அண்மைய செய்திகள்

recent
-

கற்பித்தல் திருப்தியற்றிருப்பின் ஆசிரியர் நியமனங்கள் மீள் பரிசீலனையாகும்! - விக்கி


வடக்கு மாகாணத்தில் புதிதாக நியமனம் செய்யப்படுகின்ற ஆசிரியர்களின் கற்பித்தல் செயற்பாடுகள் திருப்தியற்ற நிலையில் காணப்பட்டால் அவர்களது நியமனம் மீள்பரிசீலனைக்கு உட்படுத்தப்படும் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடபகுதியில் ஒரு காலத்தில் கணிதம், விஞ்ஞானம் தொழில்நுட்பம் ஆகிய பாடங்களில் புகழ் பூத்த ஆசிரியர்கள் இருந்தார்கள்.

அவர்களின் வழிகாட்டலின் கீழ் பல்லாயிரக்கணக்கான மாணவ மாணவியர் திறமைச் சித்திகளைப் பெற்று பொறியியல், மருத்துவம், தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் வடபகுதி முன்னணியில் திகழ்ந்து நின்றது. இன்றோ கணித ஆசிரியர்கள், விஞ்ஞான ஆசிரியர்கள், தொழில்நுட்ப ஆசிரியர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.  தென்மராட்சியில் இருந்தும் கடந்த வருட பல்கலைக்கழக புகுமுகத் தேர்வில் ஒரு மாணவ மாணவியர்கூட மருத்துவம் மற்றும் பொறியியல் துறைக்கு தெரிவாகவில்லை என்பது மனவருத்தத்திற்குரிய விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழ்.இந்து கல்லூரியில் கணித, விஞ்ஞான, தொழில் நுட்பபட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

 எமது கல்வி நடவடிக்கைகளில் விரைந்து மாற்றங்களைக் கொண்டு வரவேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயமாக இருக்கின்றது. இதற்கு ஒரு உதாரணமாக வட மாகாணத்தில் நீண்டகாலமாக க.பொ.த உயர்தர தொழில்நுட்ப பாடங்களான உயிரியல் தொழில்நுட்பம், பொறியியல் தொழில்நுட்பம், தொழில்நுட்பத்திற்கான விஞ்ஞானம் மற்றும் பௌதிகவியல், இரசாயனவியல், உயிரியல் இணைந்த கணிதம் ஆகிய பாடங்களுக்கு ஆசிரிய நியமனங்கள் வழங்கப்படாமையைக் கூறலாம். அந்நிலைமை யைமாற்றவே இன்றைய நிகழ்வு நடக்கின்றது.

இன்றைய தினத்தில் புதிதாக நியமனம் பெறுகின்ற ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் கூடிய தமது சேவைகளை எமது மாணவ மாணவியர்களுக்கு வழங்குவார்கள். அதன் மூலம் கூடுதலான மாணவ மாணவியர்கள் க.பொ.த உயர்தரத்தில் விஞ்ஞானத்துறையிலும் தொழில்நுட்பத் துறையிலும் சிறந்த பெறுபேறுகளை பெறுவார்கள் என எதிர்பார்க்கின்றோம். ஒரு ஆசிரியர் எனப்படுபவர் மாணவர்களுக்குப் பாடத்தை மட்டும் போதிப்பவராக இல்லாது அம் மாணவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக உதாரண ஒழுக்க சீலராக விளங்க வேண்டும். அப்போது தான் ஒரு பண்பட்ட மாணவச் சமுதாயம் உருவாக முடியும்.

பாடசாலை மட்டங்களில் தற்போது நடைபெறுகின்ற மாணவர்களின் ஒழுக்கக் குறைவான செயல்கள் மற்றும் மாணவர்களுக்கு கல்வியில் கவனமின்மை போன்ற விடயங்கள் பற்றி பாடசாலை அதிபர் ஆசிரியர்களுடன் உரையாடும்; போது அவர்கள் தமக்கு அதில் பங்கில்லை போலவும் இக் குறைபாடுகள் இடம்பெறுவதற்கான காரணங்கள் பாடசாலை வளாகத்திற்கு அப்பாற்பட்ட செயல்களே என்பது போலவும் கருத்துக்களைத் தெரிவிக்கின்றார்கள். இது முற்றிலுந் தவறு. ஒரு சிறந்த ஆசிரியர் தமது மாணவர்கள் மீது எப்பொழுதும்; அவதானத்துடன் இருக்க வேண்டும். அவர்களை சரியான பாதையில் வழிகாட்டுபவர்களாக அவர்கள் செயற்பட வேண்டும்.

இற்றைக்கு 40-50 ஆண்டுகளு க்கு முன்னர் ஆசிரியர்கள் ஏனைய மாணவர்களின் உதவியுடன் வீடு வீடாகச் சென்று பாடசாலைக்கு வராத மாணவர்களைப் பற்றி விசாரித்து அவர்களைப் பாடசாலைக்கு அழைத்து வந்து அவர்களுக்குக் கல்வியில் ஆர்வத்தை ஏற்படுத்த்தும் வகையில்  அறிவுரை வழங்கி அன்புடன் அரவணைத்து உடற் தூய்மையை கற்றுக் கொடுத்து ஒழுக்கத்தைப் போதித்து கல்வியில் நாட்டமுறச் செய்தார்கள். அவ்வாறு போதிக்கப்பட்ட மாணவர்கள் பலர் பிற்காலத்தில் சிறந்த கல்விமான்களாகத் திக ழ்ந்ததை நாம் அவதானித்திருக்கின்றோம்.

