அண்மைய செய்திகள்

recent
-

உலகம் சிறந்த-சூப்பர் 10 பெண்கள் -


நடியா முராத்-அமைதிப் பரிசு!



இராக்கின் சிஞ்சர் மாவட்டத்தில் வசித்துவந்த 19 வயது மாணவி நடியா. 2014-ம் ஆண்டு, ஆகஸ்ட் 15 அன்று இவர் கிராமத்தைச் சுற்றிவளைத்த ஐ.எஸ் அமைப்பு நூற்றுக் கணக்கானோரைக் கொன்று குவித்தது. இளம் பெண்களைப் பாலியல் வன்புணர்வு செய்து, அடிமைகளாக இழுத்துச் சென்றது. தன் மொத்தக் குடும்பத்தையும் தொலைத்து அநாதையான நடியா, ஐ.எஸ் தீவிரவாதிகளின் கைதியாக அடைக்கப்பட்டார். கடும் பாலியல் சித்ரவதைக்கு உள்ளானார். நவம்பர் மாதம் அங்கிருந்து தப்பினார். பெல்ஜியப் பத்திரிகை ஒன்றுக்குத் தன் கதையைத் துணிவுடன் சொல்ல, இராக்கில் நடைபெறும் கொடுமைகள் உலகின் கவனம்பெற்றன. `போரிலோ, பேரிடரிலோ, எந்தக் காலத்திலும் பெண்ணே அதிக இன்னலுக்கு ஆளாகிறாள்' என்பதைத் தொடர்ந்து பேசியும் எழுதியும் வந்த நடியா, `நடியாஸ் இனிஷியேட்டிவ்' என்ற அமைப்பைத் தொடங்கி, இராக்கின் குர்து இன மக்களுக்கு உதவிகளைச் செய்துவருகிறார். சூப்பர் பெண் நடியாவுக்கும், டென்னிஸ் முக்வேகேக்கும் அமைதிக்கான நோபல் பரிசு 2018-ம் ஆண்டு வழங்கப்பட்டிருக்கிறது.

ரேச்சல் மொரிசன்

ஒளிப்பதிவுக்கான ஆஸ்கர் பரிந்துரை பெற்ற முதல் பெண்!



1940-களில் அமெரிக்காவில் கறுப்பர்களின் நிலை மற்றும் அடக்குமுறையை அவர்கள் எதிர்த்த விதம் குறித்த திரைப்படம் 2017-ல் வெளிவந்த `மட்பெளண்ட்'. இந்தத் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் 39 வயதான ரேச்சல் மொரிசன்.

90 ஆண்டு கால ஆஸ்கர் வரலாற்றில் ஒளிப்பதிவுக்காக முதன்முறையாகப் பரிந்துரைக்கப்பட்ட பெண் ரேச்சல்தான். சிறந்த நடிகை, துணை நடிகை தவிர, குறிப்பாகத் தொழில்நுட்பப் பிரிவுகளில் இதுவரை எந்தப் பெண்ணின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டது இல்லை. “வெறும் 2% பெண்கள் மட்டுமே பணியாற்றும் ஒளிப்பதிவுத்துறையில் இதுவரை யாரும் ஆஸ்கர் பரிந்துரை பெறவில்லை என்பது நியாயமே. ஆனால், திரைப்படத் தொழில்நுட்பத் துறையில் பெண்கள் அதிக
அளவில் பங்கேற்க வேண்டும் என்பதே என் ஆசை” என்று கூறியிருக்கிறார் ரேச்சல். `மட்பௌண்ட்' திரைப்படத்தைவிட, அதிக புகழ் ரேச்சலுக்குக் கிடைத்தது கமர்ஷியல் பிளாக்பஸ்டரான `பிளாக் பாந்தர்' படத்துக்கு!

ரேச்சல் மொரிசன்

ஒளிப்பதிவுக்கான ஆஸ்கர் பரிந்துரை பெற்ற முதல் பெண்!



