அண்மைய செய்திகள்

recent
-

தமிழ் மக்கள் கூட்டணி எந்த அடிப்படையில் வித்தியாசப்படுகின்றது! சி.வி.விக்னேஸ்வரன் விளக்கம் -


ஒற்றுமை என்பது மற்றவர்கள் மதிப்பதான ஒற்றுமையாக இருக்க வேண்டும் என வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வாராந்த கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கேள்வி:- ஒற்றுமை பற்றிப் பேசிக்கொண்டு புதியதொரு கட்சியைத் தொடங்கியுள்ளீர்கள்? நீங்கள் தமிழர் ஒற்றுமையை குலைப்பதை விட எந்த அடிப்படையில் உங்கள் கட்சி மற்றவற்றுடன் வித்தியாசப்படும் என்று கூறலாமா?
பதில்:- “ஒற்றுமை என்றால் என்ன? கொள்கை எதுவாக இருந்தாலும் ஒற்றுமைகாக்க எமது பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தில் ஒருமித்து கையுயர்த்த வேண்டும் என்று எண்ணுகின்றீர்களா? அவ்வாறான ஒற்றுமை இதுவரையில் எதனைச் சாதித்துவிட்டது?
அதாவது தான்தோன்றித் தனமாகக் கட்சியின் தலைமைத்துவம் நடந்துகொண்டாலும் ஒற்றுமையை முன்னிட்டு வாய் மூடிக்கொண்டு இருக்கவேண்டும் என்று எண்ணுகின்றீர்களா? எமது ஒற்றுமை என்பது மற்றவர்கள் மதிப்பதான ஒற்றுமையாக இருக்கவேண்டும்.
பதவியை நீடித்து வைத்திருப்பதற்காகவும், பயணங்கள் பெறுவதற்காகவும், பல்சுவை உண்டிகளை உண்பதற்காகவும், பல்வித தனிப்பட்ட நன்மைகளைப் பெறுவதற்காகவும் நாங்கள் ஒற்றுமைப்பட்டால் எம்மை எவரும் மதிக்கமாட்டார்கள்.
எமது எதிரிகள் தங்களுக்குள் சிரித்துக்கொண்டு எம்மை மதிப்பதுபோல் பாசாங்கு செய்வார்கள். ஏன் என்றால் அவர்களுக்கு எங்கள் வலுவின்மை புரிந்திருக்கும்.

எதனைக் கொடுத்தால் அல்லது எதனைத் தருவதாகக் கூறினால் சாதாரண தமிழ்த் தலைவர்கள் பணிந்துவிடுவார்கள் என்று அவர்களுக்குத் தெரியும்.
ஒருகதையுண்டு. டி.ஸ்.சேனநாயக அவர்கள் அரசவை (State Council) காலத்தில் (1948க்கு முன்னர்) “சிங்களவர் மட்டும்”அமைச்சரவை ஒன்றை அரசவையில் ஏற்படுத்த என்னசெய்ய வேண்டும் என்று அறிய அறிஞர்களைத் தேடினார்.
எல்லோரும் கணிதப் பேராசிரியர் சி.சுந்தரலிங்கம் அவர்களே அதற்கு உகந்தவர் என்று கூறினார்கள். பின்னர் அடங்காத் தமிழர் முன்னணியைத் தாபித்த அதே“சுந்தர்” தான் அவர்.
“நீதான் கணக்கில் புலி. எங்கே “சிங்களவர் மட்டும் அமைச்சரவையை (Pan Sinhala Cabinet) அமைக்க என்ன செய்யவேண்டும் என்று சொல்லு பார்ப்போம்?” என்று கேட்டார் டி.ஸ்!

