அண்மைய செய்திகள்

recent
-

அதிகாரப் பகிர்வு வேண்டுமென முதலில் கோரியது S.W.R.D. பண்டாரநாயக்கவே! எம்.ஏ. சுமந்திரன் -


சமஷ்டி அடிப்படையில் அதிகாரப்பகிர்வு அவசியம் என்று முதன்முதலாக முன்மொழிந்தவர் வேறு யாருமில்லை. எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்கவே என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மாறாக தமிழ்த் தலைவர்கள் எவரும் இக்கோரிக்கையை முன்வைக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மத்துக்கம, அகலவத்த பிரதேசத்தில் புதிய அரசியலமைப்புச் செயற்பாடுகள் தொடர்பாக தெளிவு படுத்தும் கூட்டத்தொடர் இன்று இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“இலங்கை ஜனநயாக சேசலிச குடியரசு என்றே அரசியலமைப்பில் எழுதப்பட்டுள்ளது. இருப்பினும் ஜனநாயக குடியரசு என்றோ அல்லது சோசலிச குடியரசு என்றோ யராலும் சான்றிதழ் வழங்கமுடியாது.
ஜனநாயகத்தின் அங்க இலட்சணங்களில் ஒன்றுதான் பெரும்பான்மையின் தீர்மானத்தினை நடைமுறைப்படுத்துவதாகும். இந்த பிரதான மேடையினைப் பார்த்தீர்கள் என்றால் எட்டுப்பேர் அமர்ந்திருக்கின்றார்கள்.
இன்று சில தண்ணீர்ப் போத்தல்கள் அவர்களுக்கு முன்னால் வைக்கப்பட்டிருக்கின்றன. சில கூட்டங்களில் பங்கேற்கின்றபோது மென்பானங்களைக் கொண்டுவந்து தருவார்கள்.

சீனிச் சுவை அவற்றில் அதிகமாக இருப்பதால் என்னால் அதனை குடிக்க முடியாது. ஆகவே நான் தேநீர் வேண்டும் என்று அவர்களிடத்தில் கோரலாம்.
அப்போது மென்பானத்தினைத் தான் வழங்க வேண்டும் என்ற தீர்மானத்தினை பெரும்பான்மையானவர்கள் எடுத்திருப்பார்களாயின் எனது நிலைமை என்ன? என்ற கேள்வி உருவாகின்றது.
இதுபோன்று தான் எண்ணிக்கையில் பெரும்பான்மையானவர்களின் தீர்மானத்தினைத் தான் எண்ணிக்கையில் சிறுபான்மையானவர்களும் ஏற்றுக்கொள்ளவேண்டிய நிலைமை ஏற்படுகின்றது.

இந்த நாட்டில் சிங்கள பௌத்த மக்களே பெரும்பான்மையாக உள்ளனர். இது அனைவரும் அறிந்தவொரு விடயமாகும்.
வெவ்வேறுபட்ட மக்கள் குழுவினர் இருக்கின்றபோது பெரும்பான்மையை மையப்படுத்தி தீர்மானங்களை எடுக்கின்றமையானது ஒருபக்கத்திற்கு சார்பானதாகவே சென்றுவிடுகின்றது.
அதன் காரணமாகவே அதிகாரப்பகிர்வு அவசியம் என்ற தர்க்கம் எழுகின்றது. மத்துகம பிரதேசத்தினை எடுத்துக்கொண்டால் இங்கு தமிழ் பேசும் மக்களும் வசிக்கின்றார்கள். அவர்களுக்கு இந்த விடயம் நன்கு புரியும் என கருதுகின்றேன்.

ஆம், பல்வேறு குழுவினர் இருக்கின்றபோது சிறுபான்மை குழுவினரின் நிலைப்பாட்டிற்கு மாறாக பெரும்பான்மை குழுவினரை மைப்படுத்தியே தீர்மானங்களை எடுப்பதை ஜனநாயக பண்பு என்று ஏற்றுக்கொள்ள முடியாது.
பல்லினங்களைக் கொண்ட எமது நாட்டிற்கு ஜனநாயகப் பண்பு எனக் கூறப்படும் பெரும்பான்மையின் தீர்மானத்தினை நடைமுறைப்படுத்துதல் என்பது பொருத்தமற்றதாகவுள்ளது.
ஆகவே தான் உலகத்தின் சில நாடுகளில் காணப்படுகின்றமையைப் போன்று அதிகாரங்களை பகிர்ந்து கொள்ள வேண்டியுள்ளது. அவ்வாறான அதிகார பகிர்வினை சமஷ்டி முறைமை என்றும் கூறலாம்.
இல்லாது விட்டால் சமஷ்டி முறைமை என்று கூறாதும் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ளலாம். உலக வல்லரசு நாடான ஐக்கிய அமெரிக்காவினை எடுத்துக்கொண்டால் அது சமஷ்டிக் முறைமையைக் கொண்ட நாடு என்பதை அனைவரும் அறிவார்கள்.

