Top Ad unit 728 × 90

அண்மைய செய்திகள்

recent
-

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி வெள்ளியன்று வடக்கில் பூரண கதவடைப்பு!

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி வெள்ளியன்று வடக்கில் பூரண கதவடைப்பு!- அணிதிரண்டு ஆதரவு அளிக்குமாறு கட்சிகள், பொது அமைப்புக்கள் அழைப்பு
தமிழ் தேசிய இனத்தின் பிறப்புரிமைகளை உறுதிப்படுத்துவதற்காகத் தங்களது வாழ்வை அர்ப்பணித்துப் போராடியவர்கள் உட்படப் பலர் அரசியற் கைதிகளாகச் சிறைகளில் தொடர்ந்தும் அடைக்கப்பட்டிருப்பதனைக் கண்டிக்க வேண்டியதும், அவர்களது விடுதலையை வலியுறுத்திப் போராட வேண்டியதும், ஒவ்வொரு தமிழ்மகளதும், ஒவ்வொரு தமிழ்மகனதும் தார்மீகப் பொறுப்பும் வாழ்வுக் கடமையும் ஆகிவிட்டது.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுவிப்பு என்பது, தற்போது ஒரு சட்ட ரீதியான விடயம் என்பதைக் கடந்துவிட்டது. அது, நியாயத்தின் அடிப்படையில் அணுகப்பட வேண்டிய ஓர் விடயமாக ஆகிவிட்டது. அத்தோடு - ஓர் அரசியல் தீர்மானத்தின் ஊடாகத் தீர்க்கப்பட வேண்டிய அடிப்படையான பிரச்சனைகளுள் ஒன்று என்ற பரிமாணத்தையும் அடைந்துவிட்டது.
போரின் இறுதிநாள்வரை ஆயுதங்கள் தாங்கிப் போராடிய பல மூத்த போராளிகள் உட்பட, 12,000 முன்னாள் விடுதலைப் புலிகளை, குறுகிய காலத் தடுப்பிற்குப் பிறகு, மீளவும் சமூகத்துடன் இணைய வழிவகை செய்த ஓர் அரச பொறிமுறையானது, வெறும் 132 பேர்களை மட்டும் தொடர்ந்தும் சிறைகளில் அடைத்திருப்பதானது எவ்வித சட்ட அர்த்தமும் இல்லாத ஓர் செயற்பாடு ஆகும். தமிழர்களுடன் தொடர்பில்லாத அரசியற் காரணங்களினாலேயே அவர்கள் தொடர்ந்தும் அடைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பது வெளிப்படையானது.
எமக்கான காரியங்களை ஆற்றுவதற்காக எமது வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட எமது நாடாளுமன்றப் பிரதிநிதிகள், அரசாங்கத்தின் பங்காளிகளாக மாறி, அனைத்து விடயங்களிலும் அரசாங்கத்திற்கு உறுதுணையாக இருக்கின்றார்கள். நாடாளுமன்றச் செயற்பாடுகள் அனைத்திலும் அரசாங்கத்தை நியாயப்படுத்தி ஆதரிக்கின்றார்கள். தமது ஆதரவுக்கான ஒரு பிரதியீடாகத்தன்னும் - உறுதியான தளம்பலற்ற வார்த்தைகளால் பேசி - சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க அவர்களால் முடியும். ஆனால், எமது உறவுகள் சிறைகளில் வாடினாலும் பரவாயில்லை, தாம் அரசாங்கத்தைச் சங்கடப்படுத்தக்கூடாது என்பதற்காகவும், அரசாங்கத்துடனான தமது உறவுகள் பாதிப்புறக்கூடாது என்பதற்காகவும், மென்மையாகப் பேசி எமது பிரதிநிதிகள் காலத்தைக் கடத்தி வருகின்றாhர்கள்.
எமது பிரதிநிதிகளின் இந்த அலட்சியப் போக்கினதும், உதாசீனத்தினதும், அக்கறையின்மையினதும் விளைவாக — தான்தோன்றித் தனமாகச் செயற்படும் இந்த நாட்டின் சட்டமா அதிபர் திணைக்களம், தமிழ் பிரதேச நீதிமன்றங்களில் உள்ள எமது அரசியற் கைதிகளின் வழக்குகளை, சிங்களப் பிரதேசங்களுக்கு மாற்றுகின்றது. அவர்களுக்கு எதிரான சாட்சிகளுக்குப் பாதுகாப்புப் பிரச்சனை என்று சினமூட்டும் காரணங்களை அடுக்குகின்றது. அத்தோடு - வழக்குகளைத் துரிதமாக நடத்தி முடிக்காமல், வேண்டுமென்றே இழுத்தடிக்கின்றது.
இதன் காரணமாக - தமக்கான அடிப்படை நீதியைக் கோரி தமிழ் அரசியற் கைதிகள் மூவர், கடந்த 16 நாட்களாக உணவுத் துறப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். தங்களது வழக்குகளை மீண்டும் தமிழ் பிரதேச நீதிமன்றங்களுக்கு மாற்றுவதுடன, தமது வழக்குகளை துரிதமாக நடத்தி முடிக்க வேண்டும் என்பதுவே அவர்களது உடனடிக் கோரிக்கையாக உள்ளது.
அவர்களது கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி, எமது அதிகூடிய வல்லமைக்கு உட்பட்ட எமது அழுத்தத்தை நாம் ஒவ்வொருவரும் ஒன்றாய் திரண்டு பிரயோகிப்போம். எவர் கைவிட்டாலும், அவர்களை நாம் கைவிடமாட்டோம் என்ற தகவலைச் சொல்லுவோம்.

