Top Ad unit 728 × 90

அண்மைய செய்திகள்

recent
-

குருத்துவ வாழ்வின் 50ம் ஆண்டை நிறைவு செய்கின்றார். ஒய்வு நிலை ஆயர் பேரருட்கலாநிதி இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை.


 மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வுநிலை ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்கள் ஆயர் பணியில் 25 வருடங்களையும் குருத்துவப்பணியில் 50 வருடங்களையும் நிறைவுசெய்து வெள்ளிவிழா கண்டு இன்று 13-12-2017 பொன்விழாவும் காண்கின்றார்.

மன்னார் மறைமாவட்டத்தின் இரண்டாவது ஆயராக 1992ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 20ஆம் திகதி திருநிலைப்படுத்தப்பட்டார்.
  • குருத்துவப்பணியில் 50 வருடங்கள்---(13-12-1967-13-12-2017)பொன்விழா
  • ஆயர் பணியில் 25 வருடங்கள்---       (20-10-1992-20-10-2017)வெள்ளிவிழா


வாழ்க்கைக் குறிப்பு
  ஆயர் யோசேப்பு ஆண்டகை 16.04.1940ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் உள்ள நெடுந்தீவில் பிறந்தார். நெடுந்தீவு றோ.க. பாடசாலை-மன்ஃ முருங்கன் மகா வித்தியாலயம் யாழ் புனித பத்திரிசியார் கல்லூரி ஆகியவற்றில் தனது பாடசாலைக் கல்வியைக் கற்றார். கண்டி தேசிய குருமடம் திருச்சி (இந்தியா) புனித பவுல் குருமடம் ஆகியவற்றில் குருத்துவக் கல்வியைக் கற்று 13.12.1967ஆம் ஆண்டு அன்றைய யாழ் ஆயர் மேதகு எமிலியானுஸ்பிள்ளை ஆண்டகை அவர்களால் யாழ் மரியன்னை பேராலயத்தில் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.

  •   குருவாகிய இவர் 1968 – 1971 வரை உதவிப் பங்குத்தந்தையாக உயிலங்குளம் - முருங்கன்இளவாலை – சேந்தாங்குளம் ஆகிய பங்குகளில் பணியாற்றினார்.
  •  1971 – 1975 வரை உரும்பிராய் - சுன்னாகம் பங்கின் பங்குத்தந்தையாகவும்
  •  1975 – 1980 வரை பெரியவிளான் - பண்டத்தரிப்பு பங்கின் பங்குத்தந்தையாகவும் பணியாற்றினார். 
  • 1981 – 1985 வரை உரோமைப் பல்கலைக்கழகங்களில் உயர்கல்விக்கான பல்வேறு கற்கைநெறிகளை மேற்கொண்டு ஈற்றில் திருச்சபைச் சட்டத்துறையில் கலாநிதிப் பட்டத்தைப் பெற்றுக்கொண்டார்.

  நாடு திரும்பிய இவர் 1985 – 1992 வரை யாழ்ப்பாணம் புனித திருமுழுக்கு யோவான் ஆலயப் பங்குத்தந்தையாகப் பணியாற்றினார். அதேவேளை யாழ் கொழும்புத்துறை புனித பிரான்சிஸ்கு சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரியில் திருச்சபைச் சட்ட விரிவுரையாளராகவும்ää யாழ் மறைமாவட்ட திருமண நீதிமன்றத்தில் சட்டக் காவலராகவும் பணியாற்றினார்.

  1992ஆம் ஆண்டு யூலை மாதம் 6ஆம் திகதி அன்றைய திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் இவரை மன்னார் மறைமாவட்டத்தின் ஆயராக நியமித்தார். 1992ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 20ஆம் திகதி ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகை அவர்கள் இலங்கையின் ஏனைய ஆயர்கள் புடைசூழ மடுத்திருப்பதியில் இவரை ஆயராகத் திருப்பொழிவு செய்தார்.
மறைமாவட்டம் சார்ந்த பணிகளைச் செவ்வனே செய்தார்

  ஒரு மறைமாவட்ட ஆயர் என்ற வகையில் ஆயர் இரா.யோசேப்பு ஆண்டகை அவர்கள் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட மன்னார் மறைமாவட்டம் மட்டிலான தனது சமயக் கடமைகளை செவ்வனே நிறைவேற்றினார். ஒரு மறைமாவட்டத்தில் ஒரு ஆயர் செய்யவேண்டிய பணிகளை அவர் முழுமையான உற்சாகத்தோடு செய்தார். திருப்பலி-திருவிழாக்கள்-பங்குத்தரிசிப்புக்கள்-ஆலோசனைகள்-கூட்டங்கள்-மாநாடுகள்-ஆலய மற்றும் பங்குமனைக் கட்டுமானங்கள்-ஏழைகளுக்கான உதவிகள் என அவர் தன் கடமைகளைச் சிறப்பாகச் செய்தார்.

