அண்மைய செய்திகள்

recent
-

தமிழ் முஸ்லிம் உறவுகளிடையே முரண்பாட்டை ஏற்படுத்த முயற்சி! -


நிதியொதுக்கீடுகளில் பாகுபாடுகளை ஏற்படுத்தி தமிழ் முஸ்லிம் உறவுகளிடையே முரண்பாட்டை ஏற்படுத்துவதற்கு மத்திய அரசு சதித்திட்டங்களை தீட்டியுள்ளதாக கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப்.கட்சியின் முக்கியஸ்தருமான இரா.துரைரெட்னம் குற்றம் சாட்டியுள்ளார்.
மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்த குற்றச்சாட்டினை அவர் தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர்,
கிழக்கு மாகாணசபை கலைக்கப்பட்டு தேர்தல் நடாத்தப்படவேண்டிய காலம் நிறைவடைந்துள்ள நிலையில் மத்திய அரசாங்கம் கிழக்கு மாகாணசபை தேர்தலை நடாத்தமுடியாத நிலையில் பல்வேறு கருத்துகளை தெரிவித்துவருகின்றது.< கிழக்கு மாகாண மக்களை பொறுத்தவரையில் ஜனநாயக ரீதியாக தேர்தல் ஒன்று நடாத்தப்பட்டு அதன் மூலம் தெரிவுசெய்யப்படும் மக்கள் பிரதிநிதிகள் கிழக்கு மாகாணசபையினை ஆட்சிசெய்யவேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாகும்.
மத்திய அரசாங்கத்தின் பலவீனம் காரணமாக மாகாணசபை இழுத்தடிப்பு செய்யப்படுவதானது ஜனநாயகத்திற்கு அடிக்கப்படும் சாவுமணியாகவே நாங்கள் பார்க்கின்றோம்.

உள்ளுராட்சிமன்ற தேர்தலானது மிக நீண்டகாலத்திற்கு பின்னர் வட்டார ரீதியாக நடாத்தப்பட்டது. அந்த தேர்தலில் வாக்களிப்பு வீதம் அதிகரித்திருந்தாலும் கூட அந்த தேர்தல் மூலம் பிரதேசவாதம், சாதிவாதம், மதவாதம் என பல வாதங்கள் உருவாகியுள்ளன. இந்தவாதங்கள் மேலும் வலுவடையுமானால் தமிழ் சமூகம் பலவீனமடைவது மட்டுமன்றி தமிழ் பிரதிநிதித்துவத்தினை காப்பாற்றமுடியாத நிலையும் ஏற்படும்.
மாவட்ட ரீதியாக தேர்தல் நடாத்தப்படும்போது அது சிறுபான்மை மக்களுக்கு மிகவும் நன்மையளிப்பதாக இருக்கும். இதன்மூலம் பிரதேசவாதம், இனவாதம் இல்லாமல்போகும் சூழ்நிலையேற்படும்.

கிழக்கு மாகாண மக்கள் அதிகளவானோர் வட்டார ரீதியான தேர்தல் முறைமையினை நிராகரிக்கின்றார்கள். மாவட்ட ரீதியில் தேர்தல் நடாத்தப்படும்போது மக்கள் எதிர்நோக்கும் பல பிரச்சினைகள் தீர்க்கப்படும்.
மத்திய அரசாங்கம் மிகவும் விரைவாக மாகாணசபை தேர்தலை நடாத்தி மக்கள் பிரதிநிதிகளை தெரிவுசெய்து வலுவான மாகாணசபையாக மாற்றுவதற்கு அதிகாரங்களை வலுவாக்குவதற்கு தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் அபிவிருத்திகளை பெற்றுக்கொள்வதற்காக மாகாணசபை நடத்தியே ஆகவேண்டும்.

கிழக்கு மாகாணத்தில் உள்ளுராட்சிமன்றங்கள் சிறப்பாக இயங்கிவரும் நிலையில் கிழக்கு மாகாண ஆளுனரினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள உள்ளுராட்சிசபைகளுக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கப்படபோதாக செய்திகள் கூறுகின்றன.
01-01-2013ஆம் ஆண்டு சட்டத்தின் படி நிரந்தர நியமனங்களை வழங்குவதற்கு செயலாளருக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தன.
அப்படி அதிகாரமுள்ள கிழக்கு மாகாணத்தின் உள்ளுராட்சி செயலாளர் ஆளுனரின் வழிகாட்டலின் பேரில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள உள்ளுராட்சி சபைகளில் முறையற்ற விதத்தில் நியமன விதிமுறைக்கு மாறாக நியமனங்கள் வழங்கப்படவிருக்கின்றன.

