அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் கஜா புயலினால் வெள்ளப்பாதிப்பு....படங்கள்


 வட பகுதியையும் கஜா புயல் தாக்கும் என்ற நிலைப்பாட்டில் மன்னார்
மக்களும் அச்சத்துடன் இருந்தபோதும் எதிர்பார்த்தது போன்று புயலால் எவ்வித
பாதிப்பும் இல்லையென்று மன்னார் அனர்த்த முகாமைத்துவ நிலையம்
தெரிவித்துள்ளது. இருந்தபோதும் நேற்று பெய்த மழையினால் சில பகுதிகள்
பாதிப்பு அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு பகுதியில் நிலை கொண்டிருந்த கஜா புயலானது  வியாழக் கிழமை

(15.11.2018) மன்னாரையும் தொட்டுச் செல்லும் என எதிர்வு கூறப்பட்டதைத்
தொடர்ந்து இப் பகுதி மக்களிடம் அச்சம் இருந்து வந்தபோதும் மழை வெள்ளத்தை தவிர வேறு எவ்வித அசம்பாவிதமும் இடம்பெறவில்லையென மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

மீனவர்கள்-
மீனவர்கள் கருத்து தெரிவிக்கையில் கஜா புயலுக்கு பயந்து நாங்கள் ஓரிரு
தினங்களாக தொழிலுக்குச் செல்லவில்லையென தெரிவித்தனர். வியாழக் கிழமை
(15.11.2018) இரவு  புயல் மன்னாரையும் தாக்கக்கூடும் என எதிர்வு
கூறப்பட்டதால் நாங்கள் எங்கள் மீன்பிடி படகுகள் உபகரணங்களை மிகவும்
பாதுகாப்பான இடங்களில் வைத்திருந்தோம்.

ஆனால் எதிர்பார்த்ததுபோன்று வியாழக் கிழமை சூறாவளி காற்று இப்பகுதியில் தாக்காதபோதும இக்காலத்தில் வீசும் வாடைக்காற்றுக்கு பதிலாக சோலக காற்றே வீசியது. இதனால் மன்னார் வட கடல் பகுதியிலுள்ள விடத்தல் தீவு கடல் சுமார் ஐந்து அடி கடல் நீர் உள்வாங்கப்பட்டு குறைந்திருந்ததாக அப்பகுதி மீனவர்கள் தெரிவித்தனர்.

நானாட்டான் பிரதேசம்
வியாழக் கிழமை இரவு தொடக்கம் வெள்ளிக் கிழமை வரை பெய்த மழையினால்
நானாட்டான் பிரதேசப் பிரிவில் தாழ்வான  குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் அனேக குடும்பங்களில்
வெள்ளத்தால் சில குடும்பங்கள் பாதிப்புக்குள்ளாகியதாக
தெரிவிக்கப்படுகிறது.

இது விடயமாக பாதிப்பு அடைந்துள்ள மக்கள் தெரிவிக்கையில் நானாட்டான் 
 அனைத்து மழை நீரும் ஆவணத்துக்குள்ளாக விழுந்து அங்குள்ள ஒரு
பெரிய வாய்க்காலூடாக கடற்கரைக்குச் செல்லும்.

ஆனால் இந்த பெரிய வாய்க்காலில் சுமார் ஒன்றரை கிலோ மீற்றர் நீளத்தில் இவ் வாய்க்கால் பற்றைகளாலும் மணல்களாலும் மூடிக் காணப்படுகின்றது. இதனால் இந்த பிரதான வாய்க்கால் மூலம் மழை வெள்ளம் ஓட முடியாத நிலையில் இப்பகுதியை சுற்றியுள்ள வீடுகளுக்கு இவ் நீர் நிரம்பி இப் பகுதி மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் சுமார் முப்பது வீடுகளிலுள்ள குடும்பங்கள் இரவு பெய்த கடும்
மழையினால் பெரும் பாதிப்புக்குள்ளாகியதாகவும் இவர்கள் கவலை தெரிவித்தனர்.

இந்த பிரதான வாய்க்காலை துப்பரவு செய்வதற்கான நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தாங்கள் பலமுறை கேட்டு சோர்ந்து போய் விட்டோம் எனவும் இவர்கள் தெரிவித்தனர்.

அத்துடன் வடிகாலமைப்பு புனரமைக்கப்படாததால்தான்  இப்பகுதி மக்கள் வெள்ள நீரின் பாதிப்புக்கு உள்ளாகி வருவதாக தெரிவிக்கின்றனர்.

தேவன்பிட்டி
நேற்று முன்தினம் வியாழக் கிழமை மற்றும் வெள்ளிக் கிழமை இரவு பெய்த
மழையின் காரணமாக தேவன்பிட்டி கிராம பகுதியிலுள்ள தாழ்ந்த பகுதிகளிலுள்ள
சுமார் 50 வீடுகள் வெள்ள நீரால் மிகவும் பாதிப்பு அடைந்துள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது. இவ் கிராமம் பாலியாற்றை அண்டிய இடமாக இருப்பதாலேயே
பாலியாற்றை நீர் மேவிப்பாய்வதாலும் இவ் பாதிப்புக்கு உள்ளாகி வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

கட்டுக்கரைக்குளம்
மன்னார் பிரதான குளமாகிய கட்டுக்கரைக்குளம் பெய்துள்ள மழை காரணமாக 12 அடி நீரின் அளவாக உயர்ந்துள்ளது. அத்துடன் இவ் குளம் நிரம்பியுள்ளதால்
வான்நோக்கி பாயும் நிலையும் உருவாகியுள்ளதாக முருங்கன் பிரதேச நீர்பாசன பொரியியலாளர் பி.ஐதீஸ் தெரிவித்தார்.

அத்துடன் மன்னார் மாவட்டத்திலுள்ள 162 ஊட்டக்குளங்களும் இவ் பகுதியில்
குறிப்பாக நேற்று முன்தினம் (15.11.2018) பெய்த மழையினால்
நிரம்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பாடசாலை
மன்னார் மாவட்டத்திலுள்ள மன்னார் கல்வி வலயத்திலுள்ள 90 பாடசாலைகளுக்கும் மடு கல்வி வலயத்திலுள்ள 51 பாடசாலைகளுக்கும் வழமைபோன்று ஆசிரியர்கள் சென்றிருந்தபொழுதும் மாணவர்களின் வரவு மிக குறைவான நிலையிலே காலையில் பல பாடசாலைகளில் காணப்பட்டன. இருந்தும் கஜா சூறாவளி காரணமாக வட பகுதி பாடசாலைகளுக்கு இன்று (16.11.2018) விடுமுறை என வடக்கு மாகாண ஆளுனர்விடுத்த திடீர் அறிவிறுத்தலைத் தொடர்ந்து பாடசாலைக்கு சமூகமளித்த பாடசாலை மாணவர்கள் காலையிலே வீடுகளுக்கு திரும்பியதையும் காணக்கூடியதாக இருந்தது

இன்று வெள்ளிகிழமை (16.11.2018) காலையில் மழை ஓய்ந்து வானிலை சற்று
மந்தாரமாக இங்கு காணப்பட்டபோதும் புயல் அச்சம் நீங்கியதைத் தொடர்ந்து
பாதுகாப்பாக வைக்கப்பட்ட மீன்பிடி படகுகள் உபகரணங்களை மீண்டும் கடலுக்கு மீனவர்கள் எடுத்துச் சென்றதையும் பார்க்கக்கூடியதாக இருந்தது.
 










மன்னாரில் கஜா புயலினால் வெள்ளப்பாதிப்பு....படங்கள் Reviewed by Author on November 16, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.