அண்மைய செய்திகள்

recent
-

சர்வதேச நீதி விசாரணை கோரி அனைவரும் அணிதிரள்வோம்-தமிழ் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு -


தமிழின அழிப்பின் 10ம் ஆண்டில் சர்வதேச நீதி விசாரணை கோரி அனைவரும் அணிதிரள்வோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.
முள்ளியவாய்கால் நினைவேந்தல் தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் இணைந்து இன்று வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழ் மக்கள் மீது சிறீலங்கா அரசு இனப்படுகொலையை அரங்கேற்றி 10 ஆண்டுகள் கடக்கின்றது. படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு நீதி விசாரணை கோரியும் காணாமல் ஆக்கபட்டவர்களை கண்டறியக் கோரியும் தமிழ் மக்கள் கடந்த 10 ஆண்டுகளாக போராடி வருகின்றபோதும் பொறுப்புக்கூறல் விடயத்திலோ, காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டறியும் விடயத்திலோ எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள், மனிதத்துவத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல் நடைபெறவேண்டுமென கடந்த 2012ஆம் ஆண்டிலிருந்து ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில்

தீர்மானங்கள் இயற்றப்பட்டு கால நீடிப்புக்கள் வழங்கப்பட்டு வருகின்றபோதிலும் தமிழ் மக்களுக்கு இன்னமும் நீதி கிடைக்கவில்லை.
மாறாக தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறைகள் தீவிரப்படுத்தப்பட்டே வருகின்றது. இந்நிலையிலேயே இனவழிப்பின் 10 ஆண்டினை நினைவு கூரும் நிகழ்வுகள் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வானது வெறுமனே படுகொலை செய்யப்பட்ட எம்வர்களுக்காக சுடரேற்றி நினைவுகூரும் நிகழ்வாக மட்டும் அமையக்கூடாது.
இந்நிகழ்வில் அனைவரும் அணிதிரண்டு தமிழ் மக்கள் மீது ஸ்ரீலங்கா அரசு புரிந்தது திட்டமிட்ட இனப்படுகொலை என்பதனையும் அக்கொடூரமான இனப்படுகொலையை ஒருபோதும் மறக்கவும் மாட்டோம் மன்னிக்கவும் மாட்டோம் என்பதுடன், சர்வதேச நீதி கிடைக்கும் வரை ஓயவும் மாட்டோம் என்பதனை ஆணித்தரமாக வலியுறுத்துவோம்.
அதேவேளை ஸ்ரீலங்காவின் பேரினவாத ஆட்சியாளர்கள் வடக்கு கிழக்கில் அபிவிருத்தி (மகாவலி உட்பட) என்னும் பெயரிலும் ஏனைய வழிகளிலும் காணிகளை கபளீகரம் செய்தல், தமிழரது குடிப்பரம்பலை மாற்றியமைத்தல், தமிழரது மொழி, கலாசாரம், பொருளாதாரம் (விவசாயம், வர்த்தகம், கடல்சார்) என்பவற்றை அழித்தல் மூலம் பேரினவாத ஆதிக்கத்தை அதிகரித்தல், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள், பௌத்த மயமாக்கல் போன்ற வழிமுறைகளில் கட்டமைப்புசார் இனவழிப்புச் செயற்பாடுகளை தொடர்ந்து கொண்டேயிருக்கின்றார்கள். இவற்றுக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைத்து எம்தேசத்தை பாதுகாக்கும் நிலையை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றாய் அணிதிரளவேண்டும்.

தாயக மண்ணில் கூட்டாகப் படுகொலை செய்யப்பட்ட எமது உறவுகளை கூட்டாக நினைவு கூருவதற்கான உரிமை எமக்குள்ளது. இறந்தவர்களது ஆத்ம சாந்திக்காக முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த எம் உறவுகளுக்கான நினைவேந்தல் நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ள ஏற்பாட்டுக்குழுவானது இனவழிப்பு தினத்தில் (18) வெளியிடவுள்ள முக்கிய பிரகடனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் எம்மால் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக உள்ள நிலையில் 18.05.2019 இல் நடைபெறும் முள்ளிவாய்க்காலில் இடம்பெறும் நினைவேந்தல் நிகழ்வுக்கு எமது பூரண ஆதரவைத் தெரிவித்துக் கொள்வதுடன், இனவழிப்பு நினைவேந்தல் நிகழ்வுக்கு அனைத்துத் தமிழ் மக்களையும் அணிதிரளுமாறு அழைப்பு விடுக்கின்றோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நீதி விசாரணை கோரி அனைவரும் அணிதிரள்வோம்-தமிழ் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு - Reviewed by Author on May 18, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.