Top Ad unit 728 × 90

அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் மூன்று தலைமுறை கடந்தும் மட்பாண்ட உற்பத்தியில்-படங்கள்


நாகரீகம் என்ற மோகத்தில் நாம் நமது அடையாளங்களை தொழில்களை இழந்து வருகின்றோம் மறந்து வருகின்றோம் அப்படியான தொரு…..

தமிழர்களின் பாரம்பரிய கைத்தொழில்களில் ஒன்றான மட்பாண்ட உற்பத்தி கைத்தொழில் உள்ளது அன்றைய காலம் பாவனையில் அதிகம் இருந்த மட்பாண்ட பொருட்கள் பாத்திரங்கள் இப்போது காணக்கிடைப்பதில்லை அரிதாகவே உள்ளது. அந்த தொழிலை மேற்கொள்வோரும் குறைவாகத்தான் உள்ளனர் அவ்வாறு அருகிவரும் தொழிலின் மூன்று தலைமுறை கடந்து மன்னாரில் சிறப்பாக இயங்கி வருகின்ற தந்தை வெள்ளைச்சாமி மகன் மகாலிங்கம் அவர்கள் இருவரையும் அவர்களது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியபோது….

தங்களை பற்றி......
மன்னார் அடம்பன் கறுக்கா குளம் கிராமத்தில் வசித்து வருகின்றோம் நான் வெள்ளைச்சாமி எனது மகன் மகாலிங்கம் நாங்கள் மூன்று தலைமுறை கடந்து மட்பாண்ட உற்பத்தி கைத்தொழில மன்னாரில் சிறப்பாக இயங்கி வருகின்றோம்.
எனது தந்தையிடம் இருந்து நான் கற்றுக்கொண்டேன் என்னிடம் இருந்து எனது மகனும் கற்றுக்கொண்டான் நான் சிறுவயதில் கற்றுக்கொண்டாலும் முழுமையாக 30 வயதில் இருந்து ஈடுபட்டு வருகின்றேன் இப்போது எனக்கு வயது 80 ஆகின்றது முதுமை காரணமாக செய்ய முடிவதில்லை மகன் மகாலிங்கம் செய்து வருகின்றார்.

மன்னாரில் நீங்கள் மட்டுமா மடபாண்ட உற்பத்தியில் ஈபட்டுள்ளீர்கள்…
இல்லை மன்னாரில் முதல் பலர் இவ்வுற்பத்தியில் ஈடுபட்டு வந்தார்கள் காலச்சுழச்சியாலும் யுத்தத்தாலும் வருமானம் போதாமையாலும் மெல்ல மெல்ல குறைந்து தற்போது நாங்கள் கறுக்கா குளத்திலும் இன்னொருவர் மடுக்கரையிலும் இயங்கி வருகின்றோம் எங்கள் இருவரையும் விட பெரியளவில் வேறு யாரும் செய்யவில்லை….செய்வதாக அறியவும் இல்லை

இத்தொழிலில் அன்றா… இல்லை இன்றா… வருமானம் உள்ளது….
வருமானம் எனும் போது அன்று எமது வாழ்வாதாரத்தினை கொண்டு செல்லக்கூடியதாக இருந்தது இன்று மிகவும் சிரமப்படவேண்டியுள்ளது பாவனையாளர்களின் தொகை குறைந்துள்ளது.எல்லாம் பிலாஸ்ரிக்கும் சில்வரும் என்றாகிப்போனது தான் காரணம்.

மட்பாண்ட உற்பத்திகள் பற்றி---
சட்டி முட்டி  மூடி சிறிய பெரிய பானைகள் அடுப்புக்கள் தண்ணீர் பாத்திரங்கள் மற்றும் அனைத்து பாத்திரங்களும் செய்யலாம்.
திருவிழாக்காலங்களில்  உற்பத்தி பற்றி…
திருவிழாக்காலங்களில்  பரவாயில்லை வருமானம் கிடைக்கும் நிறைய ஒடர்கள்  வரும் ஆனால் அதற்கு போதுமான மண்தான் எங்களுக்கு பெரும் பிரச்சினையாக வரும்.

தங்களின் உற்பத்திக்கு எங்கிருந்து மண் எடுக்கின்றீர்கள்.....
களி மண் முருங்கனில் இருந்து எடுத்தோம் தற்போது மடுக்கரை களிமண் தான் நல்ல களிமண்ணாகவுள்ளது அதற்கு போமிற் எடுக்கவேண்டும் அது இலகுவாக கிடைக்கின்றது ஆனால் களிமண் எடுக்கும் இடங்கள் தனியார்காணிகள் என்பதினால் குறிப்பிட்டளவுதான் எடுக்க முடிகின்றது ஒரு லோட் கொண்டு வந்து சேர்க்க பத்தாயிரம் ரூபா செலவாகின்றது.

