அண்மைய செய்திகள்

recent
-

பயங்கரவாத தாக்குதலுக்கான பொறுப்பினை ஏற்றுக்கொள்கின்றேன்! பிரதமர் ரணில்


நாட்டின் பிரதமர் எனும் அடிப்படையில் பயங்கரவாத தாக்குதலின் கூட்டுப் பொறுப்பினை ஏற்றுக் கொள்கின்றேன் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.
இன்றைய விஷேட உரையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறன்று நாங்கள் முகங்கொடுத்த பயங்கரவாத தாக்குதலின் தாக்கம் இன்னும் குறைவடையவில்லை. எமது நாட்டினை இரத்த ஆறாக மாற்ற வேண்டும் என்பதே இக்கொடூர தாக்குதலினை திட்டமிட்டவர்களின் நோக்கமாக அமைந்திருந்தது.

எனினும் எமது மக்கள் பிரிவுகளுக்கு இடையில் பிரச்சினைகள் ஏற்படுவதற்கு வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்காது சட்டத்தினையும் ஒழுங்கினையும் பாதுகாப்பதற்கு நாம் அனைவரும் முன்னின்று செயற்பட்டோம்.
எமது பேராயர் அவர்கள் உட்பட கிறிஸ்தவ மத தலைவர்கள்,மகாநாயக்க தேரர்கள் உட்பட மகாசங்கத்தினர், இஸ்லாம் மற்றும் இந்து மதத் தலைவர்கள், சிவில் அமைப்புகள், கிராமிய தலைவர்கள் என அனைவரும் இணைந்து முழு இலங்கையிலும் சமாதானத்தினையும், நல்லிணக்கத்தினையும் ஏற்படுத்துவதற்கு அர்ப்பணித்தனர்.
முஸ்லிம் மக்கள் சமாதானத்தினை ஏற்படுத்துவதற்காக நடவடிக்கைகளை மேற்கொண்டனர். காவல் துறையினர் உட்பட பாதுகாப்பு தரப்பினருக்கு பொது மக்கள் தமது பூரண ஒத்துழைப்பினை வழங்கினர்.

முதலில் இவ்வனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். எமது சகோதர சகோதரிகள் , பிள்ளைகள் எனபலர் இந்த தாக்குதலில் உயிரிழந்தனர். வெளிநாட்டவர்கள் பலரும் உயிரிழந்தனர்.
இதில் சில வெளிநாட்டவர்கள் எமது நாட்டுக்கு உதவி ஒத்தாசைகளை வழங்குவதற்கு வருகை தந்தவர்கள் ஆவர். இன்னும் சிலர் எமது நாட்டின் இயற்கை அழகை கண்டு களிப்பதற்கு வந்தவர்கள் ஆவர்.
தற்போது பதிவாகியுள்ள உயிரிழப்புகள் தொடர்பில் கணக்கிடப்பட்டு வருகின்றது. உயிரிழந்த அனைவருக்காகவும் முழு இலங்கையர்களும் கவலைப்படுகின்றனர். அதிர்ச்சியடைகின்றனர்.
தற்போது 149 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் பூரண சுகமடைய நாம் பிரார்த்தனை செய்கின்றோம்.

இறுதிச் சடங்குகளுக்காகவும், உயிரிழப்புகளுக்காகவும் ஆரம்பத்தில் ஒரு இலட்சம் ரூபாவினையும், பின்னர் நட்டஈடாக மேலும் ஒன்பது இலட்சம் ரூபாய்களையும் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நாம், இழந்த உயிர்களை பணத்தினால் மதிப்பிட்டு விட முடியாது. எனினும் இந்த சந்தர்ப்பத்தில் ஏதேனுமொரு ஒத்துழைப்பாகவும் உதவியாகவுமே இந்த பணத்தினை நாங்கள் வழங்குகின்றோம்.
பாதிப்புக்குள்ளான தேவாலயங்கள் மூன்றினையும் மீண்டும் புனர்நிர்மாணம் செய்வதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.
அதே போன்று மீண்டும் வழமை போலவே தேவாலயங்களில் வழிபாடுகளை மேற்கொள்வது தொடர்பில் மதிப்பிற்குரிய பேராயர் காதினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகையுடன் நானும் ,பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரும் , பாதுகாப்பு தரப்பு உயர் அதிகாரிகளும் கலந்துரையாடினோம்.
தேவையான அனைத்து வகையான பாதுகாப்பினையும் வழங்கி அனைத்து சமய நடவடிக்கைகளையும் வழமைபோல மேற்கொள்வதற்கு அவசியமான பின்னணியினை நாம் ஏற்படுத்தி வருகின்றோம்.
தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு குறுகிய கால இடைவெளியினுள் சந்தேகத்துக்கு இடமான பலரை எமது பாதுகாப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். விசாரணையின் முன்னேற்றம் குறித்து எமக்கு தற்போது திருப்தியடைந்து கொள்ள முடியும்.
இந்த தாக்குதல் மிக நீண்ட காலமாக திட்டமிடப்பட்ட ஒன்று என்பதை மாத்திரமே தற்போதைக்கு வெளிப்படுத்த முடியும். மிகவும் நுட்பமாக திட்டமிடப்பட்ட ஒரு தாக்குதல்.

