அண்மைய செய்திகள்

recent
-

டெங்கு நுளம்பின் பெருக்கத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக அவசர கலந்துரையாடல்...


மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சில கிராமங்களில் ஏற்பட்டுள்ள டெங்கு நுளம்பின் பெருக்கத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாகவும், மேற்கொள்ளப்பட வேண்டிய அவசர வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் ஆராயும் அவசர கலந்துரையாடல் 19-07-2018 மாலை 3 மணியளவில் மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம் பெற்றது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்ராஸ் தலைமையில் இடம் பெற்ற குறித்த அவசர கலந்துரையாடலில் வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் கலந்து கொண்டார்.
மேலும் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், மாவட்ட வைத்திய சாலையின் வைத்திய அத்தியட்சகர், பிரதேச செயலாளர்கள், பொது சுகாதார வைத்திய அதிகாரிகள், திணைக்கள அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொலிஸார் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் கிராமம் மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய கிராமங்களில் டெங்கு நுளம்பின் பெருக்கம் அதிகரித்து காணப்படுகின்ற நிலையில் குறித்த கிராமங்களில் முன்னெடுக்கப்பட வேண்டிய அவசர வேலைத்திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது. குறிப்பாக தோட்டவெளி ஜோசப்பாஸ் நகர் கிராமத்தைச் சேர்ந்த 16 வயது யுவதி ஒருவர் டெங்குக் காய்ச்சலினால் உயிரிழந்த நிலையில் குறித்த கிராம மக்கள் மத்தியில் தொடர்ந்தும் அச்ச நிலை ஏற்பட்டிருந்தது.

தொடர்ச்சியாக குறித்த கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காய்ச்சல் காரணமாக மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்த நிலையில் குறித்த கிராமம் உட்பட அடையாளம் காணப்பட்ட இடங்களில் அவசர டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் கிராமத்தில் உள்ள பல வீடுகளில் ஆட்கள் இல்லாத நிலையில் வீடுகள் பூட்டப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.
குறித்த வீடுகளில் உள்ள மலசல கூடம் மற்றும் நீர் நிரம்பியுள்ள தொட்டிகளில் டெங்கு நுளம்பின் உற்பத்தி அதிகரிக்கின்றமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த கிராமங்களில் டெங்கு நுளம்பின் அதிகரிப்பை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆராயப்பட்டது.இதன் போது சில தீர்மானங்கள் முன் வைக்கப்பட்டது.
தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் மற்றும் புதுக்குடியிருப்பு போன்ற இரு கிராமங்களில் உடனடியாக டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்களை விரிவுபடுத்தல், பாதிக்கப்பட்ட பிரதேசம் மற்றும் பாதிப்பிற்கு உள்ளாகவுள்ள கிராமங்களை உடன் அடையாளப்படுத்தி துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், மன்னார் பிரதேச செயலாளரின் உதவியுடன் சமூர்த்தி அலுவலகர்கள் மற்றும் பயனாளிகளை இணைத்துக் கொண்டு வேலைத்திட்டங்களை மேற்கொள்ளுதல், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒவ்வொரு திணைக்களங்கள், மற்றும் விடுதிகளை சூழவும் சிரமதானம் மேற்கொள்ளுதல் என தீர்மானம் முன் வைக்கப்பட்டது.

மேலும் புதுக்குடியிருப்பு கிராமத்தில் மாத்திரம் 192 குழாய் கிணறுகள் காணப்படுவதாகவும், அவற்றில் பாவனைக்கு உற்படுத்தாத குழாய் கிணறுகளில் இருந்து டெங்கு நுளம்பின் குடம்பிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும் பொது சுகாதார வைத்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் குறித்த குழாய் கிணறுகளை மூட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், அதற்கான கால அவகாசம் உரிமையாளர்களுக்கு வழங்கி நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனினும் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு டெங்கு நோயின் தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், மக்கள் அதிகாரிகளுக்கு பூரண நடவடிக்கைகளை வளங்க வேண்டும் எனவும், ஒத்துழைப்பு வழங்காது டெங்கு நுளம்பு பெருக காரணமாக இருப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் தெரிவித்தார்.


டெங்கு நுளம்பின் பெருக்கத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக அவசர கலந்துரையாடல்... Reviewed by Author on July 20, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.