அண்மைய செய்திகள்

recent
-

டிரம்ப் - கிம் சந்திப்பு: தொடக்கம் முதல் முடிவு வரை நடந்தது என்ன? -


சிங்கப்பூரிலுள்ள சென்டோசா தீவில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் இடையே நடந்த வரலாற்று சிறப்புமிக்க உச்சிமாநாட்டின் இறுதியில், இரு தலைவர்களும் முக்கிய உடன்படிக்கைகளில் கையெழுத்திட்டுள்ளனர். இது உலக அளவில் மிக முக்கிய அமைதி நடவடிக்கையாக வர்ணிக்கப்படுகிறது.

அமெரிக்கா - வட கொரியா பேச்சுவார்த்தை
கடந்த 18 மாதங்களாக அதிபர் டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஆகியோர் இடையே அசாதாரண உறவு நிலவியது.
சர்வதேச நாடுகள் எச்சரிக்கை விடுத்து எதிர்ப்பு தெரிவித்த போதிலும், பல பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைகளை வட கொரியா நடத்தியது. இதனால் அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற ஒரு வருடத்திற்குள், டிரம்பிற்கும், கிம்மிற்கும் இடையே பல கசப்பான பரிமாற்றங்கள் நடைபெற்றன.
அமெரிக்காவை, வட கொரியா தொடர்ந்து அச்சுறுத்தினால், கடும் கோபத்தை கட்டவிழ்த்துவிட வேண்டியிருக்கும் என்று டிரம்ப் உறுதி எடுத்தார். அதற்கு டிரம்பினை, மனநலம் சரியில்லாதவர் என்று கிம் குறிப்பிட்டிருந்தார்.
டிரம்ப் அறிவித்த இந்த சந்திப்பு திட்டமிட்டபடி நடைபெறுமா இல்லையா என்பது குறித்த கேள்வி தொடக்கத்திலிருந்தே இருந்து வந்த நிலையில், கடந்த மாத இறுதியில் வட கொரியாவுடன் ஏற்பட்ட வார்த்தை மோதலின் காரணமாக இந்த சந்திப்பு ரத்து செய்யப்படுவதாக டிரம்ப் அறிவித்திருந்தார்.
பிறகு வட கொரிய தூதர் ஒருவரை நேரில் சந்தித்து பேசிய பின்னர் சந்திப்பு திட்டமிட்டபடி நடைபெறும் என்று மீண்டும் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏன் இது வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு?
ஏனெனில், இதற்கு முன்பாக பதவியில் இருக்கும்போது எந்த அமெரிக்க அதிபரும் வட கொரிய தலைவரை சந்தித்தது இல்லை.
பல தசாப்தங்களாக, மனித உரிமை மீறல், அணு ஆயுத சோதனை காரணமாக அந்நாடு ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தது.
கடந்த மாதம்தான், தமது வெளியுறவு கொள்கைகளில் மாற்றம் கொண்டுவந்து கிம்மை சந்திக்க டிரம்ப் சம்மதம் தெரிவித்தார்.

வட கொரியா ஏன் அணு ஆயுதங்களை விரும்புகிறது?
இரண்டாம் உலகப்போருக்கு பின்பு கொரிய தீபகற்பம் இரண்டாக பிரிந்தது. கம்யூனிச நாடான வட கொரியா ஸ்டாலின் உருவாக்கிய சர்வாதிகார அமைப்பை ஏற்றுக்கொண்டு கட்டமைக்கப்பட்டது.
உலக மேடையில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் தனது நாட்டை அழிக்க நினைக்கும் மற்ற உலக நாடுகளிலிருந்து தன்னை தற்காத்து கொள்வதற்கான ஒரே வழி அணு ஆயுதங்கள்தான் என்று அந்நாடு கூறுகிறது.

சந்திப்பு எப்படி நடந்தது?
முதலில் இரு நாட்டு தலைவர்களும் தனியாக சந்தித்தார்கள். அவர்களுடன் மொழிபெயர்ப்பாளர்கள் மட்டும் இருந்தார்கள். சில மணித்துளிகளுக்கு பின்பே, பிற அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடக்கும் அறை உள்ளே வந்தார்கள்.
முன்னதாக மாநாடு நடக்கும் இடத்தில் சந்தித்து கொண்ட டிரம்ப் மற்றும் கிம் ஆகிய இருவரும் கைகுலுக்கி கொண்டனர்.
இப்போது நாம் இருக்கும் இடத்தை அடைந்திருப்பது, அவ்வளவு எளிதானது இல்லை' என்கிறார் வட கொரிய அதிபர் கிம்.
'நைஸ் டூ மீட் யூ மிஸ்டர் பிரஸிடெண்ட்," என்று ஆங்கிலத்தில் டிரம்பிடம் பேசி உள்ளார் கிம்.
வட கொரியா தலைவர்கள் குறித்து வெளி உலகத்திற்கு அதிகம் தெரியாது. ஆனால், கிம் ஆங்கிலத்தில் புலமை பெற்றவர் என்று கூறப்படுகிறது.
அமெரிக்க அதிபர் டிரம்பும் வட கொரிய அதிபர் கிம் ஜோங் - உன்னும் தனிமையில் 38 நிமிடங்கள் உரையாடியதை வெள்ளை மாளிகை உறுதி செய்துள்ளது.

