அண்மைய செய்திகள்

recent
-

30வருட யுத்ததிற்கு பின்...வட கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் ஐ.நா.செயலாளர் நாயகத்திற்கு மகஜர் அனுப்பி வைப்பு-படங்கள்

கடந்த 30 வருடங்களாக நிகழ்ந்த போர் மற்றும் போருக்குப் பின்னரான காலங்களில் இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டனர். ஆனால் இன்று வரையில் அவர்களைப் பற்றி எது விதத் தகவலும் இல்லை என வட கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினப் தெரிவித்துள்ளனர்.

மன்னார் மனிதப் புதை குழிகளில் இருந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எச்சங்களின் பாதுகாப்பை ஐ.நா. பொறுப்பேற்க கோரி வட கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் இன்று புதன் கிழமை (12) காலை மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் அமைதி போராட்டம் இடம் பெற்றது.

போராட்டத்தை தொடர்ந்து வட கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் ஐ.நா. செயலாளர் நாயகத்திற்கு அனுப்பி வைத்த மகஜரிலேயே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

-குறித்த மகஜரில் மேலும் குறிப்பிடுகையில்,,,

30 வருடங்களாக நிகழ்ந்த போர் மற்றும் போருக்குப் பின்னரான காலங்களில் இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டனர்.

இன்று வரையில் அவர்களைப் பற்றி எதுவிதத் தகவலும் இல்லை.
எனினும் அண்மையக் காலங்களில் வடமாகாணத்தின் மன்னார் மாவட்டத்தில் மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
2014இல் இம் மாவட்டத்தின் திருக்கேதீஸ்வரம் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட மனிதப் புதை குழியில் இருந்து 83 மனித எலும்புக் கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டு அவை அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், மே மாதம் 2018 இல் இன்னுமொரு மனிதப் புதைகுழி மன்னார் நகர மத்தியில் கண்டு பிடிக்கப்பட்டது.
இன்று வரை இப்புதை குழியில் 276 மனித எலும்புக்கூடுகள் அடையாளங் காணப்பட்டுள்ள நிலையில், 269 மனித எலும்புக் கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டு மன்னார் நீதவான் நீதிமன்றில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளன.

 இவற்றில் 21 எலும்புக்கூடுகள் சிறுவர்களினுடையதாகும். இது இவ்வாறிருக்க, 2018 மார்கழி 6ஆம் திகதியன்று அதிர்ச்சியளிக்கும் வகையில் கால்கள் இரண்டும் இரும்பு வளையத்தினால் பிணைக்கப்பட்ட நிலையில் ஒரு மனித எலும்புக்கூடு அகழ்ந்தெடுக்கப்பட்டது.

இது சிறுபான்மை சமூகத்தினர் மத்தியில் பேரதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையின் தற்போதைய அரசியல் சூழலானது இலங்கை மக்களுக்கு, குறிப்பாக சிறுபான்மையினருக்கு பாதுகாப்பற்ற ஆபத்தான சூழலை உருவாக்கியுள்ளது.

இத்தகைய சூழலில், மனிதப் புதை குழியில் இருந்து மனித எச்சங்கள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டு உரியமுறையில் பாதுகாக்கப்பட்டு மரபியல் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என்பதற்கு எந்த நம்பிக்கையும் கிடையாது.

எனவே, ஐ.நா. செயலாளர் நாயகமான தங்களிடம்,மனிதப் புதை குழிகளில் இருந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எச்சங்களை பாதுகாத்து மரபியல் பரிசோதனைக்கு உட்படுத்தும் பொறுப்பை ஐ.நா. ஏற்கவேண்டும் எனக்கோருகிறோம்.

அத்துடன், அனைவரினதும் மனித உரிமைகளைப் பாதுகாக்கவும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள், சித்திரவதைக்கு உள்ளானோர் மற்றும் குழந்தைகள் அடங்கலாக படுகொலைக்கு உள்ளாகி புதைக்கப்பட்ட அப்பாவி பொது மக்கள் அனைவருக்கும் நீதி கிடைக்க ஐ.நா. உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கோருகிறோம். 

மேலும், மனித உரிமைப் பாதுகாவலர்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படல் வேண்டும், ஆட்கொணர்வு மனுசார்ந்து செயற்படும் சட்டத்தரணிகள் மற்றும் நீதிபதிகளின் பாதுகாப்பும் சுயாதீனமான செயற்பாடும் உறுதிப்படுத்தப்பட வேண்டும், மனித உரிமை மீறல்களுக்கு உள்ளானோர் மற்றும் சாட்சிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும், சட்டம் ஒழுங்கு முறையாகப் பேணப்படுவது, நீதித்துறையின் சுயாதீனத் தன்மை மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்களின் பாதுகாப்பு மற்றும் அவற்றின் சுயாதீன செயற்பாடு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்ற அறிவுரைகளை ஐ.நா. இலங்கை அரசுக்கு கூறி வழிகாட்ட வேண்டும் என குறித்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 













30வருட யுத்ததிற்கு பின்...வட கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் ஐ.நா.செயலாளர் நாயகத்திற்கு மகஜர் அனுப்பி வைப்பு-படங்கள் Reviewed by Author on December 12, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.