அண்மைய செய்திகள்

recent
-

சுதந்திரமும் மதிப்பும் 2009ம் ஆண்டுக்கு முன்னர் வடபகுதியில் பெண்களுக்குக் கிடைத்தது -


பெண்கள் இரவு வேளைகளில் வீதியிலும், அரச பொதுப் போக்குவரத்துக்களிலும் எதுவித பயமும் இன்றி சென்றுவரக்கூடிய ஒரு நிலை ஏற்பட வேண்டும்.

அவ்வாறான சுதந்திரமும் மதிப்பும் 2009ம் ஆண்டுக்கு முன்னர் வடபகுதியில் பெண்களுக்குக் கிடைத்தது. அந்த நிலை மீண்டும் கிடைக்க வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
நியூயோர்க் நகரில் 1882ம் ஆண்டில் ஒரு பஞ்சு ஆலையில் கடமைபுரிந்த ஆண், பெண் இருபாலாருக்கும் சம அளவிலான சம்பளக் கொடுப்பனவை வழங்க வேண்டும் என்ற போராட்டத்தில் பெண்கள் இறங்கியிருந்தனர்.
இந்தப் போராட்டம் கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் வரை நீடித்து அந்த பஞ்சு ஆலைக்குள்ளேயே சுமார் 75 பெண்கள் உயிரை மாய்த்த பின்பே 1910ம் ஆண்டு மார்ச் 8ம் திகதி அவர்களின் சம்பளங்கள் சரிநிகர் சமானமாக வழங்குவதற்கு அந்த நிர்வாகம் ஒத்துக் கொண்டது.

அந்த வெற்றியை கொண்டாடும் முகமாகவே மார்ச் 8ம் தேதி மகளிர் தினமாக உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுகின்றது.
இன்றைய தலைமுறைக்கு மகளிர் ஒடுக்கு முறை பற்றி முழுமையாக அறிந்திருக்க வாய்ப்பில்லை. இன்று ஆண்களுக்கு சமானமாக பெண்களும் கல்வி கற்கின்றார்கள்.
ஆண்கள் தொழிலுக்குச் செல்வது போல பெண்களும் தொழிலுக்குச் செல்கின்றார்கள். சமையல் கூடத்தில் ஆண், பெண் இருபாலாரும் இணைந்து வேலை செய்கின்றார்கள்.

எல்லா விடயங்களிலும் சமானமாக கையாளப்படும் போது பெண் விடுதலை பற்றி ஏன் கூடுதலாக விமர்சிக்கிறார்கள் என்ற கேள்வி இளையோர் சிலர் மனதில் எழக் கூடும்.
பெண் விடுதலைக்கு முதன்முதலில் குரல் கொடுத்தவன் புரட்சிக் கவிஞன் பாரதி என்றே கூறலாம்.
'நாளும் கிழமையும் நலிந்தோர்க்கில்லை ஞாயிற்றுக்கிழமையும் பெண்களுக்கில்லை' என்றான் பாரதி. ஆண்கள் ஞாயிற்றுக் கிழமைகளில் வீட்டில் ஓய்வாக அமர்ந்திருந்து புதினப் பத்திரிகை, செய்தித் துணுக்குகள், இலக்கிய நூல்கள் என்பவற்றுடன் பொழுதைக் கழிப்பார்கள்.
ஆனால் பெண் என்பவள் ஞாயிற்றுக்கிழமைகளிலும் வீட்டைப் பெருக்கி, உணவு சமைத்து, வீட்டில் இல்லாத சாமான்கள் வேண்டி, கணவனின், பிள்ளைகளின், தனது உடைகளைத் தோய்த்து மேலும் பல வேலைகளில் ஈடுபடுவார்.

ஒருவாறு மதிய உணவை உட்கொண்ட பின்னர் மீண்டும் அடுத்த நாள் விடியற்காலையில் என்ன உணவு சமைப்பது என்ற சிந்தனை அத்துடன் பிள்ளைகளைப் பராமரிப்பது, அவர்களின் உடைகளை மடித்தெடுத்தல் போன்ற கடமைகளில் முழுப்பொழுதையும் கழித்து ஓய்வு ஒழிவு இன்றி வாழுகின்றாள் பெண் என்று கூறாமல் கூறுகின்றான் பாரதி.
உரிமைகள் அற்ற ஒருவருக்கு நலிந்தவருக்கு எவ்வாறு நாளும், கோளும் இல்லையோ அது போன்றே பெண் என்பவளுக்கும் அதே நிலை தான் என்பதனையே மேலே குறிப்பிடுகின்றார்.
இன்றைய கால கட்டத்தில் பெண்கள் வேலைக்கு செல்கின்றார்கள். மாலையில் வீடு திரும்புகின்றார்கள். இந்த இடைப்பட்ட நேரத்தில் கடமைக்குச் செல்லும் போதும் கடமைபுரியும் வேலைத்தளத்திலும் கடமைமுடிந்து வீடு திரும்பும் போதும் பெண் எனப்படுபவள் படுகின்ற துன்பங்கள், அவமானங்கள், தலைக்குனிவுகள், வெளியில் எடுத்துச் சொல்ல முடியாதிருக்கின்றன.

