அண்மைய செய்திகள்

recent
-

மகிந்தவுக்கு நடந்தது மைத்திரிக்கு நடக்கும் அதனால் எங்களுக்கு என்ன நடக்கும்?

இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என உறுதியாக இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய எம்.ஏ. சுமந்திரன் அவர்கள், இப்போது இலங்கை அரசுக்கு ஓர் எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளை இனியும் இலங்கை அரசாங்கம் நிறைவேற்றத் தவறுமாயின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச­வுக்கு நடந்ததுதான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் நடக்கும் என்பதே சுமந்திரனின் எச்சரிக்கையாகும்.

இலங்கை அரசு குறித்து சுமந்திரன் அவர்கள் விடுத்த ஒரு முதலாவது எச்சரிக்கை இதுவெனக் கூறலாம்.
இலங்கை அரசுக்குக் கால அவகாசம் வழங்க வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக நின்றவர் சுமந்திரன் என்பது பரவலான பேச்சு.

இலங்கை அரசாங்கத்துக்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்க வேண்டும் என்று அவர் கூறியதால் அவர் தொடர்பில் தமிழ் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர் என்பது மறுக்க முடியாத உண்மை.

இந்நிலையில், சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறினால் - போர்க்குற்ற விசாரணையில் சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்காவிட்டால், மகிந்த ராஜபக்ச­வுக்கு நடந்ததே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் நடக்கும் என அதிரடியான எச்சரிக்கையை சுமந்திரன் விடுத்துள்ளார்.

இந்த எச்சரிக்கை கால அவகாசத்தால் தன் மீது தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட அதிருப் தியை சாந்தப்படுத்தும் நோக்கில் கூறப்பட்டதாக இருக்கலாம்.

பரவாயில்லை; அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா என்ற கவுண்டமணியின் பாணியில் அதனை அப்படியே விட்டுவிடலாம்.

ஆனால் சுமந்திரன் கூறிய எச்சரிக்கை சாத்தியமானதா? அதில் ஏதேனும் நியாயப்பாடுகள் உள்ளனவா? என்பது குறித்து நாம் ஆராய்வது அவசியம்.

அவ்வாறான ஓர் ஆய்வில் மகிந்த ராஜபக்சவுக்கு நடந்ததுதான் மைத்திரிக்கும் நடக்கும் என்றால், மகிந்த ராஜபக்ச­வுக்கு நடந்தது என்ன?

மகிந்த ராஜபக்­ இரண்டு தடவைகள் இந்த நாட்டின் ஜனாதிபதியாக இருந்தவர். நாட்டின் வழமைக்கு மாறாக மூன்றாவது தடவையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டார்.

தவிர, அவர் ஆட்சியில் இருந்து இறங்கிய தால்தான் போர்க்குற்ற விசாரணையில் இருந்து தப்பித்துக் கொண்டார்.

ஆட்சியில் இருந்தால் போர்க்குற்றவாளி என்ற தண்டனையைப் பெறக்கூடிய மகிந்த ராஜபக்ச­வை ஆட்சியிலிருந்து இறக்கி அவருக்குத் தண்டனையில் இருந்து விலக்குப் பெற்றுக் கொடுத்ததுதான் சர்வதேசம் செய்த உதவி.

தவிர, ஜனாதிபதி மைத்திரியின் அரசுதான் ஐ.நா கூட்டத்தொடரில் வைத்து மகிந்த ராஜபக்ச­வைக் காப்பாற்றியது.

மின்சாரக் கதிரையில் இருந்து மகிந்த ராஜபக்சவையும் அவர் தரப்பையும் காப்பாற்றினோம் என்று ஜனாதிபதி மைத்திரியும் அமைச்சர் மங்கள சமரவீரவும் வெளிப்படையாகக் கூறியுள்ளனர்.

இது ஒருபுறமிருக்க, ஒரு தடவைக்கு மேல் ஜனாதிபதியாக இருக்கமாட்டேன் என்கிறார் மைத்திரி.
ஆக, அரசுக்கு வழங்கிய இரண்டு வருட கால அவகாசமும் மைத்திரியின் ஆட்சிக்காலமும் ஒன்றாக முடிந்து போகும்.

அவ்வாறாயின் சுமந்திரனின் வார்த்தையில் மகிந்தவுக்கு நடந்தது மைத்திரிக்கு நடக்கும் என்பது எதை? எப்படி? இதுவே தமிழ் மக்களின் கேள்வி.

வலம்புரி 
மகிந்தவுக்கு நடந்தது மைத்திரிக்கு நடக்கும் அதனால் எங்களுக்கு என்ன நடக்கும்? Reviewed by NEWMANNAR on March 20, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.