அண்மைய செய்திகள்

recent
-

ஈழத்தமிழர் போராட்டத்தில் சரித்திரம் படைத்த தியாக தீபம் அன்னை பூபதியின் 31வது ஆண்டு நினைவேந்தல்!


நாட்டுப்பற்றாளர் - ஈகச்சுடர் - தியாக தீபம் அன்னை பூபதியின் 31ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று தமிழர் தாயகத்திலும், புலம்பெயர் தேசமெங்கும் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
1932 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3 ஆம் திகதி மட்டக்களப்பு - கிரான் பிரதேசத்தில் பூபதி என்ற இயற்பெயருடன் அன்னை பூபதி, வடக்கு - கிழக்கு தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வீரச்சாவடைந்துள்ளார்.

தமிழர் தாயகத்தில் அமைதிப்படை என்ற போர்வையில் இந்தியப் படைகள் புரிந்திட்ட அடக்குமுறைகளுக்கு எதிராகவே 19.03.1988 இல் இருந்து 19.04.1988 வரை அதாவது ஒரு மாதம் வரை அஹிம்சை வழியில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து உயிர் நீத்தார் அன்னை பூபதி.
இவரின் கணவர் பெயர் கணபதிப்பிள்ளை. பத்துப் பிள்ளைகளின் தாயான பூபதி, 1987 - 1988 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மட்டக்களப்பு - அம்பாறை அன்னையர் முன்னணியின் செயற்பாட்டாளராக இருந்துள்ளார்.
அந்த காலம் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இந்தியப் படைக்கும் இடையில் சண்டை நடந்து கொண்டிருந்த காலம். அந்தக் காலத்தில் இந்தியப் படைக்கு எதிராக குரல் கொடுக்க, அறப் போராட்டங்களை நடத்த மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட அன்னையர் முன்னணி முடிவு செய்தது.

அன்னையர் முன்னணியினர் இரண்டு கோரிக்கைகளை முன்வைத்து இந்தியப் படைக்கு எதிராக - இந்திய அரசுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர்.
உடனடியாகப் போர் நிறுத்தத்தை நடைமுறைபடுத்த வேண்டும், தமிழீழ விடுதலைப்புலிகளுடன் பேச்சு நடத்தித் தீர்வு காணவேண்டும் என்பவையே அந்தக் கோரிக்கைகளாகும்.
அன்னையர் முன்னணியின் கோரிக்கைகள் எதுவுமே இந்தியப்படையினரின் கவனத்தை ஈர்க்கவில்லை. ஆனால், தமிழ்ப் பெண்கள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் அணிதிரண்ட நிலையில் 1988 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4ஆம் திகதி அன்னையர் முன்னணியைத் திருகோணமலைக்குப் பேச்சுக்கு வருமாறு இந்திய அதிகாரிகளினால் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. போராட்டம் தொடர்ந்து நடந்துள்ளது.

1988 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி அன்னையர் முன்னணியின் நிர்வாகக் குழுவினர் கொழும்பில் இந்திய அதிகாரிகளுடன் பேச்சியில் ஈடுபட்டனர். பேச்சு முறியவே சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்க முடிவு எடுத்தனர்.

அப்போது பலர் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிப்பதற்காக முன் வந்தனர். இறுதியில் குலுக்கல் முறையில் தேர்வு இடம்பெற்றது. முதலில் அன்னம்மா டேவிட் தெரிவு செய்யப்பட்டார்.
1988 ஆம் ஆண்டு பெப்ரவரி 16 ஆம் திகதி அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் கோயிலில் அன்னம்மாவின் உண்ணா நோன்புப் போராட்டம் தொடங்கியது. ஆனால், இந்தியப் படையினர் உண்ணாவிரத மேடையில் இருந்த அவரைக் கடத்திச் சென்றதால் அவரால் தனது போராட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை.

இந்த நிலையில் தான் பூபதியம்மாள் தன் போராட்டத்தை 1988 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19ஆம் திகதி தொடங்கினார். முன்னெச்சரிக்கையாக, "சுயவிருப்பின் பேரில் உண்ணாவிரதமாயிருக்கின்றேன். எனக்கு சுயநினைவிழக்கும் பட்சத்தில் எனது கணவனோ அல்லது பிள்ளைகளோ என்னை வைத்தியசாலையில் அனுமதிக்க முயற்சிக்கக்கூடாது" எனக் கடிதம் எழுதி வைத்துள்ளார்.
நீர் மட்டும் அருந்தி சாகும் வரை உண்ணாநோன்பு இருந்தார். இடையில் பல தடங்கல்கள் வந்தன. உண்ணா விரதத்துக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்களையும், அன்னை பூபதியின் பிள்ளைகள் சிலரையும், இந்தியப் படை கைது செய்தது. ஆயினும், போராட்டம் நிறுத்தப்படவில்லை.
அவர் உறுதியாகப் போராட்டத்தைத் தொடர்ந்தார். கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில் சரியாக ஒரு மாதத்தின் பின் 19.04.1988 அன்று வீரச்சாவடைந்துள்ளார்.
அன்னை பூபதியின் நினைவு நாளான ஏப்ரல் 19 ஆம் திகதி 'தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள்' என்றும் நினைவு கூரப்படுகின்றது. ஏனெனில், தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் நாட்டுப்பற்றாளர்களின் பங்களிப்பு அளப்பரியது.
ஆயுதம் ஏந்தாமல் - விடுதலைப்புலிகளின் அமைப்பில் இணையாமல் அவர்களுக்கு ஆதரவாக - தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவாகச் செயற்பட்டு உயிர் நீத்தவர்களை நாட்டுப்பற்றாளர்கள்' என்று விடுதலைப்புலிகள் நினைவு கூர்ந்தனர்.

அந்த வகையில் தமிழீழத்தின் முதலாவது நாட்டுப்பற்றாளர் என்ற பெருமை அன்னை பூபதியையே சாரும். அவரின் நினைவு நாளான இன்று (ஏப்ரல் 19ஆம் திகதி) 'தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள்' என்றும் நினைவு கூரப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஈழத்தமிழர் போராட்டத்தில் சரித்திரம் படைத்த தியாக தீபம் அன்னை பூபதியின் 31வது ஆண்டு நினைவேந்தல்! Reviewed by Author on April 20, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.