சொல்லிக் கொடுத்தார் சுந்தர்! D.B.Jayatilakeவின் கீழ் “சிங்களவர் மட்டும்”அமைச்சரவை உதயமாகியது. தமிழர்களோ மற்றவர்களோ அதில் இடம்பெறவில்லை. பின்னர் யாரோ கேட்டிருக்கின்றார்கள் DSஇடம் “என்ன நடந்தது?”என்று.
“நீஅழகாய் இருக்கின்றாய் என்று மயிலிடம் கூறினேன். உடனே அது தனது சிறகொன்றைத் தந்துவிட்டது”என்றார் டி.எஸ்.
இவ்வாறு தான் எங்களுக்குப் பின்புறமாக நின்று சிரித்துக் கொண்டு எங்களைக் கொண்டு எமது சிங்கள அரசியல் வாதிகள் தமது காரியத்தைச் சாதித்துக் கொள்கின்றார்கள்.
அதே நேரம் எமது ஒற்றுமையையும் அவர்கள் குலைத்து வருகின்றார்கள் .எமது தமிழ்த் தலைமைகள் எவ்வளவு புத்திக் கூர்மை இருப்பினும் மாய்மாலத்துக்கு அடிமைப்படக் கூடியவர்கள் என்று தெரிகின்றது.
கணிதத்தில் மேம்பட்ட, கல்வியில் மேம்பட்ட, வழிகாணும் திறம் படைத்த எம்மவர்கள் பசப்பு வார்த்தைகளுக்கும், மாய்மாலங்களுக்கும் எடுபட்டுப்போகின்றார்கள். அதற்குக் காரணம் அவர்களிடம் குடிகொண்டிருக்கும் ஆணவமும் செருக்கும்.
இவ்வாறானவர்களை நாம் நாடாளுமன்றத்திற்கு அனுப்பினால் அவர்களுக்கு எமது ஒற்றுமை என்பது ஒரு பொருட்டாகாது. அவர்கள் எமது ஒற்றுமையை வைத்துக்கொண்டு ஒருவருக்குப் பத்து இலட்சமா நூறு இலட்சமா என்று பேரம் பேசவே விரும்புவார்கள்.

தமிழர்களின் வருங்காலம் பற்றிச் சிந்திக்கமாட்டார்கள். எதற்காக வடகிழக்கு இணைப்புகேட்டோம். எதற்காக எமக்கிருக்கும் உள்நாட்டு சுயாட்சி உரித்தை வலியுறுத்தினோம். எதற்காக சமஷ்டி கேட்டோம் என்பதை மறந்து விடுவார்கள்.
ஆனால் ஒற்றுமையாய் இருப்பார்கள். இந்த ஒற்றுமையையா நீங்கள் குறிப்பிடுகின்றீர்கள்? கொள்கையற்ற, சுயநலம் கருதிய, மக்கள் மேல் கரிசனையில்லா ஒற்றுமை இது. இவ்வாறான ஒற்றுமையையே நாம் இதுகாறும்பார்த்து வந்துள்ளோம்.

நாம் நினைத்ததே தமிழர்களின் ஆசையும் அபிலாஷைகளும். எமது தீர்மானங்களுக்கு அப்பால் தமிழர்களுக்கு எதுவும் தேவையில்லை. கொள்கைகள் என்பன தேர்தல் விஞ்ஞாபனங்களை அலங்கரிப்பதற்கே.
நடைமுறைக்கு அவை சாத்தியமில்லை என்ற எண்ணத்தில் தான்தோன்றித் தனமாக எம்மை வழிநடத்துவோரை நாம் வாய் பொத்தி கைகட்டி நின்று வரவேற்க வேண்டும். எது நடந்தாலும் அதைத்தான் நாம் செய்யவேண்டும்.
அதைத்தானா ஒற்றுமை என்று கூறுகின்றீர்கள்? இந்த ஒற்றுமை எங்களை எங்கு கொண்டுசெல்லும் என்று சிந்தித்தீர்களா? சிலரின் சொகுசுக்கும் மவுசுக்கும் பலரின் அவலத்திற்கும் அஸ்தமனத்திற்குமே அந்த ஒற்றுமை வழிவகுக்கும்.

இப்பொழுதே முல்லைத்தீவு மாவட்டம் பௌத்த சிங்கள ஆக்கிரமிப்பிற்கு ஆளாகிவருகின்றது. எதற்காக மகாவலி அதிகாரசபையின் ஆதிக்கத்தை முல்லைத்தீவு நகரம் வரையில் விஸ்தரித்தீர்கள் என்று கேட்க எமது பிரதிநிதிகள் எவரும் இல்லை.
சிங்களக் குடியேற்றங்கள் பற்றி வலுவான நடவடிக்கைகள் எடுக்க, வழக்குகளைப் பதிய எவரும் இல்லை. ஏன் என்றால் அவற்றை யாராவது செய்ய முன்வந்தால் எமது ஒற்றுமை குலைந்துவிடும் என்கின்றார்கள்.
எமக்குப் படியளக்குங் கொழும்பு நகரக் கனவான்களின் மனதை நாம் புண்படுத்திவிடுவோம் என்கின்றார்கள். அதனால்த் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நான் உடைக்கமாட்டேன் என்று கூறி அதற்கான நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றேன்.

