அண்மைய செய்திகள்

recent
-

திருக்கேதீஸ்வரம் திருப்பணிச் சபை கூட்டத்தில் குழப்பம். நீதிமன்றம் செல்ல முடிவு


மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலய திருப்பணிச் சபையின் 42 ஆவது வருடாந்த பொதுச் சபைக் கூட்டம் குழப்பத்தில் முடிவடைந்ததாக பொதுச் சபையின் மூத்த உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

திருப்பணிச் சபையின் யாப்பு விதிகளுக்கு முரணாக தலைவர் தெரிவு இடம்பெற்றதாகவும், பெரும் எண்ணிக்கையான பொதுச் சபை உறுப்பினர்கள் அல்லாதவர்கள் கூட்டத்தில்  கலந்துக்கொண்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

திருக்கேதீஸ்வரம் ஆலய திருப்பணிச் சபையின் வருடாந்த பொதுச் சபைக் கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை முற்பகல் கொழும்பு சரஸ்வதி மண்டபத்தில் இடம்பெற்றது.

செயலாளராக பதவி வகித்த திரு ராகவன் தலைவராகவும், பொருளாளராக பதவி வகித்த திரு இராமகிருஸ்ணன் செயலாளராகவும் உப தலைவராக பதவி வகித்த திரு தயானந்தராஜா பொருளாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த பதவிகள் உட்பட நுாறு அங்கத்தவர்களைக்  கொண்ட ஆட்சிக்குழு நியமனத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக மூத்த உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

நீண்டகால உறுப்பினர்களுக்கு இடம்கொடுக்காத வகையில் தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகிய பதவிகளுக்கு சங்கீதக் கதிரை விளையாட்டு முறையில், நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக உறுப்பினர்கள் சிலர் கவலை வெளியிட்டுள்ளனர்.

தலைவர் தெரிவின்போது யாப்பு விதிகளை, மூத்த உறுப்பினர்கள் சுட்டிக் காண்பித்து வாதிட்டனர். இதனால் கூட்டத்தில் பொரும் குழப்பம் ஏற்பட்டது. ஆனாலும் திரு ராகவன் ஏகமனதாக தலைவராக தெரிவு செய்யப்படுவதாக கூட்டத்தை நடத்திய தற்காலிகத் தலைவர் அறிவித்தார்.

அமைச்சர் சுவாமிநாதன், தலைவர் பதவிக்கான போட்டியில் இருந்து விலகுவதாக கடிதத்தின் மூலம் அறிவித்திருந்தார். அதனால் திரு ராகவனை தலைவராக சபை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தற்காலிகத் தலைவர் கேட்டுக் கொண்டார்.

ஆனால் அந்த அறிப்பை ஏற்க மறுத்த நிலையில், ஆத்திரமடைந்த சுமார் ஐம்பதுக்கும் அதிகமான உறுப்பினர்கள் கூட்டத்தை விட்டு வெளிநடப்புச் செய்தனர்.

அதேவேளை, அனைத்து தெரிவுகளும் நியாயமாக இடம்பெற்றது என்றும் பொறுப்புடன் திருப்பணிச் சபையை வழி நடத்தி செல்லவுள்ளதாகவும் புதிதாக நியமிக்கப்பட்ட தலைவர் திரு ராகவன்  பொதுச் சபைக் கூட்டத்தில் அறிவித்தார்.

அதன் பின்னர் செயலாளர், பொருளாளர் உட்பட நுாறு அங்கத்தவர்களைக் கொண்ட புதிய ஆட்சிக்குழு ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டது.

இதேவேளை ஆலய திருப்பணிச் சபையின் கணக்கு அறிக்கையிலும் குழப்பங்கள் இருப்பதாக உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். கூட்டம் நடைபெறுவதற்கு மூன்று வாரங்களுக்கு முன்னர் அனைத்து உறுப்பினர்களுக்கும் அழைப்புக் கடிதமும் பொதுக்கூட்ட அறிக்கையும் அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனால் கணக்கு அறிக்கை அனுப்பிவைக்கப்படவில்லை. பொதுக் கூட்டம் நடைபெற்றபோதுதான், அனைவருக்கும் கணக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. எனினும் அதனை வாசித்து அறிந்து கொள்ள கால அவகாசம் போதாது என உறுப்பினர்கள் சிலர் சுட்டிக்காட்டி வாதிட்டனர்.

ஆனால் ஆட்சிக்குழுக் கூட்டத்தில் கணக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டதாகவும் அதனால் அறிக்கையை பொதுச் சபை உறுப்பினர்களுக்கு அனுப்பவில்லை என்றும் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய தற்காலிகத் தலைவர் குறிப்பிட்டார்.

ஆனாலும் அது தவறான நியாயம் எனக்கூறி உறுப்பினர்கள் சிலர் வாதிட்டனர். இந்த நிலையில், ஏனைய உறுப்பினர்களின் இணக்கத்துடன் கணக்கு அறிக்கையும் சபையில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

அதேவேளை பொதுச் சபைக் கூட்டத்தை மன்னாரில் நடத்தாமல் எதற்காக கொழும்பில் நடத்த வேண்டும் என உறுப்பினர் கேசவன் கேள்வி எழுப்பினர். திருக்கேதீஸ்வர ஆலயத்தை எட்டிப்பார்க்காதவர்கள் கூட இந்த பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதாகவும் அவர் ஆவேசமாக பேசினார்.

அத்துடன் அடுத்த ஆண்டு பொதுச் சபைக் கூட்டதை்தை மன்னாரில் நடத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியபோது மூத்த உறுப்பினர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.

ஆலைய திருப்பணிச் சபையின் தலைவர் மூத்த சட்டத்தரணி கந்தையா நீலகண்டன் காலமானதை அடுத்து புதிய தலைவர் உள்ளிட்ட ஆட்சிக்குழுவை தெரிவு செய்வதற்காக 42 ஆவது பொதுச் சபைக் கூட்டம் கொழும்பில் இடம்பெற்றமை  குறிப்பிடத்தக்கது.



திருக்கேதீஸ்வரம் திருப்பணிச் சபை கூட்டத்தில் குழப்பம். நீதிமன்றம் செல்ல முடிவு Reviewed by Author on March 29, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.