இவ்வாறான செயல்களை செய்வதற்கு கட்டாயமாக வெளிநாட்டவர்களின் ஒத்துழைப்பும் அறிவும் தேவைப்படுகின்றது. இத்தாக்குதல்களுடன் தொடர்பான ஒரு சிலர் வெளிநாடுகளுக்கு சென்று பயிற்சிகளை பெற்றுள்ளனர் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன.
இவ்வாறான பின்னணியில் நாங்கள் இதனை முறியடிப்பதற்கு வெளிநாட்டவர்களின் ஒத்துழைப்பினையும் ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளது.
இந்த குழு தமது தாக்குதல்களை மாவனல்லை சிலையினை சேதமாக்கிய சம்பவத்துடன் ஆரம்பித்துள்ளனர். அடுத்ததாக அவர்களின் உளவுத் தகவல்களை வழங்கினார் என்பதால் எமது அமைச்சர் ஒருவரின் செயலாளரினை சுட்டனர். அந்தசெயலாளர் ஓர் முஸ்லிம் இனத்தவர். இன்று அவர்கள் கிறிஸ்தவர்களை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இப்பயங்கரவாத தாக்குதல்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் மிகவும் சிறு குழுவினரே. அவர்களில் அதிகமானோரும், அதிக தொகையான வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இன்னும் சிறு தொகையினரையே சட்டத்தின் முன் நிறுத்த வேண்டியுள்ளது. அதனால் ஆபத்து இன்னும் முழுமையாக குறையவில்லை.
அதனால் நாங்கள் மிகவும் பொறுப்புடன் பொறுமையாக செயற்படுவதற்கு கடமைப்பட்டுள்ளோம். பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு காவல் துறையினருக்கும் பாதுகாப்பு தரப்பினருக்கும் நாம் நமது பங்களிப்பினை வழங்க வேண்டும். தற்போது நான் மற்றுமொரு முக்கியமான விடயம் குறித்து உங்களது கவனத்தினை ஈர்க்க விரும்புகின்றேன்.
இத்தாக்குதல்களுடன் தொடர்பான உள்நாட்டு அமைப்புக்கள், நபர்கள் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினருக்கு பல தடவைகள் தகவல்கள் கிடைத்தன. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலும் வெளிநாட்டு புலனாய்வு பிரிவினர் தகவல்களை வழங்கி இருந்தனர்.
அந்த சில முக்கியமான தகவல்கள் எனக்கு கிடைக்கவில்லை என்பது உண்மையே. எனினும் அதன் மூலம் நான் பொறுப்பை விட்டும் ஒதுங்கிக் கொள்ள மாட்டேன்.

நான் நாட்டின் பிரதமர் எனும் அடிப்படையில் இதற்கான கூட்டுப் பொறுப்பினை ஏற்றுக் கொள்கின்றேன். அரசாங்கம் எனும் ரீதியில் இக்குறைபாடு தொடர்பில் நான் உண்மையாகவே எமது மக்களிடத்தில் எனது வருத்தத்தினை தெரிவித்துக் கொள்கின்றேன்.
எனினும் வருத்தத்தினை வெளிப்படுத்துவதுடன் மாத்திரம் நின்றுவிட முடியாது. நாங்கள் இவ்வாறான குறைபாடுகள் எதிர்காலத்தில் ஏற்படாதிருப்பதற்கான நடவடிக்கைகளை துரித கதியில் மேற்கொள்ள வேண்டும். பொதுமக்களின் உயிரினை பாதுகாப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.
நான் அதற்கான பொறுப்பினை ஏற்கின்றேன். அர்ப்பணிக்கின்றேன். இந்த பயங்கரவாத தாக்குதலுடன் சர்வதேசமும் தொடர்புபடுகின்றது. அது சாதாரணமான பயங்கரவாதமொன்றல்ல.
உலகின் பல நாடுகளில் காணப்படுகின்ற பயங்கரவாத கருத்துக்களை கொண்ட ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் இந்த தாக்குதல்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
இது வரை இச்சர்வதேச பயங்கரவாதமானது இந்தியா, பங்களாதேஷ, பாகிஸ்தான், மாலைதீவு போன்ற அண்டைய நாடுகளிலும் பல்வேறு மட்டத்திலான தாக்குதல் சம்பவங்களை மேற்கொண்டுள்ளது.
அதனால் அந்த சர்வதேச பயங்கரவாதத்தினை தேசிய மட்டத்தில் மாத்திரம் முறியடித்து விட முடியாது. குண்டுகள் இலங்கையில் வெடித்தாலும், அதன் தொலைஇயக்கி வேறுநாடுகளில் இருக்கலாம்.

