அண்மைய செய்திகள்

recent
-

தமிழ் தேசியத்திற்கு எதிராக செயற்படும் எல்லா சக்திகளையும் விட்டொழித்து சமூக சமய நல்லிணக்கத்திற்கான வழிகளை ஏற்படுத்துமாறு மக்களையும் ஊடகங்களையும் அன்பாக கேட்டு நிற்கின்றேன்-மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை-(படம்,அறிக்கை இணைப்பு)


தமிழ் தேசியத்திற்கு எதிராக செயற்படும் எல்லா சக்திகளையும் விட்டொழித்து சமூக சமய நல்லிணக்கத்திற்கான வழிகளை ஏற்படுத்துமாறு மக்களையும் ஊடகங்களையும் அன்பாக கேட்டு நிற்கின்றேன்-

மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை-(படம்,அறிக்கை இணைப்பு)
-----------------------------------------------------------------------------
மன்னார் மாவட்ட தமிழ் பேசும் மக்கள் மத்தியிலே ஏற்பட்டிருக்கும் இந்த சலசலப்பை பயன்படுத்தி பல அரசியல் வாதிகள் இச் சூழலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் விதமாக மக்களை தூண்டி வரும் விதத்தில் செயற்படுவதை நாம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றோம் என மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார்.

மாந்தை லூர்து அன்னை திருத்தலத்திற்கு முன்பாக நடை பெற்ற சம்பவம் தொடர்பாக அவர் இன்று செவ்வாய்க்கிழமை (26) ஊடக அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

-குறித்த அறிக்கையிலேயே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

-குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,,,

கடந்த பங்குனி மாதம் 3ஆம் திகதி மாந்தை லூர்து அன்னை திருத்தலத்திற்கு முன்பாக நடை பெற்ற சம்பவம் தொடர்பாக மிகவும் மனம் வருந்துகின்றேன்.

இந்நிகழ்வு தொடர்பாக கடந்த இரண்டு, மூன்று வாரங்களாக ஊடகங்களில் பல்வேறு கருத்துக்களும் விமர்சனங்களும் பகிரப்பட்டு வருகின்ற நிலையிலே சமூகங்களுக்கிடையிலே பிரிவினையையும் முரண்பாடுகளையும் வன்முறைகளையும் தூண்டக்கூடிய விதமாக செய்திகள் அமைந்திருப்பதை வன்மையாக கண்டிப்பதோடு இதன் உண்மை நிலையை அனைவரும் அறிந்து சமாதானத்திற்கான,சகோதரத்துவத்திற்கான வழி முறைகளை கையாள உங்கள் அனைவரையும் வினையமாக வேண்டி நிற்கின்றேன்.

கடந்த நான்கு வருடங்களாக ஒவ்வொரு ஆண்டும் சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு நல்லிணக்க அடிப்படையில் லூர்து அன்னை ஆலயத்துக்கு முன்பாக தற்காலிக அலங்கார வளைவு அமைக்கப்பட்டு சிவராத்திரி நிறைவுற்ற நிலையில் அது அகற்றப்பட்டு வந்தது.

2018ஆம் ஆண்டு இந்த அலங்கார வளைவு திருவிழா நிறைவுற்ற போதும் அது அகற்றப்படாத நிலையில் அப்பிரதேச வாழ் கத்தோலிக்கர்கள் நல்லிணக்கம் கொண்டவர்களாக பொறுமையோடு செயற்பட்டு வந்தனர்.

இந் நிலையில் கடந்த 02-03-2019 சனிக்கிழமை அன்று இந்த தற்காலிக அலங்காரவளைவினை மாற்றி நிரந்தர அலங்கார வளைவினை அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதை அறிந்த பங்குத்தந்தை அருட்பணி மரியதாஸ் லியோன் அடிகளார் இச் செயற்பாடு இரு சமூகங்களிடையே முரண்பாடுகளை தோற்றுவிக்கும் என்பதை உணர்ந்தவராக திருக்கேதிஸ்வர ஆலயப் பொறுப்பாளர் திரு. இராமகிருஸ்ணன், மற்றும் இளைப்பாறிய அதிபர் திரு. தயானந்தராஜா இவர்;களோடு கலந்துரையாடி வழமை போன்றே தற்காலிக வளைவினை பயன்படுத்துவது என்ற இணக்கப்பாட்டுக்கு வந்திருந்தனர்.

இவ்வாறிருக்க கடந்த 3ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று அந்தபகுதியில் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவு அகற்றப்பட்டு நிரந்தர அலங்காரவளைவு அமைப்பதற்கான கொங்றீற், கம்பிகள் கொண்டு கனரக வாகனங்களின் உதவியோடு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட வேளையில் அப்பிரதேச கிறிஸ்தவ மக்களால் நிரந்தரமாக போடப்பட்ட கொங்கிறீட் தூணானது பல இழு பறிகளோடு அகற்றப்பட்டது.

இச்சம்பவமானது ஏற்கனவே திட்டமிட்டோ அல்லது கத்தோலிக்க குருக்களின் உந்துதலாலோ நடை பெறவில்லை என்பதோடு சம்பவம் நடந்த வேளையில் ஸ்தலத்திலே கத்தோலிக்க குருக்கள் யாரும் பிரசன்னமாக இருக்க வில்லை என்பதை அறுதியோடு கூறிக்கொள்கின்றேன்.

