அண்மைய செய்திகள்

recent
-

எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்கள்? -


தேர்தல் வந்ததும் புதிய அரசியல் கூட்டணிகள் உருவாக ஆரம்பித்து விட்டன. அதில் முதலாவதாக அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசும் , ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பும் இணைந்து ஒரு தேர்தல் கூட்டணியை உருவாக்கியுள்ளன. இந்தக் கூட்டணிக்கு தமிழ் மக்கள் பேரவை ஆதரவு என்று நேற்று அந்த அமைப்பு விடுத்த அறிக்கையில் மறைமுகமாகத் தெரிவித்திருந்தது. தேர்தல் அரசியல் என்பது சந்தர்ப்பவாதக் கூட்டு என்பது இந்தக் கூட்டணி மூலம் மீண்டும் நிரூபணமாகியுள்ளது.

இந்தக் கூட்டணியில் உள்ள தமிழ்க் காங்கிரஸ் கட்சி, இரு தேசம் ஒரு நாடு என்பதே தமது கொள்கை என்று இதுவரை கூறி வந்தது.  அந்தக் கொள்கையின் அடிப்படையில் அமையாத இலங்கையின் அரசமைப்பின் கீழ் உருவாக்கப்பட்ட மாகாண சபைகள், உள்ளுராட்சி சபைகள் என்பவற்றில் போட்டியிடுவதில்லை என்று கடந்த 8 வருடங்களாக பிடிவாதமாக இருந்தது அந்தக் கட்சி. அதுவே தமது கொள்கைப்பற்றுக்கான சான்று என்றும் காட்டி வந்தது.

இந்த 8 வருட காலத்தில் நடந்த 2 நாடாளுமன்றத் தேர்தல்களிலும் போட்டியிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் படுதோல்வியும் கண்டது. இப்படியே போனால் தமக்கு அரசியல் எதிர்காலமே இல்லாது போய்விடும் என்பதைப் புரிந்து கொண்ட அந்தக் கட்சி, தமக்கிருக்கக் கூடிய சொற்ப வாக்குப் பலத்தை மூலதனமாக்கிக் கொண்டு வளர்வதற்காகக் கொள்கையைத் தூக்கி எறிய முன்வந்தது. அரசியலில் இத்தகைய முடிவுகளைத்தான் சாணக்கியம் என்கிறார்கள்.

அப்படித் தனது அரசியல் எதிர்காலத்தைப் பாதுகாக்க உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் ஒரு சில உறுப்பினர் பதவிகளையாவது பெற்று, தமது அரசியல் வாழ்க்கையை உயிர்ப்போடு பேணும் முடிவுக்கு அந்தக் கட்சி வந்தது. அதற்கு அந்தக் கட்சி சொன்ன காரணம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் போன்ற தவறான தலைமைகளின் கைகளில் மக்கள் மன்றங்களின் ஆட்சி போவதைத் தடுப்பதற்காகவே தாம் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல்களில் போட்டியிடப் போகின்றோம் என்பது.அரசியல் கட்சிகள் எப்போதும் தமது கட்சி நலன் சார்ந்த முடிவுகளை உள்ளபடியே மக்கள் முன் ஒத்துக்கொள்வது மிக மிக அரிது.  தாங்கள் எடுக்கும் முடிவுகள் எல்லாவற்றையும் மக்களின் நலன் சார்ந்தே எடுப்பதாக அவர்களை நம்ப வைப்பது தான் அவற்றின் உத்தி. அதையே இந்தக் கட்சியும் செய்தது, செய்கிறது.

ஆனால், தமிழ் மக்களின் தீர்வு சார்ந்து நாடாளுமன்ற முறைமை தவிர்ந்த வேறு எந்த வழிவகைகளும், – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது செயற்பட்டு வருவதைப் போன்று – அந்தக் கட்சியிடம் இல்லை என்பது வெளிப்படை.  இருந்தாலும் தாங்கள் ஆட்சியைப் பிடித்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு “ மாற்று” என்று தமிழ் மக்களை நம்ப வைப்பதற்கு அது முயற்சிக்கிறது.

அந்த முயற்சிக்காகவே தமிழ் மக்கள் பேரவை உருவாக்கத்தில் அது பங்கெடுத்தும் கொண்டது.  தம் மீதான கடந்தகால விமர்சனங்கள், துரோகப் பட்டங்கள், இறுதிப்போரின் போது நிகழ்ந்த போர்க் குற்றம் எனச் சொல்லப்படும் வெள்ளைக்கொடிச் சம்பவத்தில் இந்தக் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு இருக்கும் தொடர்புகள் பற்றிய பழிச் சொற்கள் என்பவற்றில் இருந்து தம்மைப் புனிதப்படுத்திக்கொள்ள, தமிழ் மக்கள் பேரவையையும் அதற்கூடாக நடத்தப்பட்ட சில போராட்டங்களையும் இந்தக் கட்சி பயன்படுத்திக் கொண்டது. இந்தக் கட்சியுடன் கூட்டு வைத்துக்கொண்டுள்ள ஈ.பி.ஆர்.எல்.எவ். கடந்த 8 வருட காலமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் தமிழ் அரசுக் கட்சிக்கு நிகரான மதிப்புக்காகக் கலகம் செய்து வந்தது.

அது சாத்தியப்படாது போன போது, குழப்பவாதியான கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமையை வழங்காமல் தமிழ் அரசுக் கட்சி புறக்கணித்ததை அடுத்தே தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கான இடத்தை அந்தக் கட்சி தேடத் தொடங்கியது. அப்போது கிடைத்த வாய்ப்புத்தான் தமிழ் மக்கள் பேரவை.
2015ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த இந்த இரு தரப்புகளுமே அதிலிருந்து விரைவாக மீள்வதற்காக தமிழ் மக்கள் பேரவை, பொது மக்கள் நலன் பேண் அமைப்பு என்ற போர்வையைத் தம் மீது போர்த்துக்கொண்டன.  இப்போது அந்தப் போர்வையை நீக்கிவிட்டு உண்மையான முகத்தைக் காட்டிக் கொண்டுள்ளன.

ஆக மொத்தத்தில், கட்சிகள் தங்கள் நலனை மட்டுமே முன்னிலைப்படுத்தி நடத்தும் இந்த சுயநல விளையாட்டுக்கு மக்கள் நலன் என்கிற பெயர் சூட்டப்படுவதுதான் வேடிக்கை. இந்த இரண்டு தரப்புகளுமே முதலில் கூட்டமைப்பில் இருந்தவைதான். அப்போதும் மக்கள் நலன்தான் என்றார்கள், இப்போது தனியாக ஒரு கூட்டணியை உருவாக்கும்போதும் மக்கள் நலன்தான் என்கிறார்கள். “எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?” என்கிற வரிகள்தான் ஞாபகத்துக்கு வருகின்றன.

எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்கள்? - Reviewed by Author on November 14, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.