற்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவராத்திரிக்கு முதல் நாள் ஒரு வேளை மட்டுமே உணவு உண்ண வேண்டும். சிவராத்திரி அன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு, சூரிய உதயத்தின் போது காலையில் வீட்டில் செய்ய வேண்டிய பூஜையை முடிக்க வேண்டும். அதன் பின் சிவன் கோவிலுக்குப் போய் முறைப்படி தரிசனம் செய்ய வேண்டும்.

சிவபூஜை செய்யும் இடத்தை மலர்களால் அலங்கரித்து நண்பகலில் குளித்து மாலையில் சிவார்ச்சனைக்கு உரிய பொருட்களோடு சிவன் கோவில் சென்று ஏற்பாடுகளைச் செய்யலாம். மாலையில் மீண்டும் குளித்து வீட்டில் சிவபூஜை செய்ய வேண்டும். வீட்டிலேயே இரவின் நான்கு ஜாமங்களிலும் முறைப்படிப் பூஜை செய்தலும் நலம். வில்வ இலைகளால் அர்ச்சனை செய்தல் கூடுதல் உத்தமம்.



மகா சிவராத்திரி.......சிவபெருமானுக்கு ஒரே ஒரு நாள்..... Reviewed by Author on February 24, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.