(1) தமது வழக்குகளை மீண்டும் தமிழ் பிரதேச நீதிமன்றங்களுக்கு மாற்ற வேண்டும் என்ற உடனடிக் கோரிக்கையையும், அவ்வாறு மாற்றப்பட்டதன் பின்பு, தமது வழக்குகளைத் துரிதமாக விசாரித்து முடிவு காண வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்து, அநுராதபுரம் சிறையில் சாகும் வரை உணவுத் துறப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தமிழ் அரசியற் கைதிகள் மூவரின் கோரிக்கைகளை இழுத்தடிப்பின்றி உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும்,

(2) முழுத் தமிழ் அரசியற் கைதிகளையும் ஓர் அரசியற் தீரமானத்தினூடாக விடுவிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியும்,

(3) அசமந்தப் போக்கைக் கைவிட்டும் - மழுப்பல் பதில்களை வழங்காமலும் - அனைத்து தமிழ் அரசியற் கைதிகளையும் விடுவிப்பதற்கான நேரடி அழுத்தத்தினை அரசாங்கத்தின் மீது பிரயோகிக்குமாறு எமது நாடாளுமன்றப் பிரதிநிதிகளை வற்புறுத்தியும்,

(4) வரும் 14.10.2017, சனிக்கிழமை, யாழ்ப்பாணம் வருகை தரவிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு, தாமதமற்ற தீர்வு காண வேண்டிய இந்த விவகாரத்தின் தீவிரத் தன்மையை உணர்த்துவதற்குமாக -
எதிர்வரும் 13.10.2017, வெள்ளிக்கிழமை, வடமாகாணம் தழுவிய முழுமையான கதவடைப்பினை மேற்கொள்ளுவதற்கு அனைத்து தமிழ் மக்களையும் நாம் உரிமையோடு அழைக்கின்றோம். அவசர மருத்துவ சேவைகள் தவிர்ந்த ஏனைய அனைத்துச் செயற்பாடுகளையும் முழுமனதோடு நிறுத்தி - நியாயத்தோடும் சாவோடும் போராடுகின்ற தமிழ் அரசியற் கைதிகளுக்கு எமது ஆத்ம பலத்தைக் கொடுப்போம்.
தமிழ் அரசியற் கைதிகளுக்கு நிரந்தர விடுதலை கிடைக்கும்வரை நாம் ஓயமாட்டோம் என்ற செய்தியை - இந்த நாட்டின் அரசாங்கத்திற்கும், எமது நாடாளுமன்றப் பிரதிநிதிகளுக்கும், இதன் பொறுப்புடைய ஒவ்வொரு தரப்புக்கும் உறுதியாகத் தெரிவிக்க எதிர்வரும் 13.10.2017, வெள்ளிக்கிழமை, காலை 09:30 மணிக்கு, வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக ஒன்றெனத் திரள்வோம்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி வெள்ளியன்று வடக்கில் பூரண கதவடைப்பு! Reviewed by நியூ மன்னார் on October 12, 2017 Rating: 5
Post a Comment
Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.