அண்மைய செய்திகள்

recent
-

“மன்னாரின் ஒஸ்கார் றொமேரே” ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகை.... ஆயர் பணியில் வெள்ளிவிழா.


குரலற்ற மக்களின் குரலாக ஒலித்த
ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகை
ஆயர் பணியில் 25 வருடங்களை நிறைவுசெய்து இன்று வெள்ளி விழாக் காண்கிறார்


  மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வுநிலை ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்கள் ஆயர் பணியில் 25 வருடங்களை நிறைவுசெய்து வெள்ளிவிழாக் காண்கிறார். இவர் மன்னார் மறைமாவட்டத்தின் இரண்டாவது ஆயராக 1992ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 20ஆம் திகதி திருநிலைப்படுத்தப்பட்டார்.

இவ்வாண்டு (2017) ஒக்ரோபர் மாதம் 20ஆம் திகதி இருபத்தைந்து பொன்னான வருடங்களை நிறைவுசெய்கின்றார்.

வாழ்க்கைக் குறிப்பு
  ஆயர் யோசேப்பு ஆண்டகை 16.04.1940ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் உள்ள நெடுந்தீவில் பிறந்தார். நெடுந்தீவு றோ.க. பாடசாலை மன்- முருங்கன் மகா வித்தியாலயம்  யாழ் புனித பத்திரிசியார் கல்லூரி ஆகியவற்றில் தனது பாடசாலைக் கல்வியைக் கற்றார். கண்டி தேசிய குருமடம்ää திருச்சி (இந்தியா) புனித பவுல் குருமடம் ஆகியவற்றில் குருத்துவக் கல்வியைக் கற்று 13.12.1967ஆம் ஆண்டு அன்றைய யாழ் ஆயர் மேதகு எமிலியானுஸ்பிள்ளை ஆண்டகை அவர்களால் யாழ் மரியன்னை பேராலயத்தில் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.


  குருவாகிய இவர் 1968 – 1971 வரை உதவிப் பங்குத்தந்தையாக உயிலங்குளம் - முருங்கன்ää இளவாலை – சேந்தாங்குளம் ஆகிய பங்குகளில் பணியாற்றினார். 1971 – 1975 வரை உரும்பிராய் - சுன்னாகம் பங்கின் பங்குத்தந்தையாகவும்ää 1975 – 1980 வரை பெரியவிளான் - பண்டத்தரிப்பு பங்கின் பங்குத்தந்தையாகவும் பணியாற்றினார். 1981 -1985 வரை உரோமைப் பல்கலைக்கழகங்களில் உயர்கல்விக்கான பல்வேறு கற்கைநெறிகளை மேற்கொண்டு ஈற்றில் திருச்சபைச் சட்டத்துறையில் கலாநிதிப் பட்டத்தைப் பெற்றுக்கொண்டார்.
  நாடு திரும்பிய இவர் 1985 – 1992 வரை யாழ்ப்பாணம் புனித திருமுழுக்கு யோவான் ஆலயப் பங்குத்தந்தையாகப் பணியாற்றினார்.

அதேவேளை யாழ் கொழும்புத்துறை புனித பிரான்சிஸ்கு சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரியில் திருச்சபைச் சட்ட விரிவுரையாளராகவும்ää யாழ் மறைமாவட்ட திருமண நீதிமன்றத்தில் சட்டக் காவலராகவும் பணியாற்றினார்.


  1992ஆம் ஆண்டு யூலை மாதம் 6ஆம் திகதி அன்றைய திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் இவரை மன்னார் மறைமாவட்டத்தின் ஆயராக நியமித்தார். 1992ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 20ஆம் திகதி ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகை அவர்கள் இலங்கையின் ஏனைய ஆயர்கள் புடைசூழ மடுத்திருப்பதியில் இவரை ஆயராகத் திருப்பொழிவு செய்தார்.
மறைமாவட்டம் சார்ந்;த பணிகளைச் செவ்வனே செய்தார் .


