அண்மைய செய்திகள்

recent
-

கிளிநொச்சி மாவட்ட உடனடித் தேவைகளை பிரதமரிடம் எடுத்துரைத்த சிறீதரன் எம்.பி -


கிளிநொச்சி மாவட்டத்தில் உடனடியாகத் தீர்வு காணப்பட வேண்டிய விடயங்களுக்கு தீர்வு வழங்க வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

வடக்குக்குப் பயணம் மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று கிளிநொச்சி சென்றிருந்தார். கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலில் கலந்துகொண்டார்.
அதன்போதே நாடாளுமுன்ற உறுப்பினரால் மேற்கண்டவாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டதுடன், கோரிக்கைகள் அடங்கிய மனு நாடாளுமன்ற உறுப்பினரால் தலைமை அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.
குறித்த மனுவில்,

கிளிநொச்சி மாவட்டத்தில் நகர வடிவமைப்பை மேற்கொள்வதற்குத் தடையாக உள்ள காணிகளைக் கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேய்ச்சல் தரவை விவசாயத்தையும், கால்நடை வளர்ப்பையும் தனது முதுகெலும்பாக கொண்டிருக்கும் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள நான்கு பிரதேச செயலாளர்கள் பிரிவுகளிலும் 38 ஆயிரம் மாடுகளும், ஆயிரம் எருமை மாடுகளும், 9 ஆயிரம் ஆடுகளும் காணப்படுகின்ற போதும் கிளிநொச்சி மாவட்டத்தில் இன்று வரை மேய்ச்சல் தரைக்கென ஓர் காணி இல்லை. அதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காணி வழங்கல்

மாவட்டத்தில் 4 ஆயிரம் காணியற்ற குடும்பங்கள் உள்ளன. இவர்களுக்கு சொந்தக் காணிகள் இல்லாத காரணத்தால் வீட்டுத்திட்டமோ, வாழ்வாதார உதவிகளோ வழங்கப்படுவதில்லை. 25 ஏக்கர் காணி வீதம் பத்து இடங்களில் வீடமைப்பு அதிகார சபைக்கு காணிகளை வழங்குவதன் மூலம் வீட்டுத்திட்டக் குடியிருப்புக்களை உருவாக்க முடியும்.

இதன்மூலம் ஒரு குடும்பத்துக்கு 1/4 ஏக்கர் காணி வீதம் 2500 குடும்பங்கள் உடனடி நன்மையைப் பெறக்கூடியதாக இருக்கும். கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணிகளில் காணியற்ற நிலையிலுள்ள 4000 குடும்பங்களை உடனடியாக குடியேற்றுவதற்கான அனுமதியை வழங்க வேண்டும்.
மைதானங்கள்
இளைஞர்களை வலுவூட்டுகின்ற பல விளையாட்டுக் கழகங்களும், அவற்றின் மைதானங்களும் கடந்த காலங்களில் கிராமங்களின் ஓரங்களிலேயே அமைக்கப்பட்டிருந்தன. தற்போது அந்த விளையாட்டு மைதானங்களையே வனவளப் பிரிவினர் காடுகளாக அடையாளப்படுத்தியுள்ளனர்.
உதாரணமாக வட்டக்கச்சி இளந்தளிர் விளையாட்டுக் கழக மைதானம், அக்கராயன் கிழக்கு விநாயகர் விளையாட்டுக்கழக மைதானம், புதுமுறிப்பு சவாரி விடந்தை என்பவற்றைக் குறிப்பிட முடியும். இதனால் இந்த மாவட்டத்தின் இளைஞர்கள் உடல், உள ஆரோக்கிய செயற்பாடுகளில் ஈடுபட முடியாதவாறு தடுக்கப்பட்டுள்ளனர்.

கட்டடத் தேவை
கிளிநொச்சி மாவட்டத்தின் வலயக் கல்வி அலுவலகம் சொந்தமாக இயங்குவதற்கான கட்டடங்கள் இல்லை. ஏ - 9 வீதியில் அமைந்துள்ள தமிழர் புனர்வாழ்வுக் கழகத்துக்கு சொந்தமான கட்டடத் தொகுதியை வலயக்கல்வி அலுவலகத்துக்கென வழங்குவதன் மூலம் அதன் கல்வி, நிர்வாக, முகாமைத்துவ செயற்பாடுகளை வளர்ச்சி பொருந்தியதாக மாற்றியமைக்க முடியும்.
பாதிப்பு கொடுப்பனவு
கடும்பாதிப்புக்கு உட்பட்டோருக்கான (உயிரிழப்பு) கொடுப்பனவாக ஒரு லட்சம் ரூபாவே வழங்கப்படுகின்றது. இக்கொடுப்பனவுத் தொகையில் கடந்த 10 வருடங்களாக மாற்றங்கள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை. இது போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையில் தொடர் பின்னடைவுகளையே ஏற்படுத்தியுள்ளது. இதேநேரம் எமது மாவட்டத்தில் இதுவரை 24796 வீடுகள் வழங்கப்பட்டுள்ள போதும், இன்னும் 17239 புதிய வீடுகளும், 1392 திருத்தியமைக்க வேண்டிய வீடுகளும் தேவையாக உள்ளது.
சமுர்த்திக் கொடுப்பனவு
கிளிநொச்சி மாவட்டத்தில் 12 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் மாதாந்த சமுர்த்திக் கொடுப்பனவைப் பெறுவதற்கு தகுதியுடையவர்களாக உள்ளபோதும் தற்போது 7 ஆயிரம் பேருக்கே இக்கொடுப்பனவு வழங்கப்பட்டு வருகின்றது.
எனவே 12 ஆயிரம் பேருக்கும் வழங்க நடவடிக்கை எடுப்பதோடு மாவட்டத்தில் இன்னமும் 11 சமுர்த்தி முகாமையாளர்களுக்கும், 61 சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கும், 4 அலுவலக உதவியாளர்களுக்குமான பதவிகள் வெற்றிடங்களாகவே உள்ளன.

