அண்மைய செய்திகள்

recent
-

பழக்க தோசம் இன்னமும் மாறவேயில்லை! -


தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் உள்ளுராட்சித் தேர்தலையொட்டிக் கிளம்பிய குழப்படிகள் ஓய்வுக்கு வந்துள்ளன.
கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் 3 கட்சிகளின் தலைவர்களும் தலைவர் இரா.சம்பந்தர் தலைமையில்கூடிப் பேசி பிரச்சினையை சுமுகமாகத் தீர்த்துக்கொண்டனர்.

இது தொடர்பில் நேற்றுப் பிற்பகலில் விடுக்கப்பட்ட அறிக்கை மிகச் சுருக்கமாக இந்தப் பிரச்சினை தீர்க்கப்பட்டதாகத் தெரிவித்தது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான மாவை. சேனாதிராசா - இலங்கைத் தமிழரசுக் கட்சி, செல்வம் அடைக்கலநாதன் - ரெலோ, தர்மலிங்கம் சித்தார்த்தன் - புளொட் ஆகியோர் இன்று (09-.12-.2017) ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சிப் பிரதிநிதிகளோடு எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடியதன்படி, குறித்த தேர்தல் தொடர்பிலான அனைத்துப் பிரச்சினைகளுக்கும் சுமுகமான தீர்வு எட்டப்பட்டுள்ளது.

தேர்தலுக்கான விண்ணப்பங்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெயரிலும், சின்னத்திலும் (வீடு) கையளிக்கப்படும். வடக்கு கிழக்கில் உள்ள வாக்காளர்களிடம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கீழ் அதன் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு முழு ஆதரவு நல்குமாறு ஆர்வமுடன் வேண்டுகோள் விடுக்கப்படுகின்றது. இவ்வாறு அந்த அறிக்கை மிகச் சுருக்கமாக இந்தப் பிரச்சினை தீர்க்கப்பட்டதான அறிவிப்பை விடுத்தது.
அமர்ந்து பேசி ஒரு அரை நாளில் முடிக்கக்கூடிய விடயத்தை தமிழரசுக் கட்சி தவிர்ந்த மற்றைய இரு கட்சிகளும் அதிலும் குறிப்பாக ரெலோ, ஏன் பூதாகாரப்படுத்தினார்கள் என்பது தான் புரியாமலுள்ளது.

இதற்கு முன்னர் நடந்த கூட்டத்திலும் இதுபோன்றுதான் பேசப்பட்டது.ஆனால் இணக்கம் எட்டப்படவில்லை. தொடர்ந்து பேசுவது என்றுதான் முடிவெடுக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டது.
அந்தக் கூட்டத்தில் இருந்து வெளியேறிய ரெலோ பிரதிநிதிகள் கூட நாம் எமது கோரிக்கையை முன்வைத்து விட்டோம்; இனி தமிழரசுக் கட்சி தான் பதில் சொல்ல வேண்டும் என்று கூறி விட்டே சென்றனர்.
அதன் பின்னர் திடீரென தாம் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்தனர். கட்சியின் மையக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர். ரெலோவின் குழப்பத்தைத் தொடர்ந்து புளொட்டும் வழக்கம் போன்று மதில் மேல் பூனையாக மாறியது. நியாயமான பங்கீடு நடக்கவில்லை என்றால் தேர்தலில் போட்டியிடுவது இல்லை என்று நல்ல பிள்ளை போன்று அறிவித்தது.

எது எப்படியிருந்தாலும், கடைசியில் அந்தக் கட்சிகள் இரண்டும் உருட்டி, மிரட்டி ஏதோ தங்களால் முடிந்த நலன்களைத் தமக்குப் பெற்றுக் கொண்டுள்ளன. ஈழத் தமிழர்களின் நவீன அரசியல் வரலாறு முழுவதும் ஆயுதக் குழுக்களிடம் இந்தப் போக்கை அவதானிக்கலாம்.
எல்லாத் தமிழ் ஆயுதக் குழுக்களும் சிங்கள அரசுகளையும் அவற்றின் ஏவல் படைகளையும் எதிர்த்து, தமிழ் மக்களைக் காப்பதற்காகவே தாம் ஆயுதங்களைக் கைகளில் தூக்கியதாகக் கூறின. 

ஆனால் எந்த மக்களைக் காப்பதற்காக என்று கூறி ஆயுதங்களை இந்தக் குழுக்கள் தூக்கினவோ, அந்த மக்களை உருட்டி மிரட்டவும், பணிய வைக்கவும் ஆயுதங்களைப் பயன்படுத்த இந்தக் குழுக்கள் தயங்கியதில்லை.
இதில் ஒரேயொரு குழுக்கூட விதி விலக்கில்லை. தமது எதிரியை உருட்டி மிரட்டி அவர்கள் எதையாவது சாதித்தார்கள் என்று சொல்வதற்கில்லை,
ஆனால் சொந்த மக்களை உருட்டி மிரட்டி அச்சுறுத்தி அடிபணிய வைத்த சம்பவங்கள் பல உண்டு. சொந்த மக்களையே கொலை செய்த வரலாறுகளும் நிறையவே உண்டு.

இப்போது தமக்கு மேலும் சில சபைகளில் அதிக ஒதுக்கீடுகள் கேட்டு அவை தமிழரசுக் கட்சியை உருட்டி மிரட்டி அடிபணிய வைக்க முயற்சிப்பதைப் பார்க்கும் போது, அந்தப் போக்கிலிருந்து அந்தக் கட்சிகள் மாறவேயில்லை என்பது தெளிவாகிறது.
தனித்துப் போட்டியிடுவோம், போட்டியிடாமலேயே விடுவோம் என்றெல்லாம் விடுத்த மிரட்டலைப் பார்க்கையில் அவர்களின் வரலாற்று இயல்பு, கிஞ்சித்தும் மாறவில்லை என்பது தெரிகிறது.
அதாவது, மக்கள் நலன்களுக்காக எதிரியிடம் பேரம் பேசும் திறனற்ற, வக்கற்றவர்களாக அவர்கள் இருந்தாலும், தத்தம் நலன்களைப் பெறுவதற்காக சொந்த மக்களையும் சக கட்சியையும் மிரட்டி உருட்டுவதற்கு அவர்களுக்கு நல்ல தெம்பும் சமயோசிதமும் இருக்கின்றன என்பது தெரிகிறது.
-UTHAYAN- 
பழக்க தோசம் இன்னமும் மாறவேயில்லை! - Reviewed by Author on December 10, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.