அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மறைமாவட்டமும் புதிய ஆயர் நியமனம் - ஒரு பார்வை....

மன்னார் மறைமாவட்டத்தின் மூன்றாவது ஆயர்

புதிய ஆயரைத் தெரிவுசெய்வதற்கான நடைமுறை

   மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக கொழும்பு உயர் மறைமாவட்டத்தின் துணை ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்கள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்றையதினம் புதன் கிழமை (22.11.2017) மன்னார் மறைமாவட்டத்தின் குருக்கள்- துறவியர்-பொதுநிலைப் பிரதிநிதிகள் மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர். மாலை 4.30 மணிக்கு மன்னார் மறைமாவட்டத்தின் குருமுதல்வர் அருட்திரு A.விக்ரர்சோசை அடிகளார் அவர்கள்  புதிய ஆயர் நியமனத்தை சம்பிரதாய பூர்வமாக அறிவித்தார். அறிவிப்பை வெளியிட்டதும் மகிழ்ச்சியின் அடையாளமாக பேராலயத்தின் மணிகள் ஒலித்தன. அதேபோன்று மன்னார் மறைமாவட்டத்தில் உள்ள அனைத்து ஆலயங்களின் மணிகளும் ஒலித்தன.

  கத்தோலிக்க திருச்சபையின் சட்டம் 401 பகுதி 1இற்கு அமைவாக ஒரு மறைமாவட்ட ஆயர் 75 வயதை எட்டியதும் தனது பணித்துறப்பை அல்லது ஓய்வை திருத்தந்தைக்கு கடிதம் மூலம் அறிவிக்க வேண்டும். திருத்தந்தை அதை ஏற்றுக்கொண்டு புதிய ஆயர் நியமிக்கப்படும்வரை ஓய்வுபெறும் ஆயரை தொடர்ந்தும் பணிப்பொறுப்பில் இருக்கும்படி கேட்கலாம் அல்லது இன்னுமொரு குருவையோ ஆயரையோ அப்போஸ்தலிக்க பரிபாலகராக நியமிக்கலாம்.

  இதன்படி மன்னார் ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகை 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16ஆம் திகதி தனது 75 வயதை எட்டியிருந்தார். அவருடைய பணித்துறப்புக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திருகோணமலை ஓய்வுநிலை ஆயர் மேதகு கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை அவர்களை மன்னார் மறைமாவட்டத்தின் அப்போஸ்தலிக்க பரிபாலகராக நியமித்தார். புதிய ஆயர் நியமிக்கப்படும்வரை ஆயருக்குப் பதிலாக மறைமாவட்டத்திற்கு தலைமைதாங்கி அதன் நிர்வாக மேய்ப்புப்பணி சார்ந்த கடமைகளை ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை சிறப்பாக மேற்கொண்டுவந்தார்.

  இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக மன்னார் மறைமாவட்டம் புதிய ஆயரை எதிர்நோக்கிக் காத்திருந்தது. இந்த இரண்டரை வருடங்களுக்கு மேலான காலப்பகுதியில் திருச்சபையின் சட்டத்திற்கு அமைவாக புதிய ஆயரை நியமிப்பதற்கான பல்வேறு அலுவல்களை நடைமுறைகளை இலங்கைக்கான திருத்தந்தையின் பிரதிநிதி அவர்கள் மேற்கொண்டிருந்தார். ஆலோசனைகள்  கருத்துப் பகிர்வுகள் போன்ற நீண்ட நடைமுறைகளுக்குப் பின்னர் பல நாட்களாக எதிர்பார்த்திருந்த இந்த அறிவிப்பு இப்போது வெளியிடப்பட்டிருக்கின்றது.

  ஒரு மறைமாவட்டத்திற்கான புதிய ஆயர் கட்டாயம் அந்த மறைமாவட்டத்தில் இருந்துதான் நியமிக்கப்படவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. மறைமாவட்டத்திற்குள் இருந்தும் நியமிக்கப்படலாம்  மறைமாவட்டத்திற்கு வெளியே அதாவது வேறு மறைமாவட்டக் குருவோ ஆயரோ நியமிக்கப்படலாம். அந்த வகையில் தான் நீண்ட நெடிய ஆலோசனைகளுக்குப் பின்னர் மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக கொழும்பு உயர் மறைமாவட்டத்தின் துணை ஆயர்களில் ஒருவரான இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய மன்னார் ஆயரின் வாழ்க்கைக் குறிப்பு

  மேதகு விடலிஸ் லயனல் இம்மானுவேல் பெனர்னாண்டோ ஆண்டகை அவர்கள் 1948ஆம் ஆண்டு மே மாதம் 20ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் பிறந்தார். 1951ஆம் ஆண்டு இவருடைய பெற்றோரும் குடும்ப உறுப்பினர்களும் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு கிறாண்பாஸ் பகுதிக்கு குடிபெயர்ந்தனர். பின்னர் 1955ஆம் ஆண்டு கொட்டாஞ்சேனையில் குடியேறினர். இவருடைய தந்தையார் திரு. சேவியர் பஸ்ரியன் பெனாண்டோ (பொறியியலாளர்) தாயார் திருமதி. ஞானசொரூபி பெனாண்டோ. இவருடைய பெற்றோர் இந்தியாவில் உள்ள தூத்துக்குடி மறைமாவட்டக் கத்தோலிக்க பரம்பரையைச் சார்ந்தவர்கள். இவர்களுடைய பிள்ளைகளில் நால்வர் துறவற வாழ்வை ஏற்றுக்கொண்டவர்கள். இருவர் குருக்கள் இருவர் அருட்சகோதரிகள். இப்பிள்ளைகளில் ஆயர் இம்மானுவேல் பெனாண்டோ அவர்கள் கடைசி மகன் ஆவார். இவருடைய மூத்த சகோதரர் அருட்திரு. ஜோ பெனாண்டோ ஆவார்.

