Top Ad unit 728 × 90

அண்மைய செய்திகள்

recent
-

யாழில் விகாராதிபதியின் உடல் தகனம்!! ஆவேசம் கொண்டுள்ள தமிழ் இளைஞர்கள்? அனந்தி -


யாழில் விகாராதிபதியின் உடல் தகனம் செய்யப்படும் விடயம் தமிழ் இளைஞர்களின் மனதில் ஆவேசத்தை ஏற்படுத்தியுள்ளதை காணக்கூடியதாக உள்ளதென வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.யாழ். நாகவிகாரை விகாராதிபதியின் உடலை முற்றவெளி பகுதியில் தகனம் செய்வது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும், தமிழின அழிப்பின் தோற்றுவாயாக நீறுபூத்த நெருப்பாக கனன்று கொண்டிருக்கும் சிங்கள பௌத்த பேரினவாத சித்தாந்தத்தினை தமிழர் தாயகத்தில் திணிக்கும் முயற்சியாகவே, நாக விகாராதிபதியின் உடலை யாழ். மண்ணில் எமது மக்களால் புனித பூமியாக கருதப்படும் இடத்தில் தகனம் செய்ய ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஐயமேற்படுகிறது.

தமிழர் தாயகத்தின் பண்பாட்டுத் தலைநகரமாக விளங்கிவரும் யாழ்ப்பாணத்தில் அதுவும் தமிழாராய்ச்சி மாநாட்டில் சிங்களவர்களால் படுகொலை செய்யப்பட்ட தியாகிகளது நினைவாக அமைக்கப்பட்டிருக்கும் நினைவுத் தூபி மற்றும் யாழ். முனீஸ்வரன் கோயில் அமைந்துள்ள இடத்திற்கு அருகாமையில் விகாராதிபதியின் உடலை தகனம் செய்ய முற்படுவதை திட்டமிட்ட நடவடிக்கையாகவே பார்க்க வேண்டியுள்ளது.மாநகரசபைகளினால் அனுமதியளிக்கப்பட்ட மயானங்களில் தான் இறந்தவர்களது உடல்களை அடக்கம் செய்வது வழக்கமாகும்.

அதனை தகர்த்தெறியும் வகையில் பொது இடமொன்றில் இராணுவத்தினரின் பிரத்தியேக ஏற்பாடுகள் மூலம் விகாராதிபதியின் உடல் தகனத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை தேவையற்ற இன முரண்பாட்டிற்கு வித்திடும் அபாயத்தினை ஏற்படுத்தியுள்ளது.  இறந்தவர்களை தகனம் செய்யவோ புதைப்பதற்கோ அனுமதி வழங்கப்பட்ட இடங்கள் ஏராளம் இருக்கையில் எமது மக்களால் புனித பூமியாக கருதப்படும் குறிப்பிட்ட இடத்தை விகாராதிபதியின் உடல் தகனத்திற்கு தேர்வு செய்துள்ளமையானது தமிழர் தாயகத்தில் இன முரண்பாட்டை ஏற்படுத்தி தமிழர்களை வன்முறைப்பிரியர்களாக உலகிற்கு காட்டும் நோக்கில் திட்டமிடப்பட்டதாகவே கருதவேண்டியுள்ளது.

நாட்டின் ஆட்சி, அதிகாரத்தை கையில்வைத்துக் கொண்டு தமிழர்களின் புனித பூமியில் இதனை நடத்த எத்தனிப்பவர்கள், கொழும்பில் உள்ள பொன்னம்பலவாணேஸ்வரம் கோவிலில் பிரதான குருக்களாக இருக்கும் ஒருவர் இறக்கும் போது காலிமுகத்திடலில் அவரது இறுதிச்சடங்குகளை மேற்கொள்ள இடமளிப்பார்களா? இன்று விகாராதிபதியை தகனம் செய்வார்கள். பின்னர் நினைவிடம் அமைப்பார்கள். அதனை காரணம் காட்டி புனித பிரதேசமாக அறிவித்து பௌத்த விகாரை ஒன்றையும் அமைத்து நிரந்தர ஆக்கிரமிப்பின் குறியீடாக அவ்விடத்தை மாற்றும் அபாயம் கண்முன்னே நடந்தேறுவதை நாம் எவ்வாறு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியும்?

