அண்மைய செய்திகள்

recent
-

குமுதினி படகுப் படுகொலைகள் ........


குமுதினி படகுப் படுகொலைகள் என்பது 1985 ஆம் ஆண்டு மே 15 ஆம் நாள் நெடுந்தீவிற்கும் புங்குடுதீவிற்கும் இடையில் சேவையாற்றிய குமுதினிப் படகில் பயணம் செய்த பொதுமக்கள் கூட்டாகப் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வைக் குறிக்கும் .

நெடுந்தீவின் மாவலித்துறையில் இருந்து நயினாதீவின் குறிகாட்டுவான் துறைமுகத்திற்கு குமுதினிப் படகில் சென்ற பயணிகள் இலங்கை கடற்படையினரால் நடுக்கடலில் வழிமறிக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். குழந்தைகள், பெண்கள் உட்பட மொத்தம் 33 பேர் குத்தியும் வெட்டியும் கொல்லப்பட்டனர். முப்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் காப்பாற்றப்பட்டனர்.

நேரில் கண்டவர்களின் சாட்சியத்தின் படி , ஆறு இலங்கை கடற்படையினர் படகில் ஏறினர். படகில் பயணம் செய்தவர்களை முன்னே வரும்படி அழைத்து ஒவ்வோருவரையும் தமது பெயர், வயது, முகவரி, எங்கு செல்கிறார்கள் போன்ற விவரங்களை உரத்துக் கூறும்படி பணிக்கப்பட்டார்கள். பின்னர் அவர்களை வாள்களாலும் கத்திகளாலும் வெட்டிக் கொன்றனர்

நெடுந்தீவு மக்களை வெளியுலகத்துடன் இணைத்தது இந்தப் படகுச் சேவை மட்டுமே.

குமுதினி படகு 1985 மே 15 காலை 7:15 மணிக்கு நெடுந்தீவு மாவலித் துறைமுகத்தில் இருந்து 64 பயணிகளுடன் புறப்பட்டது. நயினாதீவு நோக்கிச் சென்று கொண்டிருக்கும் போது புறப்பட்ட அரைமணி நேரத்தின் பின் நடுக்கடலில் கண்ணாடி இழைப் படகில் வந்த இலங்கைக் கடற்படையினரால் வழிமறிக்கப்பட்டது. ஆறு பேர் முக்கோண கூர்க்கத்தியும் கண்டங்கோடலிகள் இரும்புக்கம்பிகள் சகிதம் குமுதினியில் ஏறினர். பின்புறமிருந்த பயணிகளை இயந்திர அறையின் முன்பக்கம் செல்லுமாறு மிரட்டினர். அவர்கள் அனைவரும் சென்றுவிட்டனர்.

பின்புறம் இருபுற இருக்கைகளுக்கு நடுவே பலகைகளினால் இயந்திரத்தில் இருந்து பின்புறம் செல்லும் ஆடு தண்டுப்பகுதியை அவர்கள் அகற்றினர். இருக்கை மட்டத்தில் இருந்து கிட்டத்தட்ட சுமார் 4 அடி ஆழமானதாக அது இருந்தது.

இதன்பின் பணியாளர்கள் உட்பட ஒவ்வொருவராக உள்ளே அழைக்கப்பட்டனர். குமுதினியின் இருபக்க வாசல்களிலும் உள்ளும் வெளியும் கடற்படையினர் இருந்தனர். ஒவ்வொருவராக கடற்படையினர் அழைத்து கத்தியால் குத்தியும் கண்டங்கோடலியால் வெட்டியும் இரும்புக்கம்பியால் தாக்கியும் கொன்று அந்த ஆடு தண்டுப்பகுதியில் போட்டனர்.

இப்படி கொல்லப்படுபவர்கள் எழுப்பும் அவல ஒலி முன்புறம் இருப்பவர்களுக்கு கேட்கக்கூடாது என்பதற்காக அவர்கள் பெயரையும் ஊரையும் உரக்கச் சொல்லுமாறு பணிக்கப்பட்டனர். அவலக் குரல் எழுப்ப முடியாது இறந்தவர்கள் போல் இருந்தவர்களும் உண்டு. கடுமையாகத் கடற்படை தாக்க குரல் எழுப்பியவர்கள் அதிகளவில் தாக்கப்பட்டு இறந்து விட்டார்கள் என கடற்படையினரால் போடப்பட்டனர். பயணிகளில் ஒருவர் கடலில் குதிக்கவே அவருடன் சேர்ந்து வேறு சிலரும் கடலில் குதிக்கத் தொடங்கினர். இதனைக் கண்ட கடற்படையினர் அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர்.

சுபாஜினி விசுவலிங்கம் என்ற 7 மாதக் குழந்தை முதல் 70 வயது தெய்வானை உட்பட இப்படுகொலையில் பலியாகினர்.
 





குமுதினி படகுப் படுகொலைகள் ........ Reviewed by Author on May 15, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.