அண்மைய செய்திகள்

recent
-

அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கைத் தமிழ் குடும்பம் வெளியேற்றப்படும்!


அவுஸ்திரேலியாவில் வாழும் இலங்கை தமிழ் குடும்பத்தின் நாடுகடத்தலை தவிர்க்க முடியாது என அந்நாட்டு உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக மெல்பேர்ன் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நடேசலிங்கம்-பிரியா குடும்பம் நாடு கடத்தலை எதிர்நோக்கியுள்ளனர்.

இந்நிலையில் டேசலிங்கம்-பிரியா குடும்பத்தை அஸ்திரேலியாவில் வாழ அனுமதிக்க முடியாது என்றும் அவர்கள் நிச்சயம் நாடு கடத்தப்படுவார்கள் என்றும் உள்துறை அமைச்சர் Peter Dutton தெரிவித்துள்ளார்.
தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்களான நடேசலிங்கம்-பிரியா குடும்பம் தம்மை ஆஸ்திரேலியாவில் வாழ அனுமதிக்குமாறு கோரி தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு பெடரல் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டதையடுத்து இவர்களை பெப்ரவரி 1ம் திகதிக்கு பின்னர் நாடுகடத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

எனினும் இவர்களை நாடுகடத்தும் விடயத்தில் உள்துறை அமைச்சர் தலையிட்டு இதைத் தடுத்து நிறுத்துவதுடன் குறித்த குடும்பத்தை தொடர்ந்தும் அவுஸ்திரேலியாவில் வாழ அனுமதிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. எனினும் அதனை நிராகரித்துள்ள அமைச்சர் Peter Dutton இவர்கள் உண்மையான அகதிகள் என இனங்காணப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரும் நோக்கில் நடேசலிங்கமும் பிரியாவும் தனித்தனியாக கடந்த 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில் படகு மூலம் அவுஸ்திரேலியா வந்தடைந்தனர். இத்தம்பதியருக்கு அவுஸ்திரேலியாவில் பிறந்த 2 வயது மற்றும் 1 வயதுடைய பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.

இந்தநிலையில் நடேசலிங்கம் மற்றும் பிரியாவின் புகலிடக்கோரிக்கை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட அதேநேரம் இவர்களுக்கு வழங்கப்பட்ட bridging விசாவும் இவ்வருட ஆரம்பத்துடன் காலாவதியாகிவிட, அவர்களை நாட்டைவிட்டு வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளில் அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் இக்குடும்பம் பல காலமாக வாழ்ந்துவந்த குயின்ஸ்லாந்தின் Biloela பகுதியிலிருந்து அவர்களை பலவந்தமாக அழைத்துச்சென்று நாடுகடத்த முற்பட்ட வேளையில் சட்டநடவடிக்கை காரணமாக அம்முயற்சி இறுதிநேரத்தில் தடுக்கப்பட்டது.
இதையடுத்து நடேசலிங்கம்-பிரியா குடும்பம், நாடுகடத்தப்படக்கூடாதென வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு கடந்த ஆண்டு ஜுன் 21 அன்று மெல்பேர்ன் பெடரல் Circuit நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து மீண்டும் இக்குடும்பத்தை நாடுகடத்துவதற்கான நடவடிக்கைகளில் இறங்கிய குடிவரவுத்துறை அதற்கான கடிதத்தையும் தீர்ப்பு வெளியான அடுத்தநாளே கையளித்தது.

ஆனால் நீதிமன்றின் தீர்ப்பிற்கெதிராக நடேசலிங்கம்-பிரியா குடும்பம் மேன்முறையீடு செய்திருந்ததால் குறித்த குடும்பம் நாடுகடத்தப்படுவது இரண்டாவது தடவையாகவும் தடுக்கப்பட்டது.
இந்தப்பின்னணியில் நடேசலிங்கம்-பிரியா குடும்பம், தம்மை அவுஸ்திரேலியாவில் வாழ அனுமதிக்குமாறு கோரும் மேன்முறையீட்டு மனுவை கடந்த டிசம்பரில் விசாரித்த பெடரல் நீதிமன்றம் அதனைத் தள்ளுபடி செய்ததுடன் இக்குடும்பத்தை நாடுகடத்துமாறும் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கைத் தமிழ் குடும்பம் வெளியேற்றப்படும்! Reviewed by Author on January 14, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.