மட்பாண்ட உற்பத்தியின் படி நிலை.....
தேவையான மண் கிடைத்ததும் அதை தொட்டியில் தண்ணீரில் கரைத்து வடிகட்டி கூழங்களை அகற்றி கழித்தன்மையில் சிறிய சிறிய கட்டிகளாக சேகரித்தல் பின்பு சக்கரத்தில் வைத்து எமக்கு தேவையான அளவுகளில் தேவையான பாத்திரங்களை வனைதல் பின்பு காயவைத்தல் மெதுவாக தட்டி பலப்படுத்தல் வர்ணம் பூசுதல் காயவைத்தல் பின்புதான் தகுந்த விறகு மற்றும் வைக்கோல் கொண்டு மாறி மாறி பாத்திரங்களை அடுக்கி சூளையிடுதல்.

பொறுமையும் நிதானமும் அவசியம் கொஞ்சம் பிசகினால் ஓட்டை விழும் உடைந்து விடும் குறைந்தது ஒரு மட்பாண்டம் செய்து முடிய 5 நாட்கள் தேவைப்படும் ஒன்று என்று தனியாக செய்வதில்லை குறைந்தது 100-200 என்று தான் சூளை யிடுவோம்.

சூளை அமைத்தல் அதன் நிலையும் பற்றி…
சூளை என்பதுதான் எமது தொழிலின் பிரதானமான பாகம் எனலாம் எப்படியும் நல்ல முறையில் அமைப்பதற்கு குறைந்தது 1இலட்சத்தி ஜம்பதினாயிரம் ரூபா தேவை சூளைகளிமண்ணில் அமைத்தாலும் மேற்கூரையானது தரமான முறையில் அமைக்கவேண்டும் ஆரம்பத்தில் ஓடு கொண்டு மேய்ந்து இருந்தோம் அது அதிகமான வெப்பத்தினால் தாக்குப்பிடிக்க முடியவில்லை கிடுகு ஓலை கொண்டு மேய்ந்தால் வெப்பத்திற்கு தீப்பற்றும் அதனால் பாரம் குறைந்நதும் மழையின் போதும் பாதுகாப்பனதுமான முறையில் தகரம் கொண்டு கொட்டகை அமைத்துள்ளோம் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை சூளை புதிதாக அமைக்க வேண்டும்.

மகன் மகாலிங்கம் அவர்களிடம் தங்களின் தற்போதைய எதிர்பார்பபு பற்றி---
தற்போதைய எதிர்பார்ப்பு எனக்கு நல்ல சூளை அமைப்பதற்கு நிதியுதவி செய்ய யாராவது முன்வரவேண்டும். நிறை நிறுவனங்களைச்சார்நவர்கள்  வந்து சந்தித்து தேவையை கேட்டறிந்து செல்கின்றார்கள் ஆனால் ஒருவரும் எனது தேவையை நிறைவேற்றியதாக இல்லை தற்போது மாந்தைமேற்கு பிரதேச செயலக அதிகாரிகள் எனது தேவையினை கேட்டு பதிந்து கொண்டு சென்றுள்ளனர் நம்பியுள்ளேன் மிகவிரைவில் எனது தேவை நிறைவேறும் என்று…

தங்களின் எதிர்காலச்சிந்தனை இவ்வுற்பத்தி பற்றி…
கவலையாகத்தான் உள்ளது பரம்பரை பரம்பரையாக மூன்றாவது தலைமுறை கடந்து செய்துகொண்டு வருகின்ற எமது தொழில் தெரிந்த தொழில் என்னுடன் முடிவுக்கு வரப்போகின்றது. காரணம் எனது பிள்ளைகள் அத்தொழில் பழகவில்லை அவர்களுக்கு விருப்பமம் இல்லை அதிக நேரம் செலவு ஆனால் வருமானம் குறைவு என்பதால் குலத்தொழிலை விட்டு வெவ்வேறு தொழில் பழகி வேலை செய்கின்றார்கள்
என்ன செய்ய முடியும் என்னால் முடிந்த வரை தொடர்சிசியாக செய்வேன் எனக்குப்பின்….???

தங்களையும் தங்களது தொழிலையும் வெளிப்படுத்த வில்லையே….
என்னத்தினை வெளிப்படுத்த  கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள் என்ற பழமொழக்கு ஏற்ப எமது பாரம்பரியத்தொழில் சிறந்த கைத்தொழில் பல ஊடகங்கள் வந்து படம் பிடிப்பார்கள் தேவைகளை கேட்டறிவார்கள் ஏதோ எல்லாம் செய்து தருவதுபோல கதைத்துவிட்டு சென்று விடுவார்கள் அவர்களுக்கு அவர்களின் வேலை முடிந்தால் சரி அதற்கு எங்களது வேலையை குழப்புவார்கள் அப்படித்தான் நீங்களும் வந்துள்ளீர்கள் என்று நினைத்தேன் இருந்தாலும் நியூமன்னார் இணையம் தங்களது செயற்பாடு பாராட்டுக்குரியதாகவுள்ளது உங்கள் மூலமாகவென்றாலும் எமது தேவைகள் நிறைவேறும் என்றால் மகிழ்ச்சியே…
மட்பாண்ட பொருட்களின் பாவனையும்  மண்ணும் அதிகமாக கிடைக்குமானல் எமது தொழில் சிறக்கும் என்பதில் சந்தேகம் இல்லையே....

சந்திப்பு
-வை.கஜேந்திரன்-
மன்னாரில் மூன்று தலைமுறை கடந்தும் மட்பாண்ட உற்பத்தியில்-படங்கள் Reviewed by Author on March 17, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.