ஆனால் அந்த நாட்டின் அரசியலமைப்பில் சமஷ்டி முறைமை என்று எங்கும் எழுத்தப்படவில்லை. இதேபோன்று தான் இந்தியாவை எடுத்துக்கொண்டால், இந்தியா ஒரு ஜனநாயக நாடு.
அங்குள்ள அரசியலமைப்பிலும் அது ஒற்றை ஆட்சி அரசா இல்லை சமஷ்டி முறைமையான அரசா என்று குறிப்பிடப்படவில்லை.
ஆனால் அனைவரும் ஒன்றிணைந்து அந்த நாட்டிற்கு பொருத்தமாக உருவாக்கிய அதிகாரப்பகிர்வுடனான அரசியலமைப்பினை நடைமுறைப்படுத்தியுள்ளார்கள்.

இந்த நாட்டில் சமஷ்டி அடிப்படையில் அதிகாரப்பகிர்வு அவசியம் என்று முதன்முதலாக முன்மொழிந்தவர் வேறு யாருமில்லை எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்கவே ஆவார். தமிழ்த் தலைவர்கள் எவரும் இக்கோரிக்கையை முன்வைக்கவில்லை.
1926ம் ஆண்டு எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்கவே சமஷ்டி முறை என்பதை இந்த நாட்டிற்கு அறிமுகப்படுத்தினார். அத்தோடு அவர் இந்த விடயம் சம்பந்தமாக சிலோன் மோர்னிங் லீடர் என்ற பத்திரிகையில் கட்டுரைகளையும் தொடர்ச்சியாக எழுதினார்.
அத்துடன் அவர் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து சமஷ்டி முறைமை தொடர்பான விளக்கங்களைச் செய்ததோடு இலங்கைக்கு அம்முறைமையே மிகப் பொருத்தமானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமல்ல சமஷ்டி முறைமையில் பல வடிவங்கள் உள்ளன. எமது நாட்டிற்கு சுவிட்சர்லாந்தில் உள்ள சமஷ்டி முறைமையே பொருத்தமானது என்றும் பண்டாரநாயக்க எழுதிய கட்டுரையொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
சுவிட்சர்லாந்து அரசியலமைப்பில் கூட்டாட்சி அரசு என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு பண்டாரநயாக்கவே குறிப்பிட்டுள்ள நிலையில் சமஷ்டி முறைமை என்பது பெரும்பான்மை சிங்கள மக்களுக்கு எதிரான முறை என்று கருதமுடியாதல்லவா?
டொனமூர் ஆணைக்கு இந்த நாட்டிற்கு வருகை தந்தபோதும், சோல்பரி ஆணைக்குழு இந்த நாட்டிற்கு வருகை தந்தபோதும், இந்த நாட்டிற்கு சுதந்திரம் வேண்டும் என்று கோரிய தருணத்திலும் சமஷ்டி முறைமை தான் பொருத்தமானது என்று கூறியவர்கள் வடக்கு, கிழக்கினைச் சேர்ந்த தலைவர்கள் அல்லர்.

இங்குள்ள மக்கள் பிரதிநிதிகளும் அல்லர். கண்டியத் தலைவர்களே ஆவர். 1944ஆம் ஆண்டு இந்த நாட்டின் ஆட்சிக்கு பொருத்தமானது சமஷ்டி முறைமையே என்று ஸ்ரீலங்கா கம்னியூஸ்ட் கட்சியே அவர்களது வருடாந்த மாநாட்டில் தீர்மானத்தினை எடுத்தார்கள்.
அக்காலத்தில் தமிழ் மக்களின் அரசியல் தலைவர்கள் அதனை ஏற்றுக்கொண்டிருக்கிவில்லை. இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் 1949இல் மலையக மக்களின் பிரஜாவுரிமை பறிக்கப்பட்டது.

