அண்மைய செய்திகள்

recent
-

இலங்கையில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த ஆச்சர்யம்--`1994-ல் மரணமடைந்தார்; 2019-ல் உடல் அடக்கம்!'-


வெளிநாட்டில் இறந்தவரின் உடலை, 25 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த ஊருக்குக் கொண்டுவந்து அடக்கம் செய்து ஆச்சர்யப்படுத்தியுள்ளனர், இலங்கையைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர்.

இலங்கை, யாழ்ப்பாணம் சாவகச்சேரியைச் சேர்ந்தவர் ஸ்டீபன் ஜார்ஜ். இத்தாலியில் வேலை செய்துகொண்டிருந்த ஸ்டீபன், 1994-ம் ஆண்டு மே மாதம் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவருக்கு, அப்போது 49 வயது. அவரின் குடும்பத்தினர் இலங்கையில் வசித்து வந்தனர். ஸ்டீபன் இறந்த சமயத்தில், இலங்கையில் யுத்தம் தீவிரமாக நடந்துவந்தது.  அதனால், இறந்தவரின் உடலை கொண்டுவரமுடியாத சூழல் ஏற்பட்டது. இத்தாலியில் இருந்த ஸ்டீபனின் உறவினர்கள், அவரின் உடலைப் பதப்படுத்த முடிவெடுத்தனர். இத்தாலி அரசின் அனுமதியுடன், ஸ்டீபனின் உடலை 25 ஆண்டுகளுக்கு உடல் பாதுகாப்பாக இருக்கும்படி பதப்படுத்தி வைத்தனர். இலங்கையில் போர்ச் சூழல் நிலவியதால், இந்த விஷயத்தை ஸ்டீபனின் குடும்பத்துக்கு தெரிவிக்க இயலவில்லை.

இலங்கைப் போரின் தீவிரம் சற்று குறைந்ததும், இந்த விவகாரம் ஸ்டீபன் குடும்பத்துக்குத் தெரியவந்தது.  இலங்கைப் போர் 2009-ம் ஆண்டு நிறைவுக்கு வந்தது. ஸ்டீபன் குடும்பம் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்தது. இதனால், அவரின் உடலை தாய் மண்ணுக்குக் கொண்டுவருவது பற்றி யோசிக்கவேயில்லை. சட்ட சிக்கல், பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால், கடந்த 25 ஆண்டுகளாக ஸ்டீபனின் உடலை தாய்மண்ணுக்குக் கொண்டுவரவேயில்லை. இந்நிலையில், இந்த மாதத்தோடு 25 வருடங்கள் நிறைவடைகின்ற நிலையில், ஸ்டீபனின் உடல் நேற்று முன்தினம் (08/04/2019) அதிகாலை யாழ்ப்பாணம் எடுத்துவரப்பட்டு, சாவகச்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது. உறவினர்கள் அஞ்சலிசெலுத்திய பின்னர்,  ஸ்டீபனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.


இது தொடர்பாக ஸ்டீபனின் மகன் ஜூட்சன் பேசுகையில், ``என் அப்பா 1983-ம் ஆண்டு பங்குனி மாதம் முதன்முதலாகத் தொழில் புரிவதற்காக இத்தாலிக்கு சென்றார். 1994-ம் ஆண்டு, மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். அந்தச் சமயத்தில் இலங்கையில் போர் நடந்து கொண்டிருந்தது. அதனால், நாங்கள் அப்பாவின் உடலை கொண்டுவர முடியாது என்று அவருக்கு இறுதிச் சடங்குகள் செய்து முடித்துவிட்டோம். பின்புதான், அப்பாவின் உடலை இத்தாலியில் இருக்கும் மாமா பதப்படுத்தி வைத்திருந்தது தெரியவந்தது. அதைக் கொண்டுவர போதுமான பணம் என்னிடத்தில் இல்லை. சில வருடங்கள் முன்னர்தான் எனக்கு லண்டனில் வேலை கிடைத்தது. அப்பாவின் உடலை சொந்த ஊரில் அடக்கம்செய்ய வேண்டும் என்று அம்மா ஆசைப்பட்டார். இதனால், சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்து, உடலை இங்கு கொண்டுவந்தோம். எங்கள் குடும்பம் 25 ஆண்டுகளுக்குப் பிறகு, அப்பாவுக்கு அஞ்சலிசெலுத்தியது. என் வாழ்வின் மறக்க முடியாத தருணம் அது’’ என்று நெகிழ்ந்தார்.

இத்தாலியில் வசித்துவரும் ஸ்டீபனின் மைத்துனர் பீலிக்ஸ் அமலேஸ்வரன் பேசுகையில், ``அந்த நேரத்தில் நாட்டில் போர் நடந்து கொண்டிருந்தது. எப்போது போர் நிறைவடையும் என்று தெரியாததால், ஸ்டீபனின் உடலை 25 வருடங்கள் பாதுகாப்பதற்காக நிறுவனம் ஒன்றிடம் ஒப்பந்தம்செய்து ஒப்படைத்தோம். இப்போது,  25 வருடங்கள் நிறைவடைவதால், உறவுகளின் விருப்பப்படி உடலை இலங்கைக்கு எடுத்துவந்தோம்’’ என்று தெரிவித்தார்.

ஸ்டீபனின் மூத்த மகளான சுபோதினி பேசுகையில், ``எங்கள் அப்பா முதன்முதலாக இத்தாலிக்கு செல்லும்போது, எனக்கு 7 வயது. அவர் எங்களை சிறந்த முறையில் வளர்ப்பதற்காக இத்தாலிக்குச் சென்று உழைத்தார். அந்தச் சமயத்தில், கடிதம் மூலமே அவர்களின் தொடர்புகள் இருந்தது. இன்றிருப்பது போன்ற நவீன வசதிகள் அப்போது இல்லை. அவர் அங்கு உடல்நலம் குன்றி இறந்துபோனார். எங்களுக்காக உழைத்து ஓய்ந்தவரின் உடலுக்கு இறுதிச் சடங்குகள் கூட செய்ய முடியாமல்போனதே என்று கவலைப்பட்டோம். பின்பு தான் எங்கள் மாமா, அப்பாவின் உடலை பதப்படுத்தி வைத்துள்ளது தெரியவந்தது. அம்மாவின் ஆசைக்கிணங்க, பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் எங்கள் அப்பாவின் ஊருக்கு அவரது உடலை எடுத்துவந்ததில் திருப்தியடைகின்றோம்’’ என்றார் கண்ணீருடன்.



இலங்கையில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த ஆச்சர்யம்--`1994-ல் மரணமடைந்தார்; 2019-ல் உடல் அடக்கம்!'- Reviewed by Author on April 11, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.