அண்மைய செய்திகள்

recent
-

தமிழர்கள் என்ற உணர்வோடு வாழ வேண்டும்: கி. துரைராசிங்கம் -


சமுதாயத்திலே அரசியல் உணர்வு இல்லாத ஒரு இனம் அழிந்துவிடும். அரசியல் உணர்வு இருக்கின்ற போதுதான் நாம், நம்முடைய மொழி, நம்முடைய இனம், நம்முடைய இருப்பிடம் என்கின்ற இந்த நிலம் இவையெல்லாம் பாதுகாக்கப்படும் என கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம் தெரிவித்தார்.
வாகரை கட்டுமுறிவு மீனவர் கூட்டுறவுச் சங்கத்திற்கு முன்னாள் விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம் 2017ம் ஆண்டுக்குரிய பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் ஒரு லட்சம் ரூபா பெறுமதியான வலைகள் இன்று வழங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வு மட்டக்களப்பு நீரியல்வள உத்தியோகத்தர் க.கேதாகரன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்தும் பேசிய அவர், “நாங்கள் இந்த நாட்டிலே நாங்கள் தமிழர்கள் என்ற உணர்வோடு வாழ வேண்டும். ஏனெனில் இந்த நாட்டில் தமிழர்கள் வாழ்ந்த இடங்கள் பல இன்று மாற்றப்பட்டு இருக்கின்றன.
அவர்கள் யாரும் அழிக்கப்படவில்லை தமது இனம், மொழி என்ற எண்ணங்கள் இல்லாமலே மாற்றமடைந்திருக்கின்றார்கள். சிலாபம், காலி, கதிர்காமம் போன்ற பல நமது பிரதேசங்கள் அவ்வாறு மாற்றமடைந்துள்ளன.

ஏனெனில் அங்கெல்லாம் எமக்கான சிறந்த தலைமைத்துவம் இருக்கவில்லை. ஆனால் வடகிழக்கில் அவ்வாறானதொரு தலைமைத்துவம் இருப்பதன் காரணமாகத்தான் நாங்கள் தற்போதும் தமிழர்கள் என்ற பெயரோடு இருக்கின்றோம்.
அவ்வாறு இருக்கின்ற போதிலும் அம்பாறை, திருகோணமலையில் குடியேற்றங்கள் பல வந்துவிட்டன. இராவணன், குளகோட்டன் போன்ற தமிழ் மன்னர்கள் ஆண்ட இடம் திருகோணமலை.
அவை மெல்ல மெல்ல அழிந்து கொண்டிருக்கின்றன. என்ன காரணம் தமிழர்கள் தங்கள் உணர்வோடு வாழாத நிலை அங்கு உருவாகிக் கொண்டிருக்கின்றது. எங்களை எமது பெற்றோர் தமிழர்களாக வைத்திருக்கின்றார்கள்.


நாங்கள் எமது பிள்ளைகளை தமிழர்களாக வைத்திருக்க வேண்டும். அதற்கான உறுதிப்பாடு நமக்கு இருக்க வேண்டும். இதன் காரணமாகத் தான் அரசியல் என்ற விடயத்தில் நாங்கள் அக்கறை கொண்டவர்களாக இருக்கின்றோம்.
சமுதாயத்திலே அரசியல் உணர்வு இல்லாத ஒரு இனம் அழிந்துவிடும். அரசியல் உணர்வு இருக்கின்ற போதுதான் நாம், நம்முடைய மொழி, நம்முடைய இனம், நம்முடைய இருப்பிடம் என்கின்ற இந்த நிலம் இவையெல்லாம் பாதுகாக்கப்படும். இதற்காக நம்மை வழிநடத்துகின்ற ஒரு சிறந்த தலைமைத்தவத்தின் பின்னே நாங்கள் அணிவகுத்து நிற்க வேண்டும். தனித்தனியே நாங்கள் அதனைச் சாதிக்க முடியாது.

எனவே நம்மை வழிநடத்துகின்ற தலைமை இந்த நாட்டிலே, நமது பிரதேசத்திலே எது என்பதை நாங்கள் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். பெரும்பான்மை கட்சிகளினுடைய உறுப்பினர்களாக இருப்பவர்கள் அவர்களாக எந்தத் தீர்மானமும் எடுக்க முடியாது.
ஏனெனில், அவர்கள் நெல்லுக்குள் உள்ள அரிசி போல இருப்பதும் தெரியாமல் இருப்பார்கள். ஆனால் தமிழர்களுக்கென்று இருக்கின்ற கட்சி எதுவென்று மக்களுக்குத் தெரியும். எந்தவிதத்திலும் கலப்பு இல்லாமல் எமது விடயங்களைச் சொல்லிக் கொண்டிருக்கின்ற அந்தத் தலைமைக்குக் கீழே நாங்கள் ஒன்றுபட வேண்டும்.

நாங்கள் தமிழர்களாக வாழ வேண்டும் என்கின்ற உணர்விலே இருந்து ஒருபோதும் மாறக் கூடாது. அவ்வாறு நாங்கள் வாழ்வதற்கான அரசியற் தலைமை எது என்பதை அறிந்து அந்த அரசியற் தலைமையின் பின்னால் செல்ல வேண்டும்” என்று தெரிவித்தார்.
தமிழர்கள் என்ற உணர்வோடு வாழ வேண்டும்: கி. துரைராசிங்கம் - Reviewed by Author on May 22, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.