  ஒரு மறைமாவட்ட ஆயர் என்ற வகையில் ஆயர் இரா. யோசேப்பு ஆண்டகை அவர்கள் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட மன்னார் மறைமாவட்டம் மட்டிலான தனது சமயக் கடமைகளை செவ்வனே நிறைவேற்றினார். ஒரு மறைமாவட்டத்தில் ஒரு ஆயர் செய்யவேண்டிய பணிகளை அவர் முழுமையான உற்சாகத்தோடு செய்தார். திருப்பலி திருவிழாக்கள்ää பங்குத்தரிசிப்புக்கள்ää ஆலோசனைகள்ää கூட்டங்கள்  மாநாடுகள்  ஆலய மற்றும் பங்குமனைக் கட்டுமானங்கள்ää ஏழைகளுக்கான உதவிகள் என அவர் தன் கடமைகளைச் சிறப்பாகச் செய்தார்.


  இவர் மன்னார் மறைமாவட்ட ஆயராகப் பொறுப்பேற்ற பின்னர் மறைமாவட்டத்தை ஆன்மீக  ஒழுக்க  சமூக பொருளாதாரத் துறைகளில் முன்னேற்ற பல்வேறு புதிய முயற்சிகளை முன்னெடுத்தார். ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு மறைமாவட்ட மேய்ப்புப்பணி மாநாடுகளைக் கூட்டி குருக்கள- துறவியர் பொதுநிலையினர் என அனைத்துத் தரப்பினரின் ஆலோசனைகளைப் பெற்று  திட்டங்களைத் தீட்டி அவற்றை நடைமுறைப்படுத்த முயற்சித்தார்.

இவருடைய காலத்தில் மன்னார் மறைமாவட்டத்தில் பல புதிய பங்குகள் உருவாக்கப்பட்டன. இவர் மறைமாவட்டத்தைப் பொறுப்பெடுத்தபோது 15 பங்குகள் இருந்தன. இவர் ஓய்வுபெறும்போது 38 பங்குகளாக அவை அதிகரித்திருந்தன. புதிய பங்குகளின் உருவாக்கத்தினால் மக்கள் மட்டிலான குருக்களின் அக்கறை அதிகரித்தது. மக்களின் ஆன்மீக மற்றும் சமூகத் தேவைகள் இயன்றவரை தீர்க்கப்பட்டன.

   பங்குப் பணிகளோடு ஆணைக்குழுக்களையும் குருக்கள் நிர்வகித்துவந்த நிலையில் இவர் ஒவ்வொரு ஆணைக்குழுவுக்கும் தனியாகக் குருக்களை நியமித்து தேவையான அடிப்படை வசதிகளைச் செய்துகொடுத்துää அந்த ஆணைக்குழுக்கள் சிறப்பாகச் செயற்பட வழிகோலினார். யுத்த சூழ்நிலையில் பல ஆலயங்கள்ää பங்குமனைகள் அழிக்கப்பட்டன அல்லது சேதத்திற்கு உள்ளாக்கப்பட்டன. பல ஆலயங்கள் மற்றும் பங்குமனைகள் கால நீட்சியினால் பழுதடைந்த நிலையில் இருந்தன. இவ்வாறான நிலையில் பல்வேறு தரப்பிலிருந்து உதவிகளைப் பெற்று புதிய ஆலயங்களைää புதிய பங்குமனைகளைக் கட்டி எழுப்ப இவர் தனது முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார்.

  பம்பைமடுவில் அன்னை திரேசாவின் அருட்சகோதரிகளை வரவழைத்து முதியோர் மற்றும் கைவிடப்பட்டவர்களைப் பராமரிக்க ஒரு இல்லத்தை ஆரம்பித்தார். முருங்கனில் டொன் பொஸ்கோ குருக்களை வரவழைத்து இளைஞர் யுவதிகளுக்கான தொழிற்பயிற்சிகளை வழங்க ஆவன செய்தார். அடம்பனில் இயேசு சபைக் குருக்களை வரவழைத்து அவர்களின் பணி மறைமாவட்டத்திற்கு கிடைக்க வழிசெய்தார்.

இந்தியாவில் இருந்து பல புதிய பெண் துறவற சபைகளை மன்னார் மறைமாவட்டத்திற்கு வரவழைத்து இந்திய அருட்சகோதரிகளின் பணியை மக்கள் பெற வழிவகுத்தார். புதிதாக உருவாக்கப்பட்ட பங்குகளில் புதிய கன்னியர் மடங்களையும் ஏற்படுத்தி மக்களை ஆன்மீகத்திலும்ஒழுக்கத்திலும் வளர்க்கப் பாடுபட்டார். மடுத்திருப்பதியில் தியான இல்லம் ஒன்றைக் கட்டியெழுப்பி அதன் மூலம் மன்னார் மறைமாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் ஏனைய மறைமாவட்டத்தவர்களும் பயன்பெற வழிகோலினார்.