மேற்குறிப்பிடப்பட்ட சம்பவமானது உலகம் பூராகவும் பரந்து வாழும் தமிழ் பேசும் மக்கள் மத்தியிலே குறிப்பாக இந்து சமய தமிழர்கள் மத்தியிலே மனக்கிலேசங்களை ஏற்படுத்தி கத்தோலிக்க திருச்சபையையும் அதன் பணியாளர்களாகிய குருக்களையும் மிகவும் கீழ்த்தரமாகவும், மனவேதனைக்குள்ளாக்கும் விதமாகவும் பல விதமான உண்மைக்கு புறம்பான கருத்துக்களும் பிரச்சாரங்களும் பரப்பப்பட்டு வருவதை அறிந்து மிகவும் மனவேதனைப் படுகின்றேன்.

கடந்த 30 ஆண்டுகளாக தமிழினத்தின் துன்பியல் வரலாற்றிலே மக்களோடு மக்களாக தோள் நின்று உழைத்த, தமிழினத்தின் விடுதலைக்காக பாடுபட்ட, மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்களையும், இன்னும் தங்கள் இன்னுயிரையே ஈந்த பல கத்தோலிக்க குருக்களுடைய தமிழ் பற்றையும் தியாகத்தையும் கொச்சைப் படுத்தும் விதமாக பலர் தமது கருத்துக்களை சமூக ஊடகங்களிலும் வலைத்தளங்களிலும் பகிர்ந்து கொள்வதை வன்மையாகக் கண்டிப்பதோடு இச்செயற்பாடானது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் உரிமையோடு கேட்டுநிற்கின்றேன்.

மன்னார் தமிழ் பேசும் மக்கள் மத்தியிலே ஏற்பட்டிருக்கும் இந்த சலசலப்பை பயன்படுத்தி பல அரசியல் வாதிகள் இச்சூழலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் விதமாக மக்களை தூண்டி வரும் விதத்தில் செயற்படுவதை நாம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

குறிப்பாக மக்கள் மத்தியிலே பல நல்லெண்ணத்தை கொண்டிருக்ககூடிய பத்திரிகைகள் சமாதானத்தையும் சமூக ஒற்றுமையையும் மேம்படுத்தும் விதமாக நடந்து கொள்ளாமல் தங்கள் இலாபம் கருதி சமயங்களுக்கிடையில் பிணக்குகளை தோற்றுவிப்பதை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.

03-03-2019 அன்று நடந்த சம்பவத்தை குறித்து விளக்கமளித்த மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை விக்ரர் சோசை அடிகளாரின் நல்லிணக்க அறிக்கையானது பத்திரிகைகளில் புறம் தள்ளப்பட்ட நிலையில் பிரச்சனைகளை மேலும் தூண்டி விடும் விதமான உண்மைக்கு புறம்பான செய்திகளை முன்னுரிமைப்படுத்தி வன்முறையை தூண்டும் வகையில் நடந்து கொண்ட செயலை வன்மையாக கண்டிக்கின்றேன்.

கௌரவ மன்னார் நீதவான் ரீ.சரவணராஜா அவர்கள் இந்த அலங்கார வளைவை பிடுங்கியவர்களை உடனடியாக கைதுசெய்ய வேண்டும் என்று தீர்ப்பு கூறியதாகவும் அதை செயற்படுத்த பொலிசார் பின்னடிப்பு செய்வதாகவும் பத்திரிகையிலே உண்மைக்கு புறம்பான தகவல் பரப்பப்பட்டது.

அத்தோடு கடந்த 24ம் திகதி பொலிஸ் விசாரணைக்கு சமூகமளித்திருந்த பங்குத்தந்தையும் அவரோடு சேர்ந்த 10 பேர் தொடர்பான நிகழ்வை'பங்குத்தந்தை உட்பட பத்து பேர் நேற்று சரணடைவு'என்று 25-03-2019 அன்று ஒரு பத்திரிகையில் முன்பக்க செய்தியாக முன்னுரிமைப்படுத்தி பிரசுரித்திருப்பதை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.

இப்படியாக தமிழ்பேசும் எம் மக்கள் மத்தியிலே காணப்படும் ஒற்றுமையையும் சமயங்களிடையே காலாகாலமாக கட்டி காத்து வரும் நல்லுறவையும் களங்கப்படுத்தும் விதமாக தமிழ்தேசியத்திற்கு எதிராக செயற்படும் எல்லா சக்திகளையும் விட்டொழித்து சமூக சமய நல்லிணக்கத்திற்கான வழிகளை ஏற்படுத்துமாறு மக்களையும் ஊடகங்களையும் அன்பாக கேட்டு நிற்கின்றேன்.

நாம் பின்பற்றும் மதங்கள் எல்லாமே நம்மை சகோதரத்துவத்திற்கும் ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்கும் இட்டுச் செல்கின்ற ஒன்றாகவே இருக்கின்றன என்பதை நாம் உணர்ந்து பொறுமையோடும் புரிதலோடும் செயற்பட உங்கள் எல்லோரையும் கேட்டு நிற்கின்றேன்.என குறித்த ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.





தமிழ் தேசியத்திற்கு எதிராக செயற்படும் எல்லா சக்திகளையும் விட்டொழித்து சமூக சமய நல்லிணக்கத்திற்கான வழிகளை ஏற்படுத்துமாறு மக்களையும் ஊடகங்களையும் அன்பாக கேட்டு நிற்கின்றேன்-மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை-(படம்,அறிக்கை இணைப்பு) Reviewed by Author on March 27, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.