மாணவர்களுக்கு கற்பித்தல் மட்டும் உங்கள் கடமையாக எண்ணாது கல்வியில் அவர்களுக்கு நாட்டமும் பற்றும் ஏற்படத்தக்க வகையில் அவர்களுக்கு கல்வி புகட்ட நீங்கள் முன்வரவேண்டும். இன்று புதிய நியமனத்தை பெறுகின்ற இக் கணித விஞ்ஞான தொழில்நுட்ப ஆசிரியர்கள் அவர்களுக்கு எந்தெந்தப் பாடசாலைகள் வழங்கப்படுகின்றதோ அந்தந்தப் பாடசாலைகளுக்கு விருப்புடன் சென்று உடனடியாகவே தமது கற்பித்தல் செயற்பாடுகளை ஆரம்பிக்க வேண்டும்.

உங்களுக்கு இன்றைய தினம் நிரந்தர நியமனம் கிடைத்துவிட்டது தானே இனி ஒன்றும் செய்யமுடியாது. வீட்டிற்கு அருகில் பாடசாலை கிடைத்தால்தான் போவேன் என்று அடம்பிடிக்க எத்தனித்தீர்களாயின் அதனால் பாதிப்படையப் போவது மாணவ மாணவ மாணவியரே. நியமனத்துக்குரிய பாடசாலைகளுக்கு விரைந்து சென்று கற்பித்தல்களை ஆரம்பிக்க வேண்டும்.

நீங்கள் பாடசா லைகளில் கற்பித்தல் நடவடிக்கைகளை உரிய முறையில் மேற்கொண்டுள்ளீர்கள் என்பதை அறிந்து கொள்வதற்கும் மதிப்பீடு செய்வதற்குமாக கல்வித் திணைக்களத்தில் இருந்து விசேட குழுவொன்று பாடசாலைகளுக்கு விஜயம் மேற்கொள்ளும். அவர்களின் அறிக்கையில் உங்கள் கற்பித்தல் செயற்பாடுகள் திருப்திகரமாக அமையவில்லை என தெரிவிக்கப்படின் உங்கள் நியமனங்கள் மீள் பரிசீலனைக்கு உட்படுத்தப்படும் என்ற செய்தியை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நீங்கள் அனைவரும் உங்கள் பாடங்களில் துறைசார்ந்தவர்களாக விளங்குகின்ற காரணத்தினால் கற்பித்தல் செயற்பாடுகளில் குறைவு ஏதும் ஏற்படக் காரணம் இல்லை என்பதே எமது எதிர்பார்ப்பு. அண்மையில் இடம்பெயர்ந்து இந்தியா சென்று அங்குள்ள பல்கலைக்கழகங்களில் கணிதம் விஞ்ஞானம், தொழில்நுட்பம், ஆங்கிலம் போன்ற பாடங்களில் விசேட சித்தி பெற்ற இளைஞர்கள் யுவதிகள் வடமாகாணத்தில் எங்கு வேண்டுமென்றாலும் கடமையாற்றத் தயார் என்றும் தம்மை எமது கல்விச் சேவையினுள் உள்நுழைக்குமாறும் கோரியுள்ளார்கள். அது பற்றி ஆராய வேண்டியுள்ளது. எனவே தூரத்தைக் காரணம் காட்டி செல்லாது இருக்கப் பார்க்கும் ஆசிரிய ஆசிரியர்கள் இந்த விடயத்தையும் கவனத்திற்கு எடுக்க வேண்டும்.

ஒரு பாடசாலையை அல்லது கல்லூரியை மேன்மையடையச் செய்ய தனி ஒருவரின் முயற்சி போதுமானதென்பது எமது விவாதம். நல்லதொரு பாடசாலை அதிபர் அங்குள்ள மாணவர் ஆசிரியர் இருசாராரையுமே மாற்றத்திற்கு உட்படுத்தக் கூடியவர். அவ்வாறான அதிபர்கள் பலரைப்பற்றி நாம் அறிந்துள் ளோம். அது போலவே ஆசிரியர்களும் தம்மைச் சுற்றி ஒரு விழிப்புணர்வையும் மறு மலர்ச்சியையும் அவர்கள் கொண்டுவர முடியும் என்பதை மறந்து விடாதீர்கள்.

அன்பான புதிய ஆசிரியர்களே! உங்கள் கற்பித்தல் சேவையின் பயனாக கிடைக்கப் போகின்ற அறுவடை இன்னும் இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்குள் தெரிந்துவிடும். அதற்காக உழையுங்கள்! சமூகத்தில் சிறந்த ஆசிரியர்க ளாக ஏனைய மக்களால் போற்றப்படுகின்ற வாழ்த்தப்படுகின்ற ஆசிரியர்களாக மிளிருங் கள் என முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.                         

கற்பித்தல் திருப்தியற்றிருப்பின் ஆசிரியர் நியமனங்கள் மீள் பரிசீலனையாகும்! - விக்கி Reviewed by Author on June 11, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.