  குருக்கள் துறவியர் நலனில் அக்கறையோடு செயற்பட்டார். பொதுநிலையினரின் உருவாக்கத்தில் அதிக கரிசனை எடுத்தார். திருச்சபையின் திருவழிபாடுகளை திருச்சபை ஒழுங்கு விதிகளுக்கு ஏற்ப நடத்தவேண்டுமென்பதை வலியுறுத்தினார். இவ்வாறு ஓர் ஆயர் என்ற வகையில் தனது மறைமாவட்டம் சார்ந்த கடமைகளில் அவர் அதிக ஈடுபாட்டோடு அர்ப்பணிப்போடு உழைத்தார். இதைவிட இலங்கை ஆயர் பேரவையில் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு பொறுப்புக்களை ஏற்றுச் சிறப்பாகச் செய்தார்.
துன்புற்ற மக்களின் துயர் துடைத்தார்

  ஒரு கொடூரமான போர்ச் சூழலில் பல்வேறு நிலைகளில் துன்பங்களைச் சுமந்துநின்ற மக்களின் துயரங்களைத் துடைக்க அவர் அரும்பாடுபட்டார்.

 சிறைகளில் வாடும் கைதிகளை அவர் அடிக்கடி சென்று பார்வையிட்டு அவர்களின் விடுதலைக்காகக் குரல் கொடுத்தார். அவர்களோடு தனிப்பட்ட தொடர்பாடல்களை வைத்திருந்தார். காணாமலாக்கப்பட்டவர்கள் சார்பாக நின்று அவர்களைக் கண்டுபிடிக்க அல்லது அவர்களின் கதியை வெளிக்கொணர ஓயாது உழைத்தார்.


யுத்தத்தால் தமது இல்லிடங்களை இழந்தவர்களுக்கு வீடுகளைக் கட்டிக்கொடுக்க முயற்சிகளை மேற்கொண்டார். முள்ளிக்குளத்தில் இருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கும்-விடத்தல்தீவில் இருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கும் அவர் காணிகளை-வீடுகளை வழங்கியமை இதற்கு உதாரணமாகும். யுத்தத்தால் தொழில் வாய்ப்புக்களை இழந்தவர்கள் தொழில்களை ஆரம்பிக்க வேண்டிய உதவிகளைச் செய்தார்.

  யுத்தத்தால் அங்கவீனர்களாக்கப்பட்டவர்களுக்கு வாழ்வுதய நிறுவனத்தின் உதவிக்கரம் பிரிவு மூலம் உதவிகளைப் புரிந்தார். வவுனியா பம்பைமடுவில் அமைந்துள்ள வரோட் நிறுவனத்தின் ஊடாகவும் இவர்களின் புனர்வாழ்வுக்காகப் பாடுபட்டார். யுத்தத்தாலும்ää சுனாமியினாலும் பெற்றோரை இழந்து ஆதரவற்று நின்ற பெண் சிறார்களுக்கு வவுனியாவில் சலேசிய அருட்சகோதரிகளின் பராமரிப்பில் ஒரு இல்லத்தை ஆரம்பித்தார். அதேபோல் மன்னாரிலும் ஆண் சிறார்களுக்கான ஓர் இல்லத்தை ஆரம்பித்தார். இவ்வாறு இன்னும் பல துயர்துடைப்புப் பணிகளை முன்னெடுத்தார்.

  தனது அன்புக்குரிய குருக்களான அருட்திரு. ஜிம்பிறவுன் அடிகளார் 2006ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியில் காணாமலாக்கச் செய்யப்பட்டபோதும் அருட்திரு. நீக்கிலாப்பிள்ளை பாக்கியறஞ்சித் அடிகளார் 2007ஆம் ஆண்டு வன்னியில் ஆழ ஊடுருவும் படையினரின் கண்ணிவெடித் தாக்குதலில் கொல்லப்பட்டபோதும் ஆயர் அவர்கள் ஆழ்ந்த துயரமடைந்தார்.