திட்டங்கள் வேறு நாடுகளில் வகுக்கப்பட்டிருக்கலாம். பயிற்சிகள் கூட வேறு நாடுகளில் வழங்கப்பட்டிருக்கலாம். வேறு நாடுகளில் பயங்கரவாதிகளின் மூளைகள் சலவை செய்யப்பட்டிருக்கலாம். அதனால் அவ்வனைத்து தரப்பினரையும் அழிக்காமல் சர்வதேச பயங்கரவாதத்தினை அடியோடு அழித்து விட முடியாது.
அதனால், போலி பிரச்சாரங்களுக்கும், வாய்ப் பேச்சுகளுக்கும் குழம்பி விடாது பொறுமையாக நடவடிக்கைகளை மேற்கொள்வது இந்த சந்தர்ப்பத்தில் மிகவும் முக்கியமாக கருதப்படுகின்றது.
இவ்வாறான சம்பவங்களுக்கு முகங்கொடுத்த நாடுகள் தமது உள்ளக சட்டக் கட்டமைப்பில் மாற்றங்களை கொண்டு வந்தன.
சர்வதேச பயங்கரவாதத்திற்கு முகங்கொடுப்பதற்கு அவசியமான சட்டங்களை அறிமுகம் செய்தன. எனினும் அவ்வாறான சம்பவங்கள் பதிவாகாத நாடுகள் அது தொடர்பில் கவனம் செலுத்தவில்லை.
பயங்கரவாதத்திற்கு உதவுபவர்கள் தொடர்பில் எமது நாட்டில் மிகவும் குறுகிய வட்டத்திலான சட்டமே காணப்படுகின்றது.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் மிகவும் கடுமையாக நடந்து கொள்ளும் அளவிற்கு அவ்வாறான சட்டங்கள் பலமாக இல்லை. நாம் அந்த சொற்பொருட்களை சர்வதேச பயங்கரவாதத்துக்கு முகங்கொடுப்பதற்கு ஏற்றாற் போல் மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும்.

உதவுபவர்களை கைது செய்வதற்கு ஏற்றாற் போல் மாத்திரமல்லாமல் அவர்களின் சொத்துக்கள் அனைத்தையும் அரசுடைமை ஆக்குவது தொடர்பாகவும் சட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டியுள்ளது.
அதேபோன்று தீவிரவாத மதக் கல்வி தொடர்பிலும் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. அவ்வாறான கல்வி நிறுவனங்களை கட்டுப்படுத்துவதற்கும் கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.
சர்வதேசபயங்கரவாதத்துக்கு முகங்கொடுப்பதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தான உறுப்புரைகளை நாம் பயங்கரவாத தடுப்பு சட்ட மூலத்தில் இணைத்திருந்தோம்.
மேலும் பல உறுப்புரைகளை திருத்தம் மேற்கொள்ளும் சந்தர்ப்பத்தில் முன்வைப்பதற்கும் எதிர்பார்த்திருந்தோம். எனினும் இப்புதிய சட்டமானது இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
அதுமாத்திரமல்லாமல் பயங்கரவாத நடவடிக்கைகளுடன் நேரடியாக சம்பந்தப்படாத,எனினும் அவ்வாறான கருத்துக்கள் கொண்டவர்களுக்குப் புனர்வாழ்வு அளிக்கும் வேலைத் திட்டமொன்றை தயாரிக்க வேண்டும்.
எவ்வித ஆயதங்களையும் பயன்படுத்தாமல் வாகனங்களை மாத்திரம் பயன்படுத்தி பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடும் சந்தர்ப்பங்களை நாம் இங்கிலாந்தில் அறியமுடிகிறது.

