அண்மைய செய்திகள்

recent
-

திருமுகம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது. இது குறித்த ஓர் சிறப்பு பதிவு!


சத்குருவால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள 112 அடி உயர ஆதியோகி திருமுகம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது. இது குறித்த ஓர் சிறப்பு பதிவு!


கின்னஸை தாண்டிய ஆதியோகியின் உயரம்! 2017 பிப்ரவரி 24, மஹாசிவராத்திரியன்று உலகிலேயே உயரமான முகமாக, ஆதியோகியின் 112 அடி உயர திருமுகம் சத்குரு அவர்களால் கோவை ஈஷா யோகா மையத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது! பாரத பிரதமர் மோடி அவர்களால் திறந்து வைக்கப்பட்ட ஆதியோகி திருமுகம், தற்போது கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்று பாரதத்தின் மற்றுமொரு பெருமைமிகு அடையாளமாய் திகழ்கிறது. கின்னஸ் இணையதளத்தில் ஆதியோகி திருவுருவ சிலையின் சாதனை பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் லிங்க் இங்கே. இதை பற்றி கின்னஸ் உலக சாதனை புத்தகம் கூறுவதாவது:

“உலகிலேயே மிகப்பெரிய மார்பளவுச் சிலையின் அளவு – உயரம் 34.24 மீட்டர் 112 அடி 4 அங்குலம். அகலம் 24.99 மீட்டர் 81 அடி 11.8 அங்குலம். நீளம் 44.9 மீட்டர் 147 அடி 3.7 அங்குலம். இந்தச் சாதனையை தமிழ்நாட்டின் ஈஷா அறக்கட்டளை செய்ததாக 11 மார்ச் 2017 அன்று உறுதி செய்கிறோம்.” இந்த சாதனை ஈஷாவுக்குக் கிடைத்துள்ள இரண்டாவது கின்னஸ் சாதனை விருதாகும். ஏற்கெனவே ஈஷா அறக்கட்டளை அக்டோபர் 17, 2006 அன்று 852,587 மரக்கன்றுகளை, தமிழ்நாட்டில் நட்டதற்காக கின்னஸ் சாதனை அங்கீகாரம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


 ஆதியோகியின் உயரம் ஏன் 112 அடி?
மார்பளவு திருவுருவ சிலைகளில் உலகிலேயே மிகப்பெரியது என கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ஆதியோகி திருமுகம், உண்மையில் கின்னஸையும் தாண்டிய ஒன்று என்றே சொல்ல வேண்டும். 112 அடி என்ற இந்த உயர அளவீடு ஒரு சாதனைக்காகவோ அல்லது பிரம்மாண்டத்தை காட்டுவதற்காகவோ நிர்ணயிக்கப்படவில்லை என்பதே உண்மை! நம் உடலில் 114 சக்கரங்கள் உள்ளன. இவற்றை நாம் சக்தி ஸ்தானங்கள் என அழைக்கலாம். இந்த 114 இல் இரண்டு நம் பொருள் உடலைத் தாண்டி அமைந்துள்ளது. அதனால் இவையிரண்டிற்கும் நாம் செய்ய வேண்டியது என எதுவுமில்லை. இவை இரண்டையும் கழித்தால் மொத்தம் 112 சக்கரங்கள். இந்த 112 சக்கரங்களுக்கு, சக்கரத்திற்கு ஒரு முறை என்ற விகிதத்தில் 112 வழிமுறைகளை உருவாக்கினார் சிவன். சப்தரிஷிகளுக்கு 112 முறைகளைச் சொல்லிக் கொடுத்தார். சிவனிடமிருந்து சிரமேற்கொண்டு அவர்கள் அத்தனை வித்தைகளையும் கற்றறிந்தனர்.

 உலகம் முழுவதும் இதனை நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டும் என்று சொன்னார் சிவன். யோகாவை 112 வழிமுறைகளில் சப்தரிஷிகளுக்கு வழங்கிய ஆதியோகிக்கு 112 அடி உயரத்தில் உலகிலேயே பெரிய முகத்தை நிறுவுவதன் மூலம், ஆதியோகிக்கு நன்றியை வெளிப்படுத்துவதோடு, அவர் வழங்கிய விலைமதிப்பில்லா கொடைக்கு ஓர் அங்கீகாரத்தை வழங்குவதே சத்குருவின் நோக்கம்!

மேலும், ஆதியோகி திருமுகம் ஒரு வடிவியல் அற்புதம் என்றால் அது மிகையாகாது! இதனை 8 மாத காலங்கள் முழுமூச்சாய் செயலில் ஈடுபட்டு உருவாக்கிய பெருமை ஈஷாவின் நூற்றுக்கணக்கான தன்னார்வத் தொண்டர்களையும் தொழிற்முறை கலைஞர்களையும் சேவாதார்களையுமே சாரும்.

ஒரு குழந்தையை உருவாக்க ஒரு தாய் 9 மாதங்கள் எடுத்துக்கொள்கிறாள், ஆனால், நமது தன்னார்வத் தொண்டர்கள் இதனை 8 மாதங்களில் பூர்த்திசெய்து வியக்க வைத்துள்ளனர் என்று சத்குரு ஆதியோகி உருவாக்கம் குறித்து பேசும்போது குறிப்பிட்டார். அருளை வாரிவழங்கக் கூடியதாக திகழும் ஆதியோகி அருள்முகம், குறிப்பாக முக்தியை மக்களுக்கு வழங்கும் என்பதை அரிதியிட்டு கூறுகிறார் சத்குரு. “நோய்களை நீக்கி, அசௌகரியங்களை அகற்றி, தனிமையை தகர்த்து, வறுமையை விலக்கி, பிறப்பு இறப்பிலிருந்து விடுவித்து, முக்தி அருள… ஆதியோகி எழுந்தருள்கிறார்!” -சத்குரு-



திருமுகம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது. இது குறித்த ஓர் சிறப்பு பதிவு! Reviewed by Author on May 21, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.