அதன் பின்னர் தான் தமிழ்த் தலைவர்கள் சிந்திக்க ஆரம்பித்தார்கள். நாட்டின் ஆட்சிமுறை தவறானது, பொருத்தமற்றது என்பதை உணர்ந்து கொண்டார்கள்.
அதாவது பெரும்பான்மையினரின் தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படுவது சிறுபான்மையினருக்கு பாதகமாகும் என்ற தீர்மானத்தினை எடுத்தார்கள். 101 உறுப்பினர்களைக் கொண்ட முதலாவது பாராளுமன்றத்தில் மலையக மக்களை 7 உறுப்பினர்கள் பிரதிநிதித்துவப் படுத்தியிருந்தார்கள்.
பெரும்பான்மை வாக்கெடுப்பின் காரணமாகவே அவர்களின் பிரஜாவுரிமை பறிக்கப்பட்டது. இந்த நிலைமைகளை அடுத்து தான், நான் தற்போது பிரதிநிதித்தவப்படுத்திக் கொண்டிருக்கும் இலங்கை தமிழரசுக் கட்சி 1949 டிசம்பர் 18ம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

இந்த நாட்டிற்கு சமஷ்டி முறைமையே அவசியம் என்ற நிலைப்பாட்டில் பெடரல் கட்சி என எமது கட்சி உருவாக்கப்பட்டது. அந்த நிலைப்பாட்டில் தான், நாம் தற்போதும் இருக்கின்றோம்.
அதில் எந்தவொரு மாற்றமும் இல்லை என்பதை நான் தெளிவாக இந்த இடத்தில் குறிப்பிடுகின்றேன். புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையில் கூட எமது இந்த நிலைப்பாட்டினைக் குறிப்பிட்டுள்ளோம்.
ஆனால், தற்போதைய உலகச் சூழலை கருத்தில் கொள்கின்றபோது சமஷ்டி என்ற பெயர்ப்பலகை போடப்பட வேண்டிய அவசியம் இல்லை என்பதை அனைவருக்கும் புரிந்ததொருவிடயமாகும்.

ஆகவே பெயர்ப்பலகை அவசியமற்ற விடயமாகும். உலகத்தில் உள்ள சில நாடுகளின் அரசியலமைப்பில் சமஷ்டி முறைமை என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும் நடைமுறையில் அதனைக் காணமுடியாது. அங்கு ஒற்றை ஆட்சி முறைமையையே காணமுடிகின்றது.
அதேபோன்று ஸ்பெயின் போன்ற இன்னும் சில நாடுகளின் அரசியலமைப்பில் ஒற்றை ஆட்சி என்று காணப்பட்டாலும் அங்கு சமஷ்டிக்கு சமமான அதிகாரப்பகிர்வு காணப்படுகின்றது.

ஆகவே பெயர்பலகைகளை உயர்த்திப்பிடித்து யாரையும் ஏமாற்ற வேண்டும் என்ற அவசியம் எமக்கு இல்லை. தற்போது எமது நாட்டிற்கு ஜனநாயக, சோசலிச குடியரசு என்று பெயர்ப்பலகை இருந்தாலும் ஜனநாயமும் இல்லை சோசலிசமும் இல்லை.
ஆகவே பெயர்ப்பலகைகளை விடுத்து அரசியலமைப்பின் உள்ளடக்கத்தையே பார்க்கவேண்டியுள்ளது. அங்கு அதிகாரங்களை பகிர்ந்து கொள்ளக்கூடிய முறைமை இருக்கின்றதா எனப் பார்க்கவேண்டும்.

தமிழர்கள் எண்ணிக்கையில் சிறுபான்மையினராக இருந்தாலும் வடக்கு கிழக்கு பிராந்தியத்தில் பெரும்பான்மையாக வாழ்கின்றார்கள்.
ஆகவே அதிகாரங்களை சரியாக பகிர்கின்றபோது அவர்களுக்குரிய தீர்மானங்களை அவர்களே எடுக்க முடிவதற்கான நிலைமை ஏற்படுகின்றது” என கூறியுள்ளார்.
அதிகாரப் பகிர்வு வேண்டுமென முதலில் கோரியது S.W.R.D. பண்டாரநாயக்கவே! எம்.ஏ. சுமந்திரன் - Reviewed by Author on September 10, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.