அண்மைய செய்திகள்

recent
-

சிங்களவர் என்றால் குற்றமில்லை தமிழர் என்றால் குற்றம்

இலங்கையில் இப்போது முக்கூட்டுத் தலைவர்களின் திட்டமிடலில் இன விவகாரம் கையாளப்படுகிறது.
இந்த நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க இவர்களே முக்கூட்டுத் தலைவர்கள்.

மகிந்த ராஜபக்­வை தேர்தலில் வீழ்த்துவது; அவருக்கு நிகராக மைத்திரிபால சிறிசேனவை தேர்தல் களத்தில் இறக்குவது; மைத்திரி - ரணில் இணைந்த கூட்டு அரசை நிறுவுவது; இரா.சம்பந்தருக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்குவது என்ற நடவடிக்கைகள் அனைத்துக்கும் பின்னணியாக இருந்து செயற்பட்டவர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க என்பது மறுக்க முடியாத உண்மை.

என்னுடன் போட்டியிடும் அந்த வீரன் யார்? அவரை அறிய விரும்புகிறேன் என்று மகிந்த ராஜபக்ச கர்ச்சித்த போது; மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவது என்ற தீர்மானம் சந்திரிகா குமாரதுங்கவால் எடுக்கப்பட்டிருந்தது. இதற்குப் பின்னணியாக சில வெளிநாடுகளும் இருந்தன என்பது வேறு கதை.

மைத்திரிபால - ரணில் - சந்திரிகா என்ற முக்கூட்டுத் தலைவர்களின் திட்டமிடலில் மகிந்த ராஜபக்சவுக்கான அரசியல் தோல்வி நிறைவேற்றப்பட்டது.

இந்த வெற்றியை அடுத்து போர்க்குற்ற விசாரணையில் இருந்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தரப்பையும் படைத்தரப்பையும் காப்பாற்றுவது என்ற விடயத்தை முக்கூட்டுத் தலைவர்களும் மிகச்சிறப்பாகக் கையாண்டனர்.

இதற்கு இரா. சம்பந்தருக்கு வழங்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் பதவி மிகுந்த உதவி புரிந்தது.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் இரண்டு வருட கால அவகாசம் எல்லாப் பிரச்சினையில் இருந்தும் தப்புவதற்கான வழியாயிற்று.

இவை நடந்து முடிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையர் தனது தாளத்தை மாற்றத் தொடங்கி விட்டார்.

ஆம், போர்க்குற்றம் தொடர்பில் படையினர் மீது விசாரணை நடத்த முடியாது. அவர்களுக்குத் தண்டனை வழங்க முடியாது என்பதாக சந்திரிகாவின் கதை உள்ளது.

வன்னிப் பெரு நிலப்பரப்பில் நடந்த தமிழின அழிப்புத் தொடர்பில் எந்தப் பேச்சுக்கும் இடமில்லாமல் அதனை அப்படியே தாட்டுவிடுவதுதான் முக்கூட்டுத் தலைவர்களின் திட்டம். இது சந்திரிகாவூடாக வெளிப்பட்டுள்ளது.

போர்க்குற்றம் தொடர்பில் படையினருக்கு எதிராக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது என்று கூறும் சந்திரிகா அம்மையார்,

அதேநேரம் சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் கருத்துக் கூறுகையில், அவர்கள் குற்றம் செய்ததனாலேயே தண்டனை அனுபவிக்கின்றனர் என்கிறார்.

ஆக, ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் வழங்கிய இரண்டு வருட கால அவகாசத்தை தமிழ் மக்களுக்கு எதிராக பயன்படுத்துவதேயன்றி வேறு எதுவும் நடக்காதென்பது தெட்டத் தெளிவாகிறது.

அதாவது சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் விசாரணை நடக்கும். அவர்கள் குற்றவாளிகளாக அறிக்கையிடப்படும். இந்த வேலையை இலங்கை அரசு நியமிக்கின்ற விசாரணைக் குழு செய்து முடிக்கும்.

அதேசமயம் படையினர் எந்தக் குற்றமும் இழைக்கவில்லை. அவர்கள் வன்னி யுத்தத்தில் எவரையும் சுட்டுக்கொல்லவில்லை என்பதாக முடிவு இருக்கும். இதுவே இரண்டு வருட கால அவகாசத்தில் நடக்கும்.

ஆம், சிங்களவர்கள் தமிழர்களுக்கு எதிராக எது செய்தாலும் அது குற்றமில்லை.
ஆனால் சிங்களவர்கள் எந்தக் குற்றத்தை தமிழர்கள் மீது சுமத்தினாலும் குற்றம் சுமத்தப்பட்டவருக்குத் தண்டனை கிடைக்கும். இதுவே நடக்கப் போகிறது.

அட, பரவாயில்லை. தமிழர்கள் எதை இழந்தாலும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தமக்காக்கி இருக்கிறார்களே! அது போதாதா என்ன?

வலம்புரி 
சிங்களவர் என்றால் குற்றமில்லை தமிழர் என்றால் குற்றம் Reviewed by NEWMANNAR on March 27, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.