1940-களில் அமெரிக்காவில் கறுப்பர்களின் நிலை மற்றும் அடக்குமுறையை அவர்கள் எதிர்த்த விதம் குறித்த திரைப்படம் 2017-ல் வெளிவந்த `மட்பெளண்ட்'. இந்தத் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் 39 வயதான ரேச்சல் மொரிசன்.

90 ஆண்டு கால ஆஸ்கர் வரலாற்றில் ஒளிப்பதிவுக்காக முதன்முறையாகப் பரிந்துரைக்கப்பட்ட பெண் ரேச்சல்தான். சிறந்த நடிகை, துணை நடிகை தவிர, குறிப்பாகத் தொழில்நுட்பப் பிரிவுகளில் இதுவரை எந்தப் பெண்ணின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டது இல்லை. “வெறும் 2% பெண்கள் மட்டுமே பணியாற்றும் ஒளிப்பதிவுத்துறையில் இதுவரை யாரும் ஆஸ்கர் பரிந்துரை பெறவில்லை என்பது நியாயமே. ஆனால், திரைப்படத் தொழில்நுட்பத் துறையில் பெண்கள் அதிக
அளவில் பங்கேற்க வேண்டும் என்பதே என் ஆசை” என்று கூறியிருக்கிறார் ரேச்சல். `மட்பௌண்ட்' திரைப்படத்தைவிட, அதிக புகழ் ரேச்சலுக்குக் கிடைத்தது கமர்ஷியல் பிளாக்பஸ்டரான `பிளாக் பாந்தர்' படத்துக்கு!

சவிதா ஹாலப்பனவர்

கருக்கலைப்பை அனுமதிக்கும் சட்டத்தை அயர்லாந்து இயற்றக் காரணமான இந்தியப் பெண்!



2012-ம் ஆண்டு, அயர்லாந்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சவிதா ஹாலப்பனவர் என்ற பல் மருத்துவர் 17 வார கர்ப்பிணியாக இருந்தபோது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கருவைக் கலைத்தால் அவர் உயிர் தப்பலாம் என்ற நிலையில், அரசுக்குக் கருக்கலைப்பு வேண்டி மருத்துவமனை நிர்வாகம் தகவல் அனுப்ப, அரசு பதில் தருவதற்குள் பரிதாபமாக இறந்து போனார் சவிதா. இவரது மரணத்தைத் தொடர்ந்து அயர்லாந்தில் மகளிர் அமைப்புகள் மருத்துவ அவசர காலங்களில் கருக்கலைப்பு செய்துகொள்ளப் பெண்ணுக்கு உரிமை தேவை என்று போராட்டத்தில் குதித்தன. அதன் எதிரொலியாக, இந்த 2018-ம் ஆண்டு மே மாதம் கருக்கலைப்பு குறித்த நாடு தழுவிய வாக்கெடுப்பு ஒன்றை நடத்தியது அயர்லாந்து அரசு. பெரும்பான்மை மக்கள் அதற்கு ஆதரவாக வாக்களித்ததால், மருத்துவ எமர்ஜென்சி மற்றும் தாய் உடலுக்கு ஆபத்து என்று கணித்தால், 20 வாரங்கள் வரை கருக்கலைப்பு செய்யலாம் என்ற சட்டத்தை இயற்றியது அயர்லாந்து அரசு. தன் உயிரைக் கொடுத்து இந்தச் சட்டத்துக்காக மக்கள் போராட்டத்தை முடுக்கிவிட்ட சவிதாவின் நினைவாக, இந்தச் சட்டத்துக்கு `சவிதா சட்டம்' எனப் பெயரிடுமாறும் அமைப்புகள் அரசைக் கோரிவருகின்றன.

கீதா கோபிநாத்

சர்வதேச நிதி ஆணையத்தின் (ஐ.எம்.எஃப்) தலைமைப் பொருளாதார வல்லுநர்!



2018-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் சர்வதேச நிதி ஆணையத்தின் தலைமைப் பொருளாதார வல்லுநர் பதவிக்கு நியமிக்கப்பட்டார் இந்தியப் பெண்ணான கீதா கோபிநாத்.