தாக்குதல் அனர்த்தங்களின்போது களத்திற்கு விரைந்தார்

 விமானக் குண்டுத்தாக்குதல்கள்  எறிகணைத்தாக்குதல்  கண்ணிவெடித் தாக்குதல்கள் என எப்படியான அனர்த்தங்கள் இடம்பெற்றாலும் பாதிக்கப்பட்ட மக்களைக் காப்பாற்ற முதல் ஆளாக களத்திற்கு விரைந்து சென்றார். காயப்பட்டவர்களை வைத்தியசாலைக்கு கொண்டுசென்றார். இழப்பின் சோகத்திலும்ää அச்சத்திலும்  ஆபத்திலும் இருந்த மக்களுக்கு தனது பிரசன்னத்தினால் ஆறுதலைக் கொடுத்தார். உண்மையான களநிலவரங்களை அரசுக்கும்  ஊடகங்களுக்கும் தெரிவித்து உண்மைக்கு சாட்சிபகர்ந்தார்.

  2006ஆம் ஆண்டு யூலை மாதம் 17ஆம் திகதி பேசாலையில் கடற்படையினருக்கு எதிராக இடம்பெற்ற தாக்குதலின்போது இரண்டாயிரத்திற்கும் அதிகமான மக்கள் பேசாலை புனித வெற்றிநாயகி அன்னை ஆலயத்தில் அடைக்கலம் புகுந்திருந்தனர். மிகுந்த கோபாவேசத்தோடு ஆலயத்தை நோக்கி துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்துக்கொண்டு கடற் படையினர் செல்கின்ற செய்தியை அறிந்துகொண்ட ஆயர் வீதியில் யாரும் இல்லாத  ஆபத்தான அந்தச் சூழ்நிலையில் அன்றைய மன்னார் பிரதேச செயலாளர் திருமதி ஸ்ரான்லி டிமெல் சகிதம் மன்னாரில் இருந்து பேசாலைக்கு விரைந்து சென்று நிலமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தார். ஆலயத்திற்குள் நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் ஒரு வயோதிப மாது உயிரிழந்தமை மற்றும் ஆலயத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடுகள் தொடர்பாக திருத்தந்தைக்கு தகவல்களை அனுப்பினார்.

  2007ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் திகதி மன்னாரில் உள்ள இலுப்பைக்கடவை – படகுதுறைப் பகுதியில் விமானக் குண்டுத்தாக்குதலில் இரண்டு குழந்தைகள் உட்பட 13 அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டபோது அந்தத் தாக்குதல் நடந்த சில மணித்தியாலங்களில்  மன்னார் மறைமாவட்டக் குருமுதல்வர் விக்ரர் சோசை அடிகளாருடன் அந்த இடத்திற்கு விரைந்துசென்றார். அந்த மக்களின் துயரத்தில் பங்குகொண்டதோடு கொல்லப்பட்டவர்கள் கடற்புலிகள் என்ற அரசின் செய்தியை மறுத்து பொதுமக்கள்தான் கொல்லப்பட்டனர் என்ற செய்தியை உலகத்திற்குத் தெரியப்படுத்தினார்.

   இதுபோன்று பல்வேறு சந்தர்ப்பங்களில் மக்கள்மேல் அக்கறையுள்ள ஓர் நல்ல ஆயனாக  அவர் அனர்த்தங்களின் செய்தியை அறிந்து ஆபத்துக்கள் மத்தியில் களத்திற்கு விரைந்து சென்றார். தாக்குதல் களத்தில் இருந்து இவர் வழங்கிய உண்மையான தகவல்களுக்கு முன்னால் அரசினதும்ää படையினரதும் பொய்யான தகவல்கள் அடிபட்டுப்போயின.

குரலற்ற மக்களின் குரலாக ஒலித்தார்

  ஈழத்தமிழர் வரலாற்றில் என்றுமில்லாத கொடிய போர்ச்சூழல் நிலவிய காலத்தில் ஆயர் யோசேப்பு ஆண்டகை குரலற்ற தமிழ் மக்களின் குரலாக ஒலித்தார். உண்மைகளை எடுத்துக்காட்டிய  நீதியை வலியுறுத்திய அவருடைய குரல் உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் ஓங்கி ஒலித்தது. தமிழ் மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட அடக்குமுறைகள் சொல்லொண்ணாத் துன்பங்கள் போன்றவற்றை உள்நாட்டு ஊடகங்கள் சுதந்திரமாக வெளிப்படுத்த முடியாத சூழ்நிலை நிலவிய அந்த நாட்களில் இவருடைய அறிக்கைகளும்ää நேர்காணல்களும்  தகவல்களும் உண்மை நிலையை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வெளிச்சம் போட்டுக் காட்டின. 