டிரம்புடன் இருந்தது யார்?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஒரு பக்கம் அமெரிக்க உள்துறை செயலாளர் மைக் போம்பியோவும், இன்னொரு பக்கம் வெள்ளை மாளிகை பணியாளர்களின் தலைவர் ஜான் எஃப். கெல்லியும் அமர்ந்திருந்தார்கள். பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டனும் அந்த அறையில் இருந்தார்.

வட கொரிய தரப்பில் கிம் உடன் இருந்தவர்கள் யார்?
கிம் யோங் - சொல் : இவர்தான் கிம் ஜோங் - உன்னின் வலது கை என்று கூறப்படுகிறது.
ரி யோங் - ஹொ : வட கொரியா வெளியுறவு துறை அமைச்சர். இவர் முன்னதாகவே 1990ல் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் அனுபவம் வாய்ந்தவர்.
ரி சு - யோங்: இவர் முன்னாள் வெளியுறவு துறை அமைச்சர். ஆனால், இப்போதும் வட கொரியாவின் சக்திமிகுந்த தலைவராக இருக்கிறார்.

ஆவணங்கள் கையெழுத்து
தற்போது ஏற்பட்ட மாற்றங்கள் மூலம் பெருமிதம் அடைகிறோம். இதற்கு முன்பு இருந்த நிலையைவிட மாறுபட்டதாக இருக்கும். நாங்கள் விசேட உறவை ஏற்படுத்தி இருக்கிறோம். இந்த மாற்றத்தின் மூலம் மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.
நாங்கள் கணித்ததைவிட, சிறப்பான சந்திப்பாக அமைந்தது. நான் சேர்மன் கிம் அவர்களுக்கு நன்றி கூறி கொள்கிறேன். இன்று நடந்ததை நினைத்தால் பெருமையாக உள்ளது என்று கூறிய டிரம்ப், கடந்த காலத்தைவிட இனி வரவிருக்கும் வட கொரியாவுடனான உறவு மிகவும் வேறு மாதிரி இருக்கும் என்று கையெழுத்திட்டபின் டிரம்ப் தெரிவித்தார்.
அந்த ஆவணத்தில் அணு ஆயுதத்தை கைவிட வடகொரியா ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆவணங்களில் கையெழுத்திட்டபின், புன்னகைத்து, கைக்குலுக்கி டிரம்பும் கிம்மும் பிரிந்து சென்றனர்.

பதில் கூற மறுத்த கிம்
செய்தியாளர்கள் கிம் ஜோங் - உன்னிடம், உங்கள் பிரதேசத்தை அணு ஆயுதமற்ற பிரதேசமாக மாற்றுவீர்களா என்று இருமுறை கேட்டனர். ஆனால், அதற்கு பதில் அளிக்காமல் சென்றார் வட கொரிய தலைவர்.

செய்தியாளர் சந்திப்பில் டிரம்ப்
கடந்த 24 மணி நேரம் பிரம்மாண்டமாக இருந்தது. சொல்லப் போனால் கடந்த 3 மாதங்களுமே அப்படிதான் இருந்தது என்றார் டிரம்ப்.
அற்புதமான இடமாக இருக்க வட கொரிய நாட்டிற்கான சாத்தியம் அதிகமாக இருக்கிறது என்று அவர் கூறினார்.
வடகொரியாவின் அணு ஆயுத ஒழிப்பு நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுமா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், "நிச்சயமாகக் கண்காணிக்கப்படும்," என்றும் "அந்தக் கண்காணிப்புக் குழுவில் அமெரிக்கர்களும் சர்வதேச பார்வையாளர்களும் இடம்பெறுவார்கள்," என்றும் தெரிவித்தார்.
மனித உரிமைகள் குறித்து விவாதிக்கப்பட்டதா என்ற கேள்விக்கு, ஓப்பீட்டளவில் சுருக்கமாக விவாதிக்கப்பட்டதாக டிரம்ப் தெரிவித்தார்.

வடகொரியா மீதான தடைகள் எப்போது விலகும்?
அணு ஆயுத பயன்பாடு முடியும்போதுதான் வடகொரியா மீதான பொருளாதார தடைகள் விலக்கப்படும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
"நான் தடைகளை நீக்க வேண்டும் என்றுதான் விரும்புகிறேன்," என்று கூறிய டிரம்ப் ''அணு ஆயுத நீக்கம் குறித்து வட கொரியா உத்தரவாதம் அளிக்கும்போது தடை நீக்கம் பற்றி முடிவு செய்யப்படும். தற்போதைக்கு இந்த தடைகள் தொடரும்'' என்று குறிப்பிட்டார்.






- BBC - Tamil
டிரம்ப் - கிம் சந்திப்பு: தொடக்கம் முதல் முடிவு வரை நடந்தது என்ன? - Reviewed by Author on June 13, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.