அண்மைய செய்திகள்

recent
-

இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலான வடமாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றம் -


ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1, 34/1 ஆகிய தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் ஆக்கபூர்வமான ஒரு நடவடிக்கையேனும் இதுவரையில் எடுக்கவில்லை.
இந்த நிலையில் மேற்படி தீர்மானங்களை நடைமுறைப்படுத்த இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலான 5 கோரிக்கைகள் அடங்கிய தீர்மானம் ஒன்று இன்று வடமாகாணசபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த 130வது வடமாகாணசபை அமர்வில் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தினால் சமர்பிக்கப்பட்ட பிரேரணை வலுப்படுத்தப்பட்டு மீண்டும் இன்று சபையில் முன்மொழியப்பட்டு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.

மேற்படி பிரேரணையில் கூறப்பட்டுள்ளதாவது,
ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் பொறுப்புக்கூறுதலுக்கான நிபுணர்கள் குழுவினுடைய 2011ஆம் ஆண்டு மார்ச் மாத அறிக்கையானது,
இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலை புலிகளுக்கும் இடையிலான ஆயுதந்தாங்கிய யுத்தத்தின் இறுதி நிலைகளின் போது போர்க் குற்றங்களும் மனிதநேயத்திற்கு எதிரான குற்றங்களும் புரியப்பட்டுள்ளதாகவும் 40,000 க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் மரணித்துள்ளதாகவும் நம்பத்தகு குற்றச்சாட்டுக்கள் முன்வைத்துள்ளமையை நினைவுகூர்ந்துள்ளது.

இலங்கை மீதான நடவடிக்கை தொடர்பான செயலாளர் நாயகத்தின் உள்ளக மீளாய்வுக் குழு வின் 2012 நவம்பர் மாத அறிக்கையின் பிரகாரம்,
2009ம் ஆண்டின் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது 70,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காணாமற் போயுள்ளமையை வலியுறுத்ப்பட்டுள்ளது.
ஜெனீவாவில் 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அமர்வில் “இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல்” எனத் தலைப்பிடப்பட்ட தீர்மானம் 30/1க்கு இலங்கை அரசாங்கமானது இணையனுசரணை வழங்கி ஒப்பமிட்ப்பட்டுள்ளது.

மனித உரிமை மீறல்கள் மற்றும் துஸ்பிரயோகங்களையும் பிரயோகிக்கத்தக்க சர்வதேச மனிதநேயச் சட்ட மீறலையும் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கவெனபன்னாட்டு நீதிபதிகள், வழக்கறிஞர்கள், வழக்குத் தொடுநர்கள் மற்றும் விசாரணையாளர்களை ஈடுபடுத்தக் கூடியவாறான நீதிப் பொறி முறை ஒன்றைத் தாபிப்பதாக முன்மொழிந்தமையையும் நம்பிக்கைமிகு நீதிமுறைச் செயன்முறையானது ஒருமைப்பாடு மற்றும் நடுநிலைமைக்குப் பெயர்போன நபர்களால் நடாத்தப்படும் சுயாதீன நீதிமுறை மற்றும் வழக்குத்தொடு நிறுவனங்களை உள்ளடக்கும் என உறுதியளித் தமையையும், மேலும் இலங்கையில் இது தொடர்பான் நீதிப் பொறிமுறையில் பொதுநலவாய நாடுகளின் விசேட வழக்குரைஞர், ஏனைய வெளிநாட்டு நீதிபதிபகள், எதிர்க் காப்புச் சட்டத்தரணிகள், அதிகாரமளிக்கப்பட்ட வழக்குரைஞர்கள் மற்றும் ஆய்வாளர்களின் வகிபாகத்தின் முக்கியத்துவத்தையும் பற்றி உறுதியளித்தமையையும் நினைவுகூர்ந்து கொண்டு,

இலங்கையானது 2017 மார்ச் மாதம் வரை தீர்மானம் 30/1க்கான அதனுடைய கடப்பாடுகளை அமுல்படுத்துவதற்கு தவறியமையால், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 2017 மார்ச் மாதம் நடைபெற்ற அமர்வில் இலங்கையின் வேண்டுகோளின் பேரில், தீர்மானம் 30/1 ஐ அமுல்ப டுத்துவதற்கு 2019 மார்ச் மாதம் வரை 2 வருடகால நீடிப்பானது வழங்கி தீர்மானம் 34/1க்கு இலங்கையானது ஒருமனதாக இணையனுசரணை வழங்கிய மையைக் கருத்திற் கொண்டு,

