அண்மைய செய்திகள்

recent
-

கேரளா! தண்ணீரும் கண்ணீருமாய்....324 பேர் மேல் இறந்திருப்பதாக....


1974-ல் இடுக்கியில் ஏற்பட்ட நிலச்சரிவின் இறப்பு சதவிகிதத்தை விட இந்த வெள்ளத்தில் அதிகமானோர் இறந்ததாகத் தெரியவருகிறது. தற்போதுவரை 324 பேர் இறந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது கேரள அரசு. ஆனால், களப்பணியில் இருப்பவர்கள் கூறுகையில் 500 க்கும் அதிகமானோர் இறந்திருக்கக்கூடும் என்று தெரிவிக்கின்றனர்.
சென்னை வெள்ளத்தைவிட பத்து மடங்கு பாதிப்பு -  தண்ணீரும் கண்ணீருமாய் கேரளா!  #keralafloods

டவுளின் தேசம் இன்று தண்ணீரிலும் கண்ணீரிலும் மிதந்துகொண்டிருக்கிறது. மழையும், வெள்ளமும் கேரளத்தின் இயல்பையே மாற்றியிருக்கிறது. இதுவரை 324க்கும் அதிகமானோர் இறந்திருப்பதாக கேரள அரசு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. ``ரெட் அலர்ட்'' பகுதியாகக் கேரளா அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இயற்கைப் பேரிடரால் வரலாறு காணாத அளவுக்குக் கேரள மாநிலம் சீர்குலைந்து இருக்கிறது. கடந்த ஐம்பது ஆண்டுகளில் இல்லாத மழையும் வெள்ளமும் கேரளத்தைப் புரட்டிப்போட்டிருக்கிறது. இந்த வருடத்தின் பருவமழையை எந்தக் கேரள மக்களாலும் அவ்வளவு எளிதில் மறந்துவிடமுடியாது.


ஜூன் முதல் வாரத்தில் தொடங்கிய பருவமழை ஆகஸ்ட் முதல் வாரத்தில் ருத்ரதாண்டவம் ஆடியது. கேரள மாவட்டம் இடுக்கியில் அதிகபட்சமாக 127.8 மி.மீ மழை பதிவாகியிருக்கிறது. கடல்மட்டத்திலிருந்து 2403 மீட்டர் உயரத்தில் இருக்கும் இடுக்கி அணையிலிருந்து மழையின் காரணமாக 26 ஆண்டுகளுக்குப் பிறகு தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

ஏற்கெனவே, மழையின் அளவும் அதிகரித்திருந்த நிலையில் கேரளத்தில் இருக்கும் 33 நீர் தேக்கங்களிலிருந்தும் பெருவாரியான நீர் திறந்துவிடப்பட்டது. ஆரல்கள், களம்பூர், வண்டிபெரியார் போன்ற இடங்களெல்லாம் நீரில் தத்தளிக்கத் தொடங்க, அதிகபட்ச வெள்ள பாதிப்புப் பகுதிகளாக ஆகஸ்ட் முதல் வாரத்தில் கேரள அரசு அறிவித்தது. அதற்கடுத்தடுத்த நாள்களில் வயநாடு, இடுக்கி, கன்னூர், திரிச்சூர், எர்ணாகுளம் எனக் கேரளத்தின் பிற பகுதிகளும் வெள்ளநீரால் சூழ ஆரம்பித்தன. வெள்ளம், மழை இதோடு நிலச்சரிவும் சேர்ந்து கொண்டது. ஆயிரக்கணக்கான மரங்களும் வீடுகளும் இந்த நிலச்சரிவில் சிக்கிச் சீரழிந்துபோயின. இடுக்கி மாவட்டத்தில் அதிக அளவில் பாறைகள் இருக்கின்றன. அந்தப் பாறைகளில் அதிக விசையுடன் தண்ணீர் மோதும்போது, பாறை வெடித்து இன்னும் அதிக பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. கன்னூரில் அதிக அளவில் நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. வாகனங்களும், கால்நடைகளும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டிருக்கின்றன. அரசும், பல தன்னார்வ அமைப்புகளும் பேரிடரில் சிக்கியிருக்கும் மக்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.