1971-ம் ஆண்டு, கொல்கத்தாவில் பிறந்து வளர்ந்த கீதா, டெல்லி லேடி ஸ்ரீராம் கல்லூரியில் பயின்றவர். பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர், இப்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து வரும் கீதா, கேரள மாநிலத்தின் பொருளாதார ஆலோசகராகவும் செயல்பட்டு வந்தார். சர்வதேச அளவில் ஏறத்தாழ 40 ஆய்வு அறிக்கைகளை வெளியிட்டிருக்கும் கீதா, இந்தப் பதவிக்கு ரகுராம்ராஜனுக்குப் பின்வரும் இந்தியரும், முதல் இந்தியப் பெண்ணும் ஆவார். பாஸ்டன் ஃபெடரல் ரிசர்வ் வங்கியிலும் ஆலோசகராகப் பணியாற்றுகிறார் கீதா. “உலகின் தலைசிறந்த பொருளாதார நிபுணர்களில் ஒருவர் கீதா என்பதை அவரது அனுபவமும் பணியும் நமக்கு எடுத்துச் சொல்கின்றன. இதுபோன்ற திறமைவாய்ந்த பெண் ஐ.எம்.எஃப் பொருளாதாரப் பிரிவுக்குத் தலைமை தாங்குவது மிகுந்த மகிழ்வை அளிக்கிறது” என்று கூறியிருக்கிறார் சர்வதேச நிதி ஆணையத்தின் தலைவர் கிறிஸ்டின் லகார்து!

பெக்கி விட்சன்

சர்வதேச விண்வெளி மையத்தில் (ஐ.எஸ்.எஸ்) நாசா மூலம் தலைமையேற்ற முதல் பெண் பணி ஓய்வு!



அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசாவில் 2018 ஜூன் 15 அன்று தன் பணியை நிறைவுசெய்து ஓய்வு பெற்றார் சாதனைப் பெண் பெக்கி விட்சன்.

58 வயதான பெக்கி, 1986-ம் ஆண்டு ஹூஸ்டன் நகரில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி மையத்தில் பணியாற்றத் தொடங்கினார்.

2002-ம் ஆண்டு ஐ.எஸ்.எஸ்-ஸின் எக்ஸ்பெடிஷன் 5-ல் பங்கேற்று விண்வெளி சென்றவர், அதன்பின் 2008-ம் ஆண்டு எக்ஸ்பெடிஷன் 16-ல் சுற்றிவரும் ஆய்வகத்தின் முதல் பெண் கமாண்டர் ஆனார். 2016-17-ல் மீண்டும் ஐ.எஸ்.எஸ்-ஸின் தலைமையை ஏற்கும் வாய்ப்பு அவருக்குக் கிட்டியது. இதன் மூலம் சர்வதேச விண்வெளி மையத்தின் பெண் தலைவராக இருமுறை பணியாற்றிய பெருமையைப் பெற்றார் பெக்கி. நாசாவின் பெண் விண்வெளி வீரர்களில் அதிகப்படியாக 665 நாள்களை விண்வெளியில் கழித்த பெண் என்ற சாதனையும் புரிந்திருக்கிறார் இவர். 60 மணி நேரம் 21 நிமிடங்கள் ஐ.எஸ்.எஸ்ஸுக்கு வெளியே விண்வெளியில் `ஸ்பேஸ் வாக்கிங்' செய்த பெண் என்ற சாதனையையும் புரிந்திருக்கிறார் பெக்கி. விண்வெளியில் இருந்த வயது முதிர்ந்த நபர் என்ற சாதனையும் பெக்கியுடையதே. `நாசாவுக்கும் ஒட்டுமொத்த நாட்டுக்கும் பெக்கி ஒரு இன்ஸ்பிரேஷன்' என்று கூறியிருக்கிறார் நாசாவின் தலைவர் ஜிம் பிர்டென்ஸ்டைன்!

ஏஞ்சலா மெர்க்கல்

ஜெர்மனியின் அதிபராக நான்காவது முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர்!