தீர்மானங்கள் 30/1, 34/1 யும் அமுல்படுத்துவதன் பொருட்டு எந்தவொரு அர்த்தமுள்ள முயற்சியை யும் முன்னெடுப்பதற்கு இலங்கை அரசாங்கமானது தவறியுள்ளதுடன் மட்டுமல்லாது, ஜனாதிபதி, பிரதம மந்திரி, மற்றும் அரசாங்கத்தின் மூத்த உறுப்பினர்கள் இத்தீர்மானங்களைத் தாங்கள் முழமையாக அமுல்படுத்த மாட்டோம் எனத் தெரிவித்துள்ளமை யையும் வலியுறுத்தி கொண்டு,

இலங்கையில் சிங்கள மற்றும் தமிழ் பேசும் மக்களுக்கு இடையிலான அரசியல் சிக்கல் நிலையானது 1948இல் பெரிய பிரித்தானியாவிட இருந்து இத்தீவானது சுதந்திரத்தை பெற்றுக் கொண்டதிலிருந்து சீரழிவுக்கு உட்பட்டுள்ளமையையும் யுத்தத்தின் மூல காரணமாகிய அரசியல் சிக்கல் நிலையானது பல்வேறு முயற்சிகளின் பின்னரும் தீர்க்கப்படாமையையும் நினைவுகூர்ந்து கொண்டு, வட மாகாண சபையானது பின்வருமாறு தீர்மானம் நிறைவேற்றுகின்றது.

1. இலங்கையானது ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானங்கள் 30/1யும் 34/1 யும் முழுமையாக அமுல்படுத்துவதற்கு இதுவரை விரும்பாமையால், இலங்கை மேற்குறிப்பிட்ட தீர்மானங்களை 2019 மார்ச் மாதத்திற்கு முன்னர் முழுமையாக அமுல்படுத்த தவறுமாயின், இலங்கையைப் பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்துக்கு அல்லது விசேடமாக உருவாக்கப்படும் நியாயசபைக்கோ கொண்டு செல்வதன் பொருட்டு ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக்கும் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபைக்கும் கொண்டு செல்லுமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் உறுப்பு நாடுகளை இச்சபையானது கோருகின்றது.
2. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் பேசும் மக்களின் நிலை, காணாமற்போனோர், தமிழ் அரசியற் கைதிகள், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ்த் தொடரும் கட்டுப்பாடில்லாத தடுத்துவைப்பு, தமிழ்ப் பிரதேசங்களில் பெருமளவிலான பாதுகாப்புப் படைகள் நிலைகொண்டுள்ளமை மற்றும் இத்தீவின் வடக்கு - கிழக்குப் பிராந்தியத்திலுள்ள தனியார் காணிகளில் இலங்கைப் பாதுகாப்புப் படைகள் தரித்திருக்கின்றமை ஆகியவற்றைக் கண்காணிப்பதன் பொருட்டு இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையிடும் பிரதிநிதி ஒருவரை நியமிக்கு மாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையை இச்சபையானது கோருகின்றது.
3. கணிசமான முன்னேற்றம் ஏற்படும் வரை இலங்கை மீது இராணுவத் தடைகளை விதிப்பதற்கு ஐ.நா பாதுகாப்புச் சபையை வலியுறுத்துமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையை இச்சபையானது கோருகின்றது.
4. யுத்தத்தில் ஈடுபட்ட இலங்கை இராணுவத்தினருக்கு நுழைவிசைவை நிராகரிக்குமாறும், ஐ.நா உயர் ஸ்தானிகரால் மனித உரிமைகளுக்கான 2018 பெப்ரவரி 26 – மார்ச் 23 ஆம் திகதியிடப்பட்ட அவருடைய அறிக்கையில் முன்மொழியப்பட்டவாறான சர்வதேச நியாயாதிக்கத்தின் பிரயோகம் அடங்கலாக ஏனைய வழிமுறைகளை ஆராயுமாறும் ஐக்கிய நாடுகள் சபையின் சகல அங்கத்துவ நாடுகளையும் இச்சபையானது கோருகின்றது.
5. இலங்கை, தமிழ் பேசும் மக்களுக்குரிய சமத்துவமான அரசியல் தீர்வொன்றை வழங்குவதற்கு விரும்பாமையாலும், தவறியுள்ளமையாலும், கடந்தகால வன்முறையின் மீளெழுகையைத் தவிர்ப்பதன் பொருட்டு எந்தவொரு அர்த்தமுள்ள முயற்சியையும் முன்னெடுப்பதற்குத் தவறியுள்ளமையாலும், ஓர் நிலையான அரசியல் தீர்வைக் காண்பதை நோக்காகக் கொண்டு தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசையைத் தீர்மானிப்பதன் பொருட்டு இத்தீவின் வடக்கு-கிழக்குப் பிராந்தியத்தில், ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்புடன் கூடிய பொதுவாக்கெடுப்பு ஒன்றை நடாத்துமாறு ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளை இச்சபையானது கோருகின்றது. என அந்த பிரேரணையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலான வடமாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றம் - Reviewed by Author on September 12, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.