அண்மைய செய்திகள்

recent
-

தமிழரின் அறிவுப் புதையல் யாழ்.நூலகம் எரிக்கப்பட்டு 36 ஆண்டுகள்

ஈழத்தமிழர்களின் பெரும் செல்வமாக விளங்கிய யாழ்ப்பாணப் பொது நூலகம் எரியூட்டிச் சிதைக்கப்பட்டு முப்பத்தைந்து ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன. 1981ஆம் ஆண்டு சூன் 1 ஆம் திகதி இந்த அறிவுக்களஞ்சியம் காடையர்களினால் நெருப்பிடப்பட்டு நீறாகிப் போய்விட்டது.
சிங்கள வெறியர்களால், இலங்கை இராணுவம் மற்றும் காவல் துறை ஆதரவுடன்…

யாழ்ப்பாண நூலகம் தீவைத்து எரிக்கப்பட்ட தினம்  (01/6/1981). இலங்கை அமைச்சர் காமினி திசநாயக்க உள்ளிட்ட சிங்கள தலைவர்கள் முன்னின்று இதை நிகழ்த்தினார்கள்.

 இது ஒன்றே போதும் தமிழ்இன அழிப்பை பறைசாற்ற. இன அழிப்பு

என்றால் என்னெவென்று அறிந்தோருக்கு இதை விளக்க வேண்டிய அவசியம் இல்லை.

தென் கிழக்கு ஆசியாவின் மிகப்பெரும்நூலகமாக விளங்கியது யாழ்ப்பாண நூலகம்.

தமிழர்களின் அறிவுக் கருவூலம் என்றே இதை அழைக்கலாம். 97,000 அரிய நூல்களுடன் /பண்டைய ஓலைச் சுவடிகள் / தமிழ் நாட்டில்கூட இல்லாத அபூர்வ நூல்கள்…

என்றுபுராதன வரலாறு கொண்ட நூலகம்கொளுத்தப்பட்டது .


எங்கு நல்ல புத்தகங்கள் எரிக்க படுகின்றதோ



அங்கு விரைவில் நல்ல மனிதர்களும்



எரிக்கப்படுவார்கள்



– சேகுவரா

யாழ் பொது நூலகம் எரிப்பு, 1981

யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிப்பு என்பது இலங்கை இனப்பிரச்சினையில் ஒரு முக்கிய நிகழ்வாகும். இந்நிகழ்வு 1981 ஆம் ஆண்டு சூன் 1 ஆம் திகதி இரவு சிங்கள வன்முறைக் குழுவொன்றால் இடம்பெற்றது. இது 20ம் நூற்றாண்டின் இன, நூலழிப்புகளில் ஒரு மிகப்பெரும் வன்முறையாகக் கருதப்படுகிறது. இவ்வழிப்பு நேர்ந்த காலகட்டத்தில் யாழ்ப்பாணப் பொது நூலகம் கிட்டத்தட்ட 97,000 அரிய நூல்களுடன் தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகத் திகழ்ந்தது. இந்த நூலகஎரிப்பு வன்கும்பலில் இலங்கையின் அமைச்சர் காமினி திசாநாயக்கா உட்பட வேறு பல அப்போதைய சிங்கள அரசியல் தலைவர்கள் அடங்கியிருந்தனர். நூலகம் எரிக்கப்பட்டது ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் அழியா காயம் ஒன்றை ஏற்படுத்தி, தமிழ்த் தேசியப் போக்குக்கு உரம் ஊட்டியது.
யாழ் நூலகம் 1933 ஆம் ஆண்டில் இருந்து கட்டியெழுப்பப்பட்டு வந்துள்ளது. முதலில் சிலரது தனிப்பட்ட சேகரிப்புகளுடன் நூலகம் ஆரம்பிக்கப்பட்டு, மிக விரைவில் உள்ளூர் தமிழ் மக்களின் ஆதரவுடன் ஒரு முழு நூலகமானது. யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் தனிப்பட்டவர்களிடம் இருந்து வந்த பல நூல்கள், குறிப்பாக நூற்றாண்டுகள் பழமையான ஓலைச்சுவடிகள் 1800களில் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்ட பல பத்திரிகைகளின் மூலப் பிரதிகள் போன்றவை இந்நூல்நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தன. நூலகத்தின் முதலாவது கட்டடம் 1959 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு எதிரே 700 யார் தூரத்தில் யாழ் பொதுசன நூலகம் அமைந்துள்ளது. யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காகத் தென்னிலங்கையிலிருந்து யாழ்ப்பாணம் வந்திருந்த விஷேஷ பொலிசார் தங்கியிருந்த துரையப்பா விளையாட்டு அரங்கும் யாழ் நூலகத்திற்கு எதிரே தான் இருந்தது. இவ்வளவு “பாதுகாப்பு” இருந்தும் திங்கள் இரவு பொது சன நூலகம் தீப்பிடித்து எரிந்தது.
அன்று இரவு 10 மணி போல, நூலகத்துக்குள் நுளைந்த கொடியவர்கள், காவலாளியைத் துரத்திவிட்டு நூலகக் கதவைக் கொத்தித் திறந்து, உள்ளே நுளைந்து 97 ஆயிரம் கிடைத்தற்கரிய மருத்துவம், இலக்கியம், ஜோதிடம் உள்ளிட்ட ஓலைச் சுவடிகளில் எழுதப்பட்ட ஆவணங்கள் உட்பட எல்லாமே பெற்றோல் ஊற்றித் தீக்கிரையாக்கப்பட்டன. சுவர்கள் வெப்பத்தினால் வெடித்து உதிர்ந்தன. யன்னல்கள் சிதறிப்போயின. நூலகத்துக்குள்ளே சாம்பல் குவியல்களே எஞ்சிக்கிடந்தன.