1954-ம் ஆண்டு கிழக்கு ஜெர்மனியின் குக்கிராமத்தில் வாழ்ந்த ஏஞ்சலா, பெர்லின் சுவர் இடிக்கப்பட்டபோது பிரபல அரசியல்வாதியான ஹெல்மட் கோலின் கிறிஸ்துவக் குடியரசுக் கட்சியுடன் பிணைப்பை ஏற்படுத்திக்கொண்டார்.

1999-ம் ஆண்டு, பொருளாதார மோசடியில் கோல் சிக்கியபோது, அவரைத் தூக்கியெறிய வேண்டும் என்று கட்சியிடம் நேரடியாக வேண்டுகோள் வைத்தார். எந்த நிலையிலும் நேர்மை தவறாதவர் என்று ஜெர்மானியர் இவர்மீது நம்பிக்கை வைக்க, இந்தச் சம்பவமும் ஒரு காரணம். வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு இரண்டையும் முன்னிறுத்தி 2005-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வென்றார் ஏஞ்சலா. இவரது பொறுமை மற்றும் தீர்க்கமான அரசியல், பொருளாதார முடிவுகள் நல்ல பலனைக் கொடுக்க, ஜெர்மனி மக்களின் முழு நம்பிக்கையைப் பெற்றுவிட்டார் ஏஞ்சலா. 2018-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டி எதுவுமின்றி நான்காவது முறை அதிபர் பதவியை அடைந்திருக்கிறார் மெர்க்கல். பெர்லின் நகரில் தன் விஞ்ஞானி கணவருடன் சாதாரண ஃபிளாட் ஒன்றில் வசிக்கும் ஏஞ்சலா, தனக்கான ஷாப்பிங்கை அருகே இருக்கும் சூப்பர் மார்க்கெட்டில் தானே செய்துகொள்கிறார். விடுமுறை நாள்களில் அருகே உள்ள ஆல்ப்ஸ் மலைத் தொடரில் ஹைக்கிங் செய்கிறார். `இப்படியும் ஓர் அதிபரா?' என்று உலகே இவரைப் பார்த்து வியக்கிறது!

அசிசா அல் யூசுஃப் மற்றும் `விமன் டு டிரைவ்' இயக்கத்தினர்

பெண்கள் கார் ஓட்டலாம் என்ற சட்டத்திருத்தத்தை சவுதி அரசு கொண்டு வரக் காரணமானவர்கள்!



கடுமையான மதக் கட்டுப்பாடுகளைக் கொண்ட சவுதி அரேபியாவில் இன்னமும் பெண்களுக்கு ஓட்டுரிமையோ, ஆண் துணையின்றி தனியே வெளியே செல்லும் உரிமையோ இல்லை. 2007-ம் ஆண்டு முதல் பெண்களுக்கு கார் ஓட்டும் உரிமை கோரி ஆங்காங்கே சிறு அளவில் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர் சவுதி பெண்கள். 2018 மே மாதம் அசிசா அல் யூசுஃப், லுஜான் அல் ஹத்லுல், இமான் அல் ஜஃபான், ஆயிஷா அல் மனா, மதேஹா அல் அஜ்ரோஷ் உள்ளிட்ட `விமன் டு டிரைவ்' இயக்கத்தைச் சேர்ந்த ஒன்பது பேர் அரசால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்ற தகவல் இதுவரை தெரியவில்லை. ஆனால், இவர்களது தொடர் போராட்டம் மற்றும் சரிந்து வரும் பொருளாதார நிலை காரணமாக, ஒரு வழியாகப் பெண்கள் கார் ஓட்ட ஜூன் மாதம் அனுமதி அளித்தது சவுதி அரசு.

இவர்களில் 60 வயதான அசிசா பணி ஓய்வுபெற்ற பேராசிரியர், ஆறு குழந்தைகளின் தாய். 2016-ல் 14,700 பேர் கையொப்பமிட்ட கார் ஓட்டும் உரிமை கோரும் விண்ணப்பத்தை இவர் மன்னர் சல்மானிடம் கொடுக்கச் சென்றபோது, திருப்பி அனுப்பப்பட்டார். இப்போது அசிசா எங்கிருந்தாலும் மகிழ்வார் என்றே நம்புவோம்!

