அண்மைய செய்திகள்

recent
-

சிரியாவில் தொடங்கியதா மூன்றாம் உலகப் போர்? களத்தில் இறங்கிய உலக நாடுகள் -


அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் படைகள் சிரியா மீது இன்று அதிகாலை முதல் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகின்றன.
பல வருடங்களாக சிரியாவை பகடைக்காயாக பயன்படுத்தி அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிற்கு இடையே புகைந்துகொண்டிருந்த பனிப்போர் இன்று முதல் நெருப்பை கக்க தொடங்கிவிட்டது.

தற்போதைய நிலவரப்படி சிரியாவின் நிலைமை மீண்டும் பழையபடி திரும்பி வர முடியாத எல்லைக்கு சென்று விட்டது என்பதே நிதர்சனமான உண்மை.

இரண்டாம் உலகப்போரின் வெற்றிக்கு பிறகு தொடங்கிய இந்தப் பனிப்போர், சோவியத் ஒன்றிய நாடுகளை ஓரணியாகவும், அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளை இன்னொரு அணியாகவும் பார்க்கும் மனப்பான்மையில் செயல்பட தொடங்கியுள்ளது.
இதன் ஒருபகுதியாக சிரியாவை மையமாக வைத்து இவர்கள் தங்களுக்குள் மறைமுகமாக போரில் ஈடுபட்டு வருகின்றனர்.
சுருக்கமாக சொல்லப்போனால், சிரியாவின் அதிபர் ஆதரவுப் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான இந்த போர் தற்போது மூன்றாம் உலகப்போர் எனும் நிலையை எட்டியுள்ளது.

அமெரிக்கா, சவுதி அரேபியா, ரஷ்யா மற்றும் ஈரான் போன்ற உலக நாடுகளின் தலையீடு சிரியா உள்நாட்டு போரில் முக்கிய விடயங்களாக அமைந்தன.
அதிபரின் ஆதரவு மற்றும் எதிர் படைகளுக்கு, இந்நாடுகள் அளித்த ராணுவ, பொருளாதார, அரசியல் உதவிகள் இப்போர் தீவிரமடையவும், தொடரவும் வழிவகுத்தன.
இது பிற்காலத்தில், சிரியாவை ஒரு போர்க்களமாக மாற்றியது.
நாட்டில் பெரும்பான்மையில் உள்ள சன்னி பிரிவு இஸ்லாமியர்களை அதிபரின் ஷியா அலாவித் பிரிவுக்கு எதிராக தூண்டிவிட்டு, பிரிவினைவாதத்தை உருவாக்குவதாக வெளிநாட்டு சக்திகள்மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன.
அரபு நாடுகளில் இரானின் மிகவும் நெருங்கிய கூட்டாளியாக அதிபர் அசாத் உள்ளார். இரானின் ஆயுத தளவாடங்களை ஷியா இஸ்லாமிய அமைப்பான ஹெஸ்புல்லாஹ்விற்கு அனுப்பும் முக்கிய புள்ளியாக சிரியா உள்ளது. இந்த அமைப்பு சிரியா அரசின் வீரர்களுக்கு உதவ ஆயிரக்கணக்கான வீரர்களை போருக்கு அனுப்பியுள்ளது.
ஹெஸ்புல்லா அமைப்பினர் மிகவும் மேம்படுத்தப்பட்ட ஆயுதங்கள் வைத்துள்ளதால் அதிகம் கவலை அடைந்த இஸ்ரேல், சிரியா மீது பல்வேறு வான் வழி ராணுவ நடவடிக்கைகளை அமெரிக்காவின் ஆதரவு இல்லாமலே நடத்தி வந்தது.

ஷியா பிரிவின் ஆட்சியில் உள்ள இரான் அரசு ஒரு ஆண்டில் பல பில்லியன் டாலர்களை அலாவித் ஆதரவு அரசை எதிர்க்கும் கிளர்ச்சியாளர்களை முறியடிக்க அளிப்பதாக நம்பப்படுகிறது. இதன்மூலம், அவர்களுக்கு அரசியல் ஆலோசனை, மானிய விலையில் ஆயுதங்கள் எண்ணெய் பரிமாற்றங்கள் ஆகியவை செய்வதாக நம்பப்படுகிறது.
இந்நிலையில் சன்னி பிரிவு இஸ்லாமியர்களின் ஆட்சியில் உள்ள சௌதி அரேபியாவும், ஈரானின் ஊடுருவலுக்கு பதிலடி கொடுக்க முயன்று வருகிறது. கிளர்ச்சியாளர்களுக்கு பொருளாதார ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் இந்நாடும் பெரிய விநியோகம் செய்துவருகிறது.
கடந்த 2014ம் ஆண்டு முதல் சிரியாவில் 14 பில்லியன் டொலர் பணத்தை ராணுவ தாக்குதலுக்காக அமெரிக்கா செலவிட்டுள்ளது. அப்படியெனில் நாள் ஒன்றுக்கு 15 மில்லியன் டொலர் பணத்தை அமெரிக்க செலவிட்டுள்ளது.
இவ்வாறாக பல ஆண்டுகளாக தொடர்ந்த இந்த போரின் இறுதிகட்டமாக, கடந்த 7ந்தேதி அந்நாட்டின் தலைநகர் டமாஸ்கஸ் அருகே கிழக்கு கூட்டா பகுதியில் கிளர்ச்சியாளர்கள் பிடியில் உள்ள டூமா நகரை கைப்பற்ற ரஷ்ய ஆதரவு பெற்ற சிரிய அரசு படைகள் அந்நகரை முற்றுகையிட்டன.
அப்போது டமாஸ்கஸில் சந்தேகத்திற்குரிய தாக்குதல் நடைபெற்றது. அதில் 180க்கும் அதிகமானோர் பலியாகினர். ஹெலிகாப்டர் ஒன்றில் இருந்து சரீன் என்ற நச்சு ரசாயன பொருள் அடங்கிய வெடிகுண்டு வீசப்பட்டிருக்க கூடும் என அமெரிக்க குற்றச்சாட்டு தெரிவித்தது.

