அண்மைய செய்திகள்

recent
-

வவுனியாவில் நிலவிய பதற்றம்; அகதிகள் முகாமிற்குள் பிக்குகள் நுழைய முயற்சி; பெருமளவு இராணுவம் குவிப்பு!


வவுனியாவில் வெளிநாட்டு அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக பௌத்த பிக்குகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிட்ட குழுவினர் எடுத்த நடவடிக்கையால் அங்கு பதற்றம் நிலவியது.

இதனையடுத்து பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தினை சூழ அதிகளவான இராணுவத்தினர் குவிக்கப்பட்டனர்.

இதுகுறித்து தெரியவருவதாவது,

வவுனியாவில் புந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் வெளிநாட்டு அகதிகள் சிலர் தாங்க வைக்கப்பட்டுள்ளனர். இந் நிலையில் இன்று மதியம் 1 மணியளவில் வவுனியா நகரசபை மண்டபத்தில் மூன்று மதத்தலைவர்கள் மற்றும் வவுனியா வடக்கு பிரதேசசபை தவிர்ந்த ஏனைய நான்கு பிரதேசசபைகளின் தலைவர்கள், உறுப்பினர்கள் சிலரும் பொதுமக்கள் சிலருமாக கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டனர்.

இதன்போது வெளிநாட்டு அகதிகளை வவுனியாவில் இருந்து அகற்றவேண்டும் என தீர்மானித்ததுடன் அவர்கள் இங்கு தங்கவைத்தமை தொடர்பிலும் கடும் ஆட்சேபனையை வெளியிட்டனர்.

அத்துடன் குறிப்பிட்ட தினத்திற்குள் அவர்களை வவுனியாவில் இருந்து வெளியேற்றாவிட்டால் எதிர்ப்பை வெளியிடுவோம் எனவும் தெரிவித்தனர். இதன்போது வவுனியா அரசாங்க அதிபர் மற்றும் பிரதி பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு மகஜர்களை கையளிப்பது எனவும் பூந்தோட்டத்தில் வெளிநாட்டு அகதிகளை தங்கவைத்துள்ள முகாமுக்கு செல்வது எனவும் தீர்மானித்து மகஜருடன் அரச அதிபர் பணிமனைக்கு சென்றிருந்தனர்.

இதன்போது அரசாங்க அதிபர் இல்லாத காரணத்தினால் மேலதிக அரசாங்க அதிபரிடம் மகஜரை கையளித்ததுடன் அகதிகள் தொடுர்பிலும் கேள்வி எழுப்பினர். எனினும் மேலதிக அரசாங்க அதிபர், அகதிகள் தொடர்பில் தமக்கு அறிவிக்கப்படவில்லை எனவும் அவர்கள் தொடர்பான எந்த வித விடயங்களும் தம்மிடம் இல்லை எனவும் பௌத்த பிக்குகள் அடங்கிய குழுவிடம் தெரிவித்தனர்.

இதனையடுத்து பிரதி பொலிஸ் மா அதிபரிடம் மகஜரை கையளிக்க சென்ற போதிலும் அவர் இல்லாத நிலையில் வேறு ஒருவரிடம் மகஜரை கையளித்த பின்னர் பூந்தோட்டம் முகாம் பகுதிக்கு சென்றனர்.

இதன்போது அதிகளவான இராணுவத்தினர் குறித்த பகுதியில் குவிக்கப்பட்டிருந்ததுடன் முகாமுக்கு செல்லும் பாதையும் பார ஊர்தியினால் வழிமறிக்கப்பட்டிருந்தது.

இந் நிலையில் கடும் மழைக்கு மத்தியில் குறித்த பகுதிக்கு வருகை தந்த பௌத்த பிக்குகள் மற்றும் குழுவினர் முகாம் பகுதிக்கு செல்ல முற்பட்டபோது பொலிஸார் அவர்களை உள் செல்ல முடியாது என தெரிவித்ததுடன் அவர்களை அங்கேயே தடுத்து வைத்திருந்தனர்.

இதன்பேது வவுனியா பொலிஸ் நிலையத்தின் உதவி பொறுப்பதிகாரி சம்பவ இடத்திற்கு வருகை தந்து குழுவினரை செல்ல முடியாது என தெரிவத்ததை அடுத்து பௌத்த பிக்குகள் அடங்கிய குழுவினர் தமது கோரிக்கைக்கு பதில் தராத பட்சத்தில் தம்மாலான நடவடிக்கையை ஓரிரு நாட்களில் எடுப்போம் என தெரிவித்து அங்கிருந்து சென்றனர்.

வவுனியாவில் நிலவிய பதற்றம்; அகதிகள் முகாமிற்குள் பிக்குகள் நுழைய முயற்சி; பெருமளவு இராணுவம் குவிப்பு! Reviewed by Author on May 22, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.