அதாவது தேசியக் கட்சிகள் போல் இப்போது பேசத் தலைப்பட்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தன் வழியே செல்லவிட்டு மக்களின் உண்மையான மனம் அறிய பிரயத்தனங்களில் ஈடுபட்டுள்ளேன்.
நான் தமிழர் ஒற்றுமையைக் குலைக்கவரவில்லை. ஆனால் மக்கள் மனதில் குடிகொண்டிருக்கும் அறியாமையை குலைத்து வருகின்றேன்.
கொள்கையின் அடிப்படையில் மக்கள் நலனுக்காக ஒன்றிணைந்து போராடுவதாகவே உண்மையான ஒற்றுமை அமைய வேண்டும் என்ற பாடத்தைப் புகட்டிவருகின்றேன்.
மேலும் தற்போதைய ஒற்றுமையானது அதிகாரத்தை ஓர் இடத்தில் குவித்துவிட்டிருக்கின்றது. அந்த அதிகாரமையம் இட்டதே சட்டம்.
எவரும் கேள்விகள் கேட்க முடியாது. இவ்வாறு அதிகாரம் ஓர் இடத்தில் தேங்கியதால் ஏற்பட்ட எதிர்மாறான விளைவை ஜே.ஆரின் காலத்தில் கண்டுள்ளோம்.

எம்.ஆரின் (மகிந்த இராஜபக்ச)காலத்தில் கண்டுள்ளோம். இப்போது TNA காலத்திலும் கண்டுவருகின்றோம். அதிகாரம் மையப்படுத்தப்படுவதால் பாதிப்பு மக்களுக்கே. ஜனநாயகம் ஒதுக்கி வைக்கப்பட்டுவிடுகிறது.
நாம் எவ்வாறு மற்றக் கட்சிகளிலிருந்து மாறுபடுகின்றோம் என்று கேட்டுள்ளீர்கள்.
ஒன்று நாம் எமது அரசியல் யாப்பின் படிகீழிருந்து மேல் நோக்கிசெல்லும் ஒரு கட்டமைப்பை உண்டாக்கியுள்ளோம். முதல் வருடத்தில் மட்டும் பிரதிநிதிகளை நான் தேர்ந்தெடுப்பேன்.
அதன் பின்னர் வட்டாரம், தொகுதி, மாவட்டம் என்றவாறு கீழிருந்துமேல் வரக்கூடியதாக அடிமட்டத் தமிழ் மக்கள் நிர்வாகமட்டத்திற்கு உயர வழி செய்துள்ளோம். எங்கள் காலத்தில் எமக்கு உரிமைகள் கிடைக்குமோ தெரியாது.
ஆனால் எம்முடைய காலத்தின் பின்னரும் எமது கொள்கையின் அடிப்படையில் எமது போராட்டத்தைக் கொண்டு நடத்தக் கூடியதாக எமது அரசியல் யாப்பு தயாராக்கப்பட்டுள்ளது.

எமது இளைஞர்கள் நாம் விட்ட இடத்திலிருந்து முன்னோக்கி எமது விடுதலைப் பயணத்தில் பயணிக்கநாம் வழி வகுத்துள்ளோம்.
இரண்டு, மரபுரீதியான கட்சிகளில் நாம் காணும் ஜனநாயக மறுப்பு போன்ற குறைபாடுகளை நாம் நீக்கியுள்ளோம். இதனால் காலத்தின் தேவையைப் பூர்த்திசெய்துள்ளோம். நேர்மையான பொருத்தமான தகைமையுடைய உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க வழி செய்துள்ளோம்.
ஊழல்களைத் தவிர்க்க நடவடிக்கை எடுத்துள்ளோம். கட்சிக்கு அப்பால் இருந்து எமக்கு அறிவுரை வழங்க சிவில் சமூக முக்கியஸ்தர்களை நியமித்துள்ளோம். அவர்கள் தேர்தலில் ஈடுபடமுடியாது.
ஆனால் நிர்வாகப் பிறழ்வுகள், ஊழல்கள், பிழையான கொள்கைகள், வரப்போகும் அரசியல், பொருளாதார, சமூக அனர்த்தங்கள் போன்ற பலவற்றைப் பற்றியும் எமக்குஅ றிவுரைவழங்குவார்கள்.
தேர்தல் காலவாக்குறுதிகளை காற்றில் பறக்கவிடவோ பிறழவோ இந்த ஆலோசகர் சபை இடங்கொடுக்காது.