இது குறித்து அப்போது பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப் சிரியாவில் அதிபர் ஆசாத்தின் ரசாயன தாக்குதலை தடுக்க தவறி ரஷியா தோல்வி அடைந்து விட்டது. இந்தத் தாக்குதல்கள் ஒரு மனிதர் நடத்தும் தாக்குதல்கள் அல்ல.
இது ஓர் அசுரனின் தாக்குதல் என்றும், சிரியா அதிபர் பஷார் அல்-அசாத்தை அவர் விமர்சித்து இனி சிரியா மீது தாக்குதல்கள் பாயும் என எச்சரிக்கை விடுத்தார்.
டொனால்ட் ட்ரம்ப் கூறியபடியே இன்று சிரியாவில் ரசாயன ஆயுதங்களை தயாரிக்கும் மற்றும் சேமிக்கும் இடங்கள் என்று சந்தேகிக்கப்படும் இடங்கள் மீதும், ராணுவ ஆயுத கிடங்குகளின் மீதும் அமெரிக்க கூட்டு படைகளால் குண்டு வீசி நள்ளிரவுமுதல் தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றன.
ரஷ்யாவின் ஆதரவோடு இருக்கும் சிரியா அரசை கவிழ்க்கும் நோக்கில் அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் போன்ற நாடுகள் இந்த தாக்குதலை தொடங்கியுள்ளது.
டொனால்ட் ட்ரம்ப், தெரசா மே, இம்மானுவேல் மக்ரான் ஆகியோர் இன்று நடைபெறும் தாக்குதல்கள் இன்னும் தீவிரமடையும் என தெரிவித்திருப்பது சிரியாவை காரணம் காட்டி ரஷ்யாவிற்கு எதிரான உலகப் போரை இவர்கள் தொடங்கிவிட்டதாகவே கருதப்படுகிறது.

இந்த தாக்குதல் மூலம் இருபெரும் ஆபத்துக்கள் நிகழ வாய்ப்பு உள்ளது, முதலாவது இதுவரை மறைமுக பனிப்போரில் மட்டுமே ஈடுபட்டுவந்த அமெரிக்கா மற்றும் ரஷ்யா இனி நேரடி ராணுவ மோதலை தொடங்க வாய்ப்புள்ளது.
ஒருவேளை அப்படி நடந்தால் அதனால் ஏற்படும் சேதங்கள் எண்ணிப்பார்க்க முடியாத வகையில் இருக்கும். ஏனெனில் இரண்டு நாடுகளும் அதிநவீன அணு ஆயுதங்களை வைத்துள்ள நாடுகளாகும்.
ஈராக்கில் சதாம் உசேன், லிபியாவில் கடாபி ஆகியோருக்கு நேர்ந்த கதி சிரியாவில் தனக்கு ஏற்பட்டு விட கூடாது எனும் முன்னெச்சரிக்கையில் சிரிய அதிபர் அசாத்தின் படைகள் ஏற்கனவே அவர்களின் பொருள், சொத்துக்கள் மற்றும் ஆயுதங்களை ரஷ்யாவின் கடலோரப் ராணுவ தளங்களான லடகியா மற்றும் டார்ட்டஸில் பகுதிகளில் பாதுகாப்பாக இடம் மாற்றிவிட்டது.
இதனை தாக்கி அழிக்க அமெரிக்கா முயன்றால் அது ரஷ்ய நாட்டை தாக்கியதற்கு சமமாகும், அவ்வாறு நடந்தால் ரஷ்யாவும் பதிலுக்கு அமெரிக்கா மீது தாக்குதல் தொடுக்கும்.
இரண்டாவது பெரிய ஆபத்தானது, வடகிழக்கு பிராந்தியத்தில் சிரியாவுக்கு ராணுவ உதவி அளித்து வரும் ஈரான் நாட்டுக்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாகவும், தன்னை வீழ்த்த நினைக்கும் ரஷ்யாவிற்கு தனது உண்மையான ராணுவ பலத்தையும் நவீன ஆயுதங்களையும் போர்களத்தில் பயன்படுத்தி தான் யார் என்பதை காட்ட வேண்டிய கட்டாயத்திலும் அமெரிக்கா உள்ளது.
எனவே அவ்வாறு அமெரிக்கா தனது ராணுவ பலத்தை வெளிப்படுத்தினால் சிரியா, ரஷ்யா, ஈரான் ஆகிய நாடுகள் ஒரு அணியாகவும் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றொரு அணியாகவும் சேர்ந்து மூன்றாம் உலகப்போரைத் தொடங்கி வைக்கும்.
இதன் பின்னர் சில நாட்களில் துருக்கி, இஸ்ரேல், சவுதி அரேபியா எனும் அடுத்த கட்ட நாடுகள் இந்த அணிகளில் இணைந்து ஒரு முடிவில்லா போருக்கு நம்மை இட்டுச்செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சிரியாவில் தொடங்கியதா மூன்றாம் உலகப் போர்? களத்தில் இறங்கிய உலக நாடுகள் - Reviewed by Author on April 15, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.