அதனாலேயே அவ்வாறான அனுபவங்கள் கொண்ட நாடுகளின் ஒத்துழைப்புகளும் எமக்கு தேவைப்படுகின்றன.
இது மிகவும் கடினமான சவாலாகும். எனினும் சமாதானத்தினை விரும்புகின்ற எமது நாட்டு மக்களினதும், உலகின் அனைத்து நாடுகளினதும் பூரண ஒத்துழைப்பினை பெற்று இப்பயங்கரவாதத்தினை முழுமையாக அழிப்பதற்கு நாம் நடவடிக்கை எடுப்போம் என நான் உங்களுக்கு உறுதியளிக்கின்றேன். தற்போதும் உலகின் பல நாடுகளின் தலைவர்கள் எமக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு தயார் என அறிவித்துள்ளனர்.
இவ்வாரம் முழுவதும் நாட்டின் பாதுகாப்பு தொடர்பிலேயே எமது கவனம் செலுத்தப்பட்டது. பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கும், பயங்கரவாத செயல்களுடன் தொடர்புபட்ட நபர்களை சட்டத்தின் முன் கொண்டு வருவதற்குமான அடித்தளத்தினை இடுவதற்குமே அரசாங்கம் தமது முழு பலத்தினையும் பிரயோகித்தது.
அடுத்த வாரத்திலிருந்து நாட்டின் பொருளாதாரத்தினை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
இந்த பயங்கரவாத தாக்குதலானது எமது நாட்டின் பொருளாதாரத்திற்கு பாரியதொரு தாக்கமாகும். லொத்தர் வியாபாரி முதல் பாரியளவிலான வியாபாரி வரை அனைவரும் பாரியளவிலான பின்னடைவினை எதிர்நோக்கியுள்ளனர்.
சுற்றலாத்துறை வீழ்ச்சியை சந்தித்தது. தற்போது அண்ணளவாக நாட்டுக்கு ஆயிரம் டொலர் மில்லியன்கள் வரை நட்டம் ஏற்பட்டுள்ளது. சிலசமயம் அது மேலும் அதிகரிக்கலாம். அது கடுமையான நிலைமையாகும். ஆகவே, பொருளாதாரத்தினை மீண்டும் கட்டியெழுப்பும் நடவடிக்கையிலும் நாம் வெற்றி பெற வேண்டும்.
இன்று கைச்சாத்திடப்பட்ட ஐக்கிய அமெரிக்க குடியரசின் மிலேனியம் சேலஞ்ச் கோபரேஷன் அபிவிருத்தி ஒப்பந்தத்தின் மூலம் இந்த பொருளாதாரப் போராட்டத்தினை வெற்றிக் கொள்வதற்கு உதவிகள் கிடைக்கின்றன.

அதன் மூலம் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நன்கொடையாக கிடைக்கவுள்ளது. நாம் வெவ்வேறு மொழிகளை பேசுபவர்களாக இருக்க முடியும்.
வெவ்வேறு மதங்களை பின்பற்றுபவர்களாக இருக்க முடியும். வெவ்வேறு இனங்களை பிரதிநிதித்துவப்படுத்த முடியும். எனினும் நாம் அனைவரும் இலங்கைத் தாயின் பிள்ளைகளே.
ஆகவே,ஒருதாய் பிள்ளைகளாக இச்சந்தர்ப்பத்தில் ஒன்றாக இணைந்து செயற்படுவதற்கு உறுதி பூணுவோம். அன்பு, பரிவிரக்கம், கருணை, மன அமைதி எனும் புத்தரின் குணப்பண்புகளை மக்கள் மத்தியில் பரப்புவோம்.
அப்போதுதான் இந்தகடினமான சந்தர்ப்பத்தில் நாட்டினை கட்டியெழுப்பி முன்னோக்கிச் செல்ல முடியும்.
மற்றுமொரு கடினமான சந்தர்ப்பத்தினை முகங்கொடுத்துக் கொண்டிருக்கும் நாங்களும், எமது நாடும், எமது பிள்ளைகளது எதிர்காலத்தினை பாதுகாப்பதற்கு பொறுமையாகவும், ஒத்துழைப்புடனும் செயற்படுவோம்.
உங்கள் அனைவருக்கும் நன்றிகள்.
பயங்கரவாத தாக்குதலுக்கான பொறுப்பினை ஏற்றுக்கொள்கின்றேன்! பிரதமர் ரணில் Reviewed by Author on April 27, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.