அண்மைய செய்திகள்

recent
-

பொங்கல் வைக்க உகந்த நேரம்.....

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் 14.1.2018 நாளை (ஞாயிற்றுக்கிழமை) வருகின்றது. அன்றைய தினம் காலை 7.30 மணியிலிருந்து 9.00 மணிக்குள் பொங்கல் வைப்பது நல்லது. அல்லது மதியம் 1.45 மணியிலிருந்து 2.05 மணிக்குள் பொங்கல் வைக்கலாம். வீட்டில் மூத்தோர் மஞ்சள் கொத்து கட்டிய பானையை கையில் எடுத்து, கிழக்கு நோக்கி நின்று சூரியனை வழிபட்டு, அதன்பிறகு அடுப்பினை மூன்று முறை சுற்றி அந்தப் பானையை வைக்க வேண்டும்.
மனையில் மங்கலம் பொங்க, பால் பொங்கும் பொழுது ‘பொங்கலோ பொங்கல்.. மகர சங்கராந்திப் பொங்கல்’ என்றும் சொல்லி வழிபட வேண்டும். சர்க்கரைப் பொங்கலும், வெள்ளைப் பொங்கலும் வைப்பது நம்மவர்களின் மரபு.
கூட்டாக ஒற்றுமையுடன் வாழ கூட்டுக்குழம்பு வைக்க வேண்டும். வாழ்க்கை இனிக்க, கரும்பாக அமைய, கரும்பும் வைத்து வழிபட்டால் பொங்கும் பொங்கலைப் போல் இன்பம் பொங்கும். சோறு படைக்கும் பொழுது, சூரியன் இருந்து சாப்பிடும் விதத்தில் இலையின் நுனிப்பகுதியும், அடிப்பகுதியும் அமைவது சிறப்பாகும். கதிரவன் வழிபாடு கனிவான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும்.

தைப்பொங்கல் வரலாறு
ஆடி மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் பருவமே தை மாதம் ஆகும். அந்த அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியைச் சருக்கரை, பால், நெய் சேர்த்துப் புதுப் பானையிலிட்டுப் புத்தடுப்பில் கொதிக்க வைத்துப் பொங்கல் சோறாக்கிக் சூரியனுக்கும் மாட்டுக்கும் படைத்து உண்டு மகிழும் விழாவே பொங்கல் விழாவாகும்.

நீர் வளம் கொண்ட இடங்களில் மூன்று வேளாண்மை நடக்கும். நீர் வளமில்லா இடங்களில் மழை நீர்த் தேக்கத்தால் ஒரு வேளாண்மைதான் விளைக்க முடியும். ஆகவே, மார்கழி (சிலை) அல்லது தை (சுறவை) மாத அறுவடையே நாடெங்கும் நிகழும். அறுவடை முடிந்து பெற்ற புத்தரிசி, கரும்பு, மஞ்சள், பனங்கிழங்கு, நம்முடைய கொடிவழிக் காய்கறிகள் (குறிப்பாக அவரை, புடலை, கத்திரி, வாழை, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, கருணைக் கிழங்கு போன்றவையே படையலாக வைக்கப்படும். செந்நெற் பச்சரிசியைப் பெரும்பாலும் தவிடு போக்காமல் நீர் சேர்த்துச் சமைத்து பருப்புக் குழம்புடன் உண்பதும் மரபு.

பொங்கு என்ற சொல் கொதித்தல், மிகுதல், சமைத்தல், செழித்தல் எனப் பொருள்படும். பொங்குவதால் பொங்கல். பொங்கல் விழாவை தமிழர் என்னும் இனக்குழு தொடர்பான விழா என்று தெளிவாக உணரமுடியும். இந்த விழாவின் நடைமுறையைப் பார்த்தால், மெய்யியற் சமயங்கள் தமிழகத்தில் நிலைகொள்ளுவதற்கு முன்னாலிருந்தே, இனக்குழு வழிபாடுகள் நிலவிய போதே, இந்த விழாக் கொண்டாடுவது தொடங்கியிருக்க முடியும் என்பதையும் புரிந்துக் கொள்ள இயலும்.


பொங்கல் வைக்க உகந்த நேரம்..... Reviewed by Author on January 13, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.