அந்தப் பிரதேசங்களில் நியமனங்கள் வழங்கப்படவேண்டுமாயின் அந்தந்த உள்ளுராட்சி பிரதேசங்களில் விண்ணப்பங்கள் கோரப்பட வேண்டும். அந்தப் பிரதேசத்திலுள்ள பிரதேச சபையோ மாநகர சபையோ அல்லது உள்ளுராட்சி சபையிலிருக்கின்ற செயலாளர்கள், ஆணையாளர்கள் நேர்முகப் பரீட்சைக்கு தோற்றுவிக்க வேண்டும்.
ஆனால் கிழக்கு மாகாணத்தில் தற்போது வழங்கப்படவிருக்கின்ற நியமனத்தில் நேர்முகப் பரீட்சை நடத்தப்படாமல் அந்தப் பிரதேசங்களில் விண்ணப்பங்கள் கோரப்படாமல் உள்ளுராட்சி செயலாளர்கள் நேர்முக தேர்வில் இடம்பெறாமல் முறையற்ற விதத்தில் நியமனங்கள் வழங்கப்படவிருக்கின்றன.

ஆளுனர் அவர்கள் அதனை நிறுத்த வேண்டும். இல்லாத பட்சத்தில் நியமன சட்டத்திற்கு முரணாக செயற்படும் ஆளுனரின் செயற்பாட்டை மக்கள் தடுத்து நிறுத்துவார்கள்.
கடந்த காலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பல உள்ளுராட்சி சபைகளுக்கு நகர அபிவிருத்தியின் கீழ் தமிழ்ப் பகுதிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. 2017ம் ஆண்டு நகர அபிவிருத்தியின்போது மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பல பிரதேச செயலக பிரிவுகள் புறக்கணிக்கப்பட்டன.
ஏறாவூர், ஓட்டமாவடி, வாழைச்சேனை, காத்தான்குடி பொன்ற முஸ்லிம் பகுதிகளுக்கு மட்டும் 2017ம் ஆண்டு நகர அபிவிருத்தியின் கீழ் 50கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன.

சில தமிழ்ப் பகுதிகளுக்கு மட்டும் வீதிகளை அமைப்பதற்காக 3கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றன. மத்திய உள்ளுராட்சி அமைச்சினூடாக பலகோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன.
முஸ்லிம் பிரதேசங்களுக்கு வடிகாண் அமைத்தல், வடிகாணுக்குரிய மூடி அமைத்தல் போன்றவற்றிற்கு 8கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன.

தமிழ்ப் பகுதிகளுக்கு இரண்டரைகோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன. மத்திய அரசை பொறுத்தவரை பக்கச்சார்பான முறையில் கொள்கைககள் அமுல்படுத்தப்படுகின்றன.
இதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இனமுரண்பாடுகள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உருவாகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்ப் பகுதிகளிலுள்ள உள்ளுராட்சி அலுவலகங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டமை குறைவாகும்.

சில நிறுவனங்கள் நிதி ஒதுக்கீடு செய்துள்ளன. ஆனால் ஏறாவூர் உள்ளுராட்சி அலுவலகங்களுக்கு ஒரு பக்கம் நிறுவனங்கள் நிதி ஒதுக்கீடு செய்துள்ளன. அத்துடன் நகர அபிவிருத்தி அதிகார சபையால் 87 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
மத்திய அரசாங்கத்தை பொறுத்தவரை ஆரையம்பதியில் அமைக்கப்பட்ட பிரதேச செயலகத்திற்கு இரண்டரை கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. நிதி ஒதுக்கீடு செய்துள்ளன. ஏறாவூரில் அமைக்கப்பட்ட பிரதேச செயலகத்திற்கு 4 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளுராட்சி சபைகளை தரமுயர்த்தல் விடயத்தில் தமிழ்ப் பகுதிகளிலுள்ள உள்ளுராட்சி சபைகள் தரமுயர்த்தப்படவில்லை. ஆனால் ஏறாவூர், ஓட்டமாவடி, காத்தான்குடி பிரதேச சபைகள் தரமுயர்த்தப்பட்டிருக்கின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலகத்திற்கும் 14 உள்ளுராட்சி சபைகள் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் 12 உள்ளுராட்சி சபைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. கிரான் பிரதேச செயலகத்திற்கு தனியான பிரதேச சபை உருவாக்கப்பட வேண்டும்.
வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் புனானை கிழக்கு கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட ரிதிதென்ன, ஜெயந்தியாய போன்ற கிராமங்கள் யுத்தம் காரணமாக 1990ம் ஆண்டு ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவுடன் இணைக்கப்பட்டன.