  மன்னாரில் 2011 ஜனவரியில் இடம்பெற்ற எல். எல். ஆர். சி அமர்வில் மன்னார் ஆயர் அவர்கள் ஏனைய குருக்களோடு இணைந்து மக்களின் பிரச்சினைகளை எழுத்து மூலமாக அறிக்கையாக முன்வைத்தார். காணாமலாக்கப்பட்டவர்கள்.  தடுத்துவைக்கப்பட்டுள்ள எல்.ரீ.ரி.ஈ சந்தேக நபர்கள்ää சட்டத்திற்குப் புறம்பான கொலைகள் போரினால் பாதிக்கப்பட்டவர்களின் புனர்வாழ்வு போன்ற உடனடியாகத் தீர்க்கப்படவேண்டிய பல விடயங்கள் மற்றும் அரசியல் தீர்வின் அவசியம் போன்ற விடயங்களை அவர் இந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். வன்னியில் இருந்த மக்களில் 146,679 பேருக்கு என்ன நடந்தது? என்ற கேள்வியைக் கேட்டு இலங்கை அரசை ஆட்டம்காணச் செய்தார்.

 21.08.2012ஆம் ஆண்டு அன்றைய ஜனாதிபதி மகிந்த இராஜபக்ச கர்தினால் மல்கம் றஞ்சித் ஆண்டகை ஊடாக விடுத்த வேண்டுகோளின்பேரில் தமிழ் மக்களோடு தொடர்புடைய தீர்க்கப்படவேண்டிய 14 பிரச்சினைகளையும் அவற்றைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளையும் முன்வைத்து அறிக்கை ஒன்றை ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்திருந்தார். ஆனால் இவற்றுக்கான உரிய தீர்வுகள் வழங்கப்படாமையை அவர் பல தடவைகள் சுட்டிக்காட்டியிருந்தார்.

  ஜெனீவாவில் 2012ஆம் ஆண்டு நடைபெற்ற 14வது சர்வதேச தொடர்வரிசை மதிப்பீட்டு அமர்வில்
(Side  Event at the 14th session of the Universal Periodic Review) ஸ்கைப் மூலமாக வழங்கிய உரையில் தமிழ் மண்ணின் நிலமைகளை விளக்கியதுடன் தமிழ் மக்கள் ஒரு தனியான இனம் என்ற அடிப்படையில் ஒரே நாட்டுக்குள் சுயாட்சிக்கு உரித்துடையவர்கள் என்பதையும் வலியுறுத்தினார். 

  2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் 205 தமிழ் கிறிஸ்தவ குருக்களோடு இணைந்து ஆயர் அவர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கவுன்சில் உறுப்பினர்களுக்கு எழுதிய கடிதத்தில் சிறிலங்கா அரசின் போர்க்குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

  மன்னாரில் 2014ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் இடம்பெற்ற காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அமர்வில் சாட்சியம் வழங்கவந்த ஆயர்  இலங்கை அரசாங்கம் நியமித்த எந்த ஆணைக்குழுவும் இதுவரை எதையுமே உருப்படியாகச் செய்யவில்லை என்றும் இந்த ஆணைக்குழுக்கள் வெறுமனே கண்துடைப்புக்கள்தான் என்பதையும் வெளிப்படுத்தி சாட்சியம் அளிக்க மறுத்து தான் கொண்டுவந்த அறிக்கையை வாசித்தார். இதுபோன்று பல சந்தர்ப்பங்களில் மக்களின் உணர்வுகளைää எதிர்பார்ப்புகளை பிரதிபலித்தார்.

  இதைவிட ஆட்சியில் இருக்கும் அரசுத்தலைவர்களை- அமைச்சர்களை மற்ற ஆயர்களுடனும் தனியாகவும் காலத்துக்குக் காலம் சந்தித்து மக்களின் பிரச்சினைகளை எடுத்துரைத்தார். தன்னைச் சந்திக்க வரும் அரசாங்க அமைச்சர்கள்- வெளிநாட்டுத் தூதுவர்கள் ஐக்கியநாடுகள் சபையின் பல்வேறு பிரிவைச்சார்ந்த பிரதிநிதிகள் போன்றவர்களுக்கு களநிலமைகளை தெளிவாக விளங்கப்படுத்தினார். இவ்வாறு அவர் குரலற்ற மக்களின் குரலாக ஒலித்தார்.