இந்த மாவட்டத்திலுள்ள படித்த இளைஞர், யுவதிகளின் நலன்கருதி வெற்றிடமாகவுள்ள பதவிகளுக்கான நியமனங்களை இந்த மாவட்டத்தின் இளைஞர், யுவதிகளுக்கே வழங்குவதற்கு தாங்கள் விசேட செயற்றிட்டம் ஒன்றை வகுக்க வேண்டும்.

ஆனையிறவு உப்பளம்
ஆனையிறவு உப்பளத்தின் நிர்வாக நடவடிக்கைகள் வடக்கு மாகாணத்தினுள் கொண்டு வரப்பட வேண்டும். உலகப்பிரசித்தி பெற்ற ஆனையிறவு உப்பு தற்போது 'மாந்தை உப்பு' என பெயர் மாற்றப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் மறு வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான இளைஞர், யுவதிகள் வேலையற்றவர்களாக உள்ளபோதும் ஆகக்குறைந்தது 500 பேருக்காவது வேலைவாய்ப்பை வழங்கக்கூடிய இவ் உப்பளத்தில் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.
குறிஞ்சாத்தீவு உப்பளமும் இயங்கமுடியாத நிலையில் காணப்படுகின்றது. இந்த உப்பளத்திற்கென குறைந்தது 400 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்கின்ற போது ஆகக்குறைந்தது 500 பேருக்காவது வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க முடியும். ஆனையிறவு, குறிஞ்சாத்தீவு ஆகிய இவ்விரு உப்பளங்களையும் வடக்கு மாகாண சபையிடம் ஒப்படைக்க வேண்டும்.

வேலைவாய்ப்பு
மாவட்ட செயலகம், பிரதேச செயலகம், இலங்கை மின்சார சபை, நில அளவைத் திணைக்களம், மீன்பிடித் திணைக்களம், தபாலகங்கள், வங்கிகள், உள்ளிட்ட பெரும்பாலான அரச திணைக்களங்களில் புதிதாக உள்வாங்கப்பட்டுள்ள மின்மானி வாசிப்பாளர்கள், சாரதிகள், அலுவலக உதவியாளர்கள் போன்றோர் தென்பகுதியைச் சேர்ந்த சிங்களமொழி பேசும் இளைஞர்களாகவே உள்ளனர். இதனால் இம்மாவட்டத்தில் வேலைவாய்ப்புக்காக ஏங்கிக்கொண்டிருக்கும் படித்த இளைஞர், யுவதிகள் உளரீதியான பாதிப்புக்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

காணி விடுவிப்பு
வட்டக்கச்சி அரசினர் விவசாயப்பண்ணை, விவசாயப் பாடசாலை என்பன 295 ஏக்கர் நிலத்தை கொண்டது. இங்கு 1990கள் வரை 600இற்கும் மேற்பட்டவர்கள் தொழிலாளர்களாக பணிபுரிந்து தற்போது ஓய்வூதியமும் பெறுகின்றனர். இந்தப் பண்ணை இன்றுவரை இராணுவத்தளமாக உள்ளது.
மாவட்டத்தில் தொழில் வாய்ப்பைத் தேடுவோரின் வாழ்க்கைக்கும், விவசாய உற்பத்திகளின் அதிகரிப்புக்கும், புதிய விவசாய முறைகளை புகுத்துவதற்கும் அரச நிறுவனமான இந்த விவசாயப் பண்ணையை உடனடியாக இராணுவத்தினரிடமிருந்து விடுவித்து வடக்கு மாகாண சபையிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
முழங்காவில் மரமுந்திரிகைத் தோட்டம் ஆயிரத்து 100 ஏக்கர், முழங்காவில் கடற்படை முகாம் 800 ஏக்கர், வட்டக்கச்சி அரசினர் விவசாயப்பண்ணை விவசாய பாடசாலை 295 ஏக்கர், முக்கொம்பன் தென்னந்தோட்டம் 180 ஏக்கர், சாந்தபுரம் பண்ணை 680 ஏக்கர், ஜெயபுரம் பண்ணை 120 ஏக்கர், மலையாளபுரம் பண்ணை 78 ஏக்கர் என்பவை இராணுவத்தின் சிவில் பாதுகாப்புப் பிரிவினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளன.

மரமுந்திரி கைத் தோட்டத்தை முழங்காவில் விவசாயிகள் கூட்டுறவுச்சங்கத்தினரிடம் ஒப்படைக்கும் பட்சத்தில் 200 குடும்பங்களுக்கான வேலைவாய்ப்பையும், வாழ்வாதார வழிகளையும் ஏற்படுத்திக் கொடுக்கமுடியும். முழங்காவில் கடற்படைமுகாமுக்கென கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள 800 ஏக்கர் காணிகளில் சுமார் 120 ஏக்கர் காணிகள் பருவகாலத்திற்கேற்ப விளையும் புளிய மரத் தோட்டங்களைக் கொண்டவை.

புளியமரப் பண்ணைகளை முழங்காவில் விவசாயிகள் கூட்டுறவுச் சங்கத்தினரிடம் ஒப்படைத்தால் 100இற்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு வேலை வாய்ப்பையும், வாழ்வாதாரத்தையும் ஏற்படுத்திக் கொடுக்க முடியும் - என்றுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட உடனடித் தேவைகளை பிரதமரிடம் எடுத்துரைத்த சிறீதரன் எம்.பி - Reviewed by Author on May 30, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.