அண்மைய செய்திகள்

recent
-

வடக்கு கிழக்கிற்கு 500 கோடி ஒதுக்கிய ரணில் அரசு! கூட்டமைப்பு உறுப்பினர் தகவல் -


வரவு செலவுத் திட்டத்தில் வடகிழக்கு அபிவிருத்திக்காக 500கோடி ரூபாவினை ஒதுக்கியுள்ளார்கள் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மங்கிக்கட்டு பகுதியில் பல்கலைக்கழக அனுமதிபெற்ற மற்றும் சாதாரண தரத்தில் சிறப்பு சித்தி பெற்றவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று மாலை நடைபெற்றது.

மங்கிகட்டு ஸ்ரார் இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் ஆர்.சிவகுமார் தலைமையில் மங்கிக்கட்டு சித்திவிநாயகர் ஆலய முன்றிலில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
கடந்த ஆட்சிக்காலத்தில் தமிழர்கள் கடத்தப்பட்டார்கள், காணாமல்ஆக்கப்பட்டார்கள் பேசுவதற்கு சுதந்திரம் இல்லை, கதைப்பதற்கு சுதந்திரம் இருக்கவில்லை, நடமாடுவதற்கு கூட சுதந்திரம் இல்லாத நிலமை காணப்பட்டது. ஆனால் இன்று ஓரளவு சுதந்திரம் இருக்கின்றது. அபிவிருத்திகளை ஓரளவு செய்யக்கூடிய நிலையிருக்கின்றது.
கடந்த கால ஆட்சியை விட முன்னேற்றமான நிலையிருக்கின்றது. இருக்கின்ற ஆட்சியாளர்களில் ஓரளவு நல்ல விடயங்களை இந்த ஆட்சியாளர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளமுடியும். அதற்காகவே வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தோம். வடகிழக்கு அபிவிருத்திக்காக 500கோடி ரூபாவினை ஒதுக்கியுள்ளார்கள்.

கிழக்கு அபிவிருத்திக்கான செயலணியொன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதன் ஊடாக பல்வேறு அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளது. இதன் ஊடாக வாழைச்சேனை காகித ஆலை உட்பட பல தொழிற்சாலைகளை புனரமைப்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இருக்கின்ற சந்தர்ப்பத்தினை விட்டுவிட்டு பிழையான முடிவுகளை எடுத்து பின்னர் அது தொடர்பில் சிந்திப்பதில் பயனில்லை.
2005ஆம் ஆண்டில் ஜனாதிபதி தேர்தலின்போது ஒரு தவறை செய்தோம். வடகிழக்கு மக்கள் வாக்களிக்ககூடாது என ஒரு கட்டுப்பாட்டை விதித்தோம். விபரிதமான ஒருவர் தெரிவுசெய்யப்பட்டார், வடகிழக்கில் பல விபரிதமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. அதில் இருந்து ஒரு படிப்பினையை நாங்கள் பெற்றதன் காரணமாக மீண்டும் மீண்டும் பிழைசெய்யவேண்டிய அவசியமில்லை.

தற்போதுள்ள இரண்டு தேசிய கட்சியினை ஒப்பிட்டு பார்த்தே நாங்கள் செயற்படவேண்டிய நிலையுள்ளது. வேறு ஒரு கட்சி வானத்தில் இருந்துவந்து இங்கு ஆட்சிசெய்யப்போவதில்லையென்பதையும் நாங்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.
யாரோ அதிகாரத்தினைப்பெற்றுக்கொள்வதற்காக யாரோ அமைச்சு பதவிகளைப்பெற்று சுகபோகங்களை அனுபவிப்பதற்காக நாங்கள் இருப்பதை கவிழ்த்துவிட்டு துயரப்படுவதற்கு நாங்கள் தயாராகவில்லை.
2005ஆம் ஆண்டு வடகிழக்கு மக்கள் வாக்களித்திருந்தால் மகிந்த ராஜபக்ஸ என்பவர் ஜனாதிபதியாக வந்திருக்கமாட்டார். தமிழ் மக்களுக்கான இந்த பாரிய அழிவுகள் நடைபெற்றிருக்காது.
கடந்த கால படிப்பினையை சரியாக கற்றறிந்த பின்னர்தான் நிகழ்காலத்தில் நாங்கள் முடிவுகளை எடுக்கின்றோம் என்றார்.
வடக்கு கிழக்கிற்கு 500 கோடி ஒதுக்கிய ரணில் அரசு! கூட்டமைப்பு உறுப்பினர் தகவல் - Reviewed by Author on April 10, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.