சுவாமி ஞானப்பிரகாச சுவாமிகளின் மாணவர், பன்மொழிப் புலவர் சங்.பிதா கலாநிதி டேவிட் அவர்கள் (தாவீது அடிகளார்) அந்தச் செய்தியைத் தாங்கிக் கொள்ள முடியாதவராய் மனவதிர்ச்சியினால் தம்முயிரை நீத்தார்.

யாழ்ப்பாண நூலகத்தில் ஊழியராக வேலை செய்துவரும் திரு பற்குணம் என்பவர் நூல் நிலையம் எரிந்த நிலையைக் கண்டு பிரமை பிடித்தவரானார். அவர் ஒரு நாடகக் கலைஞர் ஆவார். மூன்று நான்கு நாட்கள் சித்தம் குழம்பிய நிலையில் காணப்பட்டார்.

நூல் நிலையம் தீப்பற்றி எரிவதாக அன்றிரவு 10.15 மணியளவில் மாநகரசபை ஆணையாளர் சி.வி.கே.சிவஞானத்திற்கு செய்தி கிடைக்க, உடனேயே மாநகரசபை தீயணைப்பு பவுசர்களையும், மாநகரசபை ஊழியர்களையும் அனுப்பி தீயை பரவாது தடுக்க முனைகின்றார். அவர்களை நூலகத்திற்கு அருகிருந்த துரையப்பா விளையாட்டரங்கில் இருந்த பொலிசார் தடுக்கின்றார்கள். விசேஷ பொலிஸ் விசாரணைக் குழுவிற்கு சாட்சியமளித்த சி.வி.கே.சிவஞானம் இவ்வாறு சாட்சியமளிக்கின்றார்.

இப்போது சர்வதேசக் கவனத்தைப் பெற்றுவிட்ட நூலகத்தை மீண்டும் சிறிலங்கா அரசு கட்டிட்யிருக்கிறது இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் மீளவும் நூலகத்தைக் கட்டுவத்ற்கு உதவின.

பலரும் முன் வந்து புத்தகங்கள் வழங்கினர். இந்திய அரசு முப்பதாயிரம் புத்தகங்களை வழங்கியது. இப்போது நூலகம் மீண்டும் புதுப் பொலிவுடன் காட்சி தருகிறது .

இருப்பினும் எரிந்து போன அந்த நூலகத்தின் சாம்பல் மேட்டின் நினைவில் இருந்து தமிழர்களால் மீள முடியவில்லை. அரிய ஓலைச் சுவடிகளும், புத்தகங்களும் எரிக்கப்பட்ட அந்த கட்டடம் ஒரு படுகொலையின் சமாதியாகவே இருகிறது. இப்போது மீளவும் கட்டப்பட்டுள்ள அந்த நூலகம் வெள்ளையடிக்கப்பட்ட ஒரு படுகொலையின் சமாதியே. முன்னைப் போல இப்போது மக்கள் அந்த நூலகத்திற்கு போவதில்லை. பெருமபாலான பொழுதுகளில் சோகமேயுருவாக யாழ் நூலகம் தனித்தே இருகிறது. அதனிடம் இப்போது நிறையப் படுகொலைகளின் கதைகள் உள்ளன.
தமிழரின் அறிவுப் புதையல் யாழ்.நூலகம் எரிக்கப்பட்டு 36 ஆண்டுகள் Reviewed by NEWMANNAR on May 31, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.