மீண்டும் 2002ஆம் ஆண்டு அந்தக் கிராமங்கள் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவுக்குள் தற்காலிகமாக இணைக்கப்பட்டிருக்கின்றன.
2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுற்ற நிலையில் ரிதிதென்ன, ஜெயந்தியாய போன்ற கிராமங்களை வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் புனானை கிழக்கு கிராம சேவையாளர் பிரிவில் இணைப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
உள்ளுராட்சி சபைகள் 2018ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் 12 உள்ளுராட்சி சபைகளும் திறம்பட செயலாற்றிவருகின்றன. வாகரை, வவுனதீவு, கிரான், பட்டிப்பளை, வெல்லாவெளி சபைகளில் எந்தவித நிதியும் அவர்களிடம் இல்லை.

ஆனால் மத்திய அரசாங்கத்தை பொறுத்தவரை 2018ஆம் ஆண்டு இந்தப் புதிய சபைகளுக்கு எந்த நிதியும் ஒதுக்கீடு செய்யவில்லை. பிரதேச செயலகங்களுடாக கிராமசேவையாளர்களுக்கு வழங்கப்படுகின்ற 10 இலட்சம் அபிவிருத்தி திட்ட நிதிகூட வழங்கப்படவில்லை.
மத்திய அரசாங்கத்திற்குரிய உள்ளுராட்சி அமைச்சு கிழக்கு மாகாணத்தின் தமிழ்ப் பகுதிகளை புறக்கணிக்கின்றது. இது கடந்தகால வரலாறாகும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 2017ம் ஆண்டு உள்ளுராட்சி அமைச்சின் நிதி ஏனைய நிதிகளுடாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதிகளானது மாவட்டத்தில் இனரீதியான முரண்பாட்டை தோற்றுவிக்கக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளன.
மத்திய அரசின் உள்ளுராட்சி அமைச்சு கடந்தகாலத்தைப் போலல்லாது 2018ம் ஆண்டு கட்சி ரீதியான அரசியல் ரீதியான பாகுபாடு பார்க்காமல் முறையாக நிதி ஒதுக்கீட்டை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்தகாலத்தைப்போல நிதியொதுக்கீடுகளை செய்து மீண்டும் தமிழ் முஸ்லிம் உறவுகளிடையே முரண்பாட்டை ஏற்படுத்துவதற்கு மத்திய அரசு சதித்திட்டங்களை தீட்டியுள்ளது.

இனங்கள் ஐக்கியமாக வாழவேண்டுமாயின் மத்திய அரசின் உள்ளுராட்சி அமைச்சினுடைய செயற்பாடு மாற்றியமைக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் முஸ்லிம் உறவுகளிடையே முரண்பாடு உருவாகும்.
வாகரை பிரதேச செயலகத்தில் இருந்து தற்காலிகமாக பிரிக்கப்பட்ட புனானை கிழக்கு மீண்டும் வாகரையுடன் இணைக்கப்பட வேண்டும்.

2017ம்ஆண்டு நகர அபிவிருத்தி சபையினால் ஒரு பக்க சார்பாக ஒதுக்கப்பட்ட நிதி 2018ம் ஆண்டு மாற்றியமைக்கப்பட வேண்டும், கிழக்கு மாகாணத்தில் உள்ள பிரதேசசபைகள் தரமுயர்த்தப்படவேண்டும்,கிரான் பிரதேசத்திற்கு தனியான பிரதேச சபை அமைக்கப்படவேண்டும்” என அவர் கூறியுள்ளார்.
தமிழ் முஸ்லிம் உறவுகளிடையே முரண்பாட்டை ஏற்படுத்த முயற்சி! - Reviewed by Author on August 02, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.