அண்மைய செய்திகள்

recent
-

தமிழின அழிப்பிற்கு பன்னாட்டு நீதி விசாரணை கோரி ஐ.நா சபையிடம் கோரிக்கை! -


இலங்கை அரசினால் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பிற்கும், தொடரும் கட்டமைப்பு சார் தமிழின அழிப்பிற்கும் அனைத்துலக நீதி விசாரணை வேண்டி, ஈழத்தமிழர்களின் இறையாண்மையை வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் சபைக்கு கூட்டாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதென தமிழர் இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது,
ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரம் பெற்ற, 39 நாடுகளைச் சேர்ந்த 118 சர்வதேச அமைப்புக்களும், உலகளாவிய ரீதியில் இயங்குகின்ற 3000 பொது அமைப்புக்களும் ஒன்றிணைந்து இக்கோரிக்கை விடுத்துள்ளனர்.
பார்சிலோனா மாநகர சபையினால் கடந்த 25.01.2019 அன்று இலங்கை அரசின் தமிழின அழிப்பிற்கெதிரான பன்னாட்டு நீதி விசாரணை மற்றும் ஈழத் தமிழரின் இறையாண்மையையும் வலியுறுத்தி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைத் தொடர்ந்து இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவ் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இரு தீர்மானங்களும் தமது அயராத முயற்சிக்கும், ஈழத் தமிழர் பிரச்சனையை சர்வதேச மயப்படுத்தப்படுவதனூடாகவே எமக்கான நியாயமான தீர்வைப் பெற்றுக் கொள்ள முடியுமென்ற இலக்கை நோக்கிய உழைப்பிற்கும் கிடைத்த வெற்றியென தமிழர் இயக்கம் தெரிவித்துள்ளது.

இக் கோரிக்கை மனுவானது, 2015ஆம் ஆண்டில் வட மாகாண சபையால் கொண்டுவரப்பட்ட தமிழின அழிப்பிற்கெதிரான தீர்மானத்தினதும், ஈழத்தமிழர்களின் இறையாண்மை கோரிக்கையினையும் அடிப்படையாகக் கொண்டதாகவே அமையப்பெற்றிருப்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகுமென தமிழர் இயக்கம் தெரிவித்துள்ளது.
இவ் வடமாகாண சபைத் தீர்மானமானது, ஐ.நா விற்கும், சர்வதேச நாடுகளிற்கும், அனைத்துலக நிறுவனங்களிற்கும் தமிழர் இயக்கத்தினால் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், 118இற்கும் அதிகமான ஐக்கிய நாடுகள் சபையின் ECOSOC அங்கீகாரம் பெற்ற அமைப்புகளின் அங்கீகாரத்துடனும் 3000 பன்னாட்டு அமைப்புக்களின் ஆதரவுடனும் ஐ.நா சபைக்கு சமர்ப்பிக்கப்படுவது இதுவே முதற் தடவையாகும்.

தமிழின அழிப்பிற்கெதிரான வடமாகாண சபையின் வரலாற்றுத் தீர்மானத்தை தழுவிய பன்னாட்டு அமைப்புகளின் இக்கோரிக்கை மனுவானது அனைத்துலக அரங்கில் வடமாகாண சபையின் தீர்மானத்திற்கும் அதன் உள்ளடக்கத்திற்கும் கிடைத்த மாபெரும் அங்கீகாரமாகவே அரசியல் அவதானிகள் மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களால் நோக்கப்படுகின்றது.

விசேடமாக ஐ.நா மனித உரிமைகள் சபையினால் இலங்கை அரசிற்கு வழங்கப்பட்ட கால நீடிப்பு எவ்வித முன்னேற்றமுமின்றி முடிவடைந்த இந் நிலையில் மார்ச் மாதம் இடம்பெறவிருக்கும் 40ஆவது கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கப்பட்ட இக் கோரிக்கை மனுவானது இலங்கை சார்ந்த ஐ.நாவின் தீர்மானங்களில் தாக்கம் செலுத்தும் காரணியாக அமையுமென்பது திண்ணம்.
குறிப்பாக இக் கோரிக்கை மனுவில் கையொப்பமிட்டுள்ள அமைப்புக்களால், இவ் விடயமானது தமது நாட்டு மக்கள் மத்தியிலும் மற்றும் அரச தரப்பினரின் கவனத்திற்கும் எடுத்துச் செல்லப்பட்டு விளக்கமளிக்கப்பட்டு வருகின்றது.
இச் செயற்பாடானது, ஈழத் தமிழர் பிரச்சனை உலகளாவிய ரீதியாக பல்லின மக்களிடையேயும் பன்னாட்டு அரச தரப்பினரிடையேயும் ஓர் முக்கிய பேசு பொருளாக்கப்பட்டுள்ளதானது, எம் இலக்கை எட்டுவதற்கான பயணத்தின் ஓர் முக்கிய படிக்கல்லாகும்.

இத்தருணத்தில் இக் கோரிக்கையை ஐ.நா மன்றில் சமர்ப்பித்த மற்றும் அதற்கு ஆதரவளித்த சர்வதேச அமைப்புகளிற்கும் உலகத் தமிழர்கள் சார்பில் தமிழர் இயக்கம் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழின அழிப்பிற்கு பன்னாட்டு நீதி விசாரணை கோரி ஐ.நா சபையிடம் கோரிக்கை! - Reviewed by Author on February 17, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.