அண்மைய செய்திகள்

recent
-

மெர்சல்.....திரைவிமர்சனம்


நடிகர்    விஜய்
நடிகை    நித்யா மேனன்
இயக்குனர்    அட்லி
இசை    ஏ.ஆர்.ரகுமான்
ஓளிப்பதிவு    விஷ்ணு

படம் ஆரம்பத்தில் மருத்துவத் துறையில் சம்மந்தப்பட்டவர்களான ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மற்றும் மருத்துவ துறையில் வேலை பார்ப்பவர்கள், சிலர் கடத்தப்படுகிறார்கள். மேலும் டாக்டர்கள் சிலர் கொலை செய்யப்படுகின்றனர். இந்த சம்பவங்களில் ஈடுபடிபவர்களை போலீஸ் அதிகாரி சத்யராஜ் தலைமையிலான தனிப்படை தேடுகிறது. இந்த தேடுதலில் விஜய்தான் இதற்கு காரணம் என்று கண்டுபிடிக்கிறார்கள். இதனால் விஜய் கைது செய்யப்படுகிறார்.

சத்யராஜின் விசாரணையில் விஜயிடம் இருந்து பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கிறது. விஜய் மருத்துவத்துறையில் இருப்பவர்களை மட்டும் குறிவைப்பது ஏன்? இதன் பின்னணி என்ன? என்பதே படத்தின் கதை.

படத்தில் விஜய் தந்தை, இரு மகன்கள் என மொத்தம மூன்று கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மகன் வேடங்களில் டாக்டர், மேஜிக் மேன் என இரண்டு கதாபாத்திரங்களில் அசத்தியுள்ளார். இதில் டாக்டர் விஜய், மக்களுக்கு சேவை செய்வது, அனைவருக்கும் மருத்துவம் கிடைக்க வேண்டும் என்ற கொள்கையுடன் அர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாக நடித்து கவர்ந்துள்ளார்.


மேஜிக்மேனாக வரும் விஜய், அவருக்கே உரிய துள்ளலான நடிப்பை வெளிப்படுத்தி ரசிக்க வைத்திருக்கிறார். தந்தை விஜயின் கதாபாத்திரம் மாஸாகவும், கிளாஸாகவும் உள்ளது. படத்தில் விஐய், நடனம், நடிப்பு, வசனம், ரொமான்ஸ் என அனைத்திலும் தெறிக்க விட்டுள்ளார். தமிழ் மொழி, தமிழர்கள் மற்றும் மருத்துவம் பற்றி இப்படத்தில் விஜய் அதிகம் பேசியுள்ளார். வசனங்கள் எல்லாம் தியேட்டரில் அனல் பறக்கிறது. குறிப்பாக கிளைமாக்ஸ் சண்டைக் காட்சி மிளரவைக்கிறது.

தனியார் தொலைக்காட்சி ரிப்போர்ட்டராக வந்து, துறுதுறு நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் சமந்தா. விஜய் யார் என்று தெரியாமல் பேசுவது, தெரிந்தவுடன் பம்புவது என பல காட்சிகளில் ரசிக்க வைக்கிறார். தலைமை மருத்துவருக்கு உதவியாளராக வருகிறார் காஜல் அகர்வால். கொடுத்த வேலையை சிறப்பாகவே செய்திருக்கிறார் காஜல். தந்தை விஜய்க்கு மனைவியாக வரும் நித்யா மேனன், நடிப்பில் மிளிர்கிறார். கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாகவே மெருகேற்றியிருக்கிறார். சென்டிமென்ட் காட்சிகளில் கைத்தட்டல் பெற்றிருக்கிறார்.


படத்திற்கு பெரிய பலம் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு. வெள்ளை தாடியுடன் வரும் இவருடைய கெட்-அப் அப்லாஸ் அள்ளுகிறது. குறிப்பாக இவர் பேசும் வசனங்களுக்கு தியேட்டரில் விசில் பறக்கிறது. அவர் மருத்துவ துறையில் பணம் மட்டுமே குறிக்கோள் என்று வாழ்ந்துவரும் கதாபாத்திரத்தை உணர்ந்து யதார்த்தமாக நடித்திருக்கிறார்.

வடிவேலுக்கு இந்த படம் சிறப்பாகவே அமைந்திருக்கிறது. இவருடைய காமெடி மட்டுமல்லாமல், குணசித்திர கதாபாத்திரத்திலும் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார். சிறிது நேரமே வந்தாலும் மனதில் பதிகிறார் காளிவெங்கட். போலீஸ் அதிகாரியாக வரும் சத்யராஜ், அம்மாவாக வரும் கோவை சரளா ஆகியோர் கொடுத்த வேலையை செய்தாலும், அவர்களுக்கு இன்னும் காட்சிகளை கொடுத்திருக்கலாம்.


‘தெறி’ படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் விஜயை வைத்து ‘மெர்சல்’ படத்தை இயக்கியிருக்கிறார் அட்லி. மருத்துவத்துறை பற்றி நிறைய படங்கள் வந்தாலும், இப்படம் முற்றிலும் மாறுபாட்டு இயக்கி இருக்கிறார் அட்லி. மெதுவாக நகரும் திரைக்கதை, போக போக சூடு பிடிக்க ஆரம்பிக்கிறது. குறிப்பாக பிளாஸ்பேக் காட்சிகள் சிறப்பாக இருக்கிறது. சமூக அக்கறையுடன் பல காட்சிகளை வைத்திருக்கிறார்.


ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே சூப்பர் ஹிட்டாகியுள்ளது. அந்த பாடல்களை திரையில் பார்க்கும் போது கண்களுக்கு மிகவும் விருந்து படைத்திருக்கிறது. பின்னணி இசையையும் சிறப்பாகவே கொடுத்திருக்கிறார். படத்தில் ஸ்டண்ட் காட்சிகள் யதார்த்தம் மீறாமல் இருப்பது சிறப்பு. விஷ்ணுவின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். இவரால் தான் படம் பிரம்மாண்டமாக தெரிகிறது.

மொத்தத்தில் ‘மெர்சல்’ மிரட்டல்.


மெர்சல்.....திரைவிமர்சனம் Reviewed by Author on November 11, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.