ஹெலெனா நுதூம்

பார்வை காக்க 35,000 அறுவை சிகிச்சைகள் செய்த மருத்துவர்!



ஆப்பிரிக்காவின் நமீபியா நாட்டில் பிறந்து உள்நாட்டுப் போரால் அகதியாக ஜாம்பியாவில் தஞ்சம் புகுந்த குடும்பத் தைச் சேர்ந்தவர் ஹெலெனா. அங்கிருந்து காம்பியா, அங்கோலா என்று அலைந்து திரிந்த குடும்பம், ஒருவழியாக ஜெர்மனிக்கு மருத்துவம் படிக்க ஹெலெனாவை அனுப்பியது. லீப்சிக் பல்கலைக்கழகத்தில் கண் மருத்துவம் பயின்ற பின் இந்தியா வந்தவர், ஆறு மாதங்கள் தங்கியிருந்து, வெப்ப நாடுகளில் என்ன மாதிரியான கண் நோய்கள் மக்களைத் தாக்குகின்றன என்று கற்றுத் தேர்ந்தார்.

1997-ம் ஆண்டு நமீபியா திரும்பியவர் அங்கு நாட்டின் முதல் இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தினார். அடுத்த ஆண்டும் முகாமை அறிவிக்க, இம்முறை நூற்றுக்கணக்கில் மக்கள் படையெடுத்தனர். 1997 முதல் 2018 வரை கிட்டத்தட்ட 35,000 இலவச கண் அறுவைசிகிச்சைகளை நமீபியாவில் செய்திருக்கிறார் ஹெலெனா.

விண்ட்ஹோக் கண் மருத்துவமனையின் தலைவராகப் பணியாற்றும் ஹெலெனா, ஓய்வு நேரங்களில் சமைப்பது, மலையேற்றம் என்று மனதுக்குப் பிடித்தவற்றைச் செய்கிறார். நமீபிய மக்கள் `மிராக்கிள் டாக்டர்' என்றே இவரை அழைக்கின்றனர். பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள டாப் 100 பெண்கள் பட்டியலிலும் இவர் இடம்பிடித்திருக்கிறார்!

கிருஷ்ணகுமாரி கோலி

பாகிஸ்தானின் முதல் சிறுபான்மையின பெண் செனட்டர்!



1979-ம் ஆண்டு பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் சிறுபான்மை இந்து விவசாயக் கூலிக் குடும்பத்தில் பிறந்தார் கிருஷ்ணகுமாரி. பிணைத் தொகையைக் கட்ட முடியாத காரணத்தால் தனியார் சிறையில் மொத்த குடும்பமும் மூன்றாண்டுகள் அடிமைகளாகத் தவிக்க நேர்ந்தபோது கிருஷ்ணகுமாரி மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். அங்கிருந்து வெளியேறியவர், விடாப்பிடியாக கல்விமீது தன் முழு கவனத்தையும் திருப்பினார்.

பாகிஸ்தான் பீப்பிள்ஸ் பார்ட்டி கட்சியில் சேர்ந்தவர், பின்தங்கிய மக்களுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். தார் பாலைவனம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகவும் ஒலித்து வந்தார். சிந்து மாகாணத்தின் பெண்களுக்கான ரிசர்வ் தொகுதியில் கிருஷ்ணகுமாரியை 2018-ம் ஆண்டு, மார்ச் மாதம் நடைபெற்ற தேர்தலில் நிறுத்தியது பிபிபி கட்சி. கொத்தடிமையாக வாழ்க்கையைத் தொடங்கிய சிறுபான்மையின தலித் பெண் ஒருவர், பாகிஸ்தானின் செனட்டராக உயர்ந்திருக்கிறார். பிபிசியின் டாப் 100 பெண்கள் பட்டியலிலும் இடம் பிடித்திருக்கிறார். “கல்வி ஒன்றே உண்மையான சக்தி. அரசியல் தெளிவையும், சுய முன்னேற்றத்தையும் அதுவே தரவல்லது” என்கிறார் கிருஷ்ணகுமாரி!




















உலகம் சிறந்த-சூப்பர் 10 பெண்கள் - Reviewed by Author on March 08, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.