உயிராபத்துக்கள் மத்தியிலும் துணிவுடன் செயற்பட்டார்

  ஆயர் யோசேப்பு ஆண்டகை இயல்பாகவே இறைவாக்கினருக்குரிய துணிவைப்
(Prophetic Courage)பெற்றிருந்தார். துன்புறும் மக்களுக்காக இரங்கும் இரக்க உள்ளத்தையும் அவர் பெற்றிருந்தார். இவை அனைத்திற்கும் மேலாக காலத்தின் தேவைக்கு பதில் அளிக்க வேண்டிய ஒரு நல்ல திருச்சபைப் பணியாளனுக்குரிய தெளிவையும் அவர் கொண்டிருந்தார்.

  தன் ஆடுகளுக்காக உயிர் கொடுத்த நல்லாயன் இயேசுவை அவர் தன் கண்முன் கொண்டிருந்தார். அந்த நல்லாயன் வழியில் பயணித்த திருச்சபையின் துணிவுமிக்க பல பணியாளர்கள் பற்றியும் அவர் அறிந்திருந்தார். பேராயர் ஒஸ்கார் றொமேறோ பேராயர் டெஸ்மன்ட் டூட்டு-அருட்திரு. மேரி பஸ்ரியன்- மெதடிஸ்த போதகர் ஜோர்ச் ஜெயராஜசிங்கம் போன்ற திருச்சபைப் பணியாளர்களின் வாழ்வாலும் தியாகத்தாலும் அவர் தூண்டப்பட்டிருந்தார். இவர்களின் பாதையில் உண்மைக்கு சாட்சியாக ஏழைகளுக்கு மீட்சியாக அவர் திகழ்ந்தார்.

  ஆயர் யோசேப்பு ஆண்டகை பணி செய்த காலம் ஊடக சுதந்திரம் மறுக்கப்பட்ட ஓர் இக்கட்டான காலம். “யுத்தத்தில் முதலில் கொல்லப்படுவது உண்மை” என்று சொல்வார்கள்.   தமக்கு வேண்டாதவர்களை  தமக்கு சவால் விடுக்கின்றவர்களை ஆளும் தரப்பினர் காணாமலாக்கச் செய்தனர். கொலை செய்தனர். இவற்றையெல்லாம் அவர்கள் மிகவும் சாதூரியமாக  தந்திரமாகச் செய்து முடித்தனர். இத்தகைய நிலைக்கு உள்ளாக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் ஊடகவியலாளர்கள் போன்றோரின் பட்டியல் மிக நீண்டது.
 
   இப்படியான உயிராபத்துமிக்க ஒரு காலகட்டத்தில்தான் ஆயர் யோசேப்பு ஆண்டகையின் பணி நடைபெற்றது. அவருடைய உயிருக்கு வெளிப்படையாகவே ஆபத்து இருந்தது. இது தொடர்பான அக்கறையை அன்றைய திருத்தந்தை 16ஆம் பெனடிக்ற் அவர்கள் தன்னைச் சந்திக்க வந்த அன்றைய அரசுத் தலைவர் மகிந்த இராஜபக்சவிடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

  2012ஆம் ஆண்டு மே மாதம் 8ஆம் திகதி கொழும்பில் இருந்து மன்னாருக்கு வருகைதந்த சிஐடி அதிகாரிகள் L.L.R.C அமர்வில் இறுதிப்போர்க் காலத்தில் காணாமல்போன 146,679 பேர் தொடர்பாக ஆயர் தெரிவித்த விடயம் தொடர்பாக ஆயர் இல்லத்தில் வைத்து அவரை விசாரித்தனர்.

அனைத்துத் தரப்பினருடனும் இணைந்து செயலாற்றினார்

  ஆயர் அவர்கள் மக்களின் அடிப்படைத் தேவைகள்  நிவாரணம் வழங்கல்  மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள்ää தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு போன்ற விடயங்களில் அனைத்துத் தரப்பினருடனும் இணைந்து செயலாற்றினார். விடுதலைப் புலிகள்  தமிழ் அரசியல் தலைவர்கள்  அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் என அனைத்துத் தரப்பினருடனும் அவர் தொடர்பாடல்களை மேற்கொண்டிருந்தார்.