  இவர் மன்னார் மறைமாவட்ட ஆயராகப் பொறுப்பேற்ற பின்னர் மறைமாவட்டத்தை ஆன்மீக-ஒழுக்க-சமூக-பொருளாதாரத் துறைகளில் முன்னேற்ற பல்வேறு புதிய முயற்சிகளை முன்னெடுத்தார். ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு மறைமாவட்ட மேய்ப்புப்பணி மாநாடுகளைக் கூட்டி குருக்கள- துறவியர் -பொதுநிலையினர் என அனைத்துத் தரப்பினரின் ஆலோசனைகளைப் பெற்று திட்டங்களைத் தீட்டி அவற்றை நடைமுறைப்படுத்த முயற்சித்தார்.

இவருடைய காலத்தில் மன்னார் மறைமாவட்டத்தில் பல புதிய பங்குகள் உருவாக்கப்பட்டன. இவர் மறைமாவட்டத்தைப் பொறுப்பெடுத்தபோது 15 பங்குகள் இருந்தன. இவர் ஓய்வுபெறும்போது 38 பங்குகளாக அவை அதிகரித்திருந்தன. புதிய பங்குகளின் உருவாக்கத்தினால் மக்கள் மட்டிலான குருக்களின் அக்கறை அதிகரித்தது. மக்களின் ஆன்மீக மற்றும் சமூகத் தேவைகள் இயன்றவரை தீர்க்கப்பட்டன.

   பங்குப் பணிகளோடு ஆணைக்குழுக்களையும் குருக்கள் நிர்வகித்துவந்த நிலையில் இவர் ஒவ்வொரு ஆணைக்குழுவுக்கும் தனியாகக் குருக்களை நியமித்து-தேவையான அடிப்படை வசதிகளைச் செய்துகொடுத்து-அந்த ஆணைக்குழுக்கள் சிறப்பாகச் செயற்பட வழிகோலினார். யுத்த சூழ்நிலையில் பல ஆலயங்கள- பங்குமனைகள் அழிக்கப்பட்டன அல்லது சேதத்திற்கு உள்ளாக்கப்பட்டன. பல ஆலயங்கள் மற்றும் பங்குமனைகள் கால நீட்சியினால் பழுதடைந்த நிலையில் இருந்தன. இவ்வாறான நிலையில் பல்வேறு தரப்பிலிருந்து உதவிகளைப் பெற்று புதிய ஆலயங்களை புதிய பங்குமனைகளைக் கட்டி எழுப்ப இவர் தனது முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார்.

  பம்பைமடுவில் அன்னை திரேசாவின் அருட்சகோதரிகளை வரவழைத்து முதியோர் மற்றும் கைவிடப்பட்டவர்களைப் பராமரிக்க ஒரு இல்லத்தை ஆரம்பித்தார். முருங்கனில் டொன் பொஸ்கோ குருக்களை வரவழைத்து இளைஞர் யுவதிகளுக்கான தொழிற்பயிற்சிகளை வழங்க ஆவன செய்தார். அடம்பனில் இயேசு சபைக் குருக்களை வரவழைத்து அவர்களின் பணி மறைமாவட்டத்திற்கு கிடைக்க வழிசெய்தார்.

இந்தியாவில் இருந்து பல புதிய பெண் துறவற சபைகளை மன்னார் மறைமாவட்டத்திற்கு வரவழைத்து இந்திய அருட்சகோதரிகளின் பணியை மக்கள் பெற வழிவகுத்தார். புதிதாக உருவாக்கப்பட்ட பங்குகளில் புதிய கன்னியர் மடங்களையும் ஏற்படுத்தி மக்களை ஆன்மீகத்திலும் ஒழுக்கத்திலும் வளர்க்கப் பாடுபட்டார். மடுத்திருப்பதியில் தியான இல்லம் ஒன்றைக் கட்டியெழுப்பி அதன் மூலம் மன்னார் மறைமாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் ஏனைய மறைமாவட்டத்தவர்களும் பயன்பெற வழிகோலினார்.

  குருக்கள் துறவியர் நலனில் அக்கறையோடு செயற்பட்டார். பொதுநிலையினரின் உருவாக்கத்தில் அதிக கரிசனை எடுத்தார். திருச்சபையின் திருவழிபாடுகளை திருச்சபை ஒழுங்கு விதிகளுக்கு ஏற்ப நடத்தவேண்டுமென்பதை வலியுறுத்தினார். இவ்வாறு ஓர் ஆயர் என்ற வகையில் தனது மறைமாவட்டம் சார்ந்த கடமைகளில் அவர் அதிக ஈடுபாட்டோடு அர்ப்பணிப்போடு உழைத்தார். இதைவிட இலங்கை ஆயர் பேரவையில் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு பொறுப்புக்களை ஏற்றுச் சிறப்பாகச் செய்தார்.

 மன்னார் மறைமாவட்டத்தின் ஒய்வு நிலை ஆயர் பேரருட்கலாநிதி இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை அவர்கள், இன்று தனது குருத்துவ வாழ்வின் 50ம் ஆண்டை நினைவு கூர்கின்றார். அன்பு ஆயர் தந்தை அவர்களே!
உங்களை வாழ்த்துகின்றோம் , உங்களுக்காகச் செபிக்கின்றோம்.குருத்துவ வாழ்வின் 50ம் ஆண்டை நிறைவு செய்கின்றார். ஒய்வு நிலை ஆயர் பேரருட்கலாநிதி இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை. Reviewed by Author on December 13, 2017 Rating: 5
Post a Comment
Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.