அண்மைய செய்திகள்

recent
-

விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கம்! சிக்கலில் ஐரோப்பிய ஒன்றியம்?


தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை என்பது தவறான அணுகுமுறை என்று பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் இது தொடர்பாக ஊடகங்களுக்கு வழங்கிய கருத்தில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

ஐரோப்பிய ஒன்றியம் அவசரமாக எடுத்த முடிவின் மூலம் அவர்களது முடிவுகள் எடுக்கும் முறைமையே கேள்விக்குள்ளாகுவதாக தெரிவித்துள்ளார்.

எனவேதான் ஐரோப்பிய ஒன்றியம் இன்று சிக்கலில் மாட்டியிருப்பது ஒன்றும் விசித்திரமானதாகத் தெரியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கிய ஐரோப்பிய நீதிமன்றத்தின் தீர்ப்பை, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைநீக்கம் தொடர்பிலான தனது நிலைப்பாட்டினை மீள் உறுதி செய்திருந்தது.

தமிழீழ மக்களின் தேசிய விடுதலை இயக்கமாகவும், தமிழீழ மக்களின் உண்மையான பிரதிநிதிகள் என சர்வதேச சமூகத்தாலும், 2002 இல் நோர்வே, ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளின் அனுசரணையுடன் இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை மூலம் அங்கீகாரத்தைப் பெற்றதாகவும் விளங்கிய தமிழீழ விடுதலைப்

புலிகள், இயக்கத்தைப் பயங்கரவாத இயக்கப் பட்டியலில் இணைத்ததை ஆரம்பத்திலிருந்தே அரசியல் ரீதியாகவும், சட்டரீதியாகவும், தார்மீக ரீதியாகவும் ஒரு தவறான விடயமாகவே நாம் பார்க்கிறோம்.

மேலும், ஐரோப்பிய பொது நீதிமன்றம் 2014இல் வழங்கிய தீர்ப்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மேல் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாத தகவல்களின் அடிப்படையில் இருந்ததையும், தகைமை வாய்ந்த ஒரு நிறுவனத்தால் (not by a competent authority) முன்வைக்கப்படவில்லை எனக் கூறியதையும் இத்தருணத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நாடற்ற மக்களின் உரிமைப் போராட்டங்கள் அனைத்தையும் பயங்கரவாதம் என்ற கூடைக்குள் போடுவது நீதிக்காகவும், பாதுகாப்புக்காகவும், சுதந்திரத்திற்காகவும் போராடும் தேசிய இனங்களின் போராட்டங்களினது நியாயங்களை மறுப்பதாக அமையும் என்றும் தெரிவித்துள்ளார்.

சட்டங்களை உருவாக்குவது, நாடுகளும், நாடுகளை அங்கத்தவர்களாகக் கொண்ட அமைப்புக்களும்தான் என்பதையும் நாம் அறிவோம்.

ஐரோப்பிய நீதிமன்றம் கூறியதுபோல், 2009 ஆண்டுக்கு பின்னர் வன்முறை தவிர்ந்த போராட்டமாக முற்றிலும் வடிவம் மாறிய தமிழர் போராட்டத்தைப் பயங்கரவாதம் என அழைப்பது, சட்டத்தைத் துஸ்பிரயோகம் செய்வது மட்டுமல்லாது பொது அறிவையும் அவமதிப்பதாக அமைகின்றது என்றும் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகிய சில மணி நேரத்திற்குள்ளேயே, ஐரோப்பிய நீதிமன்றத்தின் தீர்ப்பு 2013ற்கும் 2015 ற்கும் இடைப்பட்ட காலத்திற்கே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றும், 2015 ற்கும் 2017 ற்கும் இடைப்பட்ட காலத்திற்கு செல்லுபடியாகதது என்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிக்கை எமக்கு ஆச்சரியத்தையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மேலுள்ள தடை செல்லுபடியாகாது என்ற ஐரோப்பிய நீதிமன்ற தீர்ப்புக்கான காரணம் (rationale) 2013 ற்கும் 2015 ற்கும் இடைப்பட்ட காலத்தை விட 2015 முதல் இன்று வரையுமான காலகட்டத்துக்கு மேலும் கூடப்பொருத்தமானது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியம் அவசரமாக எடுத்த முடிவின் மூலம் அவர்களது முடிவுகள் எடுக்கும் முறைமையே கேள்விக்குள்ளாகின்றது.

எனவேதான் ஐரோப்பிய ஒன்றியம் இன்று சிக்கலில் மாட்டியிருப்பது ஒன்றும் விசித்திரமானதாகத் தெரியவில்லை.

மேலும், ஐரோப்பிய நீதிமன்றம் ஹமாஸ் (Hamas) ,இயக்கத்தினைத் தொடர்ந்தும் பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் வைத்திருக்க வேண்டும் என்ற தீர்ப்பை வரவேற்றுள்ள அமெரிக்க ,இராஜாங்க திணைக்களத்தின் அறிக்கை, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை செல்லுபடியாகாது எனக் கூறிய தீர்ப்புத் தொடர்பாக கருத்து எதுவையும் கூறாதிருப்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கலுக்காக ஐரோப்பிய நீதிமன்றத்தால் கூறப்பட்ட காரணங்களை அடித்தளமாகக் கொண்டு இந்தியா, அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், கனடா ஆகிய நாடுகளும் தத்தமது நாட்டுப் பயங்கரவாத பட்டியல்களில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளை நீக்குமாறு நாம் கோருகின்றோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பிய நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியானவுடன் உலகத் தமிழ் மக்களிடையே பொங்கியெழுந்த மகிழ்ச்சி அலை, தமிழீழ விடுதலைப் புலிகளின் மேல் மக்களுக்கிருக்கும் அபிமானத்தையும், ஆதரவையும் வெளிக்காட்டி நிற்கின்றது.

உலகின் எந்த சக்திகளிடமிருந்தும் எவ்விதமான தடைகள் வந்தாலும் மக்களிடையேயுள்ள அபிமானத்தையும் அளவற்ற ஆதரவையும் விலக்கிவிட முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஐரோப்பிய நீதிமன்றத்தின் தீர்ப்பினைத் தமிழ் தேசிய இனத்தின் மரபுவழி உரிமையான சுயநிர்ணய உரிமைக்குச் செயலுருவம் கொடுப்பதற்காகத் தமிழ் தேசிய இனம் தற்போது தேர்ந்தெடுத்துள்ள போராட்டவடிவத்துக்குக் கிடைத்த அங்கீகாரமாகவும் நாம் பார்க்கிறோம் என்றும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் ஊடகங்களுக்கு வழங்கிய கருத்தில் தெரிவித்துள்ளார்.


விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கம்! சிக்கலில் ஐரோப்பிய ஒன்றியம்? Reviewed by Author on August 20, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.