அண்மைய செய்திகள்

recent
-

எமது கட்டிடங்களில் கடற்படையினரும் அவர்களின் பிள்ளைகளும் குடும்பம் நடத்துகின்றனர்.-முள்ளிக்குளம் கிராம மக்கள் சார்பாக ஜனாதிபதிக்கு அனுப்பிய மகஜரில்

கடற்படையினர் நிலை கொண்டுள்ள முள்ளிக்குளம் கிராமம் உற்பட மாவட்டத்தில் படையினரினால் அபகரிக்கப்பட்டுள்ள எமது நிலத்தை மீட்டு, எம்மை இன உணர்வோடு அல்லாமல் மனித நேய உணர்வோடு, தென்னிலங்கை மக்களோடு இணைந்து வாழ வேண்டிய வாழ உரிமையுள்ள மக்களாக பார்க்க வேண்டும் என மன்னாரில் இன்று புதன் கிழமை இடம் பெற்ற நில மீட்பு போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் கடற்படையினரின் வசமுள்ள முள்ளிக்குளம் மக்களின் குடியிருப்பு நிலங்களை விடக்கோரியும்,மன்னார் மாவட்டத்தில் படையினரினால் அபகரிக்கப்பட்டுள்ள மக்களின் நிலங்களை விட்டு படையினரை வெளியேற்றக்கோரியும் மன்னார் ஆயர் இல்லத்தின் ஏற்பட்டில்இன்று புதன் கிழமை(19) காலை மன்னாரில் கண்டன பேரணி இடம் பெற்றது.

-பேரணியின் இறுதியில் ஜனாதிபதிக்கு மகஜர் வழங்கும் வகையில் மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் மேதகு ஆயர் ஜோசப் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை அவர்களினால் அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய அவர்களிடம் கைஜர் கையளிக்கப்பட்டுள்ளது.

கையளிக்கப்பட்ட மகஜரிலேயே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த மகஜரில் மேலும் குறிப்பிடுகையில்,,,

2007ம் ஆண்டு வடக்குக் கிழக்கில் யுத்தம் பரவலாக எல்லா இடங்களிலும் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த காலம். வடக்கு கிழக்கில் வாழ்ந்த மக்கள் அல்லோல கல்லோலப்பட்ட காலம். உயிரிழப்புக்களும் சொத்து இழப்புக்களும் மிக அதிகமாகவே ஏற்பட்ட நாட்கள்.

இவ்வருடத்தில் ஒரு நாள். செப்டெம்பர் மாதத்தில் 17ம் நாள் முள்ளிக்குளத்தில் வாழ்ந்த மக்களுக்கு ஓர் அறிவித்தல் இராணுவத்தால் விடப்பட்டது. கிராமத்தில் உள்ள எல்லோரும் சிறியவர் முதியவர,; உடல் நலமற்றோர், கற்பிணித்தாய்மார், பாலூட்டும் தாய்மார் எல்லோரும் கிராமத்தை விட்டு வெளியேறுங்கள்.

மூன்று நாட்களின் பின் மீண்டும் உங்களை இங்கு கொண்டு வந்து விடுவோம். எல்லோரும் தயாராக உள்ள வாகனங்களில் ஏறுங்கள் (விமானத்தாக்குதல் நடை பெறவுள்ளது என்ற உறுதிப்படுத்தப்படாத செய்தியும் எட்டியது) முள்ளிக்குள மக்கள் அனைவரும் ஒரு ஜீவன் கூட விடுபடாமல் வாகனங்களில் ஏற்றி மன்-முருங்கன் மத்திய மகாவித்தியாலயத்தில் இறக்கப்பட்டோம். அன்று தொடங்கிய துயர வாழ்வு அலைச்சல் மன உளைச்சல் இன்றும் எம்மைத் தொடர்ந்து கொண்டே உள்ளது.

நாம் எமது மண்ணை விட்டு வெளியேறும் போது எம்மிடமிருந்த சிறிய தொகைப்பணத்தையும் நகைகளையும் ஒரு சில உடுப்புக்களையும் மட்டும் தான் எம்மோடு எடுத்து வந்தோம்.

மூன்று நாட்களில் திரும்பி வந்து விடுவோம் என்ற எதிர்பார்ப்பு எம்முள்ளே இருந்தது. எம்மிடமிருந்த சொத்துக்கள், உடைமைகள், வீட்டு உபகரணங்கள், தளபாடங்கள், தொழில் உபகரணங்கள், தொலைக்காட்சிப் பெட்டிகள், குளிர் சாதனப்பெட்டிகள், இவற்றை நாங்கள் மீண்டும் காணவே இல்லை.

எங்களில் சிலரால் உழவு இயந்திரங்களையும் மோட்டார் சைக்கள்களையும்தான் மீட்க முடிந்தது. மற்றவை எல்லாம் எம்மை விட்டுப் போனவை போனவைதான். யாரிடம்? ஏன்? என்ற கேள்விகளுக்கெல்லாம் எமக்கு விடை தெரியாது.