  இவர் தனது ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியை கொழும்பு புனித பெனடிக்ற் கல்லூரியில் பயின்றார். பின்னர் கொழும்பில் உள்ள புனித அலோசியஸ் சிறிய குருமடத்தில் சேர்ந்து தனது குருத்துவத்திற்கான ஆரம்பப் பயிற்சியைப் பெற்றுக்கொண்டார். சிறிய குருமடக் கல்வியை நிறைவுசெய்த இவர் பின்னர் கண்டியில் உள்ள தேசியக் குருத்துவக் கல்லூரியில் மெய்யியல் கற்கைநெறிக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் 1969ஆம் ஆண்டு இறையியல் கற்கைநெறிக்காக உரோமைக்கு அனுப்பப்பட்டார். 1972ஆம் ஆண்டு அங்கு அவர் இறையியல்மாணிப் பட்டத்தைப் பெற்றுக்கொண்டார்.

  அன்றைய திருத்தந்தை 6ஆம் பவுல் அவர்களால் 1973ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் திகதி உரோமையில் இவர் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். தொடர்ந்து 1974ஆம் ஆண்டு உரோமையில் உள்ள ஊர்பானியா பல்கலைக்கழகத்தில் நன்னெறி இறையியல் பயின்று முதுமாணிப் பட்டத்தையும் பெற்றுக்கொண்டவராய் நாடு திரும்பினார்.

 நாடுதிரும்பிய இவர் கொட்டாஞ்சேனை புனித லூசியா பேராலயம் கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலம் போன்ற இடங்களில் மறைப்பணி ஆற்றினார்.

  தொடர்ந்து 1981 தொடக்கம் 1987ஆம் ஆண்டுவரை கண்டி தேசிய குருத்துவக் கல்லூரியில் விவிலியப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். 1987ஆம் ஆண்டு அமெரிக்கா சென்று அங்குள்ள வோசிங்கரன் கத்தோலிக்க பல்கலைக்கழகத்தில் இறையியலில் கலாநிதிப் பட்டத்தைப் பெற்றுக்கொண்டார். நாடு திரும்பிய அவர் கண்டி குருத்துவக் கல்லூரியில் உதவி அதிபராகவும்ää பின்னர் 1989 – 1991 வரையான காலப்பகுதியில் அதிபராகவும் பணியாற்றினார்.

  பின்னர் தனது மறைமாவட்டத்திற்கு திரும்பிய இவர் பங்குத்தந்தையாகவும் கொழும்பு உயர் மறைமாவட்டத்தில் தமிழ் கத்தோலிக்க மக்களுக்கு பொறுப்பாக ஆயரின் பதிலாளர் போன்ற நிலைகளிலும் பணியாற்றினார்.

  2011ஆம் ஆண்டு நவம்பர் 28ஆம் திகதி அன்றைய திருத்தந்தை 16ஆம் பெனடிக்ற் அவர்கள் கொழும்பு உயர் மறைமாவட்டத்தின் உதவி ஆயராக இவரை நியமித்தார். கடந்த ஆறு ஆண்டுகளாக கொழும்பு உயர் மறைமாவட்டத்தில் உதவி ஆயர் என்ற நிலையில் தமிழ் கத்தோலிக்க மக்களுக்கு பொறுப்பானவராக இருந்து இவர் சிறப்பாகப் பணியாற்றிவந்தார். இந்நிலையில்தான் தற்போது இவர் மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆயரின் குணநலன்கள்

  ஆயர் இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்கள் தலைசிறந்த மனிதநேயவாதிää நற்பண்பாளர்ää சிறந்த கல்விமான்ää நன்னெறி இறையியலாளர். தமிழ்-ஆங்கிலம்-சிங்களம் ஆகிய மும்மொழிகளிலும் சிறந்த பாண்டித்தியம் பெற்றவர். பங்குத்தந்தை இறையியல் பேராசிரியர் குருத்துவக் கல்லூரி அதிபர்  துணை ஆயர் என பல்வேறு நிலைகளில் பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவர்.
 
  இன-மத மொழி சாதி  பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் நின்று சிந்திக்கவும் செயலாற்றவும் வல்லவர். மிகவும் எளிமையானவர் யாரும் அவரை எளிதில் அணுகலாம். இவருடைய பணிக்காலத்தில் மன்னார் மறைமாவட்டம் இன்னும் சிறப்பான வளர்ச்சியைக் காணும் என நம்பலாம்.










மன்னார் மறைமாவட்டமும் புதிய ஆயர் நியமனம் - ஒரு பார்வை.... Reviewed by Author on November 22, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.