  மக்களின் தேவைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பாக விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனுக்கு அவர் பல்வேறு காலகட்டங்களில் கடிதங்களை எழுதினார். அவற்றுக்கு அவரிடமிருந்து பதில்கள் வந்ததுமல்லாமல் பல கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. அன்றைய அரசியில்துறைப் பொறுப்பாளர் திரு. சுப. தமிழ்ச்செல்வன் மற்றும் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களை அவர் சந்தித்து மக்கள் நலன்கள் குறித்து கலந்துரையாடினார்.

  தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினருடன் பல்வேறு தொடர்பாடல்களை கலந்துரையாடல்களை மேற்கொண்டு தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளைää அரசியல் பிரச்சினைகளைத் தீர்ப்பது குறித்து ஆலோசித்தார். அதேபோன்று அரசசார்பற்ற தொண்டு நிறுவனங்களோடும் நெருங்கியவிதமாகச் செயலாற்றினார்.

பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்களை எதிர்கொண்டார்

 ஆயர் அவர்களின் மக்கள் நலன்சார்ந்த செயற்பாடுகள் தகவல்கள்  அறிக்கைகள்-நேர்காணல்கள் பலருக்கு கசப்பாய் இருந்தன. பௌத்த சிங்கள கடுப்போக்காளர்கள்ää அரச தரப்பினர் சிங்களத் திருச்சபைத் தலைவர்கள் எனப் பல்வேறு தரப்பினரிடமிருந்து எதிர்ப்புக்களைää விமர்சனங்களைää கண்டனங்களை எதிர்கொண்டார்.

  இவரை சிங்கள இனவாதிகள் ‘மஹா கொட்டியா’ அதாவது ‘பெரிய புலி’ எனவும் ‘புலி ஆயர்’
(Tiger Bishop) எனவும் அழைத்தனர். “இவர்தான் பெரிய புலி. கண்ட இடத்தில் இவரைக் கைது செய்ய உத்தரவு பிறப்பியுங்கள்” என சிங்களப் பத்திரிகைகளில் கொட்டை எழுத்துக்களில் எழுதினர். சிங்கள கத்தோலிக்க மக்களில் சிலரும் சிங்கள ஆயர்கள் சிலரும் இவருடைய செயற்பாடுகள் குறித்து அதிருப்தி கொண்டிருந்தனர்.


தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார்

   2012ஆம் ஆண்டு ‘லக்பிம’Lakbima என்ற சிங்களப் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் தன்னைப்பற்றிய பல விமர்சனங்களுக்கு அவர் பதில் அளித்திருந்தார். “நீங்கள் ‘சர்ச்சைக்குரிய ஆயர்’
(Controversial Bishop)  என அழைக்கப்படுகின்றீர்கள். இதுபற்றிய உங்கள்; விளக்கம் என்ன?” என்ற கேள்விக்கு அவருடைய பதில் “நான் சர்ச்சைக்குரிய ஆயர் என அழைக்கப்படுகின்றேன். ஏனென்றால் சர்ச்சைக்குரிய விடயங்கள் நடைபெறுகின்றன. நான் அந்த விடயங்கள்பற்றிப் பேசும்போது சர்ச்சைக்குரிய ஆளாக மாறுகின்றேன்.

  நான் உண்மையைப் பேசுவதால் ‘வெளிப்படையாகப் பேசும் ஆயர்’
(Outspoken Bishop) என்கின்றனர். நான் ஏழைகள்மேல் கரிசனை கொண்டு நீதிக்காகக் குரல் கொடுத்தால் நான் இலங்கைக்கு எதிரானவன்ää எல்.ரீ.ரீ.ஈ அல்லது பிரிவினைவாதி என்கின்றனர். இப்பெயர்களைப்பற்றி நான் அலட்டிக்கொள்வது இல்லை. நான் தொடர்ந்தும் அநீதிக்கு எதிராகக் குரல் எழுப்புவேன். மனித உரிமை மீறல்களுக்கு எதிராகப் போராடுவேன்.