ஒரு சிறிய சொப்பிங் பேக்கில் ஒன்று இரண்டு உடுப்புக்களும் இரந்து உண்ணும் வாழ்வும் பிறரிடம் கையேந்தும் நிலையும் பாடசாலைகளும் அகதி முகாம்களும் அவலமும் கண்ணீரும் தான் நாம் இப்போது கொண்டிருக்கின்ற வாழ்வு.

இது எவ்வளவு காலத்துக்கு? எங்களுக்கு மட்டுமா அல்லது எங்கள் சந்ததியினருக்குமா? ஜயா எங்களுக்கு தெரியாது.

இந்நாட்டின் ஜனாதிபதி நீங்கள். பெரிய எதிர்பார்ப்போடு நல்ல பல காரியங்கள் நடக்கப்போகிறது, எமது துயரமெல்லாம் நீங்கப்போகிறது என்ற எதிர்பார்ப்போடு நாம் எல்லோரும் ஒட்டு மொத்தமாக ஓடோடிப்போய் உங்களுக்கு வாக்களித்தோமே எங்களின் எதிர்பார்ப்புக்களும் கலைந்து காற்றோடு காற்றாகி விட்டன.
மன்-முருங்;கன் மத்திய மகாவித்தியாலயத்தில் குடியமர்த்தப்பட்ட நாம் பல இன்னல்களைச் சந்தித்தோம் பல இடம்பெயர்வுகளைச் சந்தித்தோம்.

எம்மைப் பார்க்கப் பலர் வந்தனர். மக்கள் பல கிராமங்களிலிருந்து வந்தார்கள், சமயத்தலைவர்கள், பெரியவர்கள், வெளிநாட்டு பிரதிநிதிகள் வந்தார்கள் பார்த்தார்கள் ஐயோ பாவம் அகதி வாழ்வு எவ்வளவு துயரம் எனச் சொல்லிப் போய்விட்டார்கள் இப்போது நாமும் எமது துயரங்களும்தான் வாழ்கின்றோம்.

தற்போதைய எமது அவலநிலை,

• ஆசையாய் அருமையாய் எமக்கென்று நாம் கட்டிய வீடுகளில் கடற்படையினர் வாழ்கின்றனர். எமது கட்டடங்களில் அவர்களும் அவர்களின் பிள்ளைகளும் குடும்பம் நடத்துகின்றனர்.

• நாங்கள் விவசாயம் செய்த நிலங்களும் குளமும் அவர்கள்(கடற்படையினர்) தோட்டம் வைக்கவும் பணம் பண்ணவும் பயன்படுகின்றன.

• எமது பிள்ளைகளுக்காக கட்டப்பட்ட பாலர் பாடசாலைகளில் படையினரின் பிள்ளைகள் பயில்கின்றனர். எமது பிள்ளைகள் பழைய கட்டடம் ஒன்றில் வைத்துக்கற்பிக்கப்படுகின்றனர்.

• ஒரு வகையில் இதை ஒரு குடியேற்றப் பிரதேசமாக்கி இங்கு தென்னிலங்கையில் மாற்று இனமக்களை குடியேற்றும் நோக்கமா?

• பாவனையில் இல்லாத பல வீடுகள் இடித்துச் சிதைக்கப்பட்டிருக்கின்றன போர்த்தாக்குதல்களிலிருந்து தப்பியிருந்த முள்ளிக்குளம் கிராமத்துக்கு போரினால் பாதிப்படைந்த கிராமம் என்ற தோற்றப்பாட்டை ஏன் ஏற்படுத்த வேண்டும்.

• 16ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்திலேயே 26 குடும்பங்களோடு தனது வரலாற்றை எழுத ஆரம்பித்த கிராமம் இது. சிறிது சிறிதாக வளர்ந்து 21ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இங்கு 162 குடும்பங்கள் இருந்தன.

இவர்கள் இங்கிருந்து விரட்டப்பட்டு அகதிகளாக அனாதைகளாக வீதிகளில் நிற்க விடப்பட்டுள்ளனர்.

மதிப்பிற்குரிய ஜயா!

முள்ளிக்குளம் நாங்கள் வாழ்ந்த மண். எங்கள் மூதாதையர் வாழ்ந்ந மண். இந்த மண்ணின் வித்துக்கள்தான் நாம். நாம் கடலோடினோம், மீன் பிடித்தோம், வயல் உழுதோம், நீர்ப்பாய்ச்சினோம், நெல் அறுத்தோம், காட்டு விலங்குகளும் நாமும் தோழமையோடு வாழ்ந்தோம், இந்த மண்ணின் வித்துக்கள் நாம்.