யாழ். மாநாகரசபை மேயர் பதவி உள்ளிட்ட சபைகளின் பதவிகளுக்கு போட்டியிடுவதற்காக முட்டிமோதும் கட்சிகள் இதனை கண்டுகொள்ளாது மௌனமாக இருப்பது வேதனையளிக்கிறது.

ஏலவே அமைக்கப்பட்ட பௌத்த நினைவிடங்களை மையப்படுத்தி திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட நில ஆக்கிரமிப்பில் இருந்து இன்னமும் விடுபட முடியாது திணறிவரும் நிலையில் எமது காலத்திலேயே ஆக்கிரமிப்பிற்கான அடிகோலிடப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டிய பாரிய பொறுப்பு எமது தோள்களில் சுமத்தப்பட்டுள்ளது.தகனம் செய்யப்படும் பகுதியானது தமிழர்களின் பாரம்பரிய இடமாகும். காலனித்துவ ஆட்சியாளர்களின் ஆக்கிரமிப்பில் அவர்களது பாதுகாப்பு தேவைக்காக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த குறித்த இடம் கால ஓட்டத்தில் சிறிலங்கா இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது.

இந்த நிலையில் 2010ஆம் ஆண்டளவில் சிறிலங்கா இராணுவத்திடம் இருந்து மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் தொல்லியல் திணைக்களத்திடம் நேரடியாக கையளிக்கப்பட்டதாகும். தொல்லியல் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதை காரணம் காட்டி யாழ். மாநகரசபை நிர்வாகம் தனது பொறுப்பை தட்டிக்களிக்க முடியாது.

இதனை அனுமதித்தோமேயானால் இனிவரும் காலங்களில் தனிநபர்கள் தத்தமது இடங்களில் இவ்வாறு இறந்தவர்களை தகனம் செய்வதற்கான சூழலை ஏற்படுத்திவிடும் என்பதனை கருத்தில் கொண்டு யாழ். மாநாகரசபை நிர்வாகம் உரிய நடவடிக்கையினை எடுக்க வேண்டும்.

சட்டம், ஒழுங்கை கைவசம் வைத்திருக்கும் கௌரவ வட மாகாண முதலமைச்சர் அவர்கள் இவ்விடயத்தில் உடனடியாகத் தலையிட்டு உரிய தீர்வு காண்பதன் மூலமாக தேவையற்ற இன முரண்பாடு ஏற்படாது தவிர்க்க முடியும் என்பதனை இவ்விடத்தில் சமூகப் பொறுப்புடன் சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளேன்.ஆயுதமௌனிப்பின் பின்னர் தமிழர்களை கேட்க நாதியில்லை என்ற ரீதியில் நடைபெற்று வரும் நிகழ்வுகளால் தமிழ் இளைஞர்கள் மனதில் மத்திய அரசுக்கு எதிரான சிந்தனை நாளுக்கு நாள் வளர்ந்து வருவதை அவதானிக்க கூடியதாக உள்ளது.

இவ்வாறான சூழலில் விகாராதிபதியின் உடல் தகனம் செய்யப்படும் விடயம் தமிழ் இளைஞர்களின் மனதில் ஆவேசத்தை ஏற்படுத்தியுள்ளதையும் காணக்கூடியதாக உள்ளது.இதனை கண்டுகொள்ளாது விடுவதன் மூலம் பாரதூரமான விளைவுகளுக்கு இச்சம்பவம் வித்திடும் பேரபாயம் உள்ளதை சம்பந்தப்பட்ட அனைவரும் உணர்ந்து கொண்டு விரைந்து நடவடிக்கை எடுப்பது காலத்தின் கட்டாயமாகும்.

யாழில் விகாராதிபதியின் உடல் தகனம்!! ஆவேசம் கொண்டுள்ள தமிழ் இளைஞர்கள்? அனந்தி - Reviewed by Author on December 24, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.