அண்மைய செய்திகள்

recent
-

இலங்கை பாதுகாப்புதுறைக்கு சீனா 260 கோடி ரூபாய் நிதி உதவி....


இலங்கை பாதுகாப்புதுறையினரின் செயற்பாடுகளுக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கோரிக்கைக்கு அமைய 260 கோடி ரூபாய் நிதி உதவி வழங்க, சீன அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக, இலங்கை ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளையில் இலங்கையிலிருந்து பயங்கரவாதத்தை வேரறுத்து, தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அனைத்து வழிகளிலும் இலங்கைக்கு உதவத் தயாரென இலங்கை ஜனாதிபதியிடம் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் உறுதியளித்துள்ளார்.

சீனாவுக்கான உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் சீன ஜனாதிபதிக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல், சீன ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.

இதன்போதே, இவ்விடயங்கள் பேசப்பட்டன.

இதேவேளை, இலங்கை போலீஸ் திணைக்களத்திற்கு 150 கோடிரூபாய் பெறுமதி வாய்ந்த 100 ஜீப் வண்டிகள் உள்ளிட்ட வசதிகளை வழங்குவதற்கும் சீன ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.

இருநாட்டு அரச தலைவர்களின் சந்திப்பினைத் தொடர்ந்து, இருநாட்டு பாதுகாப்பு துறையினரின் ஒத்துழைப்புக்கான புதிய புரிந்துணர்வு ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டது.

இதன்போது பயங்கரவாதத்தை ஒழிப்பதைப் போன்றே, இணையத்தளம் மற்றும் சமூக வலைத்தளங்களின் ஊடாக போலிப் பிரசாரங்களை பரப்பி மறைந்திருந்து பயங்கரவாதத்தை விதைக்கும் நபர்களையும் குற்றவாளிகளையும் கண்டறிவதற்கும் அந்த அக்குற்றங்களை தடுப்பதற்குத் தேவையான தொழிநுட்ப உபகரணங்களும் அறிவும் இலங்கையிடம் இல்லை என்று, இலங்கை ஜனாதிபதி தெரிவித்தார்.

இதனையடுத்து, அதற்கான உபகரணங்களையும் தொழிநுட்பத்தையும் இலங்கைக்கு வழங்குவதற்கு துரிதமாக ஒத்துழைப்பு வழங்குவதாகவும் சீன ஜனாதிபதி உறுதியளித்ததோடு, அது தொடர்பில் கண்டறிவதற்கு சீன தொழிநுட்ப குழுவொன்றை இலங்கைக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததாகவும், இலங்கை ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.

’இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு இலங்கையிடம் வேண்டுகோள்’
இலங்கை முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு, 'முஸ்லிம் நாடுகளின் ஒருமித்த குரல்' என தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (ஓ.ஐ.சி), இலங்கை அரசாங்கத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

உச்சமடைந்து செல்லும் வன்முறை, தீவிரவாதம், வெறுக்கத்தக்க பேச்சு ஆகியவற்றினால் பரவும் அச்ச நிலையினையும், சமூகங்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள அவநம்பிக்கையினையும் எதிர்த்து நிற்குமாறும், அந்த அமைப்பு இலங்கையிடம் கோரியுள்ளது.

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் வன்முறைகளை அடுத்து, நேற்று செவ்வாய்கிழமை இஸ்லாமிய நாடுகளின் ஒத்துழைப்பு அமைப்பு விடுத்துள்ள அறிக்கையிலேயே, இந்த அழைப்பினை விடுத்துள்ளது.

இலங்கையிலுள்ள கிண்ணியாம, பிங்கிரிய, ஹெட்டிப்பொல, கொட்டம்பாபிட்டிய, சிலாயம், நிக்கவரெட்டிய, நீர்கொழும்பு, மில்லேகொட, கலப்பிட்டியகம மற்றும் மினுவாங்கொட போன்ற பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் தாக்குதல்களை நெருக்கமாக அவதானித்து வருவதாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதம் ஆகியவற்றுக்கு எதிரான தனது நிலைப்பாட்டை மீளவும் வலியுறுத்துவதாகத் தெரிவித்துள்ள இஸ்லாமிய நாடுகளின் ஒத்துழைப்பு அமைப்பு, கடந்த மாதம் தேவாலங்களிலும் ஹோட்டல்களிலும் நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதல்களை கடுமையாகக் கண்டிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

மேலும், பயங்கரவாதத்துக்கு மதம் இல்லை எனத் தெரிவித்துள்ள அந்த அமைப்பு, சில தீவிரவாதிகளின் செயல்களுக்கு எந்தவொரு சமூகமும் பொறுப்பேற்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது.


இலங்கை பாதுகாப்புதுறைக்கு சீனா 260 கோடி ரூபாய் நிதி உதவி.... Reviewed by Author on May 16, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.