அண்மைய செய்திகள்

recent
-

கட்டமைத்து தமிழினத்தை அழிக்கும் திட்டத்தை எதிர்க்க அனைவரும் முல்லையில் திரளுங்கள்: ரவிகரன்


மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் மகாவலி எல் வலயத் திட்டமானது தமிழினத்தை கட்டமைத்து அழிக்கவே செயல்படுத்தப்படுகின்றது என வட மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
தமிழர் நிலத்தில் தமிழர் இருப்பை கேள்விக்குள்ளாக்கும் மகாவலி எல் வலயத் திட்டத்தை ஒன்று சேர்ந்து எதிர்ப்பதற்கு முல்லைத்தீவில் நாளை காலை 10மணியளவில் அனைவரும் ஒன்று திரளுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 

இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,
ஒரு இனத்திலுள்ள மக்களை அழிப்பது மட்டும் இன அழிப்பன்று. அம்மக்களை இனமாகக் காட்டும் கூறுகளை அழிப்பதும் இனஅழிப்பே. தமிழர்களின் பூர்வீக நிலங்களை அபகரித்து சிங்களவர்களை குடியேற்றி தமிழர் பெரும்பான்மையை மெல்ல மெல்ல மகாவலி எல் வலயத் திட்டம் குலைத்து வருகின்றது.

தமிழர்கள் பெரும்பான்மையாகவுள்ள இடத்தில் தமிழர்களின் அடையாளங்களை அழித்து தமிழர்களை சிறுபான்மையாக்க முனைக்கும் இந்த மகாவலி எல் வலயத்திட்டம் தமிழர் மீது நடாத்தப்படும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் வடிவமாகும்.
மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையானது 1970 மாசி 28ம்திகதி உருவாக்கப்பட்டது. மகாவலி எல் வலயம் 1988 சித்திரை 15ம் திகதி வர்த்தமானி அறிவித்தல் மூலமும் 2007பங்குனி 9ஆம் திகதி எல்லைகளை விஸ்தரித்து இரண்டாவது வர்த்தமானி அறிவித்தல் மூலமும் வெளியிடப்பட்டது.

இதனுடைய எல்லைகளை விரிவாக்கம் செய்து முல்லைத்தீவு மாவட்டச்செயலகம் மட்டுமல்லாமல் மாங்குளம் வரை வியாபித்துள்ளது.
கடந்த 1984ம் ஆண்டு டிசம்பர் மாதம் இராணுவத்தினரால் ஒலிபெருக்கி மூலம் அறிவித்து, நாயாற்றுக்குத் தெற்கே எமது எல்லைக் கிராமங்களான கொக்கிளாய் கிழக்கு, கொக்கிளாய் மேற்கு, கருநாட்டுக்கேணி, கொக்குத்தொடுவாய் தெற்கு, கொக்குத்தொடுவாய் மத்தி, கொக்குத்தொடுவாய் வடக்கு, ஆகிய ஆறு கிராம அலுவலர் பிரிவுகளிலும் தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

போர்க் காலத்தின் பின்பு 2011 காலப்பகுதியில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட தமிழ் மக்கள் தாம் இடம்பெயரும் வரை தமது வாழ்வாதாரத்துக்காக பயன்படுத்தி வந்த நிலங்கள் சிங்கள மக்களினால் விவசாயம் செய்யப்படுவதை கண்டு அதிர்ச்சியில் இருந்தார்கள்.
தமிழர்கள் தலைமுறை தலைமுறையாக பாவித்து வந்த நிலங்களை பறிகொடுத்த நிலையில் தமது மனக்குமுறல்களை பலருக்கும் தெரிவித்தார்கள். 1950,1960,1970 காலப்பகுதிகளில் இதே காணிகளுக்கான அனுமதிப்பத்திரங்கள் தமிழர்களின் கைகளில் இன்றும் உள்ளன.

ஆனாலும் அப்போதைய அரசுத் தலைவர் ஒப்பமிட்ட காணி அனுமதிப்பத்திரங்கள் அவரின் பிரதிநிதியால் மயில்குளம் (இப்போதைய பெயர் (மொனரவௌ) பகுதியில் வைத்து சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டது.
இது தவிர சிங்களவர்கள் இல்லாத முல்லைத்தீவு மாவட்டத்தில் வெலிஓயா என ஒரு சிங்கள பிரதேச செயலர் பிரிவு உருவாக்கப்பட்டு 3336 குடும்பங்கள் 11189 மக்களை கொண்டதாக நிர்வகிக்கப்படுகின்றது.