ஆகவே காலத்திற்கு காலம் மக்கள் அபிலாஷைகளையும் எதிர்பார்ப்புகளையும் கண்டறிந்து உள்வாங்க, எமதுகட்சி ஒருமக்கள் சக்தியாக இயங்குவதற்கு ஏதுவாக நம் கட்டமைப்பை அமைத்துள்ளோம்.
மூன்று, மக்கள் நலன் சார்ந்த, ஆரோக்கியமான, குறுகிய, நெடுங்கால திட்ட வடிவமைப்புக்களை ஏற்படுத்தி அவற்றை நடைமுறைப்படுத்த எண்ணியுள்ளோம். நான்கு கூடுமானவரை இருமொழிப் பரீட்சயம் கொண்டவர்களையே எமது கட்சியின் வேட்பாளர்களாக இணைக்க உள்ளோம்.

முக்கியமாக நாம் கருத வேண்டியது பிழையான வழியில் நாம் பிரயாணம் செய்தால் எமது பயணம் பிழையான குறிக்கோளையே அடையும் என்பதையே. ஆகவே தான் திசைமாறிய பயணங்கள் எமக்குப் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றகருத்தைநாம் முன்வைத்துச் செல்கின்றோம்.
ஒற்றுமை பிழையான இலக்கைநோக்கிப் போவதால் என்ன நன்மை கிடைக்கும் என்ற கேள்வியை முன்னிறுத்தியுள்ளோம். மாறாக அதனால் ஏற்படக் கூடிய தீமைகளைச் சுட்டிக் காட்டிவருகின்றோம்.
மேலும் சமஷ்டி வேண்டாம், வடகிழக்கு இணைப்பு வேண்டாம்,

பௌத்தத்திற்கு முதலிடம் கொடுக்க ஆட்ஷேபணை இல்லை, எமக்கு சுயாட்சி தேவையில்லை என்று கூறுவதற்கு எமக்குள் ஒற்றுமை ஏன்? அதைத்தான் எல்லாச் சிங்கள அரசாங்கங்களும் கூறி வருகின்றனவே?
சமஷ்டி தரமாட்டோம், இணைப்புதரமாட்டோம், சுயாட்சி தரமாட்டோம், பௌத்தத்திற்கு முதலிடம் வேண்டும் என்பதே அவர்கள் கூறுவது. அவர்கள் கூறுவதைநாம் ஏற்றுக்கொண்டோமானால் எமக்கென எதனை நாம் வேண்டிநிற்கின்றோம்?
எமக்குள் ஒற்றுமை இல்லாமலேயே இவற்றைத்தான் எல்லா சிங்கள பெரும்பான்மைக் கட்சிகளும் தருவதாக அல்லது தரமாட்டோம் என்று கூறிவருகின்றனவே!
ஆகவே ஒற்றுமையானது கொள்கை அடிப்படையில் இருக்கவேண்டும். மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடுவதாக இருக்க வேண்டும். சுயநலத்திற்காக இருக்கக்கூடாது.

நாம் இவற்றை இவ்வாறு மாறுபட்ட விதத்தில் எடுத்துச் செல்வதுதான் நாம் மற்றவர்களில் இருந்து வேற்றுமைப்பட்டவர்கள் என்பதை எடுத்துக் காட்டுகின்றது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் கூட்டணி எந்த அடிப்படையில் வித்தியாசப்படுகின்றது! சி.வி.விக்னேஸ்வரன் விளக்கம் - Reviewed by Author on February 06, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.