  “நீங்கள் எல்.ரீ.ரீ.ஈ யா? அல்லது அந்த அமைப்பின் தீவிர ஆதரவாளரா?” என்ற கேள்விக்கு அவர் அளித்த பதில் “நான் ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறேன் என்பது எனக்குத் தெரியாது. என்னை அப்படி அழைப்பது அவர்களின் பலவீனம். நான் விடுதலைப் புலிகளின் கொலைகளையும் அட்டூழியங்களையும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை. நான் அவர்களுடைய கொலைகளைக் கண்டித்திருக்கிறேன். இதனால் கொலை மிரட்டல்களையும் பெற்று இருக்கிறேன். நான் ஒருபோதும் தனிநாட்டை விரும்பவில்லை. எனது கனவில்கூட விரும்பவில்லை. ஒரு குரு என்ற வகையில்ää உண்மையும் வாழ்வையும் வழியையும் வெளிப்படுத்தி வன்முறைக்குப் பலியான இயேசுக்கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவன் என்ற வகையில் நான் எனது கடமைகளைச் செய்கின்றேன்” என்றார்.

  ஆயர் அவர்கள் ஒன்றுபட்ட நாட்டிற்குள் சுயாட்சியை வலியுறுத்தினார். இலங்கை ஒரு நாடாக இருக்கலாம். ஆனால் இங்கு பல தேசிய இனங்கள்
(Nations) இருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் தமக்கென தனித்துவமான மொழி இலக்கியம் பண்பாடு  பாரம்பரியங்களைக் கொண்டுள்ளன. ஒரு நாட்டிற்குள் சுய ஆட்சிக்கான உரிமை இந்த இனங்களுக்கு உள்ளது. இவை அடையாளங்காணப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தி வந்தார்.

முடிவுரை

  1992ஆம் ஆண்டு தொடக்கம் 2015ஆம் ஆண்டு நடுப்பகுதியில் அவர் சுகவீனமடையும்வரை இடைவிடாமல் தொடர்ச்சியாக இயங்கிவந்தார். திருச்சபையின் ஒழுங்குவிதிக்கு அமைய 75 வயது நிறைவில் தான் பணியிலிருந்து ஓய்வுபெறுவதாக திருச்சபைச் சட்ட எண் 401 பகுதி 1 இற்கு அமைவாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு அறிவித்தார். 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் திகதி இவருடைய பணி ஓய்வுக்கான கோரிக்கையை திருத்தந்தை ஏற்றுக்கொண்டார்.
  ஆயர் அவர்கள் மக்கள் பணியில் தன்னை முழுமையாகக் கரைத்துக்கொண்டார். இரவு பகல்-மழை-வெயில் பாராது நீண்ட பயணங்களை மேற்கொண்டார். கண் துஞ்சாது-பசி நோக்காது கருமமே கண்ணாகச் செயற்பட்டார். இவர்“மன்னாரின் ஒஸ்கார் றொமேரே” என அழைக்கப்பட்டார். சமாதானத்திற்கான நோபல் பரிசுக்குரியவர் என மக்களால் கணிக்கப்பட்டார்.
  2014ஆம் ஆண்டு மன்னார் தமிழ்ச் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார் நூற்றாண்டு விழாவின் நிறைவுநாள் நிகழ்வின்போது மன்னார் தமிழ்ச் சங்கம் ‘இனமான ஏந்தல்’ என்ற விருதை இவருக்கு வழங்கிக் கௌரவித்தது. 2015ஆம் ஆண்டு கொழும்புக் கம்பன் கழகம் இவருக்கு "கம்பன் புகழ் விருதினை" வழங்கிக் கௌரவித்தது. 

  ஈழத்துக் கத்தோலிக்க திருச்சபை இன்னும் குறிப்பாக ஈழத்துத் திருச்சபையின் பணியாளர்கள் ஆயர் அவர்களுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்ற விழைய வேண்டும். காலத்தின் தேவைக்கு ஏற்ப துணிவோடுää உறுதியோடு செயலாற்ற வேண்டும். ஆயர் யோசேப்பு ஆண்டகையின் வாழ்வும் பணிகளும் இன்றையää நாளைய தலத்திருச்சபைக்கு சவாலாக விழிப்புணவர்வாகää உந்துதலாக அமைய வேண்டும்.  அமையுமா?

- அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார்-


 








“மன்னாரின் ஒஸ்கார் றொமேரே” ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகை.... ஆயர் பணியில் வெள்ளிவிழா. Reviewed by Author on October 20, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.