தமிழ் மக்களின் பாரம்பரிய பல நீர்ப்பாசனக் குளங்களான, இராமன் குளம், கொட்டோடைக் குளம், ஒயாமடுக் குளம், வெள்ளாங்குளம் ஆகிய குளங்களை உள்ளடக்கி பாரிய நீர்ப்பாசனத் திட்டமாக கிவுல் ஓயாத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

6000 ஏக்கர் நிலங்களுக்கு நீர்ப்பாய்ச்சக் கூடிய இந்த நீர்ப்பாசனத்தின் மூலம் 3000 சிங்களக் குடும்பங்களுக்கு தமிழர்களின் பாரம்பரிய நிலங்கள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.
இவைகள் தொடர்பில் பல பிரேரணைகளை மாகாணசபையில் நான் கொண்டுவந்தேன். இதன் தொடர்ச்சியாக காணி ஆணையாளர் நாயகத்திடம் 2015.12.28லும் 2016.02.02லும் கடித மூலம் தொடர்பு கொண்டேன் பதில் திருப்திகரமாக இருக்கவில்லை.

மாகாணக் காணி ஆணையாளரிடம் இது விடயமாக நான்கு தடவைகள் கடித மூலம் தொடர்பு கொண்டேன். பதில்கள் பொருத்தமற்றவைகளாகவே காணப்பட்டன.
இதன் தொடர்ச்சியாகவே 2018.04.05ம் திகதி இடம்பெற்ற மாகாணசபையின் 120 அமர்வின் போது முல்லையின் நில அபகரிப்புக்களை பல தடவைகள் கதைத்து விட்டேன்.
எமது பகுதிகளுக்கு வாருங்கள் எமது நிலங்கள் அபகரிக்கப்படுவதை பாருங்கள் எனவும் என்னால் சமர்ப்பிக்கப்படும் மூன்று கோரிக்கைகளை சபையில் தெரிவித்தேன்.

அதன் விளைவு 2018.04.10ம் திகதி வட மாகாணசபையின் அவைத்தலைவர் உள்ளிட்ட 28 உறுப்பினர்கள் வந்த போது அபகரிப்புக்களுக்கு உள்ளாக்கப்பட்ட பல இடங்களை காண்பித்தேன்.
அதன்பின் இரண்டு கூட்டங்கள் இது விடயமாக நடைபெற்றுள்ளன. ஆனால் தீர்வுகள் இன்று வரை கிடைக்கவில்லை. 

மாறாக அண்மையில் கருநாட்டுக்கேணியில் இருவருக்கும் கொக்கிளாயில் ஐவருக்கும் கொக்குத்தொடுவாயில் ஒருவருக்குமாக மொத்தம் எட்டு பேருக்கு தொழில் அனுமதிப்பத்திரங்களை மகாவலி அபிவிருத்தி அதிகார சபை வழங்குமளவுக்கு அத்துமீறிய நடவடிக்கை முனைப்பு பெற்றுள்ளது.
அத்துடன், மகாவலி அபிவிருத்தி அதிகார சபையானது ஒரு கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பு நடவடிக்கையையே மேற்கொள்கின்றது.
இதில் மக்களாகிய நாம் விழிப்படையா விட்டால் எதிர்காலத்தில் நாம் எமது இடங்கள் கேள்விக்குறியே? எம்மாலான முயற்சியை நாம் மேற்கொள்ள வேண்டும்.
எமது மண் மீட்புக்காக இன்று காலை 10மணியளவில் அனைவரும் ஒன்று திரளுங்கள். பல ஆயிரக்கணக்கில் ஒன்று திரளுங்கள். முல்லைத்தீவின் குரலை எமது நில மீட்புக்கான குரலை அரசுக்கும், உலகுக்கும் எடுத்துக்காட்டுவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
கட்டமைத்து தமிழினத்தை அழிக்கும் திட்டத்தை எதிர்க்க அனைவரும் முல்லையில் திரளுங்கள்: ரவிகரன் Reviewed by Author on August 27, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.