அண்மைய செய்திகள்

recent
-

ரணிலை விரட்டுவதில் மைத்திரிக்கு வெற்றி! அடுத்த பிரதமர் யார்?


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஒரேயொரு வர்த்தமானி ஒட்டுமொத்த நாட்டின் அரசியலையும் திருப்பிப்போட்டிருக்கிறது.
ஒக்டோபர் மாதம் 26ம் திகதி பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கவை அப்பதவியிலிருந்து விலக்கி, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை இந்நாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமராக்கினார்.

எனினும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்தமையானது அரசியலமைப்புக்கு முரணானது என்றும், ஜனாதிபதி அரசியலமைப்பை மீறிவிட்டார் என்றும் எதிர் கட்சிகள் கொந்தளித்தன.
இந்நிலையில், அலரி மாளிகையிலிருந்து ரணில் விக்ரமசிங்க வெளியேற மறுத்ததையடுத்து மேலும் இலங்கை அரசியல் சூடுபிடிக்க, நாடாளுமன்றத்தையும் அடுத்த சில வாரங்களில் கலைப்பதாக வர்த்தமானி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் சிறிசேன.

ஆனால், அரசியலமைப்புக்கு முரணான இந்தச் செயற்பாட்டை ஏற்க முடியாது என்று எதிர் கட்சிகள் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய நீதிமன்றமும் நாடாளுமன்றக் கலைப்புக்கு இடைக்காலத் தடை போட்டது.
இதுவேளை, பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்ச தன்னுடைய பெரும்பான்மையை இப்போது வரை நிரூபிக்கவில்லை. நாடாளுமன்ற சட்டதிட்டங்களுக்கும், ஜனநாயகத்திற்கும் மதிப்பளிக்குமாறு சர்வதேச நாடுகள் கோரியிருக்கின்றன.

இந்நிலையில் தான் வழக்கு விசாரணைகள் தொடர்ந்தும் நீதிமன்றத்தில் நடந்து, எதிர்வரும் 12ம் திகதி இறுதித் தீர்ப்பிற்காக காத்திருக்கிறது இலங்கை. இதற்கிடையில் இரண்டு தடவை பெரும்பான்மையை நிரூபித்த ரணில் விக்ரமசிங்க, மகிந்த மீது நம்பிக்கையில்லாத் தன்மையை வெளிப்படுத்தினார்.
இதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட ஏனைய கட்சித் தலைவர்கள் ஜனாதிபதியை சந்தித்து பேசிய போதும், 225 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து ரணிலை பிரதமராக்குமாறு வலியுறுத்தினாலும் தான் ஏற்கமாட்டேன் என்று திட்டவட்டமாக மறுத்திருக்கிறார்.
இவற்றை கருத்தில் எடுத்த ஐக்கிய தேசியக் கட்சி இலங்கை வரலாற்றில் ஒரு புதிய தீர்மானம் ஒன்றை கொண்டுவர தீர்மானித்திருக்கிறது. ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவான நம்பிக்கை தீர்மானத்தை வரும் 12ம் திகதி நடத்த முடிவு செய்திருப்பதாக அறிய முடிகிறது.

ஆனால், ஐக்கிய தேசியக் கட்சியின் இந்தத் தீர்மானத்தை மக்கள் விடுதலை முன்னணி ஆதரிக்காது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்திருக்கிறார்.
இதேவேளை, தமிழ் தேசிய கூட்டமைப்பும் தனது இறுதி முடிவினை 11ம் திகதி அல்லது 12ம் திகதி அறிவிக்கும் என்று சொல்லியிருக்கிறது.
மக்கள் விடுதலை முன்னணியும், தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஒரேவிதமான கருத்தினை வெளியிட்டிருக்கிறது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பிரதமரை நியமித்தமையானது அரசியலமைப்புக்கு எதிரானது. எனவே நாங்கள் ஜனநாயகத்தையும், அரசியலமைப்பினையும் காப்பாற்றவே போராடுகின்றோம்.

மாறாக, ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவான நிலைப்பாட்டில் அல்ல என்று குறிப்பிட்டுள்ளன. இதேவேளை, வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் மகிந்த ராஜபக்சவிற்கு தமிழ் கூட்டமைப்பு ஆதரிப்பதை அவர்கள் விரும்பமாட்டார்கள் என்றும், மகிந்த மீண்டும் ஆட்சிக்கு வருவதை தமிழ் மக்கள் விரும்பவில்லை என்றும் கூட்டமைப்பு குறிப்பிட்டிருக்கிறது.
மகிந்த ராஜபக்சவையும், ரணில் விக்ரமசிங்கவையும் தாங்கள் நம்பத் தயார் இல்லை என்று ரில்வின் சில்வா தெரிவித்திருக்கிறார். ரணிலை ஏற்கமாட்டேன் என்று ஜனாதிபதி திட்டவட்டமாக சொல்லிவிட்டார்.
இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணிலை பிரதமராக ரணில் முன்னிறுத்தினால் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தோல்வி ஏற்படும் என்று அக்கட்சியில் உள்ளவர்கள் கருதுகின்றார்கள் என அக்கட்சியை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

ஆக, இன்னும் ஒரு சில நாட்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதமராக வேறு ஒருவரின் பெயர் வெளிவருவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக கொழும்பு அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னுடைய நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்காத நிலையிலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் முடிவும் ஒரே மாதிரியிருக்கும் பட்சத்தில், ஜனாதிபதி ரணிலை விரட்டும் விடையத்தில் வெற்றி பெறுவார்.

ஆனால் பிரதமராக மகிந்த ராஜபக்ச வருவாரா என்பதில் சந்தேகமே!
ரணிலை விரட்டுவதில் மைத்திரிக்கு வெற்றி! அடுத்த பிரதமர் யார்? Reviewed by Author on December 09, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.