கேரள வெள்ளம்கிட்டத்தட்ட ஒன்றரை லட்ச மக்கள் 1200 க்கும் அதிகமான பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் அடிப்படை வசதிகளைக் கேரள அரசு செய்து கொடுக்கிறது. வெள்ளத்தில் சிக்கியிருக்கும் மக்களை மீட்கும் பணியில் 12 தேசியப் பேரிடர் மேலாண்மை குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. வெள்ள பாதிப்பு அதிகம் இருப்பதால் பல இடங்களில் மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டிருக்கிறது. அதனால் மீட்புப் பணிகளுக்காக இன்னும் 23 பேரிடர் குழுக்கள் கேரளத்துக்கு வரவுள்ளன. கேரள மாவட்டத் தலைநகர் ஒவ்வொன்றுக்கும் மீட்புப் பணிக்காக ஒரு ஹெலிகாப்டர் கொடுக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசின் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மேலும், 450 மோட்டார் போட்டுகளும் மீட்புப் பணியில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். மத்திய அரசு கேரளத்தின் வெள்ள பாதிப்புகளுக்காக நூறு கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது.
கேரளா வெள்ளம்
மக்களோடு மக்களாக நின்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது கேரள அரசு. இரவு பகல் பாராமல் அனைத்து அதிகாரிகளும் வெள்ள பாதிப்புகளைச் சரி செய்ய உத்தரவிட்டிருக்கிறார் கேரள முதல்வர் பினராயி விஜயன். அனைத்து மக்களுக்கும் சுத்தமான குடிநீர் கொடுக்க உத்தரவிட்டிருக்கிறார். கேரளத்தின் பாதிப்புகளை இப்போது பட்டியலிட முடியாது. சென்னை வெள்ளத்தைவிட பத்து மடங்கு அழிவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. மீண்டும் கேரளத்தைக் கட்டமைக்க பல நூறு கோடி ரூபாய் தேவைப்படும். அதற்கான நிவாரணங்களைப் பிற மாநில அரசுகளும், பல்வேறு அமைப்புகளும், தன்னார்வலர்களும் கேரளத்துக்கு வழங்கி வருகிறார்கள்.

கேரளத்தின் உள் மாவட்டங்களுக்குச் செல்வதற்கான அனைத்துப் பாதைகளும் வெள்ளத்தால் சேதமடைந்திருக்கின்றன. உயிரைப் பணயம் வைத்துத்தான் பேரிடர் மேலாண்மை குழுக்கள் மக்களை மீட்டு வருகின்றனர். `பாதைகள் இல்லாத ஊர்களிலும் மலை மேடுகளிலும் மக்கள் சிக்கியிருக்கிறார்கள். அவர்களை மீட்பது பெரும் சவாலாக இருக்கிறது' என்கின்றனர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் பேரிடர் குழுக்கள்.

நிவாரணப் பொருள்கள் மக்களைச் சென்றடையவே பல நாள்கள் ஆகின்றன என்கிறார் பாலக்காட்டில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் சுரேஷ். மேலும் ``சபரிமலை செல்லும் வழிகளில் இருக்கும் எந்த ஊர்களுக்கும் எங்களால் செல்ல முடியவில்லை. பத்தனம்திட்டாவும் அதனருகில் இருக்கும் இன்னும் சில ஊர்களும் மீட்புப் படையினர் செல்ல முடியாத அளவுக்கு அதிக பாதிப்புகள் இருக்கின்றன. வெள்ளநீரின் வேகம் அதிகமாக இருப்பதாலும் நிலச்சரிவுகள் தொடர்ந்து நடப்பதாலும் பத்தனம்திட்டாவை நெருங்குவதில் தொய்வு ஏற்பட்டிருக்கிறது. திரிச்சூர் மாவட்டத்தில் மட்டும் 286 முகாம்கள் உள்ளன. அவற்றில் பத்தாயிரம் குடும்பத்தைச் சேர்ந்த சுமார் முப்பதாயிரம் பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை அரசோடு இணைந்து செய்து கொடுக்கிறோம். பொருளாதார ரீதியாகக் கேரளா சீராக எவ்வளவு காலம் ஆகும் என்று தெரியவில்லை'' என்கிறார்.
1974-ல் இடுக்கியில் ஏற்பட்ட நிலச்சரிவின் இறப்பு சதவிகிதத்தை விட இந்த வெள்ளத்தில் அதிகமானோர் இறந்ததாகத் தெரியவருகிறது. தற்போதுவரை 324 பேர் இறந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது கேரள அரசு. ஆனால், களப்பணியில் இருப்பவர்கள் கூறுகையில் 500 க்கும் அதிகமானோர் இறந்திருக்கக்கூடும் என்று தெரிவிக்கின்றனர்.
வயநாடு, எர்ணாகுளம் பகுதிகளில் மழையின் அளவு குறைந்திருக்கிறது. இடுக்கி, கன்னூர், திரிச்சூர் போன்ற பகுதிகளில் மழையின் அளவு படிப்படியாகக் குறையும். அதன் பிறகுதான் வெள்ளத்தின் சேதம் எவ்வளவு என்பதைக் கணக்கிடமுடியும் என்கிறார் கேரள காவல்துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர்.

கேரளத்தில் 12 மாவட்டங்களுக்குச் சிவப்பு எச்சரிக்கைக் கொடுக்கப்பட்டிருக்கிறது. 92 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளம் பாதித்திருக்கிறது. வெள்ளத்தில் இறந்தவர்களுக்கு இறுதிச்சடங்கு செய்யக்கூட இடம் இல்லாத அளவுக்கு வெள்ள பாதிப்பு இருக்கிறது. இந்த இயற்கை பேரிடரிலிருந்து கேரளம் மீண்டு வர வேண்டும். பாதிக்கப்பட்டிருக்கும் கேரளத்துக்கு நாம் செய்யும் சிறு உதவியும் அவர்கள் மீண்டு வர பேருதவி புரியும். 
கேரளா! தண்ணீரும் கண்ணீருமாய்....324 பேர் மேல் இறந்திருப்பதாக.... Reviewed by Author on August 18, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.