அவற்றை ஜீரணிக்க முடியாமல் தனக்குள்ளே அமிழ்த்தி வைத்து அவள் படுகின்ற வேதனை சொல்லொண்ணாதது. அதே போன்று தற்செயலாக வேலைத்தளத்தில் சற்று கூடிய வேலைப்பழு காரணமாக அதிக நேரம் செலவழித்துவிட்டு சற்றுத் தாமதமாக இருட்டிய பின்னர் ஓடி ஓடி பேருந்தைப் பிடித்துவந்து வீட்டுக்கு அண்மையில் உள்ள பஸ் தரிப்பில் இறங்கி தனியாக சுற்றும் முற்றும் பார்த்து பயந்த சுபாவத்துடன் வீட்டிற்கு ஓடிச் சென்றால் அங்கே சினத்துடன் காவலிருக்கின்ற கணவனை சமாதானம் செய்வது பெரும் பாடாகிவிடுகிறது.
குழந்தைகளின் பசியைப் போக்க தேநீர் தயாரித்து, இரவு உணவு தயார் செய்து பல வேலைகளில் ஈடுபட வேண்டியுள்ளது. இவ்வாறாக அவளின் வாழ்க்கை முழுவதும் அர்ப்பணிப்புடையதாகவே கழிக்கப்படுகின்றது.
கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு முன்னர் பெண்கள் கல்வி கற்கும் உரிமையைப் பெற்றிருக்கவில்லை. சில பெண்கள் ஆரம்ப வகுப்புகளில் கல்வி கற்கின்ற போது பருவம் எய்தி விட்டால் அன்றில் இருந்து படிப்புக்கு முழுக்கு போட்டு விடவேண்டியிருந்தது.

பெண் எனப்படுபவள் வீட்டைப் பெருக்கிச் சுத்தம் செய்வதற்கும், உணவு சமைப்பதற்கும் துணி துவைப்பதற்கும் பிள்ளைகளை பெற்றுக் கொடுப்பதற்குமான ஒரு இயந்திரமாகவே கருதப்பட்டாள்.
ஆரம்பத்தில் வாக்களிக்கும் உரிமை கூட அவர்களுக்கு வழங்கப்படவில்லை. இன்றைய நிலையில் கூட பொதுத் தேர்தல்களில் பெண் அங்கத்துவம் 25% கட்டாயமாக இருக்க வேண்டும் எனச் சட்டம் இயற்றப்பட்டுள்ள போதும் அந்த அளவுக்கு அங்கத்துவத்தைப் பெற்றுக் கொள்வதற்கு பெண்கள் இன்னமுந் தம்மை தயாராக்கிக் கொள்ளவில்லை என்பதே உண்மை.
முன்னர் இருந்த பாலியல் விவாகம் போன்றவை இப்பொழுது எம்மை விட்டு அகன்றுவிட்ட போதும் பெண் எனப்படுபவள் ஒரு ஆணின் துணையுடன் தான் வாழ வேண்டும் என்ற ஒரு கட்டுக்கோப்புக்குள் தள்ளப்பட்டுள்ளாள்.

குழந்தையாக பிறந்த தினத்தில் இருந்து மணம் முடித்துக் கொடுக்கும் வரை தந்தையின் கவனிப்பில் அவரின் சொற்படி வாழுகின்றாள். திருமணம் முடித்த தினத்தில் இருந்து கணவனின் சொல் கேட்கிறாள். பின்பு பிள்ளைகள் வளர்ந்த பின் ஆண்மகனின் சொற்படியே இறக்கும் வரை தமது வாழ்க்கைச் சக்கரத்தை ஓட்டிச் செல்கின்றனர் பெரும்பாலான மகளிர்.
மகளிர் சம்பந்தமாக ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் நிரந்தர அபிவிருத்திக் குறிக்கோள்கள் (SDGS) என்றவற்றின் ஐந்தாவது குறிக்கோளின் கீழ் இன்றைய நிலையும் இனிவருங்கால நிலையும் பற்றி பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.
'உலகமானது பாலியல் சமத்துவம் சம்பந்தமாகவும் பெண்களுக்கான ஆற்றலளித்தல் சம்பந்தமாகவும் ஆயிரம் ஆண்டுகால அபிவிருத்திக் குறிக்கோள்களின் (MDG) கீழ் ஆண் பெண் ஆரம்பக்கல்விக்கான நுழைவுரிமை உட்பட பல விடயங்களில் முன்னேற்றம் கண்டிருந்தாலும் பெண்களும், பெண் பிள்ளைகளும் உலகம் பூராகவும் வேறுபடுத்தலுக்கும் வன்முறைக்கும் இன்றும் ஆளாகியே வருகின்றனர்.

பாலியல் சமத்துவம் என்பது அடிப்படை மனித உரிமை மட்டுமல்ல சமாதானமும், வளமும் நிறைந்த நிரந்தர உலக வாழ்விற்கு அத்தியவசியமான அடித்தளமும் ஆகும்.
எனவே கல்வி, சுகாதாரம், தகுந்த வேலை, அரசியல், பொருளாதார ரீதியாக முடிவெடுக்கும் செயல் முறையில் பங்குபற்றல் போன்றவற்றில் பெண்களுக்கும், பெண் பிள்ளைகளுக்கும் சம நுழைவுரிமை வழங்குதல் மனித குலத்தின் நிரந்தர பொருளாதார விருத்திக்கும் சமூக நலனுக்கும் வழி அமைப்பன.' என்று கூறுகின்றது மேற்படி ஐந்தாவது குறிக்கோள்.
பெண் என்பவள் இன்று எம்மிடையே நாளொன்றுக்கு கிட்டத்தட்ட 16 மணித்தியாலங்கள் வேலை செய்கின்றாள். கணவனின் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றாள். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றாள். வீட்டு வேலைகளையும் நிறைவு செய்கின்றாள்.

ஒரு பன்முக தோற்றத்தையுடையவளாக அவள் இன்று திகழ்கின்றாள். அவ்வாறான பெண் தான் கடமைபுரியும் இடத்தில் போதிய பாதுகாப்புடன் வலம்வர அனுமதிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திரமும் மதிப்பும் 2009ம் ஆண்டுக்கு முன்னர் வடபகுதியில் பெண்களுக்குக் கிடைத்தது - Reviewed by Author on March 09, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.