இந்த மண்ணோடுதான் எம் வாழ்வு நன்றாக இயைந்து செல்லும். இங்கு வாழ்ந்தால்தான் நாம் கௌரவமான பிரசைகளாக எமக்கும் நாட்டுக்கும் உங்களுக்கும் பெருமை சேர்க்கும் மக்களாக வாழமுடியும்.

எம்மை இன உணர்வோடு அல்லாமல் மனித நேய உணர்வோடு, தென்னிலங்கை மக்களோடு இணைந்து வாழ வேண்டிய வாழ உரிமையுள்ள மக்களாக பார்க்க வேண்டும் என ஆசிக்கிறோம்.

வடக்கே பூக்குளம் முதல் புத்தளம் வரை பல ஏக்கர் நிலப்பரப்பு கடல் சார்ந்த வனப்பிரதேசமாக உள்ளது. இக்காணியில் பல ஏக்கல் நிலத்தை உள்வாங்கி அதில் பெரிய ஒரு கடற்படை முகாமை அமைப்பது அரசைப்பொறுத்த வரையில் கஸ்டமானது அல்ல.

ஆகவே எமது இந்த நியாயமான கோரிக்கையை மனித நேயத்தோடு கண்நோக்கி எமது கிராமத்தை எம்மிடமே வழங்குவதற்கான தீர்வுக்கு உத்தரவிடும்படி உங்களை மிகத்தாழ்மையோடு கேட்டுக்கொள்கின்றோம்.

-மேலும் மன்னார் தீவில் பல இடங்களில் இலங்கை கடற்படையினர் மக்களின் காணிகளை தன் வசப்படுத்தியுள்ளனர்.அதன் விபரம் வருமாறு.

தலைமன்னார்
இத்தோடு இணைந்ததாக தலைமன்னார் துறையில் தற்போது கடற்படை தளம் அமைந்து காணப்படுகின்ற பிரதேசத்தில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட காணியும் அத்தோடு இணைந்த தூய சதாசகாய மாதா தேவாலயமும் கடற்படையினர் வசம் காணப்படுவதோடு இத்தேவாலயம் சுமால் 100 வருடங்களுக்கு மேலாக அப்பிரதேச கத்தோலிக்க மக்களால் பயன் படுத்தப்பட்டு வந்தது. தற்போத இந்த 10 ஏக்கர் காணியையும் கடற்படையினர் தம்வசம் வைத்துள்ளார்கள்.

இது மீண்டும் மக்களின் பயன்பாட்டுக்காக விடுவிக்கப்பட வேண்டும்.

சிறுத்தோப்பு

பூர்வீக கத்தோலிக்க கிராமமாக சிறுத்தோப்பில் கடற்படை 2 ஏக்கர் காணியை தங்கள் படைமுகாம் அமைப்தற்காக அபகரித்துள்ளார்கள். இக்காணி பயன்தருகின்ற தென்னை மரங்களை உள்ளடக்கியதாக காணப்படுவதோடு கடற்படையினர் தற்போது இதன் பயன்களை அனுபவிப்பதோடு இந்த 2 ஏக்கர் காணியும் மீண்டும் மக்களிடம் கையளிக்கப்பட வேண்டும்.

பள்ளிமுனை

பள்ளிமுனை கடலோர பிரதேசத்தில் மக்கள் வாழ்ந்து வந்த சுமார் 22 வீடுகளும், காணியும் கடற்படையினரால் அபகரிக்கப்பட்டுள்ளது. இந்த வீடுகள் மீண்டும் மக்களிடம் கையளிக்க பல சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதும் கடற்படையினர் அவற்றை இன்னும் மக்களிடம் விடுவிக்கவில்லை. இந்த 22 வீடுகளும், காணியும் பள்ளிமுனை மக்களிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட வேண்டும்.

மினாறாப்பாடு – எருக்கலம்பிட்டி

கத்தோலிக்கர்கள் 200 வருடங்களுக்கு முற்பட்ட காலத்திலே வாழ்ந்து வந்ததாக கூறப்படுகின்ற மினாறாப்பாடும் அத்தோடு இணைந்நதாக மன்னார் மறைமாவட்டத்திற்கு சொந்தமான பல ஏக்கர் கணக்கான காணிகளை தற்போது கடற்படையினர் தங்களுடைய படைமுகாம்களை அமைத்துள்ளார்கள். குறித்த இந்தக் காணியில் மன்னார் மறைமாவட்டத்திற்கு மீண்டும் விடுவிக்கப்பட வேண்டும்.என குறித்த மகஜரில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எமது கட்டிடங்களில் கடற்படையினரும் அவர்களின் பிள்ளைகளும் குடும்பம் நடத்துகின்றனர்.-முள்ளிக்குளம் கிராம மக்கள் சார்பாக ஜனாதிபதிக்கு அனுப்பிய மகஜரில் Reviewed by NEWMANNAR on April 19, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.